Tuesday, February 13, 2018

உன்னை விடுவேனோ ?


சிவாயநம ஓம் - ஓம்
  சிவாயநமஹ
சிவாயநம ஓம் - ஓம்
  சிவாயநமஹ  



சிவாய நமஓம் சிவாய நமவென
   சிந்தித் திருக்கின்றேன்
சிவாய நமஓம் சிவாய நமவென
   சொல்லித் திரிகின்றேன்
சிவாய நமவென சொல்லும் வேளை
  சோகம் மறக்கின்றேன்
சிவாய நமவென சொல்லிச் சொல்லி
   தேகம் வளர்க்கின்றேன்.                               (சிவாயநம ஓம்) 1 .


பிட்டுக்காக மண்ணைச் சுமந்தீர்
   பிரம்பால் அடிபட்டீர்
கொட்டில் உள்ளே நரியை அடைத்து
   குதிரை ஆக்கினீர்
கட்டுக் கட்டாய் விறகு சுமந்து
   கூடல் வலம் வந்தீர்
முட்டாள் அடியேன் முகத்தைக் காண
   முடியா தென்கின்றீர்.                                      (சிவாயநம ஓம்) 2.

ஏழைத் தருமி இன்னல் தீர்க்க 
   எழுதிக் கவி தந்தீர் 
வாழத் துடித்த மார்க்கண் டேயர்
   வாழ்நாள் கூட்டினீர் .
ஆழக் கடலில் அமிழப் போட்ட
   அடியார் உயிர் காத்தீர்
பாழும் உலகில் நான்படும் இன்னல் 
   பார்த்தும் ஏன் இருந்தீர்?                                  (சிவாயநம ஓம்) 3.   

தாயாய் வந்து தருணம் பார்த்து 
   பிள்ளை பெற வைத்தீர் .
நோயைத் தந்து நாவுக் கரசை 
   நீரே ஆட கொண்டீர் .
பேயாய் மாறும் பெருங்கதி கேட்ட 
   பெண்ணுக் கருள் செய்தீர்.
நாயேன் தனக்கு நல்லருள் செய்ய 
   நாளேன் பார்க்கின்றீர் ?                                    (சிவாயநம ஓம்)  4.
 
கண்ணில் இரத்தம் வடியக் காட்டி 
   வேடன் திறம் பார்த்தீர்.
சின்னப் பிள்ளைக் கறியைக் கேட்டு
   தொண்டர் தரம் பார்த்தீர் .
கண்ணைத் திறந்து கனலைக் கக்கி 
   கீரன் திடம் பார்த்தீர் 
என்ன சோதனை எனக்கு வைப்பீர் 
   எதனை எதிர் பார்த்தீர் ?                                     (சிவாயநம ஓம்) 5.


காமப் பெண்களின் சாபம் தீர்க்க
   கைவளை மணி விற்றீர்
மாமன் வேடம் புனைந்து வந்து
   மங்கையின் வழக்குரைத்தீர் .
தாமரைக் குளத்தில் பலகை எடுத்து
   சங்கத் தமிழ் வளர்த்தீர்
பாமரக் குளத்தில் மூழ்கிய என்னை
   மீட்டிட ஏன் மறந்தீர் ?                                           (சிவாயநம ஓம்) 6.


சிலந்தி யானை பன்றிக் கெல்லாம்
   சிவகதி தனைத் தந்தீர் .
பலத்த மீனை வளைத்துப் பிடித்து
   பரகதி பெறச் செய்தீர் .
தலத்தில் முளைத்த தருக்களைக் கூட
   சந்நிதி தனில் வைத்தீர் .
உளத்தில் இருத்தி உம்மைத் தொழுதேன்
   எமக்கு என்  செய்தீர் .                                             (சிவாயநம ஓம்) 7.

ஆல கால விடத்தை உண்டு 
   அமரர் தமைக் காத்தீர்.
சூலா யுதத்தால் மும்மல மறுத்து 
   சுடரைக் காட்டினீர்.
மூலா தாரக் கனலுக் குள்ளே 
   மூண்டு வெளி வந்தீர்,
காலால் உதைத்து கனலை எழுப்பிக் 
   காக்க வருவீரே ,                                                      (சிவாயநம ஓம்) 8 .

காசும் பணமும் பொன்னுக் மணியும் 
   கணக்கின்றி நான் வேண்டேன்.
பேசும் படியாய் பெரியோன் ஆகும் 
   பெருமை நான் வேண்டேன். 
தேசம் எங்கும் திருவருள் வேண்டித் 
    தேடித் திரிகின்றேன் 
 நேசம் கொண்டு நீ வருவாயென 
   நாளைக் கழிக்கின்றேன்.                                       (சிவாயநம ஓம்) 9 .

பிறவி எடுத்த நாள்முதல் உந்தன்
   பேர் சொல்லி வருகின்றேன்.
உறவும் நட்பும் உலகும் மறந்து 
   உன்னைத் தொடர்கின்றேன்
இரவும் பகலும் இன்னருள் வேண்டி 
   ஏங்கிக்  கிடக்கின்றேன் 
வருவீர் வருவீர் என எதிர்பார்த்து
   வாழ்ந்து கழிக்கின்றேன்.                                     (சிவாயநம ஓம்) 10. 

காசியும் கங்கையும் வந்து வணங்கி 
   கருமம் தொலைத்தறியேன்    
வாசி அடக்கி வாழ்ந்து சிறக்கும் 
   வழியும் நானறியேன்
வீசிய காற்றில் வீழும் சருகாய் 
   விதிவழி நடக்கின்றேன்
ஈசனே உந்தன் இணையடி பற்றி 
   எதையும் கடக்கின்றேன்                                     (சிவாயநம ஓம்) 11. 

காற்றாய் நிலமாய் கனலாய் புனலாய் 
   உன்னைக் காண்கின்றேன் 
நேற்றாய் இன்றாய் நாளாய் பொழுதாய்
   நின்னைத் தொழுகின்றேன் 
கூற்றுவன் தன்னை உதைத்த காலில் 
   கும்பிட்டு விழுகின்றேன் 
ஏற்றுக் கொள்வீர் என்றோர் நினைவில் 
   இன்னும் வாழ்கின்றேன்.                                    (சிவாயநம ஓம்) 12. 

போற்றி உம்மை  புகழ்ந்து பாடி
   பாதம் பணிகின்றேன் 
நீற்றைப் பூசி நின்னைத் தொழுது 
   நெஞ்சம் குளிர்கின்றேன்
ஆற்றுப் படுத்தி ஆட்கொள் வீரென
   ஆசைப் படுகின்றேன்
தோற்றுப் போவேன் எனவெண் ணாதீர்
   தொடர்ந்து நான் வருவேன்.                                (சிவாயநம ஓம்) 13. 

எல்லாத் துயரும் எனக்களித் தாலும்
    ஏற்றுக் கொள்கின்றேன்.
பொல்லா  நெருப்பில்  போட்டெடுத் தாலும் 
   பொறுமை காக்கின்றேன்.
சொல்லா திருந்து சோதித் தாலும்
   சுகமாய் பின் வருவேன் 
நில்லா உலகம் நின்று போனாலும் 
   நின்னை நான் மறவேன்.                                       (சிவாயநம ஓம்) 14. 

துன்பம் சோதனை தொடர்ந்து வந்தால் 
   துவண்டு போவேனோ ..?
இன்பத் தரிசனம் எட்டும் பயனை 
   இழக்க விடுவேனோ...?
அன்பைக் காட்டி அருளும் நாள் வரை 
   அயர்ந்து போவேனோ..? 
உன்பதம் பற்றி உருகிக் கிடப்பேன் 
   உன்னை விடுவேனோ..?                                      (சிவாயநம ஓம்) 15. 

                                                                                                              
                                                                                               -சிவகுமாரன்
பாடலை பாடுபவர் - பிரபாகரன்

29 comments:

Rathesh said...

உள்ளத்தை உருக்கும் கவிதை.
திருவாசகம், திருவருட்பா படிக்கும் போது ஏற்படும் உணர்வு ஏற்படுகிறது. மெய் சிலிர்க்க வைக்கிறது வரிகள்.
பிரபாகரன் குரல் கவிதைக்கு மெருகூட்டுகிறது. அருமை.

thendralsaravanan said...

என் சொல்வேன்!மொழி நயம் வியக்க வைக்கிறது!
வாழ்க வளமுடனும் நலமுடனும்!

மோகன்ஜி said...

ஆஹா! என்ன மொழி? என்ன வளம்? அற்புதமாய் இருக்கிறது பாமாலை. நெக்குருகி படித்தேன்..சிவா! நீ ஆசீர்வதிக்கப் பட்டவன்.

வானவில்லில் சிரிக்கும் கந்த சிவத்தை நீ இன்னுமேன் பார்க்கவில்லை?

G.M Balasubramaniam said...

அன்பின் சிவகுமாரா, நீ அழகொழுக எழுதும்போது, உன்னை அந்த சிவன் ஆசீர்வதிக்காமல் இருபபது முடியுமா.?ஏட்டிலும் பாட்டிலும் நீ உருகுவதைக் காணும்போது நீ போகும் பாதை குறித்து மனம் என்னென்னவோ எண்ணுகிறது. இந்த இகலோகத்துக்கும் நீ வா. எங்கள் எல்லோரையும் கண்டுகொள்

இராஜராஜேஸ்வரி said...

சிவனின் திருவிளையாடல்களை கரும்புச் சாறாய் தித்திக்கத் தித்திக்கத் தந்திருக்கும் தங்கள் திறம் வியப்பின் எல்லையில் தங்க வைத்திருக்கிறது.
தங்கத் தமிழ் தந்த தங்களுக்குப் பாராட்டுக்கள்

அப்பாதுரை said...

நல்ல சந்தம். மொழி உமது கையில் சாந்தாகியிருக்கிறது.

RVS said...

//கண்ணில் இரத்தம் வடியக் காட்டி
வேடன் திறம் பார்த்தீர்.
சின்னப் பிள்ளைக் கறியைக் கேட்டு
தொண்டர் தரம் பார்த்தீர் .
கண்ணைத் திறந்து கனலைக் கக்கி
கீரன் திடம் பார்த்தீர்
என்ன சோதனை எனக்கு வைப்பீர்
எதனை எதிர் பார்த்தீர் ? //

இது மிகவும் அசத்தலான இடம் சிவா.
அவர் அருள் பெற்ற பிள்ளை என்பதை பெயரில் வைத்திருக்கிறீர்!
தமிழ் ஆனந்த தாண்டவமாடுது அருட்கவியில்... வாழ்க. வாழ்த்துக்கள். ;-))

திகழ் said...

அழகான வரிகள்

தமிழின் அழகு தங்களின் சொல்லில்

வாழ்த்துகள்

வல்லிசிம்ஹன் said...

Dear Sivakumaran,
I could not reply back in Thamizh. we are here in Dubai.
after reading yr KAVITHAI on NAM NAMASIVAAYAA, i am sure all our problems will come to an end.
The paamaalai is as Sweet as our Sivam and as beautiful as Him.
thank you ma. pl excuse ,e for commemting in english.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

சிவனுக்கு நீர் போட்ட பாமாலை, படித்து முடித்தும் மணம் கமழ்கிறது..
ஸ்ரீரங்கத்து வாருங்கள்..கம்பன் அரங்கேற்றிய மண்டபத்தில் தங்கள் கவிதைகளை அரங்கேற்றலாம்...
அத்தனை தகுதி தங்கள் எழுத்திற்கு இருக்கிறது!
REALLY A GOOD WORK..

Lalitha Mittal said...

வார்த்தைகளால் வருணிக்க இயலாத அனுபவம் கிடைத்தது உன் கவிதையைப் படித்ததும்!நன்றி!

vivek said...

உருகிஉருகி எழுதிய சிவாவிக்கும் உருகிஉருகி பாடிய பிரபுவுக்கும் சிவனின் அருள் கண்டிப்பாக கிடைக்கும். சூப்பர்.

geetha santhanam said...

நாயன்மார்களின் கதைகளைச் சுருக்கமாக எடுத்துக்காட்டி நயம்பட மனமுருகி எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். உங்கள் தமிழைக் கேட்கவேனும் சிவபெருமான் வரமாட்டாரா என்ன.

ஜீவி said...
This comment has been removed by the author.
ஜீவி said...

//ஏழைத் தருமி இன்னல் தீர்க்க
எழுதிக் கவி தந்தீர்..//

இந்தக் கவிதையும் தங்கள் உள்ளத்தில் உருவாக உருக்கொடுத்தவனும் அவன் தானே.. எழுத வைப்பவனும் அவனே, எழுதும் பொருளாவதும் அவனே. அடுத்து, எழுதுபவனும் அவனே என்று உணர்கின்ற னேரத்து, எல்லாமும் அவனேயாகி தாயினில் சேயைப் பார்ப்போம், சேயினில் தாயைப் பார்ப்போம் என்றாகிப் போகும். சகல உயிர்களிடத்து செலுத்தும் அன்பே சிவமாகிப் போகும்.

அறிவன்#11802717200764379909 said...

நல்ல கவி ஆக்கம்.

புதுக் கவிதைகளைக் காட்டிலும்,மரபின் வாசனை இருக்கும் கவிதைகளுக்கு நான் எப்போதும் ஓ போடுவது வழக்கம்.

உங்களது கவிதைகள் தாயுமானவரின் அருட் புலம்பல் வகைக் கவிதையாக கருத்துகளில் தெரிகிறது(ஆனால் தாயுமானவரின் பா வகை வேறு..)

இறைவனை நினைந்து நினைந்து நொந்து சிந்திக்கின்றவர்களுக்கு வீடு பேறு நிச்சயம் சித்திக்கிறது என்பது நம்பிக்கை.

வீடு பேறு கிடைக்கிறதோ இல்லையோ,உலகியல் வாழ்வில் எந்த சூழலிலும் அவர்களது வாழ்க்கைப் படகு சிக்கலில்லாமல் போகும் என்பது எனது திடமான எண்ணம்.

சிற்சில் இடங்களில் சில சிறிய மாற்றங்கள் அழகை மேலும் அழகு செய்யும் என்பது எனது எண்ணம்.(தவறாக எண்ண மாட்டீர்கள் என்ற நம்பிக்கையில்!)

நன்றி. பதிவுக்கு.

||வாழத் துடித்த மார்க்கண் டேயர்
வாழ்நாள் கூட்டினீர் .||

வாழ்நாள் நீட்டித் தீர்

||என்ன சோதனை எனக்கு வைப்பீர்
எதனை எதிர் பார்த்தீர் ? ||
எதனை எதிர் பார்ப்பீர்?

||உளத்தில் இருத்தி உம்மைத் தொழுதேன்
எமக்கு ஏன் செய்தீர் .||
எமக்கு என் செய்வீர்?

அப்பாவி தங்கமணி said...

அழகான வார்த்தைகள்... மனதை கொள்ளை கொண்ட படங்களுடன்...நன்றி

வை.கோபாலகிருஷ்ணன் said...

சிவனின் திருவிளையாடல்களை அழகான தங்கத் தமிழில் தந்துள்ளத் தங்களுக்குப் பாராட்டுக்கள்

Rathnavel said...

வாழ்த்துக்கள்.
நல்ல இளம் வயதில் பக்திக்கும் தமிழுக்கும் நல்ல பணி புரிகிறீர்கள்.
உங்களது மற்ற பதிவுகளையும் படித்து விட்டு ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக பின்னூட்டம் எழுதுகிறேன்.
தங்களது பணி தொடரட்டும்.
நன்றி.

meenakshi said...

மனதை உருக வைக்கிறது பாடல் வரிகள். வாழ்த்துக்கள்!

இராஜராஜேஸ்வரி said...

சிவாய நம ஓம்..

சிவகுமாரன் said...

நன்றி ராதேஷ், தென்றல் & மோகன் அண்ணா

சிவகுமாரன் said...

GM.பாலசுப்ரமணியம் சொன்னது
\\அன்பின் சிவகுமாரா, நீ அழகொழுக எழுதும்போது, உன்னை அந்த சிவன் ஆசீர்வதிக்காமல் இருபபது முடியுமா.?ஏட்டிலும் பாட்டிலும் நீ உருகுவதைக் காணும்போது நீ போகும் பாதை குறித்து மனம் என்னென்னவோ எண்ணுகிறது. இந்த இகலோகத்துக்கும் நீ வா. எங்கள் எல்லோரையும் கண்டுகொள்//

நன்றி GMB சார். நான் புள்ளைக்குட்டிக்காரன். . இகலோகம் விட்டெல்லாம் போக முடியாது. ஆனால் கடமைகள் சீக்கிரம் முடிந்து சிவனே கதி என்று இருக்க ஆசைப்படுகிறது மனம். வணங்கவைப்பதும் பாடவைப்பதும் அவன்தான்.

சிவகுமாரன் said...

நன்றி இராஜராஜேஸ்வரி மேடம், அப்பாஜி, RVS , திகழ், & வல்லிசிம்ஹன் ,
நன்றிகள் பல.

சிவகுமாரன் said...

நன்றி ராமமூர்த்தி சார். தங்கள் பாராட்டுக்கும் , ஸ்ரீரங்கம் அழத்த்ததர்க்கும் மிக்க நன்றிகள். தங்கள் அரங்கனை வேண்டியும் ஒரு பாமாலை இயற்றியிருக்கிறேன். ஆனால் அதை எழுதி முடித்து, இன்னும் ஸ்ரீரங்கம் வரவில்லை. வரவேண்டும். அதற்கு அவனின் வரம்வேண்டும். வந்தால் தங்களை சந்திக்கலாமா ?

சிவகுமாரன் said...

நன்றி லலிதா மேடம், விவேக், கீதா மேடம்.
மிக்க நன்றி

சிவகுமாரன் said...

ஜீவி சொன்னது.
\\இந்தக் கவிதையும் தங்கள் உள்ளத்தில் உருவாக உருக்கொடுத்தவனும் அவன் தானே.. எழுத வைப்பவனும் அவனே, எழுதும் பொருளாவதும் அவனே. அடுத்து, எழுதுபவனும் அவனே என்று உணர்கின்ற னேரத்து, எல்லாமும் அவனேயாகி தாயினில் சேயைப் பார்ப்போம், சேயினில் தாயைப் பார்ப்போம் என்றாகிப் போகும். சகல உயிர்களிடத்து செலுத்தும் அன்பே சிவமாகிப் போகும்.//

ஆமாம் ஜீவி சார். அவனருளாலே அவன்தாள் வணங்கி... என்பதுதான். இந்தக் கவிதை நன்றாக இருக்கிறது என்றால், சிவம் நன்றாக இருக்கிறது என்று தான் பொருள் .
தங்களைப் போன்றோரின் வருகைக்கும் அவனே தான் காரணம்.

சிவகுமாரன் said...

அறிவன் சொன்னது.\\\\சிற்சில் இடங்களில் சில சிறிய மாற்றங்கள் அழகை மேலும் அழகு செய்யும் என்பது எனது எண்ணம்.(தவறாக எண்ண மாட்டீர்கள் என்ற நம்பிக்கையில்!)///

நன்றி அய்யா.தவறாக நினைப்பதா ? உங்கள் வருகையும் விமர்சனமும் அவனருளால் எனக்குக் கிடைத்த பேறாக நினைக்கிறேன்.
தங்களின் கருத்துக்களுக்கு மிக்க நன்றி. இந்தக் கவிதை 2001 ஆம் ஆண்டு. எழுதியது. "வாழ்ந்து போதீரே" என்று சுந்தரர் பாடியது போல்தான் . ஒரு கோபத்தில் , உரிமையில் "எமக்கு என் செய்தீர்" என்று பாடினேன். அவனைத் தவிர வேறு யாரை கோபிக்க முடியும் ?

சிவகுமாரன் said...

நன்றி அப்பாவி தங்கமணி, வை.கோ. சார், மீனாட்சி மேடம் ராஜேஸ்வரி மேடம் & ரத்னவேல் அய்யா
நன்றி நன்றி நன்றி