Sunday, June 17, 2012

சிவாயநம என்போம்


சிவாயநம சிவாயநம சிவாயநம என்போம்
சிவாயநம எனவோதிட உருண்டோடிடும் துன்பம்

அரிதேவனும் அடிதேடியே அகழ்ந்தே புவிபோனான்
விரிவானிலே முடிதேடியே விரைந்தும் அயன்காணான்
சரிபாதியில் உமையாளுடன் சமமாகிய தேவா
திரிசூலமும் நதிநாகமும் திகழ்ந்தோங்கிட நீ வா!

ஆலங்குடியானே உனக்(கு) ஆளாயினன் யானே.
ஞாலம் எதிர்த்தாலும் உனை நாளும் தொழுவேனே
காலன்தனை கடிந்தேகியே காலால் உதைத் தாயே
காலங் கடத் தாமல் எனை கரைசேர்த்திடு வாயே

மதிசூடியும் மலர்சூடியும் மழுவேந்தியும் வருவாய்
நதிசூடியும் குளிராதஉன் நுதல்கண்ணைத் திறவாய்
கதிர்வேலனும் கணநாதனும் புடைசூழ்ந்திட வருவாய்
விதி சூழ்ந்திடும் அடியேன்வினை விரைந்தோடிட அருள்வாய்.

கண்கேட்டதும் கறிகேட்டதும் கவிகேட்டதும் ஏனோ?
பெண்கேட்டதும் உருமாற்றியே பேயாக்கிய தேனோ?
மண்போட்டுமே நதிசீறிய மதுரைநகர் நாதா
பண்கேட்டதும் மனம்மாறியே பலன்அள்ளியே நீ தா  

காதல்மனை யாட்டிக்கென உடல்பாதியைத் தந்தாய்
வாதம்செய்ய தமிழேயொரு வடிவாகவே வந்தாய்
வேதம்உணர் முனிவோர்களும் விளங்காப் பொருள் ஆனாய்
பாதம்தொழும் அடியேன் முகம் பாராதேன் போனாய்?


நீராகியும் நெருப்பாகியும் நிலமாகியும் நின்றாய்
கார்வானிலே காற்றாகியும் ககனங்களை வென்றாய்
பாராண்டிடும் பரமா வினை, பாவங்களைக் கொய்வாய்
யாராகினும் எனை வென்றிட இயலாதெனச் செய்வாய்


கடல்,மாமலை நீயே-வான் கதிர் மாமழை நீயே
மடல் தேன் மலர் நீயே -அதன் மணம் பேரேழில் நீயே
உடல் ஆனதும் நீயே - அதன் உயிர் ஆனதும் நீயே
நடராஜனே நீயே - என் நலம் காத்திடுவாயே


நீயே கதி நீயே விதி நீயே சரண் என்றேன்
தாயேஎன தந்தையேஎனத் தாளைத் தொழு கின்றேன்
ஈயேன் என இரங்காமலே இருந்தால் அது முறையோ?
நாயேனையும் பொருட்டாகவே நீ எண்ணுவ திலையோ?


சிவமே உயர் பரமே என தினமும் உனைத் தொழவே
நவகோள்களின் இடையூறு எனை நெருங்காதிடச் செய்வாய்
புவனேஸ்வரி மணவாளனே புகழ்ந்தே உனைப் பாட
தவ வேள்வியின் பலன் கோடி என் தமிழால் பெறச் செய்வாய்.


உனையே தினம் தொழுதே மனம் உருவேறிட வேண்டும்.
எனையே உனதடியான் என இனி கூறிட வேண்டும்
நினைவே சிவமயமாய் உளம் நிறைவைத் தர வேண்டும்.
புனையும் கவிமொழியால் உனைப் புகழ்ந்தேன் வர வேண்டும்.


சிவாயநம சிவாயநம சிவாயநம என்போம்
சிவாயநம எனவோதிட உருண்டோடிடும் துன்பம்


-சிவகுமாரன்