Sunday, April 12, 2020

மன்றாடிப்பார்குன்றெல்லாம் குடியாக உருவானவன் -கொஞ்சம்
 மன்றாடிப்பார் நேரில் வருவானவன்.
அன்றாடம் துதிப்போர்க்குள் இருப்பானவன் - தன்
 அடியாரை எதிர்ப்போர்க்கு நெருப்பானவன் -  முருகன் ( குன்றெல்லாம்...)     1.

உமைபாகன் நுதற்கண்ணில் உருவானவன் - அந்த
உலகாளும் தந்தைக்கே குருவானவன்  .
கேட்டாலே தரும் கல்ப தரு ஆனவன் -  நீ
கேட்டுப் பார் , எடுத்தள்ளித் தருவானவன் - முருகன் (குன்றெல்லாம்...)           2.

காட்டிடையன் போல்வேடம் தரித்தானவன்- சுட்ட
கனிஈந்து மணல்ஊதச் சிரித்தானவன்
திமிர்கொண்ட அசுரன் தோல் உரித்தானவன் - என்
தமிழுக்கும் அவனேதான்  உரித்தானவன் - முருகன் (குன்றெல்லாம்...)            3.


மலையேறி அரையாடை அணிந்தானவன் - பின்
மனம்மாறி கடுங்கோபம் தணிந்தானவன் .
குறவள்ளி தனைத்தேடி மணந்தானவன் - பொதிகைக்
குளிர்த் தென்றல் தமிழ்வீசும் மணம்தான்அவன்- முருகன்(குன்றெல்லாம்)   4.

திருஅருண கிரிநாவில் இருந்தானவன் - ஊமைக்
குருபரனின் பிணிதீர்க்கும் மருந்தானவன்.
புவிசுற்ற மயிலேறி பறந்தானவன் - என்
கவிகொத்திச் செல்கின்ற பருந்தானவன் - முருகன் (குன்றெல்லாம்)               5.

படைதன்னை வேல்கொண்டு பொடிசெய்தவன் - அசுரன்
பகைவென்று அதிற்  சேவற் கொடி செய்தவன் .
உலகெங்கும் தமிழ்நெஞ்சே குடி ஆனவன் - என்
உளம் உழுது பயிர் செய்யும் குடியானவன்  - முருகன் (குன்றெல்லாம்)            6.

அவ்வைக்குத் தமிழ் ஞானப் பழமானவன் -வள்ளி
அழகுக்கு மனம்மயங்கி கிழமானவன் -
உயர்வான வழிகாட்டும் மறை ஆனவன் - அவனை
உனக்குள்ளே தேடிப்பார் மறையான் அவன் - முருகன் (குன்றெல்லாம்)          7.

செந்தூரில் அலைவீசும் கடலானவன் -இன்பச்
செந்தமிழின் இசையே தன்  உடலானவன் -
குருப்ரம்மன்  சிறைவழக்கின் தீர்ப்பானவன் - உன்
குறைசொல்லிப் பார்அனைத்தும் தீர்ப்பான்அவன்-முருகன்(குன்றெல்லாம்)8

தெய்வானை வள்ளிக்கும் துணையானவன் -இன்பத்
தேன்தமிழின்  இன்சுவைக்கு இணையானவன் !
அடியாரின் விழி நீர்க்கு அணையானவன் - அவனை
அகல்விளக்காய் ஏற்றிப்பார் ,அணையான்அவன்-முருகன்(குன்றெல்லாம்) 9.

ஓங்கார நாதத்தின் பொருளானவன் - தினம்
ஓம் என்று சொல்லிப்பார் அருள்வான் அவன் .!
உலகத்தின் இருள்நீக்கும் ஒளி ஆனவன் - நீ
உளமுருகிக் கேள் எதையும் ஒளியான் அவன் - முருகன் (குன்றெல்லாம்)     10.


                                                      பிரபாகரனின் தெய்வீகக் குரலில் 
                                                        என் அம்மாவின் குரலில் சிவகுமாரன் Thursday, January 23, 2020

அழைப்பாயா ?


பூசத் திருநாளில் பொற்பாதம் தேடிவர
ஆசை அதிகமுண்டு ஆறுமுகா- பாசமுடன்
என்னை அழைப்பாயா, ஏங்கித் துடிதுடித்து
உன்னைத் தொடரும் உயிர்.
                                            -சிவகுமாரன்

Tuesday, October 22, 2019

பரம்பொருளே

                                    வெண்பா 

நாடோடி வாழ்க்கையில் நானெங்கு போனாலும்
ஓடோடி வந்துநிற்கும் உன்னருளே  - ஈடேதும்
இல்லா பரம்பொருளே ! என்பயணம் சீராக்கி
நல்வழியில் என்னை நடத்து.
                                           
                                 சிவகுமாரன்.

Wednesday, October 9, 2019

லிங்கராஜா

         
                                     வெண்பா

திரிபுவ னேஸ்வரா லிங்கராஜா
உந்தன்
தரிசனம் காணத் தவித்தோம் - பரிவாய்
அழைத்தாய் உனதருள் ஆலயம், வாழ்வைத்
தழைத்திடச் செய்யுமுன் தாள்.

                                  -சிவகுமாரன்


ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் லிங்கராஜா ஆலயம். திரிபுவனேஸ்வர்  என்றும் ஈசன் அழைக்கப் படுகிறார். மூவுலகங்களுக்கும் அதிபதி. 
அவன் அருளாலே அவன் தாள் வணங்கினேன்.

Tuesday, August 6, 2019

ஆடு விநாயகா

                       (வெண்பா)

ஆடுவி நாயகா! அல்லல் முறையிட்டு
பாடும் குரல்கேட்டும் பாராது - ஓடும்
துயரென்றார் உன்னைத் துதித்தாலே ! நானும்
அயராது கேட்பேன் அருள்.

                                          - சிவகுமாரன்


Sunday, February 18, 2018

தாயுமானவா!


ஒம்நமசிவாய ஒம்நமசிவாய  
ஒம்சிவாய ஒம்சிவாய 
ஒம்நமசிவாய 

திருச்சிமலைக் கோட்டை தன்னில் திகழ்ந்தருளும் ஆண்டவா
  தேவிமட்டு வார்குழலி துணையுடனே ஓடிவா
கருப்பிணியின்  துயரம் போக்க தாயின் வேடம் பூண்டவா
   கருணைகொண்டு கண்திறக்க வேண்டும் தாயுமானவா

ஆலம்  அள்ளித் தான் குடித்து அமரர்குலம் காத்தவா
   அன்னை மட்டு வார்குழலி கரம்பிடித்து ஓடிவா
காலமெல்லாம் உன்னிரண்டு கால்பிடித்து வேண்டினேன்.
   கருணைகொண்டு கண்திறக்க வேண்டும் தாயுமானவா

ஆதரவு கேட்டுஉந்தன் அடிகளையே பற்றினேன் 
   அப்பனே உன் கோயில்தன்னை அனுதினமும் சுற்றினேன்.
காதலாகி கசிந்துருகி கரங்குவித்து வேண்டினேன்.
   கருணைகொண்டு கண்திறக்க வேண்டும் தாயுமானவா

சின்னப்பிள்ளை ஊனைக்கேட்ட சித்தத்திலே பித்தமோ 
   சிறியேன் என்னை சோதிக்கவே இன்னும் என்ன திட்டமோ 
கண்ணப்பனின் கண்பறிக்க போட்ட வேடம் போதுமே 
   கருணைகொண்டு கண்திறக்க வேண்டும் தாயுமானவா

தில்லையிலே நந்தனார்க்கு நந்திவிலக வில்லையா
  திருவடியார் பாடகோயில் கதவும்திறக்க வில்லையா   
கல்லைத்தெப்ப மாக்கிஅப்பர் கடலில் நீந்த வில்லையா 
   கருணைகொண்டு கண்திறக்க வேண்டும் தாயுமானவா

சுந்தரனார் காதலுக்கு தூதுசெல்ல வில்லையா 
   துயரம்கொண்ட கர்ப்பிணிக்கு தாயுமாக வில்லையா 
கந்தவேலைப் போல நானும் உந்தன்பிள்ளை  அல்லவா 
   கருணைகொண்டு கண்திறக்க வேண்டும் தாயுமானவா

அலைதவழும் இராமநாத ஜோதிலிங்க ரூபமே  
   அருணை மலை தீபமே என் அகம் நிறைந்த ஜோதியே
கலைதவழும் ஆனைக்காவில் காக்கும் ஜம்பு கேஸ்வரா
   கருணைகொண்டு கண்திறக்க வேண்டும் தாயுமானவா

மண்சுமந்து அடிகள் வாங்கி மாயம் செய்த மன்னவா 
   மதுரைநகர் நரிகளெல்லாம் பரிகளாகச் செய்தவா 
கண்திறந்து கனல்பொழிந்து  கீரன்திடம் கண்டவா 
   கருணைகொண்டு கண்திறக்க வேண்டும் தாயுமானவா

அணையுடைத்து மதுரையினை அலறவைத்த சுந்தரா 
   அகங்குழைந்து பாண்டியனுக் கருள்கொடுத்த ஈஸ்வரா
கணைதொடுத்த மன்மதனை கண்திறந் தெரித்தவா 
   கருணைகொண்டு கண்திறக்க வேண்டும் தாயுமானவா

பிட்டுக்காக மண்சுமந்து பிரம்படியும் வாங்கினாய் 
   பிரம்மன்தலை தூக்கிக்கொண்டு பித்தனாக சுற்றினாய் 
கட்டும்உள்ளக் கோயில்காண மட்டும்நேரம் இல்லையோ
   கருணைகொண்டு கண்திறக்க வேண்டும் தாயுமானவா

ஆதியும்நீ  அந்தமும்நீ  ஆட்டுவிக்கும் சக்திநீ 
   அத்தனும்நீ அம்மையும்நீ ஆளுமெங்கள் அரசும்நீ
காதில்வேதம் பிள்ளைஓத கேட்டுக்கொண்ட சீடன்நீ 
   கருணைகொண்டு கண்திறக்க வேண்டும் தாயுமானவா

நஞ்சைஅள்ளி உண்டபாசம் தேவருக்கு மட்டுமோ 
   நற்றமிழில் சொக்கும் மனம் நால்வருக்கு மட்டுமோ 
கஞ்சனோநீ கருமியோநீ கனிவுஉனக் கில்லையோ 
   கருணைகொண்டு கண்திறக்க வேண்டும் தாயுமானவா

இடபவாக னத்திலேறி  இன்னருளைக் காட்டவே 
   இடதுபாக சக்தியோடு இறங்கிவருக ஈஸ்வரா 
கடவூர்தன்னில் காலால் எட்டி காலனை உதைத்தவா 
   கருணைகொண்டு கண்திறக்க வேண்டும் தாயுமானவா

மாலவனும் கண்டறியா மலரடிகள் கொண்டவா
   மமதைகொண்ட பிரம்மனுக்கு மாயம்காட்டி நின்றவா
காலடியும் மேல்முடியும் காட்டும் வரை விடுவேனோ ?
    கருணைகொண்டு கண்திறக்க வேண்டும் தாயுமானவா

முத்தமிழில் நான் தொடுத்த முத்துமாலை எத்தனை?
   மூச்சடக்கி முக்குளித்து முத்தெடுத்த தெத்தனை?
கத்துகின்ற கவிதையெல்லாம் காதில் எட்ட வில்லையோ?
   கருணைகொண்டு கண்திறக்க வேண்டும் தாயுமானவா

பாதகங்கள் கண்டதும் நான் பார்த்தொதுங்கிப் போகிறேன்.
   பாவம்மேதும் செய்ததில்லை பயத்துடனே வாழ்கிறேன்.
காதறுந்த ஊசிபோல கடைசிவரை வாழ்வேனோ ?
   கருணைகொண்டு கண்திறக்க வேண்டும் தாயுமானவா

உயிரிருக்கும் காலம்வரை உந்தன்நாமம் சொல்லுவேன்.
   உந்தன் நாமம் சொல்லிச் சொல்லி ஊழ்வினையை வெல்லுவேன் .  
கயிலைமலை காட்சிதனை காட்டும்வரை விடுவேனோ?
   கருணைகொண்டு கண்திறக்க வேண்டும் தாயுமானவா

உன்னைவிட்டு வேறுயாரை உரிமையோடு பாடுவேன்?
   உந்தன்கோயில் விட்டுஎந்த ஊரைநோக்கி ஓடுவேன்?
கன்னல்மொழி கவிதைபாடி காலடியில் வீழ்கிறேன் 
   கருணைகொண்டு கண்திறக்க வேண்டும் தாயுமானவா.

                                                                   
                                                                                                                                                                              -சிவகுமாரன்
              பாடியிருப்பவர் : பிரபாகரன் 

Tuesday, February 13, 2018

உன்னை விடுவேனோ ?


சிவாயநம ஓம் - ஓம்
  சிவாயநமஹ
சிவாயநம ஓம் - ஓம்
  சிவாயநமஹ  சிவாய நமஓம் சிவாய நமவென
   சிந்தித் திருக்கின்றேன்
சிவாய நமஓம் சிவாய நமவென
   சொல்லித் திரிகின்றேன்
சிவாய நமவென சொல்லும் வேளை
  சோகம் மறக்கின்றேன்
சிவாய நமவென சொல்லிச் சொல்லி
   தேகம் வளர்க்கின்றேன்.                               (சிவாயநம ஓம்) 1 .


பிட்டுக்காக மண்ணைச் சுமந்தீர்
   பிரம்பால் அடிபட்டீர்
கொட்டில் உள்ளே நரியை அடைத்து
   குதிரை ஆக்கினீர்
கட்டுக் கட்டாய் விறகு சுமந்து
   கூடல் வலம் வந்தீர்
முட்டாள் அடியேன் முகத்தைக் காண
   முடியா தென்கின்றீர்.                                      (சிவாயநம ஓம்) 2.

ஏழைத் தருமி இன்னல் தீர்க்க 
   எழுதிக் கவி தந்தீர் 
வாழத் துடித்த மார்க்கண் டேயர்
   வாழ்நாள் கூட்டினீர் .
ஆழக் கடலில் அமிழப் போட்ட
   அடியார் உயிர் காத்தீர்
பாழும் உலகில் நான்படும் இன்னல் 
   பார்த்தும் ஏன் இருந்தீர்?                                  (சிவாயநம ஓம்) 3.   

தாயாய் வந்து தருணம் பார்த்து 
   பிள்ளை பெற வைத்தீர் .
நோயைத் தந்து நாவுக் கரசை 
   நீரே ஆட கொண்டீர் .
பேயாய் மாறும் பெருங்கதி கேட்ட 
   பெண்ணுக் கருள் செய்தீர்.
நாயேன் தனக்கு நல்லருள் செய்ய 
   நாளேன் பார்க்கின்றீர் ?                                    (சிவாயநம ஓம்)  4.
 
கண்ணில் இரத்தம் வடியக் காட்டி 
   வேடன் திறம் பார்த்தீர்.
சின்னப் பிள்ளைக் கறியைக் கேட்டு
   தொண்டர் தரம் பார்த்தீர் .
கண்ணைத் திறந்து கனலைக் கக்கி 
   கீரன் திடம் பார்த்தீர் 
என்ன சோதனை எனக்கு வைப்பீர் 
   எதனை எதிர் பார்த்தீர் ?                                     (சிவாயநம ஓம்) 5.


காமப் பெண்களின் சாபம் தீர்க்க
   கைவளை மணி விற்றீர்
மாமன் வேடம் புனைந்து வந்து
   மங்கையின் வழக்குரைத்தீர் .
தாமரைக் குளத்தில் பலகை எடுத்து
   சங்கத் தமிழ் வளர்த்தீர்
பாமரக் குளத்தில் மூழ்கிய என்னை
   மீட்டிட ஏன் மறந்தீர் ?                                           (சிவாயநம ஓம்) 6.


சிலந்தி யானை பன்றிக் கெல்லாம்
   சிவகதி தனைத் தந்தீர் .
பலத்த மீனை வளைத்துப் பிடித்து
   பரகதி பெறச் செய்தீர் .
தலத்தில் முளைத்த தருக்களைக் கூட
   சந்நிதி தனில் வைத்தீர் .
உளத்தில் இருத்தி உம்மைத் தொழுதேன்
   எமக்கு என்  செய்தீர் .                                             (சிவாயநம ஓம்) 7.

ஆல கால விடத்தை உண்டு 
   அமரர் தமைக் காத்தீர்.
சூலா யுதத்தால் மும்மல மறுத்து 
   சுடரைக் காட்டினீர்.
மூலா தாரக் கனலுக் குள்ளே 
   மூண்டு வெளி வந்தீர்,
காலால் உதைத்து கனலை எழுப்பிக் 
   காக்க வருவீரே ,                                                      (சிவாயநம ஓம்) 8 .

காசும் பணமும் பொன்னுக் மணியும் 
   கணக்கின்றி நான் வேண்டேன்.
பேசும் படியாய் பெரியோன் ஆகும் 
   பெருமை நான் வேண்டேன். 
தேசம் எங்கும் திருவருள் வேண்டித் 
    தேடித் திரிகின்றேன் 
 நேசம் கொண்டு நீ வருவாயென 
   நாளைக் கழிக்கின்றேன்.                                       (சிவாயநம ஓம்) 9 .

பிறவி எடுத்த நாள்முதல் உந்தன்
   பேர் சொல்லி வருகின்றேன்.
உறவும் நட்பும் உலகும் மறந்து 
   உன்னைத் தொடர்கின்றேன்
இரவும் பகலும் இன்னருள் வேண்டி 
   ஏங்கிக்  கிடக்கின்றேன் 
வருவீர் வருவீர் என எதிர்பார்த்து
   வாழ்ந்து கழிக்கின்றேன்.                                     (சிவாயநம ஓம்) 10. 

காசியும் கங்கையும் வந்து வணங்கி 
   கருமம் தொலைத்தறியேன்    
வாசி அடக்கி வாழ்ந்து சிறக்கும் 
   வழியும் நானறியேன்
வீசிய காற்றில் வீழும் சருகாய் 
   விதிவழி நடக்கின்றேன்
ஈசனே உந்தன் இணையடி பற்றி 
   எதையும் கடக்கின்றேன்                                     (சிவாயநம ஓம்) 11. 

காற்றாய் நிலமாய் கனலாய் புனலாய் 
   உன்னைக் காண்கின்றேன் 
நேற்றாய் இன்றாய் நாளாய் பொழுதாய்
   நின்னைத் தொழுகின்றேன் 
கூற்றுவன் தன்னை உதைத்த காலில் 
   கும்பிட்டு விழுகின்றேன் 
ஏற்றுக் கொள்வீர் என்றோர் நினைவில் 
   இன்னும் வாழ்கின்றேன்.                                    (சிவாயநம ஓம்) 12. 

போற்றி உம்மை  புகழ்ந்து பாடி
   பாதம் பணிகின்றேன் 
நீற்றைப் பூசி நின்னைத் தொழுது 
   நெஞ்சம் குளிர்கின்றேன்
ஆற்றுப் படுத்தி ஆட்கொள் வீரென
   ஆசைப் படுகின்றேன்
தோற்றுப் போவேன் எனவெண் ணாதீர்
   தொடர்ந்து நான் வருவேன்.                                (சிவாயநம ஓம்) 13. 

எல்லாத் துயரும் எனக்களித் தாலும்
    ஏற்றுக் கொள்கின்றேன்.
பொல்லா  நெருப்பில்  போட்டெடுத் தாலும் 
   பொறுமை காக்கின்றேன்.
சொல்லா திருந்து சோதித் தாலும்
   சுகமாய் பின் வருவேன் 
நில்லா உலகம் நின்று போனாலும் 
   நின்னை நான் மறவேன்.                                       (சிவாயநம ஓம்) 14. 

துன்பம் சோதனை தொடர்ந்து வந்தால் 
   துவண்டு போவேனோ ..?
இன்பத் தரிசனம் எட்டும் பயனை 
   இழக்க விடுவேனோ...?
அன்பைக் காட்டி அருளும் நாள் வரை 
   அயர்ந்து போவேனோ..? 
உன்பதம் பற்றி உருகிக் கிடப்பேன் 
   உன்னை விடுவேனோ..?                                      (சிவாயநம ஓம்) 15. 

                                                                                                              
                                                                                               -சிவகுமாரன்
பாடலை பாடுபவர் - பிரபாகரன்