Sunday, May 29, 2011

அருணை மலையின் ஒளியே


அருணை மலையின் ஒளியே - திரு 
   ஆலவாயின் மணியே
    அண்ணா மலையே அரசே - திரு
    ஆரூர் ஆண்ட முரசே.
கருணைக் கடலே சிவமே -உயர் 
   கயிலை மலையின் பரமே -அன்று
   காமனை எரித்த விழியை - கொஞ்சம் 
   காட்டி எனக்கு அருள்வாயே ,                          (அருணை மலையின்)

இருளில் கிடந்து தடுமாறி 
   ஏங்கித் தவிக்கும் அடியேனின் 
   இன்னல்கள் தீர்த்து மனமிரங்கி 
   இன்னருள் காட்ட வருவாயே.
அருளைக் காட்டி அணைப்பதற்கு   
   அரனே உனக்கு மனமில்லையோ ?
   ஆலம் உண்ட அருட்திரளே
   அண்ணா மலையே அருள்வாயே.               (அருணை மலையின்)

பொருளைக் கேட்கும் புவி மீதில் 
   பொன்னே உனது அருள் கேட்டேன்.
   போற்றிப் புகழ்ந்து எனது உயிர் 
    போகும் வரை நான் உனைத் தொழுவேன்.
குருவே மணியே குணநிதியே 
   கூடல் ஆண்ட அருள்நிதியே 
   கூற்றை உதைத்த பதமிரண்டை
   கூவிப் பிடித்தேன் அருள்வாயே                (அருணை மலையின்)
                             
                                                                     
                                                                                                   -சிவகுமாரன் 


சிவநாமத்தை ஜெபித்துக்கொண்டு இந்தக் குரல் பதிவை கேட்கவும். 



Sunday, May 15, 2011

இன்னுலகம் காக்கும் அன்னையே.


ஆதிசக்தி காளி மாரி
   அம்மை அபிராமி என்று 
   ஆயிரம் பேர் கொண்ட அன்னையே.
 அன்னை அன்னை அன்னை என்று 
   அனுதினமும் உன்னை எண்ணி 
   அர்ப்பணித்தேன் நானும் என்னையே.
யாதுமாகி  நின்றவள்  நீ
   யாவரையும் வென்றவள் நீ 
   ஈவு  கொண்டு  இரங்கு அன்னையே 
 இறைவனார் உடம்பில் பாதி 
   இருந்து கொண்டு ஆட்சி செய்து 
   இன்னுலகம் காக்கும் அன்னையே.                                 1. 

பட்டருக்கு மனமிரங்கி  
   பௌர்ணமியை வரவழைத்து  
   பவனிவரச் செய்த அன்னையே 
  பாமரனாம் காளமேகம்  
   படுத்துறங்க கனவில்வந்து  
   பாட்டெழுதச் சொன்ன அன்னையே.
இட்டமுடன் நானளிக்கும் 
   இக்கவியைக் கேட்டுருகி 
   இன்முகத்தைக் காட்டு அன்னையே.
  இறைவனார் உடம்பில் பாதி 
   இருந்து கொண்டு ஆட்சி செய்து 
   இன்னுலகம் காக்கும் அன்னையே.                                 2.

கம்பன் குறை தீர்ப்பதற்கு  
   கிழவியாக வேடமிட்டு  
   கிழங்கு விற்க வந்த அன்னையே.
 கால்வலிக்க நடந்து வந்து 
   களைப்படைந்த வள்ளலாரின்
   கடும்பசியைத் தீர்த்த அன்னையே.
எம்புலம்பல் கேட்டு உந்தன்
   இதயம் ஏன் இரங்கவில்லை 
   இன்னும் என்ன தயக்கம் அன்னையே
 இறைவனார் உடம்பில் பாதி 
   இருந்து கொண்டு ஆட்சி செய்து 
   இன்னுலகம் காக்கும் அன்னையே.                                 3. 

பாலகன் அழைத்த போது
   பரிதவிக்க ஓடிவந்து 
   பாலமுதம் தந்த அன்னையே
  பரமன் நஞ்சை உண்ட போது 
   பாய்ந்து வந்து அதைத் தடுத்து 
   பூவுலகம் காத்த அன்னையே
ஆலமுண்ட கண்டனிடம் 
   அடியவனுக்கா யிரங்கி   
   அருள்புரியச் சொல்வாய் அன்னையே
  இறைவனார் உடம்பில் பாதி 
   இருந்து கொண்டு ஆட்சி செய்து 
   இன்னுலகம் காக்கும் அன்னையே.                                 4. 

ஆதி சங்கரர் அழைக்க 
   அழகு பாத சிலம்பொலிக்க 
   அன்ன நடை போட்ட அன்னையே
  அண்ணல் பரம ஹம்சர் உன்னை 
   அழைத்த போது காட்சி தந்து  
   அருள் கொடுத்த காளி அன்னையே 
ஏது பிழை என்ன குறை 
   என்னிடத்தில் யானறியேன்
   ஏற்றருள வேண்டும் அன்னையே 
 இறைவனார் உடம்பில் பாதி 
   இருந்து கொண்டு ஆட்சி செய்து 
   இன்னுலகம் காக்கும் அன்னையே.                                 5. 

சூரனை வதைப்பதற்கு 
   சுப்பிரமணிய பாலனுக்கு 
   வேலெடுத்து தந்த அன்னையே 
  சூலம் சக்ரம் வஜ்ர மேந்தி  
   துர்க்கையாக வடிவெடுத்து
   மகிஷனை அழித்த அன்னையே
யாரெனை எதிர்த்த போதும் 
   யானுனை துதித்து வந்து 
   யாவும் வெல்ல வேண்டும் அன்னையே
 இறைவனார் உடம்பில் பாதி 
  இருந்து கொண்டு ஆட்சி செய்து 
  இன்னுலகம் காக்கும் அன்னையே.                                 6. 

வான்மழைக்கு மாரி என்றும்
   வாட்டும் வெப்பக் காளி என்றும்
   வையம் தன்னை ஆட்டும் அன்னையே.
  வாழ்க்கை உந்தன் கையிருக்க
   விதியை நம்பி ஆவதென்ன
   வந்தடைந்தேன் நம்பி உன்னையே.
ஏன் மனம் இரங்கவில்லை?
   ஏன் இதயம் இளகவில்லை?
   என்மேல் என்ன கோபம் அன்னையே
  இறைவனார் உடம்பில் பாதி 
   இருந்து கொண்டு ஆட்சி செய்து 
   இன்னுலகம் காக்கும் அன்னையே.                                 7. 

நீரும், தீயும், காற்றும், வானும்
   நிலத்தினோடு பூதமைந்தும்
   நீக்கமற்று இருக்கும் அன்னையே 
  நித்தம் நித்தம் கோடி கோடி 
   நித்திலத்தில் தோன்றும் ஊழி 
   அத்தனையும் மாற்றும் அன்னையே
ஏறெடுத்துப் பார்ப்பதற்கும் 
   என்ன தடை நானறியேன் 
   இரக்கம் காட்ட வேண்டும் அன்னையே
  இறைவனார் உடம்பில் பாதி 
   இருந்து கொண்டு ஆட்சி செய்து 
   இன்னுலகம் காக்கும் அன்னையே.                                8. 

உலகம் ஏழும் நடுநடுங்க
   உயிர்கள் கோடி தலைவணங்க 
   விண்ணும் மண்ணும் ஆளும் அன்னையே
  உருவெடுத்த அத்தனைக்கும் 
   உணவளித்து உணர்வளித்து 
   ஊட்டுகின்ற எங்கள் அன்னையே 
இலகுவாக்கி, இனிமையாக்கி 
   எனது வாழ்வை உனதுமாக்கி
   இழுத்துச் செல்ல வேண்டும் என்னையே
  இறைவனார் உடம்பில் பாதி 
   இருந்து கொண்டு ஆட்சி செய்து 
   இன்னுலகம் காக்கும் அன்னையே.                                 9. 

அங்குசம் கரும்பு வில் வேல்
   அங்கையில் உடுக்கை சூலம் 
   ஆயுதங்கள் கொண்ட அன்னையே 
  அன்பினில் திளைத்த உள்ளம் 
   அடைக்கல மளிக்கும் பாதம் 
   அருள்மழை பொழிக்கும் அன்னையே .
எங்குமே நிறைந்திருந்தும் 
   என்னுளம் உறைந்திருக்க 
   என்ன தவம் செய்தேன் அன்னையே 
  இறைவனார் உடம்பில் பாதி 
   இருந்து கொண்டு ஆட்சி செய்து 
   இன்னுலகம் காக்கும் அன்னையே.                                 10 .

உந்தன் நாமம் தன்னை நானும் 
   ஊனுடம்பு உள்ளவரை 
   உச்சரிக்க வேண்டும் அன்னையே 
  உச்சரித்த வேளை உந்தன் 
   உருவம் வந்து முன்பு தோன்றும் 
   வரம் எனக்கு வேண்டும் அன்னையே .
எந்தத்துயர் வந்த போதும்
   ஈசனோடு இணைந்து வந்து 
   என்னை மீட்க வேண்டும் அன்னையே.
  இறைவனார் உடம்பில் பாதி 
   இருந்து கொண்டு ஆட்சி செய்து 
   இன்னுலகம் காக்கும் அன்னையே.                                 11


ஓம்சக்தி சக்தியென்று 
   உளமுருகச் சொல்பவரை
   ஓடிவந்து காக்கும் அன்னையே
  உன்னை எண்ணி வழிபடாத 
   வீணருக்கும் படியளந்து
   உயிர்கொடுத்து காக்கும் அன்னையே
யாமிருக்கும் நிலையறிந்து 
   இன்னல் துயர் களைந்தெறிந்து 
   இருள் விலக்க வேண்டும் அன்னையே.
  இறைவனார் உடம்பில் பாதி 
   இருந்து கொண்டு ஆட்சி செய்து 
   இன்னுலகம் காக்கும் அன்னையே.                                 12 . 

சக்தி சக்தி சக்தியென்று 
   ஜெகம் அதிரக் கூவுகின்றேன்
   சடுதியில் வந்திறங்கு அன்னையே
 சங்கடங்கள் தீர்த்துவைத்து 
   சக்தியெல்லாம் எனக்களித்து 
   சுத்த சிவம் ஆக்கு என்னையே
இக்கவியைக் கேட்டு உள்ளம் 
   இளகிவந்து இன்பமாகி 
   என்னை உன்னில் கூட்டு அன்னையே
  இறைவனார் உடம்பில் பாதி 
   இருந்து கொண்டு ஆட்சி செய்து 
   இன்னுலகம் காக்கும் அன்னையே.                                 13 .

சுந்தரேசர் நந்தியோடு 
   சூழவந்து காட்சி தந்து 
   சுகமளிக்க வேண்டும் அன்னையே
  சொக்கநாதர் கரம்பிடித்து 
   சொக்கும் கோலம் கண்ட பின்பே
   சொர்க்கம் செல்ல வேண்டும் அன்னையே
எந்தன் உடல் எந்தன் உயிர் 
   இன்னும் இங்கு இருக்கும் வரை 
   என்னை ஆள வேண்டும் அன்னையே
  இறைவனார் உடம்பில் பாதி 
   இருந்து கொண்டு ஆட்சி செய்து 
   இன்னுலகம் காக்கும் அன்னையே.                             14 .

அன்னை அன்னை அன்னையென்று 
   அனுதினமும் உன்னை எண்ணி 
   அர்ப்பணித்தேன் நானும் என்னையே 
  ஆதி சக்தி காளி மாரி
   அம்மை அபிராமி வந்து 
   ஆட்கொளத்தான் வேண்டும் அன்னையே.
என்னை என்னை என்னை இன்னும் 
   எத்தனை நாள் காக்க வைப்பாய் 
   இன்று பதில் சொல்வாய் அன்னையே
  இறைவனார் உடம்பில் பாதி 
   இருந்து கொண்டு ஆட்சி செய்து 
   இன்னுலகம் காக்கும் அன்னையே.                             15.

                                                                      -சிவகுமாரன்  

பாடலைப் பாடியிருப்பவர்: என் சித்தப்பா திரு அரசு அவர்கள்