Saturday, April 24, 2021

சதுரகிரி பாமாலை

 


சரணம் சரணம் சரணமய்யா சந்தன மகாலிங்கம் சரணமய்யா

  சரணம் சரணம் சரணமய்யா சுந்தர மகாலிங்கம் சரணமய்யா.


சித்தரெல்லாம் கூடும் மலை சதுரகிரி- எங்கும்

   சிவமய மான சதுரகிரி

சக்தியெல்லாம் கொண்டமலை சதுரகிரி - எந்த

    சந்தேகமும் இல்லை இது கயிலைபுரி.                           ( சரணம்) 


சிவன்மலை ஏறவந்தோம் சரணமய்யா - சிவன்

   திருவடி காணவந்தோம் சரணமய்யா 

அவனிடம் அடைக்கலம் ஆனோமய்யா - அவன்

   அரசுக்கே அடிமையாய் ஆனோமய்யா             ( சரணம் )


காடுமலை தாண்டி வந்தோம் சரணமய்யா - ஈசன்

  கருணையை வேண்டிவந்தோம் சரணமய்யா 

பாடும்பொருள் சிவனன்றி வேறு இல்லைய்யா- சென்று 

  பார்க்கும் வரை சோறு தண்ணி தூக்கமில்லையா .  ( சரணம் )


ஆசிர்வாதப் பிள்ளையாரே சரணமய்யா - உங்கள்

   ஆசிகேட்டு ஓடிவந்தோம் சரணமய்யா

ஈசனிடம் எங்கள் குறை சொல்லிவிடய்யா - கொஞ்சம்

  எம்மைப் பற்றி அப்பனிடம் அள்ளிவிடய்யா.                ( சரணம்)


தாணிப்பாறை பேச்சியம்மா சரணமம்மா - உங்கள் 

   தாள்பணிந்து வேண்டுகிறோம் சரணமம்மா

ஏணிப்படி யாயிருந்து ஏற்றிவிடம்மா - எங்கள்

 ஏக்கங்களை ஊதித்தள்ளி ஓட்டிவிடம்மா                      ( சரணம் )


கருப்பண்ண சாமிகளே சரணமய்யா - உங்கள்

    காவல்தனை வேண்டிவந்தோம் சரணமய்யா 

விருப்பமாய் மலையேற வந்தோமய்யா - எந்த

  வேளையிலும் எங்களுக்கு காவல் நில்லய்யா        ( சரணம்)


கோரக்க நாதரே சரணமய்யா - உங்கள் 

  குகைதனை தேடிவந்தோம் சரணமய்யா 

பாரங்கள் குறைத்திடக் கேட்டோமய்யா - உங்கள்

    பாதத்தில் சுமைகளைப் போட்டோமய்யா              ( சரணம் )


நாவல்மர ஊற்றுதனைக் கண்டோமய்யா - அந்த

   நன்மைதரும் தீர்த்தமள்ளி உண்டோமய்யா 

நோவுகின்ற தேகம்தாங்கி வந்தோமய்யா - எந்த

   நோய்நொடியும் ஒடும்வரம் கேட்டோமய்யா               ( சரணம்)


இரட்டைலிங்கம் சந்நிதிக்கு வந்தோமய்யா - அங்கே

   ஈசனையும் மாலனையும் கண்டோமய்யா 

திட்டமெல்லாம் ரெண்டுபேர்க்கும் சொன்னோமய்யா -நாங்க

   தொட்டதெல்லாம் வெற்றிபெறக் கேட்டோமய்யா         ( சரணம்)


காராம்பசுத் தடத்திற்கு வந்தோமய்யா - ஈசன் 

   கருணையை அவ்விடத்தில் கண்டோமய்யா -

தீராவினை தீர்க்கச் சொல்லி கேட்டோமய்யா - வினை

   தீர்ந்ததென்று நம்பி நடை போட்டோமய்யா               ( சரணம்)


தவசிப்பாறை தரிசனம் கண்டோமய்யா - அங்கே

   தவம்செய்யும் சித்தர்களே சரணமய்யா 

அவசியம் எங்க குறை கேளுங்கய்யா - கொஞ்சம்

   அதைப்பற்றி சிவனிடம் கூறுங்கய்யா                         ( சரணம் )


பிலாவடி கருப்பரே சரணமய்யா -எங்கள் 

  பிழைகளைப் பொறுத்திட  வேண்டுமய்யா 

தலைவனை தரிசிக்க வந்தோமய்யா -   வரும் 

   தடைகளை உடைத்திட  வேண்டுமய்யா                     ( சரணம்)


சுந்தரா உன் சந்நிதிக்கு வந்தோமய்யா - உன்  

   சொக்குகின்ற பேரழகைக் கண்டோமய்யா 

வந்தவுடன் வலியெல்லாம்  பறந்ததய்யா - நாங்க 

   வாங்கவந்த வரம் கூட மறந்ததய்யா                           ( சரணம் )


ஆனந்த வல்லியம்மா  சரணமம்மா - நீங்கள் 

    ஆதர வளித்திட  வேண்டுமம்மா 

கானத்தைக் கேட்டிட வாருமம்மா - கொஞ்சம் 

   கடைக்கண்ணை திறந்தெம்மை பாருமம்மா         ( சரணம் )


பச்சைமால் சடைமங்கை சரணமய்யா  - நீங்கள் 

   பால்தந்த லிங்கத்துக்கும்  சரணமய்யா 

இச்சையுடன் பூவுலகம் வந்தீரய்யா - அந்த 

    ஈசனுக்கே பிரம்படி தந்தீரய்யா .                                      ( சரணம்)


சந்தனமே உந்தன் முன்னே வந்தோமய்யா - மனச் 

   சஞ்சலங்கள் அத்தனையும் சொன்னோமய்யா 

சிந்தையிலே உன்னையன்றி வேறு யாரய்யா - வாழ்வின் 

    சிக்கலெல்லாம் தீரக்கண்  திறந்து பாரய்யா             (சரணம்)


அம்பிகையும் இடப்பாகம் கேட்டாளய்யா - நீங்கள் 

   அருள்தந்து அம்மையப்பன் ஆனீரய்யா -

நம்பிவந்தோம் உங்களையே காப்பீரய்யா - எமக்கு 

   நற்கதியைத் தந்து கரை சேர்ப்பீரய்யா                          ( சரணம் )


சந்தன மகாதேவி சரணமம்மா - நீங்கள் 

    தவம்செய்த பாறைக்கும் சரணமம்மா 

வந்துநின்று குறைசொல்லி பணிந்தோமம்மா  - இனி 

    வருவதை எதிர்கொள்ள துணிந்தோமம்மா                    ( சரணம் )


சந்தன விநாயகரே சரணமய்யா - ஸ்ரீ 

   சந்தன முருகவேளே  சரணமய்யா 

தந்தையிடம் எமக்காக தூது செல்லய்யா - கொஞ்சம் 

   தயைகாட்டி  தரிசனம் தரச் சொல்லய்யா                         ( சரணம் )


தவம்செய்யும் சித்தர்களே சரணமய்யா - உங்கள் 

   தாளினைப் பணிந்தோம் சரணமய்யா 

சிவமதை உணர்த்திட வாருமய்யா - எங்கள் 

    சித்தமதில் தெளிவினைத் தாருமய்யா                            ( சரணம் )

 

திருமூல நாயனாரே சரணமய்யா - உங்கள் 

   திருவடி பணிந்தோம் சரணமய்யா 

கருவூர் சித்தரே சரணமய்யா - நீங்கள் 

    காட்டிடும் வழிசெல்ல வந்தோமய்யா                         ( சரணம் )

 

அகத்திய மாமுனி சரணமய்யா - உங்கள் 

   அறிவினில்  சிறுதுளி கேட்டோமய்யா 

அகப்பேய் சித்தரே சரணமய்யா - எங்கள் 

   அகப்பேய் ஓட்டிட வாருமய்யா                                        ( சரணம் )


வான்மீகி நாதரே சரணமய்யா - உங்கள் 

   வாழ்த்தொலி கேட்டிட வந்தோமய்யா 

ஆன்மீக வழிதனில் நடப்போமய்யா - உங்கள் 

   ஆசியி னால்விதி கடப்போமய்யா                       ( சரணம் )


பழனிமலை போகரே சரணமய்யா - திரு 

   பாம்பாட்டிச் சித்தரே சரணமய்யா 

அழகணிச் சித்தரே சரணமய்யா - அந்த 

    அரனருள் கிடைத்திட வழி சொல்லய்யா         ( சரணம் )


வாமதேவா உமக்குச் சரணமய்யா - நீங்கள் 

  வாங்கிவந்த வரத்துக்கும்  சரணமய்யா  

இராமதேவச் சித்தரே சரணமய்யா - உங்கள் 

   இரசவாத வித்தைக்கும் சரணமம்மா                 ( சரணம் )


வாலைச்  சித்தரே  சரணமய்யா - ஸ்ரீ  

   வல்லபச் சித்தரே சரணமய்யா 

காலங்கி  நாதரே சரணமய்யா - அந்த 

   காலனை வென்றிடும் வழிசொல்லய்யா     ( சரணம் )


குதம்பைச் சித்தரே சரணமய்யா - திரு 

   கொங்கணச்  சித்தரே சரணமய்யா 

பதஞ்சலி மாமுனி சரணமய்யா - உங்கள் 

   பலன்தரும் யோகங்கள் கேட்டோமய்யா      ( சரணம் )


புலிப்பாணிச் சித்தரே சரணமய்யா -திரு 

   புண்ணாக்கீசரே  சரணமய்யா 

கலியுக மெய்யரே சரணமய்யா - இந்த 

    கலியுகம் காத்திட வேண்டுமய்யா                ( சரணம் )


கடுவெளிச் சித்தரே சரணமய்யா - ஸ்ரீ 

    கமலமுனிச் சித்தரே சரணமய்யா 

இடைக்காட்டுச் சித்தரே சரணமய்யா - அந்த 

   ஈசனைக் காணும் வழி  சொல்லய்யா         ( சரணம் )


மருத்துவர் தன்வந்திரி சரணமய்யா - திரு 

   மச்சமுனிச் சித்தரே சரணமய்யா 

வருத்தங்கள் போக்கிட வாருமய்யா - எங்கள்  

   வாழ்க்கைக்கு வளங்களைத்  தாருமய்யா       ( சரணம் )


சட்டைமுனி நாதரே சரணமய்யா - உங்கள் 

   சந் நிதிக்கு வந்து நின்றோம் சரணமய்யா 

பட்டினத்துச் செட்டியாரே  சரணமய்யா - உம்மை 

   பதம்பார்த்த மகனுக்கும் சரணமய்யா                        ( சரணம் )


சிவவாக்கியரே சரணமய்யா - உங்கள் 

   சீரான பாடலுக்கும் சரணமய்யா 

நவநாதச் சித்தர்களே சரணமய்யா - உங்கள் 

  நவபா ஷாணத்திற்கும் சரணமய்யா                            ( சரணம் )


அத்தரி மகரிஷி சரணமய்யா - உங்கள் 

    அழகிய வனத்திற்கு வந்தோமய்யா 

பத்திர கிரியாரே சரணமய்யா - உம்மை 

   பணிந்தடி தொழுதோம் சரணமய்யா                         ( சரணம் )


நந்தியெனும் சித்தரே சரணமய்யா - ஸ்ரீ 

   நாதமுனிச் சித்தரே சரணமய்யா 

சுந்தரா னந்தரே  சரணமய்யா - உம்மை 

    தொழுதடி பணிந்தோம் சரணமய்யா                         ( சரணம் )


யாழ்வல்ல தேவரே சரணமய்யா - உங்கள் 

    யாழிசை கேட்க வந்தோமய்யா 

வாழ்க்கைக்கு வழிசொல்லக் கேட்டோமய்யா -அதை 

    வழங்கிட ஈசனை வரச்  சொல்லய்யா                               ( சரணம் )


யூகியர் புலத்தியர் சரணமய்யா- பல 

     யுகங்களைக் கடந்தோரே சரணமய்யா 

காக புஜண்டரே சரணமய்யா - முக் 

    காலமும் உணர்ந்தோரே  சரணமய்யா                           ( சரணம் )


தேரையரே  உமதடி  சரணமய்யா - ஸ்ரீ 

   ரோமரிஷித் சித்தரே சரணமய்யா 

வேறுயாரும் விட்டிருந்தால் சரணமய்யா - உங்கள் 

     வேர்களுக்கும் விழுதிற்கும்  சரணமய்யா                  ( சரணம் )


 பதினெட்டுச் சித்தர்களே சரணமய்யா - இன்னும் 

    பலகோடிச் சித்தர்களே சரணமய்யா 

அதிசய மலைக்கோர் சரணமய்யா - பல் 

     ஆயிரம் கோடி சரணமய்யா                                           ( சரணம் )


சித்தனுக்கே சித்தன் அந்த சிவன் தானய்யா -எங்கள் 

   சித்தத்திலே  வந்து குடி புகுந்தானய்யா 

சத்தியமாய் காட்சி தந்து அருள்வானய்யா - எங்கள் 

    சரணங்கள் கேட்டு அவன் வருவானாய்யா                     ( சரணம் )

 

சிவசிவ சிவமென்று சொன்னோமய்யா - அந்த 

    சிவனது பாதம்பற்றிக் கொண்டோமய்யா 

தவமின்றி வரங்களைக் கேட்டோமய்யா  - அதை 

   தரும்வரை சோர்ந்துவிட மாட்டோமய்யா                          ( சரணம் )


                                                                                                                     - சிவகுமாரன் 



தம்பி பிரபாகரனோடு சேர்ந்து சரணம் சொல்லுங்கள் .



  

 









3 comments:

சிவகுமாரன் said...

2010 ஆம் ஆண்டு சிவராத்திரி அன்று சதுரகிரி யாத்திரையின் போது எழுதியது.

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை... அருமை...

Rathnavel Natarajan said...

அருமை