Sunday, January 24, 2016

அதோபார் அவன்.

+

வெண்பா 

தூரம் பெரிதோ, துணையாய்க் கந்தனவன்
பாரம் சுமந்து பயணிக்க ? -  நேரம்
நெருங்கியது , நீங்கள் நினைத்ததை எல்லாம்
அருள அதோபார் அவன்.

-சிவகுமாரன்


தைப் பூசத் திரு நாளின்று பாதயாத்திரை செல்லும்  எங்கள் குழுவினருக்கு சமர்ப்பணம் 



Monday, January 18, 2016

அழகன் முருகன்


(வழிநடைப் பாடல்)

அரோகரா ஓம் அரோகரா 
            அழகன் முருகன் அரோகரா 
   அரோகரா வேல் அரோகரா 
                அறுபடை முருகன் அரோகரா 

பழனியில் முருகன் படைவீடு - அங்கு 
   பாதங்கள் தேய நடைபோடு 
அழகன் முருகன் அருள்தேடு - அவன் 
   அடிதொழ மறந்தால் வரும்கேடு .                              (அரோகரா)

கவலைகள் இருந்தால் தள்ளிப்போடு- அதை 
   கந்தனவன் காலடியில் அள்ளிப்போடு !
அவனிடம் துயரங்கள் சொல்லிப்போடு - அவன் 
   அருள்மழை பொழிவான்  துள்ளி ஆடு !                    (அரோகரா)

காவடி  தூக்கி மலையேறு -அவன் 
   காலடி பணிந்து  மனம் ஆறு 
பாவங்கள் தீர்த்திட வருமாறு -அந்தப் 
   பாலனை அழைத்து உன் குறை கூறு!                          (அரோகரா)

சரவணப் பொய்கையில் நீராடு - உன் 
   சங்கடம் கழியும் நீரோடு !
வரங்களைத் தரச்சொல்லு சீரோடு - அதை 
   வடிவேலன்  தரும்வரை போராடு!                                 (அரோகரா)

கந்தனுக்கு முகங்கள் ஓராறு - நம்மைக் 
   காத்திடும் கரங்கள் ஈராறு !
செந்தில்வேலன் பேரைச் சொன்னால் சுகம் நூறு -இது 
   சித்தரெல்லாம் கண்டு  சொன்ன வரலாறு                 (அரோகரா)

தண்டபாணி ஏறிவரும் தங்கத்தேரு - அது 
   தகதக வெனவே  மின்னும் பாரு 
கண்டுகொள்ள வேணுமடா கண்கள் நூறு - அதைக் 
   கண்ட பின்னே கவலைகள் ஓடும் பாரு!                    (அரோகரா)

பாடலை பாடியிருப்பது : பிரபு & சுற்றத்தார் 
இசை : செல்வன் 


-சிவகுமாரன்