Friday, March 9, 2012

செந்தூர் முருகா



நல்லதே நடக்க வேண்டும் நல்லதே நடக்க வேண்டும்
அல்லவை எல்லாம் நீங்கி நல்லதே நடக்க வேண்டும்

வெற்றிவேல் முருகா கந்தா, வேலவா செந்தில் குமரா
   வேலினை ஏந்தி வந்தோம், விழிகளைத் திறந்து பாராய்
கொற்றவை புதல்வா பாலா, கோலமயில் ஏறிடும் அழகா,
   கூட்டமாய் காண வந்தோம், குறைகளைத் தீர்க்க வாராய்
மற்றவை எல்லாம் நாங்கள் , மறந்து(ன்)னைக் காண வந்தோம்
   மயிலோனே கொஞ்சம் எங்கள் மனதோடு பேச வாராய் .
ஒற்றுமை யாக வந்தோம், ஊரோடு சேர்ந்து வந்தோம்
   உன்பதம் காண வந்தோம், ஓடோடி வாராய் கந்தா !

செந்தூரின் கடலின் ஓரம், சில்லென்ற அலையின் ஈரம்
  தெறித்திடும் அந்த நேரம் , சிதறாதோ நெஞ்சின் பாரம்?.
சிந்தையில் முருகா உந்தன் சிங்கார முகத்தை நாளும் 
   சிந்தித்து கடக்கும் தூரம் சிறுதூரம் ஆகிப் போகும்
வெந்திடும் வெயிலின் அனலும் வாட்டிடும் பனியின் குளிரும்
   வேலனே உன்னைக் காணும் வேட்கையில் மறைந்தே போகும். .
வந்ததுயர் எல்லாம் உந்தன் வாசலில் வந்து சொன்னால் 
  வான்கதிர் முன்னே பனியாய் வழியின்றி உருகி ஓடும்.  
  
கடமைகள் ஆற்ற வில்லை, காசுபணம் பொருட்டே இல்லை 
  கந்தனே உன்னைக் காண, காலங்கள் பார்க்க வில்லை .
நடப்பது நடக்கட்டும் என்று நடக்கிறோம் உன்னைக் காண ,
   ஞானவேல் காட்டும் பாதை, நம்பாதை என்றே தோண.
கடம்பனே என்று சொன்னோம் கால்வலி தோணவில்லை
  கதிர்வடி  வேலா என்றோம்,  கடப்பதும் தூரம் இல்லை .
கடலோரம் கோயில் கொண்ட கடவுளே செந்தூர் முருகா
  காலங்கள் தோறும் உந்தன் காலடி பணிந்தோம் வாராய்.

வள்ளிமேல் வைத்த காதல் விழிகளால் நோக்க வேண்டும்.
  வஞ்சகன் சூரனைக் கொன்ற கரங்களால் காக்க வேண்டும்
துள்ளிவரும் வேலைக் கொண்டு துயரங்கள் ஓட்ட வேண்டும்,
   தோகைமயில் ஏறி வந்து , தூயமுகம் காட்ட வேண்டும்.
உள்ளத்தில் தெளிவு வேண்டும், உடலினில் உறுதி வேண்டும்.
   உன்நாமம் சொல்லிச் சொல்லி  ஊழ்வினை தாண்ட வேண்டும்.
வள்ளலே செந்தூர் முருகா, வருகிறோம் உன்னை நோக்கி
   வளமாக்கு எங்கள் வாழ்வை, வருகின்ற தடைகள் நீக்கி .

முப்புரம் எரித்த அப்பன் மும்மலம் எரிக்க வேண்டும்.
  மூவடி பெற்ற மாமன் , முன்னின்று காக்க வேண்டும்.
தொப்பையார் அண்ணன் துணையால் தொட்டது துலங்க வேண்டும்
   துர்க்கையாம் உந்தன் அன்னை, துணையாகி நிற்க வேண்டும்
அப்பனே உன்னி டத்தில் அடக்கமாய் கேட்ட பாடம் 
    அகந்தையால் பிரம்மன் அன்று அகப்பட்டு உணர்ந்த பாடம்
சுப்பிர மணியா எனக்கு சொல்லியே ஆக வேண்டும்
  சூழ்ந்திடும் வினைகள் எல்லாம் சொல்லாமல் போக வேண்டும்.

திரைகடல் மணலைப் போலே தீராத செல்வம் வேண்டும்.
  தேடிப்போய் தர்மம் செய்து, தீவினை போக்க வேண்டும். 
கரைதேடிக் களைத்துப் போகா, கடல்அலை போல நானும்  
 காலங்கள் தோறும் உந்தன் கருணையைப் பாட வேண்டும் .
இரைதேடி தேடித் தேடி எஞ்சியது ஒன்றும் இல்லை .
   எத்தனை காலம் இன்னும் ஏங்கிட வைப்பாய் அய்யா ?
நரைகூடிக் கிழடாய் ஆகி நரம்பெலாம் தளரும் முன்னே,
   நான்கொண்ட கடமை தீர்க்க நல்லருள் செய்வாய் அய்யா.
   
தீயாகி காற்றாய் மண்ணாய், திரைகடல் நீராய் விண்ணாய்
   திசையெங்கும் தெரிவ தெல்லாம், திருச்செந்தூர் முருகா நீயே
ஓயாமல் இரையும் கடலின், ஒலியினில் முருகா உந்தன் 
   ஓமென்னும் மந்திரம் தான் உண்மையாய் கேட்குதையா .
வாயார பாடும் தமிழின் வார்த்தைகள் எல்லாம் உந்தன் 
   வடிவத்தைக் கண்டு  சொக்கி, வாய்பொத்தி நிற்குதையா .
தாயாக தந்தை குருவாய் தலைவனாய் உனையே எண்ணி  
   தஞ்சமென வந்தோம் எம்மைத் தாங்கிட வேண்டுமையா .

நாவினில் நீயே தந்த நற்றமிழ் கவிதை உண்டு.
  நடக்கின்ற பாதை தோறும் ஞானவேல் ஒளியும் உண்டு.
ஆவியில் கலந்த அப்பன் அஞ்செழுத்து மந்திரம் உண்டு 
   அஞ்சாதே என்று சொல்லும் அன்னையின் சக்தி உண்டு.
கோவிந்த மாமன் பாதம் கூவி நான் தொழுவதுண்டு  
   கோயில்கள் பலவும் சென்று கும்பிட்டு அழுவதுண்டு 
பூவினில் உறைவாள் அருள்தான் போதாத குறையும் உண்டு.
   பொன்மகள் மாமியிடம்நீ போய்ச் சொன்னால் புண்ணியம் உண்டு. 

இரும்பென தேகம் வேண்டும் இளகிடும் இதயம் வேண்டும்
   இருக்கின்ற காலம் வரையில் இடரிலா வாழ்க்கை வேண்டும்
அரும்பிடும் மலரின் இதழாய் அணைக்கின்ற சுற்றம் வேண்டும்.
   அகிலமே எதிர்க்கும் போதும் அகலாத நட்பு வேண்டும் .
கரும்பென இனிக்கும் தமிழின் கற்கண்டு சொற்கள் வேண்டும்
  கந்தாஉனைப் பாடும் பாடல் காலத்தை வெல்ல வேண்டும்
வரும்போது மரணம் தன்னை வரவேற்கும் உள்ளம் வேண்டும்
   வையத்தில் மற்றோர் பிறவி வாராத வரமும் வேண்டும். 

எந்தையே இறைவா போற்றி எனையாளும் தலைவா போற்றி.
   ஈசனின் மைந்தா போற்றி இடர்களைக் களைவாய் போற்றி 
கந்தனே கடம்பா போற்றி காத்திட வருவாய் போற்றி 
   கணபதி தமையா போற்றி கவலைகள் தீர்ப்பாய் போற்றி.
சுந்தர வடிவே போற்றி சுகமெலாம் தருவாய் போற்றி 
   சூரனை அழித்தாய் போற்றி துயரங்கள் அறுப்பாய் போற்றி.
செந்தில்வேல் குமரா போற்றி சிந்தையில் உறைவாய்  போற்றி  
   சேவற்கொடி உடையாய் போற்றி  சேவடி பணிந்தேன் போற்றி 

                                                                                                           -சிவகுமாரன் 
                                                  தம்பியுடையான் பாட்டுக்கஞ்சான்

 ( 2012 பிப்ரவரி பழனி பாதயாத்திரையின் போது எழுதியது ) 

பொன்மகள் மாமியிடம்நீ போய்ச் சொன்னால் புண்ணியம் உண்டு