Wednesday, March 9, 2011

மன்றாடிப் பார்குன்றெல்லாம் குடியாக உருவானவன் - கொஞ்சம்
மன்றாடிப் பார் நேரில் வருவானவன்
அன்றாடம் துதிப்போர்க்குள் இருப்பானவன் - தன
அடியாரை எதிர்ப்போர்க்கு நெருப்பானவன் - முருகன்
                                                                            ( குன்றெல்லாம் )

உமைபாகன் நுதற் கண்ணில் உருவானவன் - அந்த
உலகாளும் தந்தைக்கே குருவானவன் 
கேட்டாலே தரும் கல்ப தருவானவன் - நீ
கேட்டுப்பார் எடுத்தள்ளி தருவானவன் . - முருகன்         
                                                                      (குன்றெல்லாம் )  


காட்டிடையன்  போல்வேடம் தரித்தானவன் - சுட்ட
கனி ஈந்து மணல் ஊத சிரித்தானவன்
திமிர்கொண்ட அசுரன்தோல் உரித்தான்அவன்- என்
தமிழுக்கும் அவனேதான் உரித்தானவன் - முருகன்
                                                                        ( குன்றெல்லாம் )

மலையேறி அரையாடை அணிந்தானவன் - பின்
மனம் மாறி கடுங்கோபம் தணிந்தானவன்.
குறவள்ளி தனைத்தேடி மணந்தானவன் - பொதிகைக்
குளிர்த்தென்றல் தமிழ்வீசும் மணம்தான் அவன் - முருகன்
                                                                         (குன்றெல்லாம் )

அருணகிரி திருநாவில் இருந்தானவன் - ஊமைக் 
குருபரனின் பிணிதீர்க்கும் மருந்தானவன். 
புவிசுற்ற மயிலேறிப் பறந்தான் அவன். - என்
கவிகொத்தி செல்கின்ற பருந்தானவன்- முருகன்
                                                                            ( குன்றெல்லாம் )


படைதன்னை வேல்கொண்டு பொடி செய்தவன்- அசுரன்
பகைவென்று அதில் சேவற்    கொடிசெய்தவன்.
உலகெங்கும் தமிழ்நெஞ்சே குடியானவன் - என் 
உளம் உழுது பயிர்  செய்யும் குடியானவன் - முருகன்
                                                                                ( குன்றெல்லாம் )


அவ்வைக்குத் தமிழ்ஞானப் பழமானவன் - வள்ளி 
அழகுக்கு மனம்மயங்கி கிழமானவன் 
உயர்வான வழிகாட்டும் மறையானவன் - அவனை 
உனக்குள்ளே தேடிப்பார் - மறையான் அவன் - முருகன்
                                                                                    (குன்றெல்லாம் )


செந்தூரில் அலைவீசும் கடலானவன் - இன்பச் 
செந்தமிழின் இசையே தன உடலானவன் 
குருப்ரம்மன் சிறைவழக்கின் தீர்ப்பானவன் - உன்
குறைசொல்லிப் பார் அனைத்தும் தீர்ப்பான் அவன் - முருகன்
                                                                                     (குன்றெல்லாம்)

தெய்வானை வள்ளிக்கும் துணையானவன் - இன்பத் 
தேன்தமிழின் இன்சுவைக்கு இணையானவன் 
அடியாரின் விழிநீர்க்கு அணை ஆனவன் - அவனை 
அகவிளக்காய் ஏற்றிப்பார் அணையான் அவன்- முருகன்
                                                                                    (குன்றெல்லாம்) 


ஓங்கார நாதத்தின் பொருளானவன் - தினம் 
ஓம் என்று சொல்லிப் பார் ! அருள்வான் அவன். 
உலகத்தின் இருள் நீக்கும் ஒளி ஆனவன் - நீ
உளமுருகிக் கேள் எதையும் ஒளியான் அவன் -முருகன்   
                                                                    .               (குன்றெல்லாம் )
  


                                                                                     - சிவகுமாரன் 


பாடலைப் பாடியவர் - என் அம்மா 


44 comments:

Nagasubramanian said...

ஒரு முடிவுல தான் இருக்கீங்க போல

திகழ் said...

பாடலை இரசித்தேன்

குரலை இன்னும் கேட்க வில்லை

தொடருங்கள்

ஜீவி said...

ஒருபக்கம் அந்த அழகுத் தெய்வத்தின் பெருமையெலாம் சேவற்கொடி பின்னணியில் படபடத்துப் பட்டொளி வீசிப்பறக்க, கனிவைச் சேர்த்துப் பிசைந்த வார்த்தைத் தொடர்கள் காணிக்கையாய் அவன் அருள் முகம் நோக்க, தமிழ்த் தேரில் அந்த ஆறுமுகன் பவனிவரும் அழகில், உங்கள் அன்னையின் குரலும் சேர்ந்து கொள்ள தெய்வ உலா தெவிட்டா இன்பம் தந்தது.

அந்த அனுபவத்தைத் தந்த உங்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி, சிவகுமாரன்!

kashyapan said...

சிவகுமரன் அவர்களே! நம்பிக்கையாளர்களை உருக வைக்கும் எளிமையான முயற்சி! உங்கள் அன்னையாரின் குரலில் பக்தி தவழ்கிறது. வாழ்த்துக்கள்---காஸ்யபன்

மோகன்ஜி said...

மன்றாடி மைந்தன் புகழை மாதாவின் குரலில்..
இன்றைய இரவுக்காய் எனக்கோர் தாலாட்டு கிடைத்தது சிவா!

sury said...

அழகன் முருகன் அவன்
அதிகாலை எனை அழைத்து
அருள் புரிய வந்தான் -
சிறகடித்துப்பறந்தேன்
சிவகுமாரன் வலைக்கு வந்தேன் !!

ஆஹா !! என்னே ஒரு பாடல் !!
என்ன ஒரு ஆனந்தம் !!
அவனைப்பார்ப்பதும் ஆனந்தம் !!
அவன் புகழ் பாடுவதும் ஆனந்தம் !!

தங்கள் அன்னை பாடுகிறாளா !!
இல்லை யவள் உருவில் வந்த
உலகத்து அன்னை அல்லவோ அவள் !!
உமை தன் இளவலைப் பார்க்கிறாள்!!
உவக்கிறாள் ! மனம் சிலிர்க்கிறாள் !!

பாடலைப் பாடிப்பாடி
படும் துயர் மறந்து நின்றேன்.
பாடலைக் கேளா நின்றேன்.
புவியதனை மறந்து போனேன்.

சுப்பு ரத்தினம்.
நானும் பாட அனுமதி தருவீர்களா ?
http://menakasury.blogspot.com

ilamurugan said...

என்னவென்று சொல்வேன்..!

ஒவ்வொருமுறையும் பழனி மலையில் முருகன் சன்னதிமுன் நிற்கும்போதும், கண்களில் நீர் வழிய, வார்த்தையால் சொல்லமுடியாத உணர்வு ஏற்படும். பெரியம்மாவின் குரலில் இந்த பாடலை கேட்கும்போது அப்படியே ஏற்பட்டது.

ஓம் முருகா !

சுந்தர்ஜி said...

டி எம் எஸ்-சீர்காழி-உச்சத்தில் இருந்தபோது வெளியான முருகன் பாடல்களை நினைவுபடுத்துகின்றன சிவா.

உங்களுக்குள்ளே தாளமும் லயமும் உறைந்திருப்பதால் வடிவத்திலும் அது எளிதாய் வெளிப்பட்டு மொழிக்குப் பொருத்தமாய் அழகூட்டுகின்றது.

geetha santhanam said...

குடியானவன்,ஒளியானவன் என்று ஈற்றடிகளில் சிலேடை நன்றாக இருக்கிறது. உங்கள் அன்னையின் குரலில் பாடலும் கேட்க நன்றாக இருக்கிறது. இந்த பக்திப் பாடல்களை download செய்யும்படி கொடுத்தால் நன்றாயிருக்கும்.

செல்வராஜ் said...

அந்த முருகனே வந்து அடி எடுத்துக் கொடுத்தானா ?
தமிழ் துள்ளி விளையாடுகிறதே

சமுத்ரா said...

new blog?! congrats!

Rathesh said...

தரு ஆனவன் - தருவான் அவன்
உரித்தான் அவன் - உரித்தானவன்
மணந்தான் அவன் - மணம் தான் அவன்
பறந்தான் அவன் - பருந்து ஆனவன்
குடி ஆனவன் - குடியானவன்
மறை ஆனவன்- மறையான் அவன்
தீர்ப்பு ஆனவன் - தீர்ப்பான் அவன்
அணை ஆனவன் - அணையான் அவன்
ஓளி ஆனவன் - ஒளியான் அவன்

---அடேங்கப்பா
உண்மையில் நீங்கள் அருட்கவிதான்.

சிவகுமாரன் said...

நாகா சொன்னது
\\ஒரு முடிவுல தான் இருக்கீங்க போல//

எந்த முடிவும் என் கையில் இல்லை நண்பா

சிவகுமாரன் said...

நன்றி திகழ். குரலையும் கேட்டுவிட்டு சொல்லுங்கள்

சிவகுமாரன் said...

அனுபவித்துப் படித்ததற்கு நன்றி ஜீவி சார்

சிவகுமாரன் said...

நம்பிக்கை இல்லாவிட்டாலும் என் தமிழை சுவைக்க வந்து , எனக்கு தன்னம்பிக்கை தந்து விட்டீர்கள் காஷ்யபன் அய்யா

சிவகுமாரன் said...

என் தாயின் குரல் உங்களுக்கும் தாலாட்டாய்.
என் அண்ணனல்லவா நீங்கள் மோகன்ஜி

சிவகுமாரன் said...

சுப்புரத்தினம் அய்யா
மனம் நெகிழ்கிறேன்
தங்கள் வார்த்தைகளில் .
தங்களுக்கு இல்லாத உரிமையா?
மெட்டமைத்துப் பாடி எனக்கும் தெரிவியுங்கள் .
நன்றி அய்யா

சிவகுமாரன் said...

சரியாக சொன்னீர்கள் சுந்தர்ஜி. சிறுவயதில் TMS பாட்டு புத்தகங்கள் எனக்கு பாட புத்தகங்கள் மாதிரி. சீர்காழியின் கேசட்கள் என் அப்பா தேடி தேடி சேர்த்தவை. சீர்காழியின் பாடல்கள் எனக்கு பக்தி உணர்வை ஊட்டுகிறதோ இல்லையோ என் தந்தையை கட்டாயம் நினைவுபடுத்தும்.

சிவகுமாரன் said...

கீதா சந்தானம் சொன்னது.
\\இந்த பக்திப் பாடல்களை download செய்யும்படி கொடுத்தால் நன்றாயிருக்கும்//

எனக்கு எப்படி செய்வது என்று தெரியவில்லை. கணினி உபயோகம் அவ்வளவாய் தெரியாதெனக்கு. விபரம் அறிந்தவர்கள் உதவுங்களேன்

நன்றி மேடம்

சிவகுமாரன் said...
This comment has been removed by the author.
sury said...

இந்த இனிய முருகன் பாடலை சுப்பு தாத்தா கானடா ராகத்தில் இங்கே பாடுகிறார். வாருங்கள். கேளுங்கள்.
சுப்பு ரத்தினம்
http://kandhanaithuthi.blogspot.com

சிவகுமாரன் said...

நன்றி செல்வராஜ்
நன்றி சமுத்ரா
நன்றி ராதேஷ்
நன்றி இளமுருகா
நன்றி சுப்புரத்தினம் அய்யா

sivamani said...

அம்மாவின் குரல் கேட்டு அளவில்லா ஆனந்தம் அடைந்தேன். நம் குழந்தை பருவத்தில் அம்மா பாடிய தாலாட்டு இப்ப நினனைவில் இல்லை. இந்த பாட்டு அதை நினைவு படுத்துகிறது. கண்ணில் நீர் வடிய கேட்டுக்கொண்டு இருக்கிறேன்.

திகழ் said...

கேட்டு இரசித்தேன் நண்பரே

வரியை இரசிக்கவா
குரலில் இனிமையாய் இரசிக்கவா

என்னும் வகையில் இருக்கிறது நண்பரே


நேரம் கிடைக்கையில் எல்லாம் உங்களுக்கும் எங்களுக்கும் இல்லாவிட்டாலும் பரவாயில்லை

தமிழுக்காக எழுதுங்கள்

தமிழுடன்

திகழ்

வை.கோபாலகிருஷ்ணன் said...

அந்த முருகன் தான் அழகு என்று நினைத்திருந்த எனக்கு தங்கள் பாடல் அந்த முருகனை விட அழக்காகத் தெரிகிறதே.

முருகன் அருள் பெற்ற அல்ல அல்ல சிவக்குமரனாகிய முருகனே இயற்றிய பாடலல்லவா, அருமை அருமை.

மனமார்ந்த பாராட்டுக்கள்.

RVS said...

அற்புதம் சிவகுமாரன். பிள்ளைப் பாடலைப் பாடிய தாய்! ;-))

சிவகுமாரன் said...

சிவமணி சொன்னது
\\அம்மாவின் குரல் கேட்டு அளவில்லா ஆனந்தம் அடைந்தேன். நம் குழந்தை பருவத்தில் அம்மா பாடிய தாலாட்டு இப்ப நினனைவில் இல்லை. இந்த பாட்டு அதை நினைவு படுத்துகிறது. கண்ணில் நீர் வடிய கேட்டுக்கொண்டு இருக்கிறேன்//

அம்மாவின் பாடும் திறன் எத்தனை வருடம் கழித்து நமக்கே தெரிந்திருக்கிறது.
இதைக் கேட்க அப்பா இல்லையே என ஏக்கமாகவும், கேட்டால் என்ன சொல்வார்கள் என்று அறிய ஆவலாகவும் உள்ளது. அப்பா முருகனைப் பற்றி ஒரே ஒரு கவிதை எழுதித் தரச் சொன்னார்கள். நான் மறுத்து விட்டேன். இப்போது வருத்தப்படுகிறேன்

சிவகுமாரன் said...

உங்கள் மறுவருகை எனக்கு மிக்க மனமகிழ்ச்சியை தருகிறது திகழ்.

\\நேரம் கிடைக்கையில் எல்லாம் உங்களுக்கும் எங்களுக்கும் இல்லாவிட்டாலும் பரவாயில்லை
தமிழுக்காக எழுதுங்கள்//

என்று தமிழாய்ந்த தாங்கள் சொல்வது என பேறு.

சிவகுமாரன் said...

\\முருகன் அருள் பெற்ற அல்ல அல்ல சிவக்குமரனாகிய முருகனே இயற்றிய பாடலல்லவா, அருமை அருமை.//

ஆமாம் வை.கோ சார் . அவன் தான் என்னுள் இருந்து என்னை எழுத வைக்கிறான் என நான் பரிபூரணமாய் நான் நம்புகிறேன்

சிவகுமாரன் said...

வருக RVS .
நன்றி

சென்னை பித்தன் said...

பாடல் படித்தேன்.இசை வடிவில் கேட்டேன்.மனம் உருகி அவன் நாமத்தில் லயித்தேன்.
//தினம்
ஓம் என்று சொல்லிப் பார் ! அருள்வான் அவன்//
உண்மை!
எப்படிப் பாராட்ட?நீங்கள் அவன் அருள் பெற்ற அருட்கவிதான்!

thendralsaravanan said...

”சிவகுமாரன்”-அன்னை அழகான பெயர் வைத்துள்ளார்கள்!பெயருக்கேற்ற பாடல் புனைவு!
வாழ்த்துக்கள்!

meenakshi said...

வழக்கப்படி பிள்ளையாருக்கு அடுத்து முருகர். நன்று.
//அவ்வைக்குத் தமிழ்ஞானப் பழமானவன் - வள்ளி
அழகுக்கு மனம்மயங்கி கிழமானவன்//
அருமை! மிகவும் ரசித்தேன்.
பதிவின் பின்னணியில் பக்திக்கும், உயர்வுக்கும் சின்னமாக விளங்கும் கோபுரம் மிகவும் அழகு. இது உங்கள் பக்திக்கும்,
உயர்ந்த எண்ணத்திற்கும், இந்த பதிவுக்கும் மிகவும் பொருத்தமாக இருக்கிறது.
முருகு என்றாலே அழகு, முருகா என்றாலே மனம் உருகும் என்பதற்கு ஏற்ப பாடல் வரிகள் அழகாகவும், உங்கள் அம்மாவின் குரலில் மனதை உருகவும் வைக்கிறது.

ரிஷபன் said...

மிக அழகான பாடல்.. அதன் சந்தம் சிலிர்க்க வைத்தது.. கூடவே அம்மாவின் குரலில் இனிமை சொட்டியது..

சிவகுமாரன் said...

நன்றி சென்னைப் பித்தன்,
நன்றி மீனாட்சி மேடம்
நன்றி தென்றல்

சிவகுமாரன் said...

நன்றி ரிஷபன் சார்.
உங்கள் வருகைக்காய் காத்திருந்தேன் வெகுநாளாய்.
தொடர்ந்து வாருங்கள்

Lalitha Mittal said...

சொல்லழகும் பொருளழகும் பின்னிப்பிணைந்து அதனுடன் தேனிசையும் இணைந்து ..இதென்ன தேவகானமோ ?

சிவகுமாரன் said...

நன்றி லலிதா மேடம்

கவிநயா said...

முருகன் பாடலென்பதால் தமிழ் துள்ளி விளையாடுகிறது போலும். அருமையிலும் அருமை! அம்மாவின் குரல் கேட்க மிகச் சுகம்.

சிவகுமாரன் said...

மிக்க நன்றி கவிநயா

இராஜராஜேஸ்வரி said...

உலகத்தின் இருள் நீக்கும் ஒளி ஆனவன் - நீ
உளமுருகிக் கேள் எதையும் ஒளியான் அவன் -முருகன் //
அமுதமாய் பாடிய அன்னைக்கு
பாராட்டுக்கள்.

சிவகுமாரன் said...

மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி மேடம்

அப்பாதுரை said...

நிதானமாகவும் தெளிவாகவும் பாடியிருக்கிறார். வளமான குரல்.