Tuesday, January 19, 2021

கலியுக மெய்யா

                         



கலியுக மெய்யா கலியுக மெய்யா 

   கடுந்தவம் புரியும் கலியுக மெய்யா.

கலியுக மெய்யா கலியுக மெய்யா

      கண்திறந் திடுவாய் கலியுக மெய்யா


.திருவட வாளம் உறைந்திடும் அய்யா

   தீவினை போக்கிடும் கலியுக மெய்யா.

அருள்தனை வேண்டி அலைந்தபின் மெய்யாய்

  அணுகினோம் உந்தன் ஆலயம் அய்யா.

கருணைக் கடலே கலியுக மெய்யா 

   கழலடி பணிந்தோம் காப்பாய் அய்யா.

வருந்துயர் எல்லாம் ஆக்கிடு பொய்யாய்.

   வம்சங்கள் தொடர்ந்துனை வணங்கினோம் அய்யா.


சிவனுந்தன் குருவா திருமால் உருவா

  சிவன்அரி ஈன்ற சபரியின் வடிவா

அவனியை அன்பால் அணைத்திடும் தாயா

   ஐம்புலன் அடக்கிய சித்தனும் நீயா.

புவனத்தை வென்ற புத்தனும் நீயா 

  புரியா துன்னை பணிந்தோம் சேயாய்.

தவம்செய்யும் கோலத்தில் அமர்ந்தாய் குருவாய்.

  தவப்பலன் எமக்கே தந்திட வருவாய்.

[

திரைகடல் ஓடி திரவியம் சேர்த்தேன்.

   திசைக்கொரு நபராய் உறவினைப் பிரிந்தேன்

இரைதனைத் தேடி இறகுகள் இழந்தேன்.

   இருப்பதைக் கொண்டு இன்புற மறந்தேன்.

வரைமுறை இன்றி வாழ்க்கையைக் கழித்தேன்.

  வருவதை எதிர்கொள்ள வழியின்றி தவித்தேன்.

கரைதனைத் தேடும் கலம்போல் மிதந்தேன்.

   கலங்கரை விளக்கென உனையே நினைந்தேன்.


 கலியுக மெய்யா கலியுக மெய்யா 

     கடுந்தவம் புரியும் கலியுக மெய்யா.

கலியுக மெய்யா கலியுக மெய்யா

        கண்திறந் திடுவாய் கலியுக மெய்யா.