Sunday, February 14, 2016

ஆண்டுதோறும் நடப்போம்.



பழனிமலை தணிகைமலை 
   பரங்குன்றம் சுவாமிமலை
அழகர்மலை செந்தூர் அலை எங்கும் - எங்க(ள்)
   ஆறுமுகா உந்தன் அருள் பொங்கும்.

பார்வதியின் வேலெடுத்து 
   பகைவெல்ல  சூளுரைத்து
சூரர்குலம் வேரறுத்துக் கொன்றாய்-அந்தச்
   சூரனையும் சேவலாக்கி நின்றாய்.

சுட்டபழம் கேட்ட அவ்வை
   செந்தமிழில் நீ மயங்கி
இட்டமுடன் நாவல்கனி பறித்தாய்- அதை
   எடுத்தவள் மணல் ஊதச் சிரித்தாய்.

கண்ணில் காதல் கொப்பளிக்க
   கணபதி ஒத்துழைக்க
கன்னிமானைத் தேடுவதாய் துரத்தி - நீயும் 
   கவர்ந்திட்டாய் மயங்கினாள் குறத்தி.

புள்ளிமானைத் தேடிக்கிட்டு 
   பொறுப்பின்றி மெனக்கெட்டு
வள்ளி பின்னே சுத்தி நீயும் திரிந்தால் - உன்னை
   வையப் போறார் அப்பனுக்குத் தெரிந்தால். ...

வேதகுரு பிரம்மனையே
   வேதத்திற்குப் பொருள்கேட்டு
சோதித்தது போதுமடா குறும்பா-எம்மைச்
   சோதித்திட உந்தன் மனம் இரும்பா?

அத்தனுக்கேப்  பிரணவத்தின்
   அரும்பொருள் சொல்லிவைத்த 
புத்திரனே ஞானஸ்கந்த குருவே - எங்கள் 
   புத்தியெல்லாம் உந்தன் எழில் உருவே,

அப்பன் மேலே கோச்சுக்கிட்டு 
   ஆண்டிக்கோலம் பூண்டுக்கிட்டு
தப்புசெய்ய வேணாமய்யா கந்தா- உன்னைத்
   தாங்கிக்குவோம் கீழிறங்கி வந்தா

உச்சிமலை ஏறிக்கிட்டு 
   ஒய்யாரமா நின்னுக்கிட்டு
பச்சபுள்ள பேலெதுக்கு ஆட்டம்? - உன்னைப்
   பாக்க இங்க காத்திருக்கு கூட்டம்.

கோவணத்தக் கட்டிக்கிட்டு 
   குன்றின்மேலே ஏறிக்கிட்டு
தேவையில்லை இந்தக் கோபம் முருகா - எங்கள்
   தேவையெல்லாம் தீர்க்க ஓடி வருவாய்.

ஆறுபடை வீடு நோக்கி 
    ஆறுதலைத் தேடி வந்தோம் 
ஆறுதலைக் கொண்ட எங்கள் சாமி- நீயும் 
   ஆசைமுகம் ஆறிலொன்றைக் காமி. 

கந்தா உன்னைப் பாடிக்கொண்டு
   கால்வலிக்க ஓடிக்கொண்டு
வந்து நின்றோம் உந்தன் வாசல் தேடி - நீயும்
   வழங்கிட வேணும் அருள் கோடி

கால்வலியைத் தாங்கிக்கிட்டு 
   கண்டதையும் தின்னுக்கிட்டு
வேல்முருகா உன்னைக் காண வந்தோம் - எங்க(ள்)
   வேண்டுதலை உன்னிடத்தில் தந்தோம்.

சொந்தவேலை விட்டுப்புட்டு
   சொந்தங்களைக் கூட்டிக்கிட்டு
கந்தா உன்னைக் காண ஓடி வாரோம்- நீயும்
   கண்டுக்காட்டி என்ன செய்யப் போறோம்?

வேலையெல்லாம் தள்ளிவச்சு  
   வேலை மட்டும் நெஞ்சில் வச்சு
வேலவனைக் காண இந்த ஓட்டம் -இப்ப
   வேறெதிலும் இல்லை எங்கள் நாட்டம்.

வெயில்,பனி பார்க்கவில்லை 
   வெட்டிப்பேச்சு பேசவில்லை 
மயிலோனே நீதான் எங்கள் எண்ணம் - உந்தன் 
   மனதையும் வெல்வோம் அது திண்ணம் .
   
கார்த்திகேயா உன்னை நாங்கள்
   கால்வலிக்கத் தேடிவந்து
பார்த்தவுடன் போகும் வலி பறந்து- எம்மை
   பார்த்துவிடு பன்னிருகண் திறந்து.

பாலசுப்ர மணியனே 
   பார்வதியின் பாலகனே
காலமெல்லாம் உன்னைப் பாடிக் கிடப்போம் - உன்னைக்
   கண்டுவர ஆண்டுதோறும் நடப்போம்.

தண்டாயுத பாணி உன்னைத்
   தமிழ்கொண்டு பாடுதல்போல்
உண்டோ வேறு இன்பங்களும் எமக்கு- இதில்
   உண்மை சொல்லு இஷ்டம் தானே உமக்கு(ம்)?

கண்ணு ரெண்டும் பூத்துப் போச்சு
   காலு கையி வேத்துப் போச்சு
ஒண்ணுமில்லை எமக்கிந்த வாட்டம்  -நாங்க
   உன்னை சும்மா விட்டு விட மாட்டோம்.



-சிவகுமாரன் 
 என்னை எழுத வைத்ததும் , என் தம்பி பிரபுவை பாட வைத்ததும்
 அந்த அழகன் முருகனே.