Tuesday, February 5, 2013

பழனிமலைத் தெய்வம்


   
     

ஒன்றாகி பலவாகி உருவெடுத்த தெய்வம் 
  ஓங்கார நாதத்தை உணர்த்துகின்ற தெய்வம் 
குன்றெல்லாம் குடியேறி கோயில்கொண்ட தெய்வம் 
  கூப்பிட்டதும் ஓடிவரும் குழந்தை போன்ற தெய்வம் 
அன்று பிரம்மன் ஆணவத்தை அடக்கிவைத்த தெய்வம் 
  அவ்வைத் தமிழ் கேட்பதற்கு ஆசை கொண்ட தெய்வம் 
இன்று எங்கள் இசை கேட்க இச்சை கொண்ட தெய்வம் 
  இன்னல் துயர் தீர்க்க வரும் தென்பழனித் தெய்வம்.

நாரதரின் ஞானப்பழம் வேண்டி நின்ற தெய்வம் 
  ஞாலம் சுற்ற மயிலேறி வான்பறந்த தெய்வம்  
சூரர்குலம் வேரறுக்க சூளுரைத்த தெய்வம் 
  சுடர்வள்ளி பேரழகில் சொக்கிநின்ற தெய்வம் 
கார்வண்ண மணிவண்ணன் மருகனான தெய்வம் 
  கால்நடந்து மலையேற கருணை காட்டும் தெய்வம்.
பார்வதியின் வேலெடுத்து பகைமுடித்த தெய்வம்.
  பக்தர் குறை தீர்க்க வரும் பழனிமலைத் தெய்வம். 

நெற்றிக்கண்ணில் அவதரித்த நெருப்பு போன்ற தெய்வம்.
  நேயம்கொண்ட பக்தருக்கு நிலவு போன்ற தெய்வம்.
வெற்றிவடி வேலனாக விளங்குகின்ற தெய்வம்,
  வேடனாக வேடமிட்டு மணம்முடித்த தெய்வம்.
கொற்றவையின் புத்திரனாம் குமரேச தெய்வம்.
  கொஞ்சுதமிழ் ஆற்றுப்படை கொண்டாடும் தெய்வம்.
பெற்ற தந்தை பரமனுக்கே பாடம் சொன்ன தெய்வம்.
  பேரின்ப வழி திறக்கும் பழனிமலைத் தெய்வம். 

ஆறுபடை வீடுகொண்ட ஆறுமுக தெய்வம்.
  ஆனைமுகன் தம்பியாக அவதரித்த தெய்வம்.
நீறணிந்த அடியவர்கள் நெஞ்சில் நிற்கும் தெய்வம்.
  நேசம்கொண்டு தாள் பணிந்தால் நேரில்வரும் தெய்வம்.
வீறுகொண்ட சேனைகொண்டு போரில்வென்ற தெய்வம் 
  வீழ்ந்த சூரன் உடலைக் கொடியில் விரும்பிஏற்ற தெய்வம்.
ஏறுமயில் ஏறிவரும் எங்கள் பெருந் தெய்வம்  
  ஏக்கங்களைப் போக்கவரும் தென்பழனித் தெய்வம்.

கச்சியப்பர் காவியத்தில் கவிதையான தெய்வம்.
  கணபதியை துணைக்கழைத்து காதல்வென்ற தெய்வம்.
உச்சிமலை மீதிருந்து உலகை ஆளும் தெய்வம்.
  உளமுருக வேண்டுவோரின் உயிர்கலந்த தெய்வம்.
அச்சம்கொண்ட போதுவந்து அரவணைக்கும் தெய்வம்.
  அபயம் என்ற போதுவந்து  ஆதரிக்கும் தெய்வம்.
பச்சைமயில் வாகனத்தில் பறந்துவரும் தெய்வம். 
  பன்னிருகை கொண்டணைக்கும் பழனிமலைத் தெய்வம். 

சேவடிஎன் சென்னிமிசை வைத்தபெருந்  தெய்வம் 
  சேவற்கொடி  ஏந்துகின்ற செந்தில்குமர தெய்வம்.
காவடிகள் தூக்கிவர  காட்சிதரும் தெய்வம்.
  காலடியில் போய்விழுந்தால் கரங்கொடுக்கும் தெய்வம் 
தேவர்களும்  வணங்குகின்ற தெய்வம் மகா தெய்வம்
  தினைப்புனத்தில் வள்ளிமனம் திருடவந்த தெய்வம் 
பாவங்களைச் சொல்லியழ பரிவு காட்டும் தெய்வம்.
  பாதம்தேய பாவம் தேய்க்கும் பழனிமலைத் தெய்வம்.

வேலெடுத்து  வினைகளெல்லாம் வேரறுக்கும் தெய்வம்.
  வேதனைகள் தீர்த்து வைக்க விழி திறக்கும் தெய்வம்.
கோலெடுத்து இடையனாக குறும்பு செய்த தெய்வம்.
  போபம் கொண்டு மலையேறி கோயில்கொண்ட தெய்வம். 
கால்கடுக்க நடந்துவர கவலைபோக்கும் தெய்வம்.
  கந்தசாமி என்றழைக்க முந்திவரும் தெய்வம்.
பால்குடங்கள் ஆடிவர பவனிவரும் தெய்வம்.
  பால்முகத்தைக் காட்டவரும் பழனிமலைத் தெய்வம். 

ஓம்முருகா என்றுசொல்ல ஓடிவரும் தெய்வம்.
  ஒளிநிறைந்த சூரியனாய் உளம்புகுந்த தெய்வம் 
கோமகளாம் தெய்வயானை கரம்பிடித்த தெய்வம்.
  கூடஒரு குறத்தியையும் கூட்டிக் கொண்ட தெய்வம். 
மாமதுரைச் சொக்கநாதர் மடிவளர்ந்த தெய்வம்.
  மானைத்தேடி வந்ததாக மாயம் செய்த தெய்வம்.
தேமதுரத் தமிழிசைக்கு செவிசாய்க்கும் தெய்வம்.
  தேடுவோரைத் தேடிவரும் தென்பழனித் தெய்வம்.

அருணகிரி நாதரையே ஆட்டிவைத்த தெய்வம்.
  அடியவர்கள் உள்ளத்திலே ஆட்சிசெய்யும் தெய்வம்.
கருணைகொண்ட தெய்வம் கருவில் கலந்துவிட்ட தெய்வம்
  கற்பனையின் எல்லைகளை கடந்து நிற்கும் தெய்வம்.
வருணமழை வானிருந்து வரவழைக்கும் தெய்வம்  
  வாவென்று நானழைக்க வந்து நிற்கும் தெய்வம்.
தருணம்வந்த போது என்னை  தாங்குகின்ற தெய்வம்
  தமிழ் கேட்டு அருள்பொழியும் தென்பழனித் தெய்வம்.

யாமிருக்க பயமெதற்கு என்றுசொல்லும் தெய்வம் 
  யாவும் நீயே எனப் பணிந்தால் காத்து நிற்கும் தெய்வம்.
நாமணக்கும் திருப்புகழின் நாதமான தெய்வம் 
  நான்குமறை போற்றுகின்ற நாதனான தெய்வம்.
கோமணத்து ஆண்டியாக குன்றில் நின்ற தெய்வம்
  கோடிகோடி பக்தர்நெஞ்சில் குடியிருக்கும் தெய்வம்.
பாமணத்தில் தன்மனதை பறிகொடுக்கும் தெய்வம்.
  பாடல்கேட்டு ஓடிவரும் பழனிமலைத் தெய்வம்.

சிவகுமாரன் 

பாடியிருப்பவர் - பிரபாகரன்