Tuesday, March 15, 2016

ஜோதி கண்டேன்
















ஒம்நமசி வாயவென
  உள்ளம் உயிர் உள்ளிருந்து
நாமணக்க நானுரைக்கும் மந்திரம் -அந்த
சோமனையே கட்டிவரும் எந்திரம்.

பித்தனவன் பேரைச் சொல்லி
  மத்த சுகம் தூரத் தள்ளி
நித்தம்நித்தம் நான் படிக்கும் பாட்டு - என்
அத்தனவன் இன்னருளைக் கேட்டு.

நானுரைக்கும் நூறு கவி
  நாயகனின்  காதில் சென்று
தேனொழுகச் செய்து தித்திக்காதோ -என்
கானம் தவிர்த்தால் அதுவும் காதோ?

ஆதிசக்தி அம்பிகைக்கு 
  அண்டம் புவி ஆளச் சொல்லி 
பாதி உடல் தந்தவனைப் போற்றி - ஒரு 
ஜோதி கண்டேன் உள்ளமதில் ஏற்றி. 

தஞ்சமென அப்பனவன் 
  தாள்பிடித்து நான் தொழுது 
அஞ்செழுத்து மந்திரத்தை ஓதி - என் 
நெஞ்சுக்குள்ளே தீவளர்த்தேன் ஊதி.

உள்ளுக்குள்ளே மூண்டெழுந்து 
  நின்றெரியும் ஜோதியினை 
சொல்லுக்குள்ளே கொண்டுவரக் கூடுமோ?- அவன் 
வல்லமையை நாவெழுந்து பாடுமோ?

காலடியும் மேல்முடியும் 
  கண்டுகொள்ள போட்டியிட்டு 
மாலவனும் பிரம்மனுமே தோற்க -ஒரு 
காலம் வருமோ எனையும் ஏற்க ?

வேதங்களில் நான்குமாகி 
  பூதங்களில் ஐந்துமாகி 
ஆதாரங்கள் ஆறின் வழி தெரிவான் - அவன் 
பாதாளமும் வானுலகும் விரிவான். 

இச்சை கொண்ட தேவரெல்லாம் 

  இன்னமுதம் அள்ளித்தின்ன 
நச்சை மட்டும் தானே உண்ட சாமி - இட்ட 
பிச்சையிலே வாழுதிந்த பூமி. 

ஆலமுண்ட கண்டனிடம் 
  பாலகனும் ஓடிவந்து 
ஓலமிடக் கண்டு உள்ளம் பதைத்தான் - அவன் 
காலனையே காலால் எட்டி உதைத்தான். 

கண்ணப்பனின் கண்பறித்து 

  சின்னப்பிள்ளை ஊன் அரிந்து 
என்ன பயன் கண்டு கொண்டான் அறியேன் - அந்த 
மன்னனிடம் மாட்டிக் கொண்டேன் சிறியேன்.

பிட்டுக்கென மண்சுமந்து 
  பிரம்படியால் புண்சுமந்து 
கட்டிக்கொண்ட புண்ணியங்கள் என்னவோ? - அவன் 
பட்டதெல்லாம் தன்னடியார்க் கல்லவோ ! 

செட்டிப் பெண்ணின் தாயுமாகி 

  பட்டினத்தார் சேயுமாகி 
இட்டமுடன் கொண்ட வேடம் கொஞ்சமோ - இன்னும் 
திட்டமிடும் மேடை எந்தன் நெஞ்சமோ?

இன்பம் வரும் வேளையிலும் 
  துன்பம் வரும் வேளையிலும் 
ஜம்புலிங்கம் பேரைச் சொல்லித் துதிப்பேன் - பொன் 
அம்பலத்திலே மனதைப் பதிப்பேன்.

நெற்றிவிழி யால்மதனைச் 

  சுட்டவனின் பாதமலர் 
பற்றிக்கொண்டு நான்துதித்துக் கிடப்பேன்- அவன் 
உற்ற துணையால் விதியைக் கடப்பேன்.

நெட்டநெடு மாமலையாய் 
  நின்றவனின் பாதமண்ணை 
தொட்டெனது பாவங்களைத் தீர்ப்பேன்-மலை 
சுற்றிவந்து புண்ணியங்கள் சேர்ப்பேன்.

உண்ணாமுலை தேவியோடு 

  ஓடிவந்து காட்சிதர 
அண்ணாமலை தாள்வணங்கி வருவேன்- தவம் 
பண்ணாமலே கேட்டவரம் பெறுவேன்.

கோளனைத்தும் கூடித் தொழும் 
   கூத்தனவன் கால்பிடித்து 
காலனையும் நானெதிர்த்து வெல்வேன் - வாழ் 
நாளனைத்தும் அஞ்செழுத்தைச் சொல்வேன்.

நீற்றை  அள்ளிப் பூசிக்கொண்டு 

  நேசன்புகழ் பேசிக்கொண்டு 
போற்றுகின்றேன் அய்யனவன் பேரை - மனதில் 
ஏற்றிக்கொண்டு ஓட்டுகின்றேன் தேரை.

பாடுபட்டுக் காத்த உயிர் 
  கூடுவிட்டு ஓடும்வரை 
ஆடுகின்ற ஆட்டங்களும் எத்தனை - பதறி 
தேடுகின்றேன் ஆட்டுவிக்கும் பித்தனை. 


சிவகுமாரன் 
 
  பிரபாகரனின், ஊனை உருக்கும்  குரலில் இறையனுபவம் பெறுங்கள்

சமர்ப்பணம் : 
அருட்கவி வலைத்தளத்திற்கு தொடர்ந்து ஆதரவு  அளித்து வந்த, இறைத்தொண்டர் அமரர் : இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு  

10 comments:

sury siva said...

அருட்கவி சிவகுமாரன்
அப்பனவன் தஞ்சமென
ஐந்தெழுத்து மந்திரத்தை
ஓதி நிற்கும் காட்சிதனை
பாடி பாடி மகிழ்வேன் யானும்
சுப்பு ரத்தினம்
www.subbuthatha.blogspot.in

G.M Balasubramaniam said...

அன்பு சிவகுமாரா, தேன் இனிக்கிறது என்று சொல்வதுபோலாகும் , உன் பா இனிக்கிறது என்று கூறுவது. அருட்கவி உன்னைப்போல் இருப்பவர் மயில் பற்றிப் பாடினால் சுவைக்கும் என்ற நம்பிக்கையில் என் பதிவுக்கு அழைக்கிறேன். கவிதை எழுத வாருங்கள். நன்றி. வாழ்த்துக்கள்.

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை... சிறப்பான வரிகள்... வாழ்த்துக்கள்... நன்றி...

சிவகுமாரன் said...

நன்றி சுப்பு அய்யா.பாடலின் இணைப்பைத் தாருங்கள்

நன்றி GMB சார்.

நன்றி தனபால்,

அப்பாதுரை said...

சமீப இறையோம்பல் கவிதைகளில் தொடர்ந்து உணர்ச்சிப் பிழம்பாகக் கொட்டியிருப்பதைக் கவனிக்க முடிகிறது.

//என்
கானம் தவிர்த்தால் அதுவும் காதோ?
ஆகா!

சந்தத்தின் flow பாடுகிறவரையும் சற்றுத் தடுமாற வைத்திருக்கிறது. சந்தத்துக்குச் சொந்தக்காரர் நீங்கள் தான். ஒவ்வொரு வரியையும் ரசித்தேன்.

இராஜராஜேஸ்வரி said...

பாடுபட்டுக் காத்த உயிர்
கூடுவிட்டு ஓடும்வரை
ஆடுகின்ற ஆட்டங்களும் எத்தனை - பதறி
தேடுகின்றேன் ஆட்டுவிக்கும் பித்தனை.

திரும்பத்திரும்ப படித்து பாடி ரசித்த அத்தனை வரிகளும் அருமை .. பாராட்டுக்கள்..

ஊமைக்கனவுகள் said...

ஜோதி கேட்டேன் அண்ணா.

இனிமை.

தொடர்கிறேன்.

நன்றி

ஏகாந்தன் ! said...


இன்றுதான் வர நேர்ந்தது உங்கள் ஆன்மீகப் பக்கத்துக்கு. நீங்களோ குமாரன். அப்பனைத் தேடுவதில் ஆச்சரியமென்ன இருக்கிறது? தொடர்ந்து செல்லுங்கள்.

Nanjil Siva said...

வடித்து வைத்த கவிகள் அனைத்தும் அருமை
இனி தெய்வ அருள் கிட்டிவிடும் மறுமை - கவியே
நீ செந்தமிழுக்கு கிடைத்த பெருமை !!! >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

Ravi said...

Om namashivaya அருமை சூப்பர்