Tuesday, March 1, 2011

ஓம் கணபதிஓம்கண பதிஓம் ஓம்கண பதிஓம்
   கணபதி ஓமென சொல்வோமே
ஓம்கண பதியென மந்திரம் சொல்லியே 
   ஒவ்வொரு செயலிலும் வெல்வோமே
தோம்தரி கிடதோம் தோமென பாடியே
   கணபதி பாதம் பணிவோமே
சோமனின் புதல்வனை தேவரின் முதல்வனை 
   தினந்தினம் கணந்தோறும் நினைவோமே.


ஆனை முகத்தவன் ஐந்து கரத்தவன்
   அல்லகள் தீர்க்கும் விநாயகனே 
பானை வயிற்றவன் பாவ மறுப்பவன்   
    பரமனின் அமசமாய் பிறந்தவனே
வானை நிகர்த்தவன் வையம் நிறைந்தவன்
   வானுறை தேவரும் தொழுபவனே
ஊனை உருக்கிட உள்ளம் நெகிழ்ந்திட 
   உனைத் தொழுதேன் எழுந் தருள்வாயே 


ஒருபிடி சாணத்தில் ஒருதுளி மஞ்சளில் 
   உருவம் தரித்திடும் எளியோனே
சிறுபிடி அவல்பொரி சிறியதோர் பழமென 
   தருவதை ஏற்றுளம் மகிழ்வோனே
அருகம்புல் மாலையும் அரசடி நிழலையும் 
   அகமகிழ்ந் தேற்றெங்கும் அமர்வோனே
உருகிடும் அடியவன் உளக்குறை நீங்கிட 
   உமைமைந்தனே எழுந் தருள்வாயே 

நாரதர் தந்ததோர் ஞானப் பழம்பெற
   ஞாலமே அரனுமை என்றவனே
சூரர் குலத்தவன் தீய குணத்தவன்
   சிந்தூரன்  துயரற வென்றவனே   
பாரத காவியம் மாமுனி மொழிந்திட 
   பணிவுடன் தந்தம் ஒடித்தவனே
யாரிடம் சென்று நான் என்துயர் மொழிந்திட ? 
   இன்னல்கள் தீர்த்திட வருவாயே 


தம்பிக்கு மணம் செய்ய தருவனக் குறமகள் 
   தன்னிடம் தூதெனச் சென்றவனே
அம்பிகை அருள்விழி அடியவன் மேல்விழ
   அண்ணலே தூதெனச்  செல்வாயே
தும்பிக்கை பலம்கொண்டு தொடர்ந்திடும் வல்வினை 
   தூர விரட்டிட வருவாயே 
நம்பிக்கை வைத்துனை நாள்தொறும் நான்தொழ 
   நன்மைகள் தந்தருள் புரிவாயே

சிரந்தனை இழந்ததும் மதங்கொண்ட கரியதன் 
   ஒருதலை  தனைப்பெற்று எழுந்தவனே
புரந்தனை எரித்திட புறப்பட்ட சிவனது
   ரதந்தனை சினங்கொண்டு முறித்தவனே
அரங்கனைக் காவிரிக் கரைதனில் அமர்த்தியே
   மலைதனில் ஏறியே அமர்ந்தவனே
கரங்கொண்டு உனைத்தொழ தமிழ்கொண்டு கவிசொல 
   கணபதியே எழுந் தருள்வாயே  


முத்தமிழ் மூதுரை மொழிந்திட்ட அவ்வைக்கு
   முதுமையைத் தந்தருள் புரிந்தவனே 
பித்தனைக் கோபித்து பைந்தமிழ் வேதங்கள் 
   பெருங்கடல் விழுங்கிட எறிந்தவனே
அத்தனும் அம்மையும் அழகிய தம்பியும்
   அழகுற அருள்தர வருவீரே 
சித்தம் அடங்கிட சிவமத்தை உணர்ந்திட 
   சித்தியும் புத்தியும் தருவீரே 


ஒப்புயர் வற்றதோர் ஓமெனும் மந்திரம்
   உள்நினைந்தே உளம் உருகிடவே
முப்புரம் எரித்தவன் முக்கண்ணன் அருள்பெற்று
   முக்தி அடைந்திட அருள்வாயே
தொப்பையும் துதிக்கையும் துணையென நம்பினேன்
   துயர்தனை துடைத்திட வருவாயே
அப்பனின் தரிசனம் அம்மையின் கரிசனம் 
   அடியவன் அடைந்திட அருள்வாயே.


அண்டங்கள் யாவையும் ஆளும்உன் தந்தையின்
   அருள்நடம் கண்டுளம் மகிழ்ந்திடவே
சுண்டெலி வாகனா சித்தி விநாயகா 
   சுழுமுனை திறந்திட வருவாயே
மண்டலம் கடந்திட மும்மலம் அருந்திட 
   மங்களக் கணபதி அருள்வாயே
குண்டலி எழும்பிட குதிரை அடங்கிட 
   குமுதம் மலர்ந்திட வருவாயே.


காக்கையின்  உருகொண்டு கமண்டலம் உருட்டியே
   காவிரி புரண்டிடச் செய்தவனே
தேக்கிய விழிகளில் திரண்டிடும் நீரினை
   துடைத்திட கரம்கொண்டு வருவாயே 
யாக்கையே திரியென எரிவிளக் கேற்றினேன் 
  இருள்தனை விலக்கிட வருவாயே
போக்கிடம் வேறில்லை புகல்தர ஆளில்லை
   பொற்பதம் பணிந்தேன் அருள்வாயே
                                                  
                                                       -சிவகுமாரன் 

பாடலை  பாடியவர்: பிரபாகரன்
                         -

37 comments:

இராஜராஜேஸ்வரி said...

அம்பிகை அருள்விழி அடியவன் மேல்விழ
அண்ணலே தூதேனச் செல்வாயே//
All the prayer is holy &make our mind Enthusiastic.
பாடலை பாடியவர்: பிரபாகரன்//very Impressive and sweet melody. Thank you for sharing.
-

geetha santhanam said...

கணபதியைத் துதித்து துவங்கியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.
/ஒருபிடி சாணத்தில் ஒருதுளி மஞ்சளில்
உருவம் தரித்திடும் எளியோனே
சிறுபிடி அவல்பொரி சிறியதோர் பழமென
தருவதை ஏற்றுளம் மகிழ்வோனே
அருகம்புல் மாலையும் அரசடி நிழலையும்
அகமகிழ்ந் தேற்றெங்கும் அமர்வோனே/
பிள்ளையாரை எளிமையாகத் தொழுதாலும் மகிழ்வாரென அழகாகக் கூறியிருக்கிறீர்கள்.
பிரபாகரன் அவர்கள் மெட்டில் இந்தப் பாடல் மனனம் செய்ய எளிதாக இருக்கிறது. Background-ல் தெரியும் கோபுரம் அழகாகவும் இந்த ப்ளாகிற்குப் பொருத்தமாகவும் இருக்கிறது.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

கவிதை அருமை! இதை நீங்கள் பார்த்தீர்களா,சிவக்குமார்?
http://keerthananjali.blogspot.com/search?updated-max=2010-11-11T06:50:00-08:00&max-results=7
உங்கள் விமர்சனம் எதிர்பார்க்கும்,
அன்பன் ஆர்.ஆர்.ஆர்.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

சரியாக வரவில்லை..கீர்த்தனாஞ்சலி ப்லாக்கில்
“ காளிங்கன் கர்வ பங்கம்” என்று எழுதி இருக்கிறேன்.
நீங்கள் அவசியம் பார்க்க வேண்டும், சிவா!

அப்பாதுரை said...

பாட்டுக்கு மெட்டா மெட்டுக்குப் பாட்டா? நன்று!

கணபதியை முதலில் ஏன் வணங்குகிறார்கள் என்பதற்கும் ஒரு கதை உண்டே? சுவாரசியமாக அதையும் சேர்த்திருக்கலாமே?

அப்பாதுரை said...

அருட்கவி - தலைப்பு பொருத்தம்.

ஜீவி said...

'ஓம்' எனப் பிரணவத்தில் கடவுள் வாழ்த்தைத் துவங்கி விநாயகரைத் துதித்து புதிய தளத்தை ஆரம்பித்திருக்கிறீர்கள். இறை அருளால் எல்லாம் இனிதே நடக்கட்டும். 'அருட்கவி' தளம் வாரி வழங்கும் தேந்தமிழை மாந்தி தமிழ்நெஞ்சங்கள் மகிழ்ச்சியில் திளைக்கட்டும்!

G.M Balasubramaniam said...

நீ எழுதியதைப்பற்றி கூற எனக்கு அருகதை இல்லை. நான் ஏதாவது எழுதினால் சர்க்கரை இனிக்கும் என்று கூறுவதுபோல் இருக்கும். புதிய வலைப்பூவா.சிவகுமரன் கவிதைகளும் தொடருமா.?வாழ்த்துகள்

மோகன்ஜி said...

அன்பு சிவா! அனுபவித்துப் படித்தேன்.. பக்தி ததும்பும் வரிகள்.. உன் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிபெற ஐங்கரத்தான் அருள் உண்டு.. பிரார்த்தனைகளுடன்..

சிவகுமாரன் said...

உங்கள் முதல் வருகையில் அன்னை இராஜராஜேஸ்வரியே வந்து ஆசிர்வத்ததாய் உணர்ந்தேன்.
நன்றி மேடம்.

சிவகுமாரன் said...

மிக்க நன்றி கீதா மேடம்.
இந்த பாடலை இன்னும் எளிமையாய் ஹரிஹரி நந்தினி - மெட்டில் பாடலாம்.

சிவகுமாரன் said...

நன்றி ஆர்.ஆர். ஆர். சார்.
காளிங்க நர்த்தனம் கண்டு களித்தேன்.
மிக்க நன்றி.

சிவகுமாரன் said...

நன்றி துரை.
நீங்கள் குறிப்பிடும் கதை என்ன ? சட்டென நினைவுக்கு வரவில்லை.

சிவகுமாரன் said...

நன்றி ஜீவி சார்.
உங்கள் பின்னூட்டங்கள் எனக்கு பலம்.

சிவகுமாரன் said...

GMB சார். எவ்வளவு பெரிய வார்த்தை சொல்லி விட்டீர்கள். அந்த கடவுளைப் பாடும் அருகதை எனக்கே இருக்கும் போது, இந்த சிறியேனை விமர்சிக்கும் தகுதியும் அனுபவமும் தங்களுக்கு பன்மடங்கு உண்டு.
தொடர்ந்து வருகை தாருங்கள் அய்யா.

சிவகுமாரன் said...

நன்றி மோகன் அண்ணா
எனக்காக பிரார்த்திக்க ஆந்திராவிலும் ஒரு அண்ணன் இருக்க
எனக்கென்ன மனக்கவலை ?

எல் கே said...

விநாயகனை வழிபட்டு துவக்கி உள்ளீர்கள். உங்களுக்கு அவன் ஆசிகளும் எங்கள் பிரார்த்தனைகளும் உண்டு

sury said...

கணங்களுக்கெல்லாம் அதிபதி கணபதி.
அவன் கதை கூறும் இந்த அற்புத கவிதை
படிக்கப் படிக்க மெய் சிலிர்க்கும்.
உணர உணர பழ வினை தீரும்.

சுப்பு ரத்தினம்.
சந்தங்கள் அழகாக அமைவதால், எந்த ராகத்திலும்
எளிதாக பாட முடிகிறது.
இளவல் பிரபாகரன் அவர்களுக்கு இனிய வாழ்த்துக்கள்.

சுப்பு ரத்தினம்.
http://kandhanaithuthi.blogspot.com

kashyapan said...

சிவகுமரன் அவர்களே! உங்கள் சிரத்தையும், செய்நேர்த்தியும் அற்புதமாக வெளிப்பட்டுள்ளது. வாழ்த்துக்கள்----காஸ்யபன்

thendralsaravanan said...

அழகான ஆரம்பம்!வாழ்த்துக்கள்!கோபுர தரிசனம் தந்தீர்கள்!

ஆனந்தி.. said...

welcome shiva...welcome...

ஸ்ரீராம். said...

வாழ்த்துக்கள்...பின்புலத்தில் தெரியும் கோபுரம் அழகு.

அப்பாவி தங்கமணி said...

மூலமுதல்வனை தொழுது நல்ல ஆரம்பம் செய்து இருக்கிறீர்கள்... வாழ்த்துக்கள் புது தளத்திற்கு... மேலும் பதிவுகள் காண ஆவலுடன் இருக்கிறேன்... நன்றி...(பின்புல கோபுர தரிசனம் ரெம்ப நல்லா இருக்குங்க)

எஸ்.கே said...

மிக அழகு!

vanathy said...

mmm.. super. well written.

தங்கம்பழனி said...

தங்களைப் பற்றிய அறிமுகமே அற்புதமாக இருக்கிறது.. கோபுரப் பின்னணியில் வலைப்பூ பார்க்க பக்தி மயமாக இருக்கிறது.பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்..

Nagasubramanian said...

வாழ்த்துக்கள்.
(Remove the word verification)

sury said...

all of u r invited to listen to this poetic masterpiece being sung in a raaga maliga pattern in ten different raagas by this old man .My voice quality has gone down considerably because of my age. I would appeal to go by the devotion rather than the quality of my voice.
subbu rathinam
http://menakasury.blogspot.com

சிவகுமாரன் said...

நன்றி
எல்.கே. சுப்புரத்தினம் அய்யா , காஷ்யபன் அய்யா, தென்றல், ஆனந்தி, ஸ்ரீராம், அப்பாவி தங்கமணி , எஸ்.கே., வானதி, தங்கம் பழனி & நாகா
அனைவருக்கும் நன்றி

கவிநயா said...

கணபதி கானம் மிக அருமை. வார்த்தைகள் இயல்பாக வந்து அமர்ந்து கொண்டிருக்கின்றன. மிக அழகாக எழுதுகிறீர்கள். சுப்பு தாத்தா பதிவின் மூலம் வந்தேன்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

அருட்கவியின் முதல் பாடலே முழுமுதற் கடவுளான விநாயகர் மேல்.

விநாயகர் அருளால் மேலும் பல நல்ல பக்திப் பாடல்களை தாருங்கள். எங்கள் செவிகளில் தேன் ஆறு பாயட்டும்.

சிவகுமாரன் said...

நன்றி கவிநயா .
நன்றி வை.கோ.சார்

meenakshi said...

கணபதி பாடல் வரிகளும், பாடலின் மெட்டும், குரலும் மிகவும் அருமை.
குறிப்பாக 'ஒருபிடி சாணத்தில்.....', 'சிரந்தனை.......' மிகவும் பிரமாதம். விநாயகரை பற்றிய சிறு சிறு கதைகளை நினைவு படுத்தும் வகையில் பாடல் வரிகள் அமைந்து இருப்பது மிகவும் சிறப்பு.
அருமையான துவக்கம். வாழ்த்துக்கள் சிவகுமாரன்!

ரிஷபன் said...

உங்களுக்கு இயல்பாய் அழகாய் அருமையாய் எழுத வருகிறது.. தொடருங்கள்.

சிவகுமாரன் said...

நன்றி மீனாட்சி மேடம்
நன்றி ரிஷபன் சார்.

குமரன் (Kumaran) said...

முதலில் பாடும் போது எந்த மெட்டில் பாடுவது என்று புரியவில்லை. ஆனால் பிரபாகரன் அவர்கள் பாடியதைக் கேட்டபிறகு மெட்டு பிடிபட்டுவிட்டது. :-)

எதுகை மோனைகளெல்லாம் தூள் பறக்கின்றன. எளிமையாக உங்களுக்கு எழுத வருகிறது!

//பித்தனைக் கோபித்து பைந்தமிழ் வேதங்கள்
பெருங்கடல் விழுங்கிட எறிந்தவனே
//

இது எந்தக் கதை? தெரியவில்லையே?!

சிவகுமாரன் said...

நன்றி குமரன் சார்.இந்தக் கவிதையை எழுதி 8 வருடங்களுக்கு மேலாகி விட்டது. சொன்னால் நம்புவீர்களா தெரியாது. அப்போது சிவனைப் பற்றித் தான் அதிகம் எழுதிக் கொண்டிருந்தேன். கணபதியைப் பற்றி எழுத சொல்லி எனக்கு என் குருவிடமிருந்து உத்தரவு வந்தது. பிள்ளையார் புராணம் அவ்வளவாக தெரியாதெனக்கு. கணபதியை வணங்கிவிட்டு எழுத ஆரம்பித்தேன். என்ன ஆச்சர்யம் இரண்டு நாட்களுக்குள் எனக்கு ஏகப்பட்ட விசயங்கள் கிடைத்தன. தொலைக்காட்சியைத் திறந்தால் சுகி சிவம் சுதா சேஷையன் என்று யாராவது கணபதி பற்றி பேசிக் கொண்டிருப்பார்கள். பிள்ளையார் பற்றிய புத்தகம் ஏதாவது படிக்க கிடைக்கும், சில செய்திகள் , கதைகள் தானாய் காதில் வந்து விழும். அப்படித்தான் இந்தக் கதை எனக்கு கிடைத்தது. தமிழ் வேதங்களுக்கு விளக்கம் எழுதச் சொல்லி சிவபெருமான் ஒரு மகரிஷியை ( பெயர் நினைவில்லை) கேட்டுக் கொண்டதாகவும் , கணபதியை வணங்காமல் அந்தச் செயலை அந்த மகரிஷி தொடங்கியதாகவும் , அதை நாரதர் கணபதியிடம் போட்டுக் கொடுத்துவிட, சினம் கொண்ட கணபதியார் தன தந்தையையை கோபித்து அவர் கையில் இருந்த வேதங்களை பிடுங்கி கடலில் எறிந்த தாகவும் அப்போது ஒரு புத்தகத்தில் நான் படித்தேன். அவ்வளவு தான் எனக்கு தெரியும்.
அதை விடுங்கள். கவிதை எழுதியாயிற்று. அதை கணபதி ஏற்றுக் கொண்டாரா ? மறுநாள் ஒரு சுப நிகழ்ச்சிக்காக என் சித்தப்பா குடுமபத்துடன் அதிகாலையில் வேனில் மாயவரம் கிளம்புகிறோம். மனதில் புதிதாய் எழுதிய பாட்டு ஓடிகொண்டிருக்க தூங்கி விட்டேன். கண்விழித்தால் காலை 8 மணியளவில் திருவலஞ்சுழி என்னும் தலத்தில் வேன் நிற்கிறது. வலம்புரி விநாயகரை வணகிவிட்டு செல்லலாம் என்கிறார்கள். சந்நிதியில் இந்தப் பாடலை முதன்முதலாய் பாடுகிறேன். கணபதி என் பாடலை மனமுவந்து ஏற்றுக் கொண்டார்.