Sunday, February 18, 2018

தாயுமானவா!


ஒம்நமசிவாய ஒம்நமசிவாய  
ஒம்சிவாய ஒம்சிவாய 
ஒம்நமசிவாய 

திருச்சிமலைக் கோட்டை தன்னில் திகழ்ந்தருளும் ஆண்டவா
  தேவிமட்டு வார்குழலி துணையுடனே ஓடிவா
கருப்பிணியின்  துயரம் போக்க தாயின் வேடம் பூண்டவா
   கருணைகொண்டு கண்திறக்க வேண்டும் தாயுமானவா

ஆலம்  அள்ளித் தான் குடித்து அமரர்குலம் காத்தவா
   அன்னை மட்டு வார்குழலி கரம்பிடித்து ஓடிவா
காலமெல்லாம் உன்னிரண்டு கால்பிடித்து வேண்டினேன்.
   கருணைகொண்டு கண்திறக்க வேண்டும் தாயுமானவா

ஆதரவு கேட்டுஉந்தன் அடிகளையே பற்றினேன் 
   அப்பனே உன் கோயில்தன்னை அனுதினமும் சுற்றினேன்.
காதலாகி கசிந்துருகி கரங்குவித்து வேண்டினேன்.
   கருணைகொண்டு கண்திறக்க வேண்டும் தாயுமானவா

சின்னப்பிள்ளை ஊனைக்கேட்ட சித்தத்திலே பித்தமோ 
   சிறியேன் என்னை சோதிக்கவே இன்னும் என்ன திட்டமோ 
கண்ணப்பனின் கண்பறிக்க போட்ட வேடம் போதுமே 
   கருணைகொண்டு கண்திறக்க வேண்டும் தாயுமானவா

தில்லையிலே நந்தனார்க்கு நந்திவிலக வில்லையா
  திருவடியார் பாடகோயில் கதவும்திறக்க வில்லையா   
கல்லைத்தெப்ப மாக்கிஅப்பர் கடலில் நீந்த வில்லையா 
   கருணைகொண்டு கண்திறக்க வேண்டும் தாயுமானவா

சுந்தரனார் காதலுக்கு தூதுசெல்ல வில்லையா 
   துயரம்கொண்ட கர்ப்பிணிக்கு தாயுமாக வில்லையா 
கந்தவேலைப் போல நானும் உந்தன்பிள்ளை  அல்லவா 
   கருணைகொண்டு கண்திறக்க வேண்டும் தாயுமானவா

அலைதவழும் இராமநாத ஜோதிலிங்க ரூபமே  
   அருணை மலை தீபமே என் அகம் நிறைந்த ஜோதியே
கலைதவழும் ஆனைக்காவில் காக்கும் ஜம்பு கேஸ்வரா
   கருணைகொண்டு கண்திறக்க வேண்டும் தாயுமானவா

மண்சுமந்து அடிகள் வாங்கி மாயம் செய்த மன்னவா 
   மதுரைநகர் நரிகளெல்லாம் பரிகளாகச் செய்தவா 
கண்திறந்து கனல்பொழிந்து  கீரன்திடம் கண்டவா 
   கருணைகொண்டு கண்திறக்க வேண்டும் தாயுமானவா

அணையுடைத்து மதுரையினை அலறவைத்த சுந்தரா 
   அகங்குழைந்து பாண்டியனுக் கருள்கொடுத்த ஈஸ்வரா
கணைதொடுத்த மன்மதனை கண்திறந் தெரித்தவா 
   கருணைகொண்டு கண்திறக்க வேண்டும் தாயுமானவா

பிட்டுக்காக மண்சுமந்து பிரம்படியும் வாங்கினாய் 
   பிரம்மன்தலை தூக்கிக்கொண்டு பித்தனாக சுற்றினாய் 
கட்டும்உள்ளக் கோயில்காண மட்டும்நேரம் இல்லையோ
   கருணைகொண்டு கண்திறக்க வேண்டும் தாயுமானவா

ஆதியும்நீ  அந்தமும்நீ  ஆட்டுவிக்கும் சக்திநீ 
   அத்தனும்நீ அம்மையும்நீ ஆளுமெங்கள் அரசும்நீ
காதில்வேதம் பிள்ளைஓத கேட்டுக்கொண்ட சீடன்நீ 
   கருணைகொண்டு கண்திறக்க வேண்டும் தாயுமானவா

நஞ்சைஅள்ளி உண்டபாசம் தேவருக்கு மட்டுமோ 
   நற்றமிழில் சொக்கும் மனம் நால்வருக்கு மட்டுமோ 
கஞ்சனோநீ கருமியோநீ கனிவுஉனக் கில்லையோ 
   கருணைகொண்டு கண்திறக்க வேண்டும் தாயுமானவா

இடபவாக னத்திலேறி  இன்னருளைக் காட்டவே 
   இடதுபாக சக்தியோடு இறங்கிவருக ஈஸ்வரா 
கடவூர்தன்னில் காலால் எட்டி காலனை உதைத்தவா 
   கருணைகொண்டு கண்திறக்க வேண்டும் தாயுமானவா

மாலவனும் கண்டறியா மலரடிகள் கொண்டவா
   மமதைகொண்ட பிரம்மனுக்கு மாயம்காட்டி நின்றவா
காலடியும் மேல்முடியும் காட்டும் வரை விடுவேனோ ?
    கருணைகொண்டு கண்திறக்க வேண்டும் தாயுமானவா

முத்தமிழில் நான் தொடுத்த முத்துமாலை எத்தனை?
   மூச்சடக்கி முக்குளித்து முத்தெடுத்த தெத்தனை?
கத்துகின்ற கவிதையெல்லாம் காதில் எட்ட வில்லையோ?
   கருணைகொண்டு கண்திறக்க வேண்டும் தாயுமானவா

பாதகங்கள் கண்டதும் நான் பார்த்தொதுங்கிப் போகிறேன்.
   பாவம்மேதும் செய்ததில்லை பயத்துடனே வாழ்கிறேன்.
காதறுந்த ஊசிபோல கடைசிவரை வாழ்வேனோ ?
   கருணைகொண்டு கண்திறக்க வேண்டும் தாயுமானவா

உயிரிருக்கும் காலம்வரை உந்தன்நாமம் சொல்லுவேன்.
   உந்தன் நாமம் சொல்லிச் சொல்லி ஊழ்வினையை வெல்லுவேன் .  
கயிலைமலை காட்சிதனை காட்டும்வரை விடுவேனோ?
   கருணைகொண்டு கண்திறக்க வேண்டும் தாயுமானவா

உன்னைவிட்டு வேறுயாரை உரிமையோடு பாடுவேன்?
   உந்தன்கோயில் விட்டுஎந்த ஊரைநோக்கி ஓடுவேன்?
கன்னல்மொழி கவிதைபாடி காலடியில் வீழ்கிறேன் 
   கருணைகொண்டு கண்திறக்க வேண்டும் தாயுமானவா.

                                                                   
                                                                                                                                                                              -சிவகுமாரன்
              பாடியிருப்பவர் : பிரபாகரன் 

9 comments:

சிவகுமாரன் said...

இன்று மகா சிவராத்திரி.
எனையாளும் ஈசனின் அருள் எல்லோருக்கும் கிடைக்க உளமுருக வேண்டுகிறேன்.
ஓம் நமசிவாய.

திண்டுக்கல் தனபாலன் said...

ஒவ்வொரு வரிகளும் சிறப்பு...

ஓம் நமசிவாய நம...

sury Siva said...

இன்று மஹா சிவராத்திரி தினம்.
தாயுமானவர் திருத்தலமாம் திருச்சியில் வளர்ந்த என்னை
தாயும் ஆன தந்தை அவன் சிவன்
என்னைப் பணித்தது போல் கண்டேன்.

உங்கள் கவிதை கண்டு
உளம் உருகி நின்றேன்.
உங்களுடன் பாடினேன்.

இன்னும் சற்று நேரத்தில் பாடலுக்கான தொடர்பினைத் தருகிறேன்.

சுப்பு தாத்தா.

ஜீவி said...

புராணக் கதைப் பின்னலோடு கவிதை யாப்பது தான் உங்கள் பாணி; இதில் பெரும்பாலும் மாற்றமே இதுவரை இருந்ததில்லை.

என்னன்ன கதைகள் இந்தக் கவிதைக்கு என்று முன்னாலேயே வரிசைபடுத்திக் கொள்வீர்களா, இல்லை கவிதையாக்கத்திலேயே அந்தந்த கதை நினைவில் பதிந்து சந்த அழகுடன் அங்கங்கே வரிகளாய்ச் சுருண்டு தங்களைத் தாங்களே பதித்துக் கொள்ளுமா?

G.M Balasubramaniam said...


கதைகள் பல நல்ல செயல்களுக்கு விதை போன்றவை. உளம் உருகி மனம் கசிந்து எல்லாம் வல்லவனை வேண்டும்போது மனம் லேசாகி நிம்மதி அடைவதே அந்தச் செயலின் பலன். எல்லாம் பெற்று நலமாய் நீ வாழ்க.

சிவகுமாரன் said...

நன்றி D.D சார்

சிவகுமாரன் said...

நன்றி அய்யா. தாங்கள் பாடியதன் இணைப்பைத் தாருங்கள்

சிவகுமாரன் said...

வரிசைப்படுத்திக் கொண்டெல்லாம் எழுதுவதில்லை. வார்த்தைகளுக்காக காத்திருப்பதும் இல்லை. அவனருளாலே அவனைப் பாடுகிறேன். அவ்வளவே.

சிவகுமாரன் said...

நன்றி அய்யா