Friday, November 2, 2012

நாமபுரீஸ்வரா!


ஆதி அந்தமில் லாத பரம்பொருள் ஆன பேரூர் ஆண்டவா!
   அறம் வளர்த்திடும் நாயகியுடன் ஆடும் ஆனந்த தாண்டவா!
பாதி மதி நதி போது மணி சடை பாம்பு மாலையும் பூண்டவா!
  பாச மிகுதியால் பார்வதி தனை பாதி தேகத்தில் கொண்டவா!
ஜோதி வடிவமாய் தீபரூபமாய் தோற்றம் காட்டி நின்றவா!
  தூய நெஞ்சிலே தீபம் ஏற்றுவோர் சோதனைகளைக் கொன்றவா!
ஆதி நாள்முதல் அறம் வளர்த்திடும் அழகு ஆலங் குடிதனில்    
  அன்னை தர்மசம் வர்த்தினி யுடன் அருள்தரும் நாமபுரீஸ்வரா!

நீறணிந்தவர் நேசம் மிக்கவர் நெஞ்சில் நின்றிடும் நற்றவா!
  நீசர் வஞ்சகர் நேசமற்றவர் நெஞ்சில் தீயினைப் பற்றவா! 
ஏறுமயிலினில் ஏறும்  முருகனை இதயம் மகிழ்ந்திடப் பெற்றவா!
  இளையனாயினும் மகனை குருவென ஏற்று மந்திரம் கற்றவா!
கூறும் அடியவர் குறைகள் தீர்த்திடும் கொற்றவா, எனை உற்றவா!
  கூற்றை உதைத்த உன் பாதமிரண்டையும் காட்டி என்வினை செற்றவா!
ஆறு அம்புலி ஓடிப் பாய்ந்திடும் அழகு ஆலங்குடி தனில்
  அன்னை தர்மசம் வர்த்தினி யுடன் அருள்தரும் நாமபுரீஸ்வரா!

தஞ்சமென்று உன் பாதம் தேடிய மார்க்கண்டேயனைக் காத்தவா!
  தருமி யென்னும் ஓர் ஏழைப் புலவனின் வறுமை நீக்க கவி யாத்தவா !
நஞ்சைக் கண்டதும் அஞ்சி ஓடிய தேவர் வாழ நஞ்சுண்டவா!
  நாயன்மார்களின் அன்பை சோதிக்க வேடம் ஆயிரம் பூண்டவா!
கொஞ்சு தமிழ்க்கவி கூறக் கேட்டதும் கோயில்வாசல் திறந்தவா!
   கெஞ்சும் என்கவி கேட்டு என்மனக் கோயில் வாசல் திறந்து வா!
அஞ்செழுத்தையே நெஞ்சில் ஏற்றிடும் அழகு ஆலங்குடி தனில் 
   அன்னை தர்மசம் வர்த்தினி யுடன் அருள்தரும் நாமபுரீஸ்வரா!

வானை நிகர்த்தவன் வையம் நிறைந்தவன் வானவர் ஏத்தும் மறையவா!
  வாட்டும் நோய்களும் வறுமைப் பேய்களும் வையம் தன்னிலே மறையவா!
மானை மழுவினை ஏந்தும் மன்னவா மண்ணில் உன்முகம் காட்டவா!
  மாலும் தேடிய மலரடி தனை காட்டி என்துயர் ஓட்ட வா!
தேனை நிகர்த்ததாம் செந்தமிழ் தனில் சிந்தை மகிழ்ந்திடும் இறையவா!
  தேவி தர்மசம் வர்த்தினியுடன்  தீந்தமிழ் கேட்டு இசைய வா !
ஆனை கட்டியே போரடித்த ஊர் அழகு ஆலங்குடி தனில்
  அன்னை தர்மசம் வர்த்தினி யுடன் அருள்தரும் நாமபுரீஸ்வரா!


ஆலின் கீழமர்ந் தேழுலகையும் ஆளும் தட்சிணா மூர்த்தி நீ.
  அமரர் முக்தி நீ! அணுவின் சக்தி நீ! அளவிலாத ஓர் கீர்த்தி நீ!
மாலின் தங்கையை மணம் முடித்தவன், மங்கை சக்தியின் பாகன் நீ!
  மாறன் அம்புகள் மேல் விழுந்திட மாறுகொண் டெரித்த சூரன் நீ!
வேலின் சக்தியால் வினை யறுத்திடும் வேலனைப் பெற்ற தந்தை நீ!
  வேழ முகத்தொரு பிள்ளை வடிவினில் வெற்றி தந்திடும் விந்தை நீ!
ஆலின் வேரென அருள் தழைத்திடும் அழகு ஆலங்குடி தனில் 
  அன்னை தர்மசம் வர்த்தினி யுடன் அருள்தரும் நாமபுரீஸ்வரா!

நீண்ட வானமும் நீரும் நிலங்களும் நெருப்பும் காற்றும் நீயன்றோ!
  நேற்றும் நாளையும் இன்றும் உலகினில் நிகழும் மாற்றம் நீயன்றோ!
மாண்டு மடிவதும் மீண்டும் பிறப்பதும் மாயன் உந்தன் செயலன்றோ!
  மாறும் உலகினில் மாற்றம் யாவுமே மாறச் செய்வதும் நீயன்றோ!
வேண்டும் வரங்களை வேண்டும் முன்னரே விரும்பித் தருவதும் நீயன்றோ!
  வேண்டும் அடியவர் வேண்டும்  வரங்களை வேண்டச்  செய்வதும்  நீயன்றோ!
ஆண்டு தோறும் உன் அருளைப் பாடிடும் அழகு ஆலங்குடி தனில் 
  அன்னை தர்மசம் வர்த்தினி யுடன் அருள்தரும் நாமபுரீஸ்வரா!

-சிவகுமாரன் 



சுப்புத் தாத்தா பாடுவைதையும் கேளுங்கள் 



9 comments:

சிவகுமாரன் said...

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி என்னும் எங்கள் ஊர் முற்காலத்தில் நாமபுரி என்றும் பேரூர் என்றும் அழைக்கப்பட்டது. அங்கு கோயில் கொண்டுள்ள அறம் வளர்த்த நாயகி உடனாய பேரூர் ஆண்டவர் (அல்லது) தர்மசம்வர்த்தினி சமேத நாமபுரீஸ்வரர் பற்றிய இந்தப் பாடல் சுந்தரரின் " நற்றவா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே" என்னும் தேவாரப் பாடலைப் போல எழுத முயற்சித்து (புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்டதைப் போல) எழுதியது.
என் ஊர் பெயரைக் கேட்டதும் நண்பர்கள் குருஸ்தலமா என்று கேட்பார்கள். நானும் ஆமாம் என்பேன். என் கவிதைக் குரு வாழ்ந்த தலம் . என் ஆன்மீகக் குரு "அரசா"ளும் தலம் - எனக்கு குருஸ்தலம் தானே.
ஓம் நமசிவாய

திண்டுக்கல் தனபாலன் said...

பரவசப்படுத்திய வரிகள்... வாழ்த்துக்கள்...

நீங்கள் சொல்வது போல் உங்கள் ஊர் பேர் சொன்னால் முதலில் எல்லோருக்கும் ஞாபகம் வருவது பிரகஸ்பதி தான்... தர்மசம்வர்த்தினி சமேத நாமபுரீஸ்வரர் பற்றிய பாடல் மிகவும் அருமை...

நன்றி...

நிலாமகள் said...

ம‌ன‌ம் தோய்ந்த‌ துதிப் பாட‌ல் ப‌ர‌வ‌ச‌மாய் ...நாம‌புரீஸ்வ‌ர‌ர் ம‌கிமை காட்டுமாறு. எத்த‌னையெத்த‌னை நாம‌ம் அவ‌ருக்கு! அத்த‌னையும் அமுது நாவுக்கு.

மோகன்ஜி said...

அன்பு சிவா! நதியின் பிரவாகமாய் கதிக்கும் கவிதை வரிகள். நயமான பாடல் கிளர்த்தும் மனஓருமை. பாடலை சேமித்துக் கொண்டேன் அளப்பரிய சிவம் உனக்கு அருளாய் அளக்கட்டும்.

அப்பாதுரை said...

பாட்டைக் கேட் டபின்னரே சந்தம் புலப்படுகிறது. ரசித்தேன்.

அப்பாதுரை said...

நாமபுரீஸ்வரர் எந்த ஊர் கோவில்? பெயர்க்காரணம் தெரியுமா?

sury siva said...

அன்புள்ளம் கொண்டு அறம் வளர்த்த நாயகி அன்னை தர்ம சம்வர்தினி உடன் அருள் தரும் நாம புரீஸ்வறனைப் பாடவும் அவனது அருள் வேண்டும் அல்லவா ? அவன் பாடு என சொல்கையிலே தானே நான் பாட இயலும் ? இன்று தான் இனிதே இயன்றது. ஒரு வகையாக பாடியிருக்கிறேன்.
யு ட்யூபில் இட்டு தங்களுக்கும் மடல் அனுப்புகிறேன். உங்கள் அனுமதி இருந்தால் எனது ஆன்மீக வலைதனிலும் இடுவேன்.
சுப்பு ரத்தினம்.

சிவகுமாரன் said...

நன்றி தனபால், நன்றி நிலா மேடம். நன்றி மோகன் அண்ணா, நன்றி சுப்பு அய்யா.
நன்றி அப்பாஜி. நாமபுரீஸ்வரர் எங்கள் ஊரில் குடி கொண்டிருப்பாவர். ஆலங்குடி என்னும் எங்கள் ஊரின் பழைய பெயர் பேரூர் . வடமொழியில் நாமபுரி - கல்வெட்டில் உள்ளது. நாமபுரியில் குடிகொண்டதாலும், பல்வேறு நாமங்களைக் கொண்டிருப்பதாலும் நாமபுரீஸ்வரர்.
மேலும் நெற்றியில் நாமத்தைக் கொண்ட நாகத்தை கழுத்தில் சூடியவர் - அதனால் நாமபுரீஸ்வரர்- அந்த நாகம் கக்கிய ஆலம்உண்டவர் - அதனால் ஆலங்குடியான்.

Nanjil Siva said...

புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்டதைப் போல ... ?// பாடல் மிக நன்றாகவே உள்ளது. >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<