Friday, November 29, 2013

வைத்தீஸ்வரா!


உள்ளத்தில் பெருங்கோயில் உனக்காகக் கட்டி அதில்
    உன்திரு லிங்கம் வைத்து
   ஓமென்னும் மந்திரம் ஒவ்வொரு கணந்தோறும்
    உளமார உச்சரித்து
தெள்ளத் தெளிவாக சீவனே சிவமென்று
   தேர்ந்து நான்  போற்றுகின்றேன்
   தீராத நோயொன்றும் தீண்டாமல் நீதந்த
   தேகத்தைக் காத்து நிற்பாய்
புள்ளுக்கும் "இருக்'கிற்கும் வேளுக்கும் அருள் செய்து
   புவனங்கள் காக்கும் நாதா
   புவிதன்னில் ஒருபோதும் பிணியென்றும் மூப்பென்றும்
   புலம்பாத சக்தி நீ தா.
அள்ளக் குறையாத அமுதத்தில் ஒருதுளி
   அடியேனும் அருந்தத் தாராய்
   அகிலத்தின் பிணிதீர்க்கும் அருள் தையல் நாயகி
   அகம் ஆளும் வைத்தீஸ்வரா!

ஓவாது சுற்றிடும் ஒன்பது கோள்களும்
   ஒவ்வொன்றாய் வரிசை கட்டி
   ஒருநூறு முறைஎன்னை வாட்டிவிளை யாட நீ
   வேடிக்கை பார்த்தல் முறையோ ?
பூவானம் பொன்பூமி  பூங்காற்று பொன்தழல்
   புனலென்னும்  பூதமைந்தும்
   பொட்டிக்குள் பாம்பாகி  உன்ஆணை கேட்கஓர்
    பொருட்டாமோ கோள்களெல்லாம்?
நோவாது சலியாது நோயொன்றும் தீண்டாது
    நீதந்த தேகம் கொண்டு
    நூறாண்டு காலம்உன் புகழ்பாடிப் பாடியே
    நின்பாதம் சேர வேண்டும்
ஆவாத காரியம் ஒன்றுண்டோ அவனியில்
   அய்யா உன் பார்வை பட்டால்?
   அகிலத்தின் பிணி தீர்க்கும் அருள் தையல் நாயகி
   அகம் ஆளும் வைத்தீஸ்வரா!

 காயமது பொய்யென்று காலம் கழிப்பவர்
   காலனை  வெல்வதுண்டோ?
   காயமிதில் உன்கோயில் கட்டியபின் நீயதனை
   காணாமல் விடுதல் நன்றோ?
மாயமோ மந்திரமோ காட்டிஎன் பிணியெலாம்
   மாய்த்து எனை மகிழ வைப்பாய்
   மருந்தோடு தினந்தோறும் மல்லாடும் துயர்நீக்கி
   மகனென்னை  வாழ வைப்பாய்
தூயமனம், தேக்குஉடல் தெய்வம் வந்து வாழுமிடம்
    தூயவா குடியேறவா!
    ஜோதிமய மாயுன்னை பாவித்து உள்ளத்தில்
    தீபமாய் ஏற்றினேன் வா!
ஆயகலை அத்தனைக்கும் அதிபதியே, தேகத்தை
   ஆலயமாய் ஆக்கிவிட வா!
   அகிலத்தின் பிணி தீர்க்கும் அருள் தையல் நாயகி
   அகம் ஆளும் வைத்தீஸ்வரா!

தெப்பமாய் கல்லையே உருமாற்றிக்  கரைசேர்த்து
   திருநா-வைக் காக்க வில்லையா?
   தீமூண்ட சுண்ணாம்புச் சூளையில் நீவந்து
   தென்றலாய் வீச வில்லையா  ?
வெப்புநோய் கண்ட உன் பக்தனை ஆட்கொண்டு
   வெந்துயர் நீக்க வில்லையா?
   விழிய்ற்று நின்ற உன் தோழனாம் சுந்தரன்
   வேதனை போக்க வில்லையா?
செப்புமுலை தெள்ளமுதம் சீர்காழி பிள்ளைக்கு
    சிவசக்தி ஊட்ட வில்லையா?
    சிறுபிள்ளை உயிர்காக்க நீ அன்று காலனை
    சினங்கொண்டு உதைக்க வில்லையா?
அப்பா உன் பிள்ளை நான் அழைக்கின்ற ஓலம் உன்
   அருட்செவியில் கேட்க வில்லையா?
   அகிலத்தின் பிணி தீர்க்கும் அருள் தையல் நாயகி
   அகம் ஆளும் வைத்தீஸ்வரா!


பிட்டுக்கு மண்தூக்கி பிரம்படியும் தான்வாங்கி
   பேதைக்கு உதவ வில்லையா ?
   பெண்ணுருவை வெறுத்திட்ட புனிதவதி அன்னைக்கு
   பேயுருவைத் தர வில்லையா?
திட்டமுடன் தருமிக்கு தேன்கவிதை தந்துதவி
   தீவறுமை போக்க வில்லையா?
   தீநாகம் தீண்டிய சிறுபிள்ளை இன்னுயிரை
   திருப்பிநீ தர வில்லையா?
நட்ட நடு நிசிதன்னில் திமிர் கொண்ட பாணனை
   நாட்டை விட்டு ஓட்ட வில்லையா?
   நரியெல்லாம் பரியாக்கி நான்மாடக் கூடலில்
   நாடகம் காட்ட வில்லையா ?
அட்டமா சித்திகள் அருளும் நீ பிணிநீக்கி
   அருள்காட்ட மனமில்லையா?
   அகிலத்தின் பிணி தீர்க்கும் அருள் தையல் நாயகி
   அகம் ஆளும் வைத்தீஸ்வரா!

வேலனைச் சோதிக்க புவிவலம் வரச் சொல்லி
   வேடிக்கைப் பார்த்து நின்றாய்.
   வேடனைச் சோதிக்க விழிதன்னில் செங்குருதி
   வழிந்தோடக் காட்டி நின்றாய்.
பாலனின் உயிர்காத்த பாதத்தில் வீழ்ந்தபின்
    பயமெந்தன் வாழ்வில் இல்லை!
    பரமனே நீயெந்தன் பக்தியைச் சோதித்துப்
    பார்க்கவோர் வழியுமில்லை!
காலனை நானாக கைதட்டிக் கூப்பிட்டு
   காலம் முடிக்க வேண்டும்!
   கடமைகள் ஒவ்வொன்றாய் கழிந்தபின் நீயெந்தன்
   கணக்கை முடிக்க வேண்டும்
ஆலமா விஷம் தன்னை அள்ளிக் குடித்த நீ
   அணைத்தென்னைக் காக்க வேண்டும்!
   அகிலத்தின் பிணி தீர்க்கும் அருள் தையல் நாயகி
   அகம் ஆளும் வைத்தீஸ்வரா!

இப்பிறவி தன்னிலே எதிர்கொள்ளும் இன்னல்கள்
   எல்லாம் நான் தாண்ட வேண்டும்!
   இன்னுமோர் பிறவிநான் எடுக்காமல் என்னை நீ
   ஏற்று ஆட்  கொள்ள வேண்டும்!
முப்புரம் எரித்த நீ முக்கண் திறந் தென்றன்
    மும்மலம் எரிக்க வேண்டும்
    மூச்சுள்ள நாள்வரை முடியாது என்றுநான்
    முடங்காமல் இருக்க வேண்டும்!
எப்போதும் எங்கேயும் எறும்புபோல் தேனிபோல்
    இயங்கிடும் தேகம் வேண்டும்!
    எந்த ஓர் நிலையிலும் எதற்கும் கலங்காத
    இதயம் நீ அருள வேண்டும்!
அப்பனாய்  அன்னையாய் உன்னையே எண்ணினேன்
   ஆதரவு காட்ட வேண்டும்
   அகிலத்தின் பிணி தீர்க்கும் அருள் தையல் நாயகி
   அகம் ஆளும் வைத்தீஸ்வரா!

என்புதோல் போர்த்திய இந்த ஓர் தேகத்தில்
   எத்தனை போராட்டமோ?
   இடைவெளி இல்லாமல் இன்னமும் சோதிக்க
   என்மீது ஏன் காட்டமோ?
இன்பமய மானதாம் இவ்வுலகு என்று நான்
   எல்லோர்க்கும் சொல்வ தென்றோ?
   ஈசனின் அருள்பெற்ற பக்தனாம் என்றுநான்
   இறுமாந்து கொள்வ தென்றோ?
ஒன்பது துவாரத்து உடல்விட்டு உயிர்காற்று
   ஓடிவிடும் காலம் முன்னே
   ஓங்காரம் ஒலிக்க உன் ஆனந்த தாண்டவம்
   ஒருமுறை காட்டுவாயா>
அன்பையே சிவமென்று நம்பினே நீயென்னை
   அன்பினால் ஆள்வ தென்றோ?
   அகிலத்தின் பிணி தீர்க்கும் அருள் தையல் நாயகி
   அகம் ஆளும் வைத்தீஸ்வரா!

முக்கண்ணா பரமேசா மூவுலகின் சர்வேசா
   முகுந்தனின் மைத்துனா வா !
   மூலனை ஆட்கொள்ள பூவுடல்  மறைத்தவா
   முக்திக்கு வழிகாட்ட வா !
நக்கீரன் தமிழோடு விளையாட வந்தவா
   நற்றமிழ் கவிதந்தவா !
   நான்மாடக் கூடல்நகர் தமிழ்ச் சங்கம் கண்டவா
   நடராஜா நலங்காக்க வா !
சொக்கனே சுந்தரா சுடரும் பிறைச் சந்திரா
   சோமேசா இராமேஸ்வரா !
   சூரர்குல இராவணனும் தொழுதேத்தும் எளியவா
   சுடர்க் கண்ணா சுகம் கூட்டவா !
அக்கறைஎன் மேல்காட்டி அல்லல் துயர் பிணி ஒட்டி
   அருள்காட்டி இருள்ஓட்ட வா!
   அகிலத்தின் பிணி தீர்க்கும் அருள் தையல் நாயகி
   அகம் ஆளும் வைத்தீஸ்வரா!

திரிசூலம் கொண்டவா திசையெட்டும் ஆள்பவா
   திரிபுரம் எரித்தவா வா !
   தேயாத நிலவினை சடைதனில் கொண்டவா
   தேயாத தேகத்தை தா !
சரிபாதி தேகத்தை சக்திக்குத் தந்தவா
   சக்தியென் தேகத்தில் தா !
   சரியான பாதையில் தடுமாற்றம் இல்லாமல்
   சங்கரா வழிகாட்ட வா !
பெரியவா பிஞ்ஞகா பிச்சாடல் புரிந்தவா
   பித்தனே சித்தனே வா !
   பேராயிரம் கொண்ட பெருமைகள் வாய்த்தவா
   பிள்ளையாய் எனையேற்க வா !
அரிஅயன்  காணாத அடிமுடி கொண்டவா
   அடியேனுக் கருள் செய்ய வா !
   அகிலத்தின் பிணி தீர்க்கும் அருள் தையல் நாயகி
   அகம் ஆளும் வைத்தீஸ்வரா!

பாடியிருப்பவர் : பிரபாகரன். 


-சிவகுமாரன்

Monday, September 9, 2013

செட்டிக் குளத்து சித்தி விநாயகா

நல்லதே நடக்க வேண்டும் நல்லதே நடக்க வேண்டும்
அல்லவை எல்லாம் தீர்ந்து நல்லதே நடக்க வேண்டும்

முன்னவா !  உலகுக் கெல்லாம் மூலவா ! முருகவேளின் 
   மூத்தவா ! வினைகள் தீர்த்து முடிப்பவா ! பிரணவப் பொருளை 
சொன்னவா ! சிவமே உலகம் என்றவா ! கனியை வாங்கிச்
   சென்றவா சிந்தை முழுதும் நின்றவா நேரில் வா வா !
என்னவா எங்கள் இறைவா ! ஈசனின் மைந்தா கணேசா!
   எங்கள்குலம் தன்னைக் காக்க வந்தவா ஆலங்குடியின்
மன்னவா அருள்மிகு சித்தி விநாயகா செட்டிக்குளத்து
   "மண்"ணவா மலரடி தொழுதேன் மகிழ்ந்து நீ முன்னே வா வா !

ஆயிரம் இனங்கள் வாழும் ஆலங்குடி மாநகர்  தன்னில்
   ஆரம்ப எல்லை தனிலே ஆலயம் கொண்ட தேவா
கோயிலும், அருகே அழகாய் குளமொன்றும்   கட்டி வைத்தோம்
    கோயிலை கட்டிவைத்த குலந்தன்னை காக்க வா வா!
வாயிலில் வந்து  நின்றோம் வாயார பாடுகின்றோம்
   வரம் கேட்போர் வாழ்க்கை தன்னை வளமாக்க வேண்டுகின்றோம்
நீயின்றி யாரும் உண்டோ நிமலனே எம்மைக் காக்க
   நெஞ்சத்தின் குறைகள் எல்லாம் நேரிலே வந்து கேட்க.

மோதகம் அவல் பொரி சுண்டல், முந்திரி திராட்சை பொங்கல்
   முன்வைத்து படையல் இட்டால் முந்தி நீ வருவாய் அன்றோ?
காதலால் கவிதை பாடி கண்ணீரால் படையல் இட்டு
   கணபதி உன்னைத் தொழுதேன் கவலைகள் தீர்க்க வாராய்
சோதனை தாண்ட வேண்டும் சோகங்கள் தீர வேண்டும்
   தோல்வியின் தோளில் ஏறி தொடர்ந்து நான் வெல்ல வேண்டும்
ஆதரவு காட்ட வேண்டும் அருட்கரம்  நீட்ட வேண்டும்
    ஆலங்குடி செட்டிக் குளத்து ஐங்கரா காக்க வேண்டும்

அரிதேவன் இலக்குமியோடு அருள்மழை பெய்ய வேண்டும்
   அறுமுகன் ஆண்டு எம்மை அரசாட்சி செய்ய வேண்டும்
சரிபாதி சிவனில் பெற்ற சங்கரி நோக்க வேண்டும்
   சங்கடம் எல்லாம் தீர்த்து சந்ததி காக்க வேண்டும்
திரிசூலம் கொண்ட ஈசன் திருமுகம் காட்ட வேண்டும்
   திருவிளையாடல் காட்டி தீவினை ஓட்ட வேண்டும்
கரிமுகா நீயே எங்கள் கருணைமனு ஏற்க வேண்டும்
   கடவுள்கள் எல்லோரிடத்தும் காண்பித்து சேர்க்க வேண்டும்.

அம்பிகை அரனின் மடியில் ஆசையாய் வளர்ந்த பிள்ளை
   ஆறுமுகத் தம்பியோடு ஆடி விளையாடிய பிள்ளை
தும்பிக்கை பலத்தைக் கொண்டு சூரனை வென்ற பிள்ளை
    சுப்பிர மணியனுக்கு தூதாக சென்ற பிள்ளை
நம்பிக்கை வைத்த பேர்க்கு நலம் யாவும் செய்யும் பிள்ளை
   நாரதர் கலகத்தாலே ஞானப்பழம் பெற்ற பிள்ளை
எம்பிரான் ஈசனின் பிள்ளை எங்கள் செட்டிக் குளத்துப் பிள்ளை
  இன்னல்கள் தீர்க்கும் பிள்ளை இருக்க இனி கவலை இல்லை

 நல்லதே நடக்க வேண்டும் நல்லதே நடக்க வேண்டும் 
   அல்லவை எல்லாம் தீர்ந்து நல்லதே நடக்க வேண்டும்
நல்லோர்கள் சொல்லும் வார்த்தை நாட்டிலே பலிக்க வேண்டும் 
  நமசிவாய என்னும் ஒலியே நாள்தோறும் ஒலிக்க  வேண்டும்.
பொல்லாதோர் செயல்கள் எல்லாம் பொடிப்பொடி ஆக வேண்டும் 
   பொய் களவு வஞ்சனை சூது  பொசுங்கியே போக வேண்டும் 
எல்லோரும் எல்லாம் பெற்று எங்கள்  சித்தி விநாயகன் அருளால் 
   இணையிலா செல்வம் பெற்று ஏற்றமுடன் வாழ வேண்டும்  பாடியிருப்பவர் பிரபாகரன்

பாடலை சுப்புத் தாத்தாவின் குரலில் கேட்டு மகிழுங்கள் சிவகுமாரன் 

Friday, March 22, 2013

தாக்குவாய்கொஞ்சுதமிழ் பாட்டெழுதி
   கூவி அழைத்துன்னை
கெஞ்சுகிறேன் என்குரல்
    கேளாயோ - செஞ்சடையா
தூக்கிய உந்தன்
    திருவடி பற்றினேன்
தாக்குவாய் வாட்டும்
     துயர்..
-சிவகுமாரன் 

Tuesday, February 5, 2013

பழனிமலைத் தெய்வம்


   
     

ஒன்றாகி பலவாகி உருவெடுத்த தெய்வம் 
  ஓங்கார நாதத்தை உணர்த்துகின்ற தெய்வம் 
குன்றெல்லாம் குடியேறி கோயில்கொண்ட தெய்வம் 
  கூப்பிட்டதும் ஓடிவரும் குழந்தை போன்ற தெய்வம் 
அன்று பிரம்மன் ஆணவத்தை அடக்கிவைத்த தெய்வம் 
  அவ்வைத் தமிழ் கேட்பதற்கு ஆசை கொண்ட தெய்வம் 
இன்று எங்கள் இசை கேட்க இச்சை கொண்ட தெய்வம் 
  இன்னல் துயர் தீர்க்க வரும் தென்பழனித் தெய்வம்.

நாரதரின் ஞானப்பழம் வேண்டி நின்ற தெய்வம் 
  ஞாலம் சுற்ற மயிலேறி வான்பறந்த தெய்வம்  
சூரர்குலம் வேரறுக்க சூளுரைத்த தெய்வம் 
  சுடர்வள்ளி பேரழகில் சொக்கிநின்ற தெய்வம் 
கார்வண்ண மணிவண்ணன் மருகனான தெய்வம் 
  கால்நடந்து மலையேற கருணை காட்டும் தெய்வம்.
பார்வதியின் வேலெடுத்து பகைமுடித்த தெய்வம்.
  பக்தர் குறை தீர்க்க வரும் பழனிமலைத் தெய்வம். 

நெற்றிக்கண்ணில் அவதரித்த நெருப்பு போன்ற தெய்வம்.
  நேயம்கொண்ட பக்தருக்கு நிலவு போன்ற தெய்வம்.
வெற்றிவடி வேலனாக விளங்குகின்ற தெய்வம்,
  வேடனாக வேடமிட்டு மணம்முடித்த தெய்வம்.
கொற்றவையின் புத்திரனாம் குமரேச தெய்வம்.
  கொஞ்சுதமிழ் ஆற்றுப்படை கொண்டாடும் தெய்வம்.
பெற்ற தந்தை பரமனுக்கே பாடம் சொன்ன தெய்வம்.
  பேரின்ப வழி திறக்கும் பழனிமலைத் தெய்வம். 

ஆறுபடை வீடுகொண்ட ஆறுமுக தெய்வம்.
  ஆனைமுகன் தம்பியாக அவதரித்த தெய்வம்.
நீறணிந்த அடியவர்கள் நெஞ்சில் நிற்கும் தெய்வம்.
  நேசம்கொண்டு தாள் பணிந்தால் நேரில்வரும் தெய்வம்.
வீறுகொண்ட சேனைகொண்டு போரில்வென்ற தெய்வம் 
  வீழ்ந்த சூரன் உடலைக் கொடியில் விரும்பிஏற்ற தெய்வம்.
ஏறுமயில் ஏறிவரும் எங்கள் பெருந் தெய்வம்  
  ஏக்கங்களைப் போக்கவரும் தென்பழனித் தெய்வம்.

கச்சியப்பர் காவியத்தில் கவிதையான தெய்வம்.
  கணபதியை துணைக்கழைத்து காதல்வென்ற தெய்வம்.
உச்சிமலை மீதிருந்து உலகை ஆளும் தெய்வம்.
  உளமுருக வேண்டுவோரின் உயிர்கலந்த தெய்வம்.
அச்சம்கொண்ட போதுவந்து அரவணைக்கும் தெய்வம்.
  அபயம் என்ற போதுவந்து  ஆதரிக்கும் தெய்வம்.
பச்சைமயில் வாகனத்தில் பறந்துவரும் தெய்வம். 
  பன்னிருகை கொண்டணைக்கும் பழனிமலைத் தெய்வம். 

சேவடிஎன் சென்னிமிசை வைத்தபெருந்  தெய்வம் 
  சேவற்கொடி  ஏந்துகின்ற செந்தில்குமர தெய்வம்.
காவடிகள் தூக்கிவர  காட்சிதரும் தெய்வம்.
  காலடியில் போய்விழுந்தால் கரங்கொடுக்கும் தெய்வம் 
தேவர்களும்  வணங்குகின்ற தெய்வம் மகா தெய்வம்
  தினைப்புனத்தில் வள்ளிமனம் திருடவந்த தெய்வம் 
பாவங்களைச் சொல்லியழ பரிவு காட்டும் தெய்வம்.
  பாதம்தேய பாவம் தேய்க்கும் பழனிமலைத் தெய்வம்.

வேலெடுத்து  வினைகளெல்லாம் வேரறுக்கும் தெய்வம்.
  வேதனைகள் தீர்த்து வைக்க விழி திறக்கும் தெய்வம்.
கோலெடுத்து இடையனாக குறும்பு செய்த தெய்வம்.
  போபம் கொண்டு மலையேறி கோயில்கொண்ட தெய்வம். 
கால்கடுக்க நடந்துவர கவலைபோக்கும் தெய்வம்.
  கந்தசாமி என்றழைக்க முந்திவரும் தெய்வம்.
பால்குடங்கள் ஆடிவர பவனிவரும் தெய்வம்.
  பால்முகத்தைக் காட்டவரும் பழனிமலைத் தெய்வம். 

ஓம்முருகா என்றுசொல்ல ஓடிவரும் தெய்வம்.
  ஒளிநிறைந்த சூரியனாய் உளம்புகுந்த தெய்வம் 
கோமகளாம் தெய்வயானை கரம்பிடித்த தெய்வம்.
  கூடஒரு குறத்தியையும் கூட்டிக் கொண்ட தெய்வம். 
மாமதுரைச் சொக்கநாதர் மடிவளர்ந்த தெய்வம்.
  மானைத்தேடி வந்ததாக மாயம் செய்த தெய்வம்.
தேமதுரத் தமிழிசைக்கு செவிசாய்க்கும் தெய்வம்.
  தேடுவோரைத் தேடிவரும் தென்பழனித் தெய்வம்.

அருணகிரி நாதரையே ஆட்டிவைத்த தெய்வம்.
  அடியவர்கள் உள்ளத்திலே ஆட்சிசெய்யும் தெய்வம்.
கருணைகொண்ட தெய்வம் கருவில் கலந்துவிட்ட தெய்வம்
  கற்பனையின் எல்லைகளை கடந்து நிற்கும் தெய்வம்.
வருணமழை வானிருந்து வரவழைக்கும் தெய்வம்  
  வாவென்று நானழைக்க வந்து நிற்கும் தெய்வம்.
தருணம்வந்த போது என்னை  தாங்குகின்ற தெய்வம்
  தமிழ் கேட்டு அருள்பொழியும் தென்பழனித் தெய்வம்.

யாமிருக்க பயமெதற்கு என்றுசொல்லும் தெய்வம் 
  யாவும் நீயே எனப் பணிந்தால் காத்து நிற்கும் தெய்வம்.
நாமணக்கும் திருப்புகழின் நாதமான தெய்வம் 
  நான்குமறை போற்றுகின்ற நாதனான தெய்வம்.
கோமணத்து ஆண்டியாக குன்றில் நின்ற தெய்வம்
  கோடிகோடி பக்தர்நெஞ்சில் குடியிருக்கும் தெய்வம்.
பாமணத்தில் தன்மனதை பறிகொடுக்கும் தெய்வம்.
  பாடல்கேட்டு ஓடிவரும் பழனிமலைத் தெய்வம்.

சிவகுமாரன் 

பாடியிருப்பவர் - பிரபாகரன் 


Wednesday, January 9, 2013

வா!கல்லானை தின்னக்  கரும்பினைத் தந்தவா
சொல்லாட மாமதுரை வந்தவா -இல்லாமை 
இல்லாமல் போக்கவா, என்துயர் நீக்கவா
வல்லபச் சித்தனே வா

சிவகுமாரன்