Friday, March 18, 2011

காப்பாய் தாயே


ஆதியும் அந்தமு மில்லா அரனவன் துணையே தேவி
    அன்பையே கவிதை ஆக்கி அழைக்கிறேன் பூக்கள் தூவி
பாதியை பரமன் அளிக்க பாரினை ஆளும் தாயே 
   பாமரன் துயரம் தீர்க்க பரிவுடன் கண் திறவாயே
ஜோதியே உன்னை நெஞ்சில் சுடர்விடும் விளக்காய் ஏற்றி
   தொழுகிறேன் என்னை அதிலே எண்ணையாய் தினமும் ஊற்றி 
போதிய மட்டும் என்னை சோதித்தாய் போதும் தாயே 
   பொற்பதம் பணிந்தேன் கொஞ்சம் பூவிழி திறவாய் நீயே !              
                                                                                                                            (1)
                
சீர்காழி தனிலே அன்று சிறுபிள்ளை அழுகை கேட்டு 
   சிவனோடு ஓடிவந்து தித்திக்கும் அமுதம் தந்தாய் 
காரிருள் வானில் உந்தன் காதணி கழற்றி வீசி
   கடையூரின் பக்தன் கேட்க காட்டினாய் நிலவை அன்று.
பார்புகழ் சங்கரன் உன்னை பாடிட பின்னால் வந்தாய் .
   பரிவுடன் வள்ளலார்க்கு பசிதீர உணவு தந்தாய் 
சீரிளத் தமிழால் உன்னை சிந்தித்துக் கவிதை சொன்னேன்,
   சிறியவன் வாழ்வைக் கொஞ்சம் சீராக்கு அன்புத் தாயே.                 
                                                                                                                            (2)

உள்ளத்தில் கோயில் கட்டி உன்னையே உள்ளே பூட்டி 
   உயிரெனும் மாலை சூட்டி உன்பதம் தொழுதேன் தாயே 
வெள்ளத்தில் துரும்பைப் போல விதிவழி சென்றேன் தாயே 
   வேதனைக் குழியில் நானும் வீழாமல் காப்பாய் நீயே .
சொல்லொன்று சொல்வாய் தாயே தொல்லைகள தொலைந்தே
                                                                                                                    (போக 
   சோகங்கள் துயரம் எல்லாம் சோதியில் கரைந்தே வேக
இல்லத்தில் இன்பம் சூழ , இன்னல்கள்  எல்லாம் தீர 
   இன்னருள் புரிவாய் தாயே , எமக்கினி எல்லாம் நீயே .                  
                                                                                                                             (3)

ஓமெனும் மந்திரத்தின் உட்பொருள் அறிந்தேனில்லை 
    ஒன்பது கோணம் என்பார் ஒன்றுமே தெரிந்தேனில்லை  .
பூமகள் உன்பேர்  சொல்லி  புலம்பியே தொழுவேனன்றி
   பொருள்நிறை மந்திரங்கள் புரிந்து நான் சொன்னேனில்லை 
நாமங்கள் கோடி சொல்லி நாள்தோறும் பூஜை செய்வார் 
   நானுனை அம்மா என்பேன் , நாயேனும் வேறொன்றறியேன்
சோமனின் துணையே தாயே சுடர்விடும் ஒளியின் தீயே 
   சொல்லியழ உன்னைவிட்டால் துணையெனக்  கேது தாயே ?     
                                                                                                                             (4)

அங்கத்தில் பாதி வாங்கி அகிலத்தை முழுதும் தாங்கி
   அணுவுக்குள் அணுவுமாகி அறிவுக்கு அப்பாலாகி
பொங்கிடும்  கங்கையாகி பூமிக்குள் தங்கம் ஆகி
   புவிநிறைப் பொருளும் ஆகி புரியாத புதிருமாகி 
எங்குமே நிறைவாய் நிற்கும் இயற்கையின் வடிவம் ஆகி
   எண்ணருஞ் சக்தி கொண்ட ஏகாந்தப் பொருளாம் அந்த
திங்களைச் சூடும் பெம்மான் திருவுளம் கலந்த தாயே 
   திருவடி பணிந்தோம் எங்கள் தீவினை களைவாய் நீயே !                
                                                                                                                             (5)

புவியை நான் ஆள வேண்டாம், பூவிழிப் பார்வை  போதும்.  
   பொன்மழை பொழிய வேண்டாம், பொற்பதம் கண்டால் போதும். 
குவியலாய் செல்வம் வேண்டாம், குறைவிலா வாழ்க்கை போதும்.
   கூட்டமாய் சுற்றம் வேண்டம் , குணத்தொடு  சிலரே போதும். 
செவிநிறைப்  புகழும் வேண்டாம், தேவிநின் வாழ்த்தே போதும் 
   திருவடி காட்டி எந்தன் தேவைகள் தீர்த்தால் போதும்.
கவிதையில் உன்னை வைத்தேன் கண்நிறை வாழ்வு தாராய் .
   கழலடி போற்றுகின்றேன் கண்முன்னே நீயும் வாராய்.!                   
                                                                                                                             (6)

                                                                                                    (தொடரும் )

பாடலை பாடுபவர் : என் சித்தப்பா அரசு அவர்கள்.  

இன்னொரு ராகத்தில்...பிரபாகரன் innnn


23 comments:

குமரன் (Kumaran) said...

நல்லதே நடக்க வேண்டும்! நல்லதே நடக்க வேண்டும்!
அல்லவை எல்லாம் நீங்கி நல்லதே நடக்க வேண்டும்!

அருமையான பாடல்கள்!

selvaraj said...

ஓமெனும் மந்திரத்தின் உட்பொருள் அறிந்தேனில்லை
ஒன்பது கோணம் என்பார் ஒன்றுமே தெரிந்தேனில்லை .
பூமகள் உன்பேர் சொல்லி புலம்பியே தொழுவேனன்றி
பொருள்நிறை மந்திரங்கள் புரிந்து நான் சொன்னேனில்லை
நாமங்கள் கோடி சொல்லி நாள்தோறும் பூஜை செய்வார்
நானுனை அம்மா என்பேன் , நாயேனும் வேறொன்றறியேன்///

அருமை சிவகுமாரன்.
இப்படி ஒரு கவிதையை இது நாள் வரை நான் படித்ததில்லை. சக்தியை வழிபடும் அனைவரும் பாராயணம் செய்யவேண்டிய பாடல் இது. தொடரும் போட்டிருக்கிறீர்களே , இன்னும் உண்டா உபாசனை ?

sury said...

சந்தத்தின் சுந்தரத்தில் = என்
சித்தத்தை நழுவ விட்டேன்.
அந்தமும் ஆதியும் இல்லா அன்னைக்கு
சந்தங்கள் பந்தங்கள் ஆகுமோ ?
அகத்தினை மறக்கச்செய்யும்
ஜெகத்தினை துறக்கவைக்கும்
நிஜத்தினைப் புரியவைக்கும்
நித்தியத்தை உணரவைக்கும்.
அழகு தமிழ்க் கவிதை தனை
ஆனந்த பைரவியில் பாடி என்
கண் நீரால் அவள் காலடியை
காலமெல்லாம் போற்றி நிற்பேன்.

சுப்பு ரத்தினம்.

ஜீவி said...

நெஞ்சத்தைப் பிழிந்து எடுத்த சொல்லாட்சி.. தமிழ் அரும்புச் சொற்கள் அடுக்கடுக்காய் தொடுக்கப்பட்டு அன்னைக்கு பாமாலையாய் சூட்டபட்டிருப்பதால், நெஞ்சத்தின் நெருக்கம் கூடுகிறது.

RVS said...

//குவியலாய் செல்வம் வேண்டாம், குறைவிலா வாழ்க்கை போதும்.//
அற்புதம்.. தொடரும் போட்டுட்டீங்களே.. ;-)))

சுந்தர்ஜி said...

குறையொன்றுமில்லை பாடலின் நிறைவும் உங்களுக்கேயான தமிழின் செறிவும் லயத்தோடு இணைந்து வாழ்வின் அர்த்தத்தையும் அர்த்தமின்மையையும் ஒன்றாய் உணர்த்துகின்றன சிவா.

அலுவலகத்திலிருந்து பாடலைக் கேட்க வாய்ப்பில்லை.

கேட்டுவிட்டுப் பிறகெழுதுவேன்.

ரிஷபன் said...

பாடலும் ஒலிப்பதிவும் இனிமை..

thendralsaravanan said...

இசைக்குடும்ப கவிக்கு வணக்கம்!
இனிமையான பாடல்.
என்றும் தொடர்க தங்கள் பக்தி பணி!

thendralsaravanan said...

தினமும் அருட்பா படிக்க வருகிறேன்.
மன அழுத்தம் குறைவதாய் உணர்கிறேன்.
வாழ்த்துக்கள்!

Lakshmi said...

இனிமையான பாடல் பகிர்வுக்கு நன்றி.

Rathesh said...

\\புவியை நான் ஆள வேண்டாம், பூவிழிப் பார்வை போதும்.
பொன்மழை பொழிய வேண்டாம், பொற்பதம் கண்டால் போதும்.
குவியலாய் செல்வம் வேண்டாம், குறைவிலா வாழ்க்கை போதும்.//

ஏன் இப்படி?
நாமென்ன அபிராமிப் பட்டரா?
அன்னையிடம் செல்வம் கேளுங்கள்.
அள்ளிக் கொடுக்கிறாளா பார்ப்போம்.
ஆனாலும் அன்னையிடம் இப்படி வேண்டுவதற்கு ஒரு பற்றற்ற மனம் வேண்டும் . போதும் என்ற மனமே பொன் செய் மருந்து என்று சொல்லி இருக்கிறீர்கள்.
இரண்டு ராகங்களும் அருமை.
கேட்க கேட்க இனிமை.
கண்ணதாசனின் பொன்மழை படித்தது போன்ற உணர்வு வருகிறது. அவரையும் மிஞ்சி விட்டீர்கள் பல இடங்களில் .

இராஜராஜேஸ்வரி said...

ஆழ்ந்த பொருளுடன்
அற்புதமாய் கற்பகத்தருவை
வேண்டி படைத்த பாடலின்
சொல்லாட்சியும், அமுதமாய்
பாடிய பாடலும் சிந்தை நிறைத்தது.
வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.

Harani said...

அன்புள்ள சிவகுமரன்..

தொடர்ந்த பணிகள். இன்றுதான் உங்கள் அழைப்பைப் பார்த்தேன். உடன் வந்துவிட்டேன். தங்கள் அன்பிற்கு நெகிழ்கிறேன். இயல்பாகவே என்னுடைய ஒவ்வொரு அசைவும் அவனன்றி அசைவதில்லை என்பதில் உறுதியான கொள்கை கொண்டவன். உங்களைப் பார்த்து இப்போதுதான் முதன்முறையாக பொறாமைப்படுகிறேன். முழுக்க தெய்வ அருள் இருந்தால் மாத்திரமே இது சாத்தியம். இறைவன் மேல் முழு நம்பிக்கையும் அவனையே சரண் அடைபவர்க்கும் அள்ளிஅள்ளித் தருவான். உங்களுக்கு ஏராளமான சொற்களும் அதனை கவினுறக் கோர்ப்பதற்கும் இத்தனை கவிதைகளையும் தந்திருக்கிற இறைவனை வேண்டுகிறேன். வாழ்க வளமுடன் பல்லாண்டுகள். சித்தப்பா குரலும் தம்பி பிரபாகரன் குரலும் கேட்டேன். ஆனால் அம்மாவின் குரல் என்னை வெகுவாக ஈர்த்தது. நடுங்கும் குரலில் முருகனை அழைக்கும் விதம் அருமை.

இயல்பில் நான் ஒரு வேதியியல் பட்டதாரி. தமிழின் மேல் கொண்ட பற்றுதலால் தமிழ்ப் படித்து பேராசிரியராக வந்தேன். எனவே வருவதற்கு முன் என்னுடைய தமிழ் படித்த சகோதரியின் படிப்புத் தோழரிடம் ஆசிரியப்பாவும் வெண்பாவும் சில சந்தங்களும் கற்றுக்கொண்டேன். இதுதவிர வேறு இலக்கணங்கள் தெரியாது. இருப்பினும் திருவருட்பா. தேவாரம் போன்றவற்றின் இசைப்பண்களையும் மேலும் சில இலக்கணங்களையும் கற்று வருகிறேன்..உங்களின் வெண்பாக்கள் நான் வெண்பா கற்று எழுதிய நாட்களை நினைவுகூர்ந்தது. கலிங்கத்துப் பரணி படித்து உதயத்து பரணி எழுதி (சுமார் 30 பாடல்கள்) தொலைத்துவிட்டு இன்றும் தேடிக்கொண்டிருக்கிறேன். வாய்ப்பு அமையும்போது அடிக்கடி வருவேன். காரணம் எனக்குப் பிடித்த ஒருசில வலைப்பூக்களில் உங்களுடையது ஒன்று. நெஞ்சம் நிறைந்து மனமார வாழ்த்துக்கிறேன். மேலும் பல பாடல்களை நான் படித்து அனுபவிக்க எழுதுங்கள்.

Thambi prabakaran said...

அன்பு அண்ணனுக்கு இந்த தம்பி பிரபாகரனின் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் . நூறு வருடம் நோய நொடி இல்லாமல் சந்தோசமாக வாழ மேன்மேலும் பல கவிதைகளை எழுதி இந்த இரு வலை தளமும் வேற்றி பெற இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன்

சிவகுமாரன் said...

உங்கள் பின்னூட்டத்தில் மனம் நெகிழ்ந்தேன்.பேராசிரியர் ஹரிணி அவர்களே.
நானும் வேதியியல் பட்டதாரி. அது வயிற்றுக்கும் , தமிழ் நெஞ்சுக்கும் என்று ஆகிப் போனது. பள்ளியில் மட்டுமே இலக்கணம் படித்த எனக்கு கவியார்வமும் , ஓரளவு எழுதும் திறனும் அமைந்தது அவனருளால் தான் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை. கடந்த பத்து வருடங்களில் ஏராளமாய் என்னை எழுத வைத்திருக்கிறான். தங்களைப் போன்றோரையும் அவை சென்றடைய வேண்டும் என்பது இறைவன் சித்தம்.
தொடர்ந்து நான் வெளிய்டும் பாக்களுக்கு உங்கள் ஆதரவை வேண்டுகிறேன்.
தங்களின் உதயத்துப் பரணி படிக்க ஆவலுடன் உள்ளேன்.

சிவகுமாரன் said...

நன்றி குமரன்
செல்வராஜ்
சுப்புரத்தினம் அய்யா
ஜீ.வீ.
RVS
ரிஷபன்
தென்றல்
சுந்தர்ஜி
லக்ஷ்மி மேடம்
ராதேஷ் &
இராஜராஜேஸ்வரி

சிவகுமாரன் said...

என் எல்லாப் பாடல்களையும் இன்றளவும் பாடிப் பரப்புவது என் சித்தப்பா திரு அரசு அவர்கள் தான். சக்தி பாடல்களை அவர்கள் பாடி கேட்பதில் எனக்கு பரம ஆனந்தம். இந்த பாடலை அவர்கள் பாடி இந்தப் பதிவில் upload செய்ய வேண்டும் என்பது என் ஆசை. ஆனால் இந்த வலை ஆரம்பித்த நேரம் அவர்கள் இராமேஸ்வரம் தொடங்கி காசி வரை பாதயாத்திரை தொடங்கி விட்டார்கள். இந்த பாடலை வெளியிட தயாரான நேரம் என் சித்தப்பா தமிழக எல்லையை (கிருஷ்ணகிரி ) கடந்து கொண்டிருந்தார்கள். அவர்களை சந்திக்க என் தம்பி இளமுருகன் துபாயிலிருந்து வந்து கிருஷ்ணகிரி சென்றான். அங்கு நடந்த பூஜையில் இந்த பாடலை என் சித்தப்பா பாட , தம்பிக்கு ராகம் பிடித்துப் போய் செல்போனில் பதிவு செய்துவிட்டான்.
எனக்கு போன் செய்து " அப்பா உனது காப்பாய் தாயே பாடலுக்கு புது மெட்டு போட்டிருக்கிறார்கள் , மெயிலில் அனுப்புகிறேன் கேட்டுப்பார் என்றான்.
என் மனமறிந்து , சித்தப்பாவை புதிய ராகத்தில் பாடவைத்து ,என் தம்பியை அங்கு அனுப்பி ரெகார்ட் செய்யவைத்து ( பழைய மெட்டில் பாடி இருந்தால் ரெகார்ட் செய்திருக்க மாட்டான் ), எனக்கு மெயிலில் அனுப்பவும் வைத்த அன்னையின் கருணையை என்னென்று சொல்வது.
ஓம் சக்தி

கவிநயா said...

//ஓமெனும் மந்திரத்தின் உட்பொருள் அறிந்தேனில்லை
ஒன்பது கோணம் என்பார் ஒன்றுமே தெரிந்தேனில்லை
பூமகள் உன்பேர் சொல்லி புலம்பியே தொழுவேனன்றி
பொருள்நிறை மந்திரங்கள் புரிந்து நான் சொன்னேனில்லை
நாமங்கள் கோடி சொல்லி நாள்தோறும் பூஜை செய்வார்
நானுனை அம்மா என்பேன் , நாயேனும் வேறொன்றறியேன்
சோமனின் துணையே தாயே சுடர்விடும் ஒளியின் தீயே
சொல்லியழ உன்னைவிட்டால் துணையெனக் கேது தாயே ? //

மிகப் பிடித்த வரிகள். சொக்க வைக்கும் சொல்லாட்சி, உங்களது.

//என் மனமறிந்து , சித்தப்பாவை புதிய ராகத்தில் பாடவைத்து ,என் தம்பியை அங்கு அனுப்பி ரெகார்ட் செய்யவைத்து ( பழைய மெட்டில் பாடி இருந்தால் ரெகார்ட் செய்திருக்க மாட்டான் ), எனக்கு மெயிலில் அனுப்பவும் வைத்த அன்னையின் கருணையை என்னென்று சொல்வது.//

வாசித்து மனம் நெகிழ்ந்தது.
அன்னையின் திருவடிகள் சரணம்.

சிவகுமாரன் said...

மிக்க நன்றி கவிநயா

! சிவகுமார் ! said...

ஆன்மீக செய்திகளுக்கு நன்றி தோழா!

சிவகுமாரன் said...

நன்றி சிவகுமார்

திகழ் said...

பாராட்ட வார்த்தை இல்லை நண்பரே

அற்புதம்

அப்பாதுரை said...

இருவர் குரலும் கணீர்.