Thursday, March 24, 2011

காப்பாய் தாயே 2



உலகங்கள் எல்லாம் உந்தன் உள்ளங்கை தனிலே விரிய 
   ஒவ்வொரு உயிரின் வலியும் உன்னிரு விழிகள் அறிய 
அலகிலா அரனும் உன்னை அங்கத்தில்  ஏற்றுக் கொண்டு 
   ஆக்கவும் அழிக்கவும் உந்தன் அனுமதி பெறுவாரன்றோ ?
பலவகைக் கவியால் நானும் பன்முறை பாடிப் பார்த்தும்
  பக்தியால் உள்ளம் உருகி பாதத்தில் வீழக் கண்டும் 
சிலருக்கே மட்டும் தனது திருநடம் காட்டும் அந்த 
   சிவனுக்கு என்னைப் பற்றி சீக்கிரம் சொல்வாய் தாயே .            .7 

தேவியே திருவே போற்றி தேயாத நிலவே போற்றி 
   தேவர்க்கும் தலைவி போற்றி தேவைகள் தீர்ப்பாய் போற்றி 
கோவிலின் குடியே போற்றி குலமகள் வடிவே போற்றி 
   கூத்தனின் துணையே போற்றி கூர்விழி திறவாய் போற்றி 
தீவினை களைவாய் போற்றி தீயென எழுவாய் போற்றி 
    திருவருள் புரிவாய் போற்றி திருவிழி திறவாய் போற்றி 
பாவியர் பகையே போற்றி பணிந்திட வைத்தாய் போற்றி 
   பாதங்கள் பணிந்தேன் போற்றி பாவங்கள் துடைப்பாய் போற்றி .8  

ஓவிய எழிலே போற்றி ஒளிதரும் சுடரே போற்றி 
   ஓமெனும் ஒலியே போற்றி உள்வளர் ஒளியே போற்றி 
ஆவியில் கலந்தாய் போற்றி அகமெலாம் நிறைந்தாய் போற்றி 
   அன்பினால் ஆள்வாய் போற்றி அருள்மழை பொழிவாய் போற்றி 
பூவிழி திறவாய் போற்றி புரிந்தெனை  ஏற்பாய் போற்றி 
   புவனங்கள் ஆள்வாய் போற்றி புத்தொளி தருவாய் போற்றி 
நாவினில் நின்றாய் போற்றி நற்கவி தந்தாய் போற்றி 
   நானுனை பணிந்தேன் போற்றி நற்கதி தருவாய் போற்றி .            9

ஆனந்த தில்லை மன்றில் ஆடும்சிவ காமிபோற்றி
   அன்னையாய் காசி தன்னில் அணைக்கும் விசா லாட்சி போற்றி
மாநகர் கட்டி ஆளும் மதுரை மீனாட்சி போற்றி
   மண்-புகழ் காஞ்சி தன்னில் மங்கை காமாட்சி போற்றி
கானக  சிம்மம் ஏறும் காளி சாமுண்டி போற்றி
   கருணையால் வையம் காக்கும் கற்பகத் தாயே போற்றி
வானகத் தேவரெல்லாம் வணங்கிடும் உமையே போற்றி
   வண்டமிழ் கவிதை கேட்டு வரந்தரும் வாமி போற்றி .                  10

மாலவன் தங்கை போற்றி மாநதி கங்கை போற்றி
   மட்டுவார் குழலி போற்றி மகிஷாசுர மர்த்தினி போற்றி
வாலையெனும் குமரி போற்றி வடிவுடை அம்மா போற்றி
   வாசவி வஞ்சி போற்றி வயிரவி செல்வி போற்றி
கோலவிழித் தாயே போற்றி கோப்புடை அம்மா போற்றி
   கொல்லூர் மூகாம்பிகை போற்றி கொடியிடை அம்மா போற்றி
ஆலங்குடித் தானை ஆளும் ஆதிபரா சக்தி போற்றி
   ஆலங்குடி நாடியம்மா அருள்கவே போற்றி போற்றி .                  11 .

சங்கரி சக்தி போற்றி சாம்பவி சண்டி போற்றி
   சாமளை சூலி போற்றி சௌந்தரி நீலி போற்றி
மங்கள ரூபி போற்றி மன்மத பாணி போற்றி
   மாரி மகமாயி போற்றி மாலினி துர்க்கா  போற்றி
பங்கயற் செல்வி போற்றி பஞ்சமி பைரவி போற்றி
   பார்வதித்  தாயே போற்றி பகவதி அம்மே போற்றி
அங்கயற் கண்ணி போற்றி அபிராம வல்லி போற்றி
   அகிலாண்ட ஈஸ்வரி போற்றி அன்னையே போற்றி போற்றி .  12.

 நல்லதே நடக்க வேண்டும் நல்லதே நடக்க வேண்டும் 
அல்லவை எல்லாம் நீங்கி நல்லதே நடக்க வேண்டும்

                                               ஓம்சக்தி                                          
   

10 comments:

G.M Balasubramaniam said...

அன்னையைப் போற்றி வழிபட அருமையான கவிதை வரிகள். வாழ்த்துக்கள்

Pranavam Ravikumar said...

வரிகள் அருமை!

தமிழ் said...

அருமை

thendralsaravanan said...

ஓம்சக்தி!தாயின் முழு அருளையும் பெற்று வாழ்க வளமுடன்!

sury siva said...

ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு பாடலும் = நம்
ஒப்பற்ற அன்னையின் ஓங்கி புகழ் பாடும்.
இப்பாடல்
ஒவ்வொரு வீட்டிலும் ஒலிக்கவேண்டும்
ஒவ்வொரு மனமும் ஒளி பெற வேண்டும் .
காலையும் மாலையும்
கலந்திடும் வேளையில்
மறவாதி தனை தியானிப்பவர்கள்
மாறா மகிழ்வை எய்துவர் நிசமே.
சுப்பு ரத்தினம்
பூபாள ராகத்திலும் பிறகு பைரவி ராகத்திலும் இதை பாடி மனப்பாடம் செய்யுங்கள். இங்கே கேளுங்கள்.
http://menakasury.blogspot.com

Anonymous said...

பகிர்வுக்கு நன்றி. தங்கள் பதிவுகளை வலைத்திரட்டிகளில் இணைத்து உள்ளீர்களா?

சிவகுமாரன் said...

நான் எழுதும் போது கிடைத்த இன்பத்தைக் காட்டிலும் பன்மடங்கு இன்பம். உங்கள் குரலில் பாடலைக் கேட்கும் போது சுப்புரத்தினம் அய்யா.
கோடானு கோடி நன்றிகள் (தங்கள் பதிவில் பின்னூட்டம் இட முடியவில்லை
Comments on this blog are restricted to team members. என்று வருகிறது)

இராஜராஜேஸ்வரி said...

ஓம் சச்தி! ஓம் சக்தி!!
ஓம்காரமாய் ஒலிக்கும் அருட்கவிக்கு வாழ்த்துக்கள்.

ஜீவி said...

//தீவினை களைவாய் போற்றி
தீயென எழுவாய் போற்றி
திருவருள் புரிவாய் போற்றி
திருவிழி திறவாய் போற்றி
பாவியர் பகையே போற்றி
பணிந்திட வைத்தாய் போற்றி
பாதங்கள் பணிந்தேன் போற்றி பாவங்கள் துடைப்பாய் போற்றி //

ஒவ்வொரு போற்றியும் ஒன்றொன்றாய் சேர்ந்து, ஓருருவில் ஒளிர்ந்து அன்னையே சிந்தையில் னிறையக் கண்டேன். கனிந்த பக்தி அனுபவந்த்தைத் தந்த உங்களுக்கு மனம் னிறைந்த னன்றி.

Nanjil Siva said...

ஓம்.. சக்தி ... ஆதிபராசக்தி... !!!>> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<