Saturday, March 13, 2021

ஓம் நமசிவாய சிவாய நமஓம்



ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய சிவாய நமஓம் 
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 
ஓம் நமசிவாய சிவாய நமஓம் 

ஆதியும் அந்தமும் இல்லாய் போற்றி
  அணுவிலும் அணுவாய் உள்ளாய் போற்றி.
ஜோதிப் பிழம்பே சுடரே போற்றி
  சோணா சலமே சொக்கா போற்றி 
பாதியில் அம்பிகை கொண்டாய் போற்றி
  பாற்கடல் நஞ்சை உண்டாய் போற்றி.
தீதினை அறுக்கும் தீயே போற்றி
  திருவடி பணிந்தேன்  அருள்வாய் போற்றி .     (ஓம் நமசிவாய)

கண்ணால் காமனை எரித்தாய் போற்றி 
  காலால் காமனை உதைத்தாய் போற்றி .
பண்ணால் கலகம் விளைத்தாய் போற்றி
  பாடகன்  திமிரை தகர்த்தாய் போற்றி 
அண்ணா மலையே அரசே போற்றி 
  ஆரூர் ஆண்ட முரசே போற்றி.
உண்ணா முலையாள் துணைவா போற்றி
  உன்பதம் பணிந்தேன்  அருள்வாய் போற்றி.   (ஓம் நமசிவாய )

ஈசா போற்றி இறைவா போற்றி
  இருளை அகற்றும் ஒளியே போற்றி 
நேசா போற்றி நிமலா போற்றி 
  நினைவில் இரண்டறக் கலந்தாய் போற்றி 
ஆசைகள் ஆணவம் அறுப்பாய் போற்றி
    அறியாப் பிழைகள் பொறுப்பாய் போற்றி.
பாசக் கடலே பரமா போற்றி 
  பாதம் பணிந்தேன்  அருள்வாய் போற்றி        ( ஓம் நமசிவாய )

மூவுல காளும் முதல்வா போற்றி 
  முப்புரம் எரிசெய்த முத்தே போற்றி 
ஆவுடை யப்பா அமலா போற்றி 
  ஆலங் குடித்த அமுதே போற்றி 
நாவுக் கரசின் நாதா போற்றி 
  நான்மறை போற்றும் வேதா போற்றி 
பாவுக் கிரங்கி வருவாய் போற்றி  
  பாவம் தொலைக்க அருள்வாய் போற்றி . ( ஓம் நமசிவாய )

சடையில் நதியால் நனைந்தாய் போற்றி
  சந்திரன் தலையில் அனிந்தாய் போற்றி 
இடையில் புலித்தோல் அணிந்தாய் போற்றி 
  இடபம் ஏறியே அமர்ந்தாய் போற்றி
விடைதெரி யாத புதிரே போற்றி 
  விடியலை உணர்த்தும் கதிரே போற்றி
கடையேன் துயரம் களைவாய் போற்றி
  கழலடி பணிந்தேன்  அருள்வாய் போற்றி.  ( ஓம் நமசிவாய )

நள்ளிருள் நடனம் புரிவாய் போற்றி
  நயனங்கள் பரிவுடன் திறவாய் போற்றி
கள்ளத் தனங்கள் களைவாய் போற்றி 
  கனலாய் நெஞ்சில் எழுவாய் போற்றி 
உள்ளம் கவர்ந்த கள்வா போற்றி 
    உயிரில் கலந்த செல்வா போற்றி 
அள்ளக் குறையா அமுதே போற்றி 
   அழைத்தேன் வருவாய் அப்பா போற்றி.   ( ஓம் நமசிவாய )

மாலவன் அறியா மலரடி போற்றி 
   மாதொரு பாகன் சேவடி போற்றி 
காலனும் கைதொழும் காவலன் போற்றி 
  கன்யா குமரியின் காதலன் போற்றி 
பாலகன் உயிரைக்  காத்தாய் போற்றி 
  பாமரன் துயரம் தீர்ப்பாய் போற்றி 
ஆலயம் தோறும் அலைந்தேன் போற்றி 
   அருள்முகம் காட்டிட வருவாய் போற்றி    ( ஓம் நமசிவாய )

தபசிகள் போற்றும் தவமே போற்றி 
  தருமிக்கு உதவிய தமிழே போற்றி 
சபரி நாதனைத் தந்தாய் போற்றி 
   சங்கம் வளர்த்திட  வந்தாய் போற்றி 
சுபம் தரும் கற்பகத் தருவே போற்றி 
   சுழுமுனை திறக்கும் குருவே போற்றி 
அபயம் அபயம்  என்றேன் போற்றி 
   அரவணைத் திடவே  வருவாய் போற்றி   (ஓம் நமசிவாய )

பித்தா போற்றி பிறையோன் போற்றி 
   பிறவி அறுக்கும் பிஞ்சகன் போற்றி 
 அத்தா போற்றி அரனே போற்றி 
    அரணாய் எம்மைக் காப்பாய் போற்றி 
சித்தம் பலமே சீலா போற்றி 
    சித்தி அளிக்கும் சிவமே போற்றி  போற்றி 
சத்தியம் காக்கும் சங்கரன் போற்றி 
   சரணம் அடைந்தேன் காப்பாய் போற்றி   ( ஓம் நமசிவய

ஓமெனும் பிரணவ  ஒலியே போற்றி 
     உணர்ந்தோர் உள்ளத்து ஒளியே  போற்றி 
காமத்தை அழிக்கும் கனலே  போற்றி
    கருணை  நிறைந்த  கடலே  போற்றி 
நாமங்கள் ஆயிரம் கொணடாய்  போற்றி
  நாதத்தின் வடிவாய் நின்றாய் போற்றி
தாமரை பாதங்கள் பணிந்தேன் போற்றி 
   தாங்கிட வருவாய் தலைவா போற்றி      (ஓம் நமசிவாய )

தாயும் ஆகிய தயவே போற்றி 
   தாயின் சாலப் பரிவே போற்றி 
மாயப்  பிறப்பின் மருந்தே போற்றி 
   மனதுள் மலர்ந்த மலரே போற்றி 
காயக் கடலின் கலமே போற்றி
   கடந்தோர் உள்ளக்  கனிவே போற்றி 
நாயேன் தனக்கும் நயப்பாய் போற்றி 
   ஞானத்தின் நன்மைகள் பயப்பாய் போற்றி   ( ஓம் நமசிவாய )

 தேடற் கரிய தேவே போற்றி 
     தேடக் கிடைக்கும் திருவே போற்றி 
பாடற் கரிய பாவே போற்றி 
   பண்ணில் லயிக்கும் பரமே போற்றி 
ஆடற் கலையின் அழகே போற்றி 
   ஆனந்தத்  தாண்டவ அம்பல போற்றி 
நாடக உலகின் நாயக போற்றி 
   நாயகி துணையுடன் வருவாய் போற்றி  ( ஓம் நமசிவாய )

அருவமும் உருவமும் ஆனாய் போற்றி 
   அகிலத்தை தாங்கும்  தூணே போற்றி 
திருவிளை யாடல்கள் புரிந்தாய் போற்றி 
   திருமுகம் காட்டிட வருவாய் போற்றி 
இருவினை தீர்த்திடும் இறையே போற்றி   
    எனைவைத்துப் பூட்டிடும் சிறையே போற்றி 
கருவினில்  கலந்த துணையே போற்றி 
    கதியென அடைந்தேன் உனையே போற்றி .  ( ஓம் நமசிவாய )

                                                                                                   -  சிவகுமாரன் 
   


                             பிரபாகரனின் குரலில் லிங்காஷ்டகம் மெட்டில்.







Wednesday, March 10, 2021

சரணம் அய்யப்பா

                
             

சரணம்  அய்யப்பா
(ஹரிவராசனம் மெட்டு )

சரணம் அய்யப்பா - சுவாமி சரணம் அய்யப்பா
சரணம் அய்யப்பா - சுவாமி சரணம் அய்யப்பா

அரனின் மோகனம் அரியின் யௌவனம்
 அளித்த சீதனம் அய்யன் உதித்தனன்
பரம தேவனின் பாலன் அய்யப்பன்
  பதங்கள் தேடிஎன் பாடல் அர்ப்பணம் (சரணம்)

வேங்கை வாகனம் விரும்பும் பாலகன்
 விரிந்த கானகம் உறையும் நாயகன் 
தாங்கும் பூமகன் தாளைத் தேடிஎன் 
  தமிழில் கோர்த்திடும் மாலை சமர்ப்பணம்.(சரணம்..)

மாலை அணிந்ததும் வேண்டும் கண்ணியம் 
 மறந்தும் தவறுகள் தவிர்த்தல் புண்ணியம் 
காலை மாலையும் கடவுள் எண்ணமாய்
  காக்கும் விரதத்தால் கருணை திண்ணமாம்.(சரணம்..)

பாதை முழுவதும் பாயும் முட்களாம்
  பாதம்  இடறியே பார்க்கும் கற்களாம்
சோதனைகளைத் தாண்டி அய்யனின்
  சரணம் பாடுங்கள் வாழ்க்கை மலரலாம் ( சரணம்..)

கட்டும் இருமுடி கனப்ப தில்லையே.
   கால்கள் வீங்கியும் வலிப்பதில்லையே.
அட்ட திக்குகள் ஆளும் அய்யப்பன் 
  அருளைப் பொழிவதால் அல்லல் இல்லையே. ( சரணம்...)

பாரம் தலையிலே; பக்தி நெஞ்சிலே 
  பாவக் கணக்குகள் பரமன் கையிலே
வீர மணிகண்டன் பேரைச் சொன்னதும் 
  விதியின் கடுமைகள் விலகிப் போகுமே. ( சரணம்..)

பேட்டைத் துள்ளலில் வேடம் போடுங்கள்.
  பேதம் இன்றியே ஆடிப் பாடுங்கள்.
காட்டுப் பாதையை கடந்து ஓடுங்கள்
   காட்சி  தருகிறான்-(அவனை) கனிந்து தேடுங்கள். (சரணம்..)

பம்பை நதிப்புனல் பாவம் கரைத்திடும்
  படிகள் பதினெட்டும் பாடம் உரைத்திடும்
நம்பி வந்திடில் நலங்கள் சேர்ந்திடும்
  நாளும் வணங்கினால் ஞானம் பிறந்திடும் ( சரணம்..)

பாயும் புலியிடம் பாலைக் கறந்தவன்
  பாவி அரக்கியை அழிக்கப் பிறந்தவன்
நோயும் பிணிகளும் நீக்கும் மருந்தவன்
  நுழைந்து பாருங்கள் (அவன்) இதயம் திறந்தவன் (சரணம்..)

ஜோதி தரிசனம் கோடி புண்ணியம்
  சோகம் துயரங்கள் ஓடும் நிச்சயம்
ஆதி பரமனும் அழகன் விஷ்ணுவும்
  அய்யன்  உருவிலே தோன்றல் சத்தியம். ( சரணம்..)

சாமி அய்யப்பா என்னும் சரணங்கள் 
  சபரி மலையிலே ஒலிக்கும் தருணங்கள்
பூமி கைகளில் அடங்கும் பாருங்கள் 
  புதிய சுகமது உணர வாருங்கள்      ( சரணம்..)

........சுவாமியே......ய்  சரணம் அய்யப்பா......  


சமர்ப்பணம்
சபரிமலைக்கு மாலை அணிந்திருக்கும் என் சகோதரர்களுக்கு ...
.
                                                                                               -சிவகுமாரன் 

                                 பாடலுக்கு உயிர் கொடுத்திருப்பது .... பிரபாகரன்