Tuesday, April 24, 2012

சிவவெண்பா

அள்ளக் குறையா அமுதமென இன்பங்கள்
உள்ளம் நிறைய வழிந்தோடி- வெள்ளமென
பாயுமாறு செய்ய பணிவோடு ஏத்துவோம்
தாயுமான ஈசனின் தாள்.

அல்லல் தொலைந்தோட அம்பலத்தான் நாமத்தை
சொல்லித் துதித்துச் சுடரேற்றி- தில்லை
நடராசன் பாதங்கள் நாளும் துதிப்போம்
அடடா அதுவே அறம்.

பொன்னம் பலத்தானை பூலோகம் காத்தானை
அண்ணா மலையானை ஆரமுதப்- பண்ணாலே
பாடிக் களிப்பேன்நான்! பாட்டில் சிவத்தையே
தேடித் திளைப்பேன் தினம்.


அஞ்செழுத்து மந்திரத்தை அன்றாடம் உச்சரித்து
தஞ்சமென ஈசனவன் தாள்சேர் - நெஞ்சே
சிவனை மறவாதே ! சீரோடு வாழ
அவனே உனக்கு அரண்.


இறவாப் புகழ்கேட்டேன்! ஈரேழு ஜென்மம்
மறவா மனங்கேட்டேன்!மீண்டும் -பிறவா
வரங்கேட்டேன் அய்யா! வசமாகி எனக்கு
இரங்கினால் இல்லை இடர்.


தரங்குன்றிப் போகா தமிழ்கொண்டு வாழ்த்தி
வரங்கேட்டுப் பார்ப்பேன் வணங்கி! -இரங்காது
போனாலும் போகட்டும்! பூந்தமிழ்ப் பாவொன்று
ஆனாலே அய்யன் அருள்.


-சிவகுமாரன் 



அய்யா சுப்புரத்தினம் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.