Tuesday, August 28, 2012

குறைபொறுத் தருள்வாய் அப்பா.





நல்லதே நடக்க வேண்டும் நல்லதே நடக்க வேண்டும் 
அல்லவை எல்லாம் நீங்கி நல்லதே நடக்க வேண்டும் 

சபரிமலை வாழும் எங்கள் சாஸ்தாவே சரணமய்யா
  சன்னதி தேடிவந்தோம் சங்கடம் தீருமய்யா 
அபயமென  வந்து நின்றோம் அல்லல்கள் சொல்ல வந்தோம்
  ஐயப்பா என்ற சொல்லில் அகிலமே மறந்தோமய்யா 
தபசிகள் போல நாங்கள் தவக்கோலம் பூண்டோமய்யா
  தவறுகள் ஏதும் கண்டால்  தயைகூர்ந்து பொறுப்பாய் அய்யா
சுபமான வாழ்வைக் கேட்டோம் துயரங்கள் தீரக் கேட்டோம்
   சுமைகளைக் குறைப்பாய் எங்கள் சுவாமியே சரணம் அய்யா.

அய்யப்பா ! அய்யா! அப்பா ! அபயமென வந்தோம் அப்பா
  அனுதினம் வேண்டுகின்றோம் அருளினால் என்ன தப்பா?
பொய்யப்பா வாழ்க்கையெல்லாம் புரட்டப்பா காண்பதெல்லாம்
  புரியாமல் தவித்தேன் நீயும் புதிர்காட்ட வேண்டாமப்பா
மெய்யப்பா! எந்தன் பக்தி மிகையில்லை மெய்தானப்பா
 மேன்மேலும் சோதித் தென்னை மிரட்டினால் தாங்காதப்பா
செய்யப்பா நன்மை ஏதும்! சோதித்த தெல்லாம் போதும்.
  சிறியவன் வாழ்வைக் கொஞ்சம் சீராக்கு அய்யா அப்பா !

மந்திரம் செபித்ததில்லை மாதவம் செய்ததில்லை
  மாலையணி  காலமன்றி  மனமுனை   நினைத்ததில்லை
சிந்தையில் சிவனேயன்றி சிறுதெய்வம் யாருமில்லை
  சிவநாமம் அன்றி ஏதும் செபித்திடும் பழக்கமில்லை
எந்தையாம் சிவனின் பிள்ளை என்பதால் நீயும் சிவமே
  என்று நான் உன்னைத் தேடி இருமுடி தாங்கி வந்தேன்
குந்தி நீ அமர்ந்திருக்கும் கோலத்தைக் கண்ட பின்னே
  குருவெனப் புரிந்து கொண்டேன், குறைபொறுத் தருள்வாய் அப்பா.                

அப்பனாம் சிவனை நானும் அனுதினம் வேண்டி வந்தேன்-
   அன்னையாம் மாலனுக்கும் அருந்தமிழ் பாடிவைத்தேன்
தொப்பையார் அண்ணன் பாதம் தொடர்ந்துநான்  தொழுது வந்தேன்
   தோகைமயில் சோதரன் கேட்க தேன்தமிழ் விருந்து வைத்தேன்
முப்போதும் இறையைப் பாடும் முனைப்போடு வாழுகின்றேன்
  முத்தமிழ் கேட்ட இறையின் முடிவென்ன நானும் அறியேன்
இப்போது உன்னைப் பாடி இருமுடி தாங்கி வந்தேன்.
  எல்லோரும் போல நீயும் இருப்பாயோ அறியேன் அய்யா.

இருமுடி தலையில் தாங்கி  இதயத்தில் உன்னை ஏந்தி
  எழில்முகம் காணவேண்டி  ஏங்கியே வந்தோமய்யா
திருவடி தன்னைக் கண்டால் தீவினை போகுமென்றே
  தினமுந்தன் நாமம் சொல்லி தேடியே வந்தோமய்யா
ஒருமுறை வந்தால் போதும் உள்ளத்தில் நீபுகுந்து
  உடலோயும் காலம் வரையில் உனைத்தேட வைப்பாய் அன்றோ?
கருணையின் வடிவே எங்கள் கவலையின் முடிவே உந்தன்
  கழலடி போற்றுகின்றோம் காத்திட வருவாய் அய்யா.

அரியினை வணங்குவோர்கள் அரன்பதம் நினைப்பதில்லை
  அரன்புகழ் பாடுவோர்கள் அரியினைத் துதிப்பதில்லை 
அரிதாக  அவனிதன்னில் அவதாரம் கொண்டநீயோ
  அரிஹர  மைந்தனாகி அதிசயம் காட்டுகின்றாய் 
பரிவோடு காக்க வந்த பரந்தாமன் அம்சம் நீயே.
  பகையினை அழிக்க வந்த பரமசிவன்  வம்சம் நீயே. 
சரிவரப் புரிந்து கொண்டால் சமயத்தில் பேதம் இல்லை 
  சபரியில் வந்து நின்றால் சமயத்திற் கேது எல்லை?

புலிப்பாலைக் கறந்த உந்தன் பொல்லாத வீரம் வேண்டும்.
  பொன்பொருள்  துறந்து சென்ற பொறுமையின் ஈரம் வேண்டும்.
கலிகால   பாவம்  நெஞ்சைக் கவராத நிலையும் வேண்டும்
  கடல்போலும் செல்வம் கண்டும் கனக்காத தலையும் வேண்டும்
பொலிவான தேகம் வேண்டும் புயல் போலும் வேகம் வேண்டும்
  பொய்க்காத மேகம் வேண்டும் பூந்தமிழ் தாகம் வேண்டும்.
மலிவான சுகங்கள் தன்னில் மயங்காத மோகம்  வேண்டும்.
 மற்றுமோர் பிறவி இல்லா மட்டிலா யோகம்  வேண்டும். 

கையிலே சேரும் செல்வம் கரையாமல் நிற்க வேண்டும்.
  கடனின்றி வாழ்வை ஓட்டும் கணிதங்கள் கற்க வேண்டும்.
பொய்யிலே புரள்வோர் தம்மை புரிந்துநான் வில(க்)க வேண்டும்
  பொன்மனம் கொண்டா ரோடு  பொருள்தந்தும் கலக்க வேண்டும் .
பையவே எந்தன் வாழ்வின் பரிமாணம் மாற வேண்டும்.
  பைந்தமிழ் பாடிப் பாடி பரமனைச் சேர வேண்டும் 
அய்யப்பா  உன்மேல் இட்ட ஆணைகள்  பலிக்க வேண்டும்.
  ஆலயந்  தோறும் எந்தன் அருந்தமிழ் ஒலிக்க வேண்டும். 

வன்புலி ஏறிவந்த வைத்திய நாதா போற்றி
  வையத்தில்  புதிதாய் வந்த "வைணவச் சைவா" போற்றி 
அன்பிலே சிவத்தைக் காணும் அரனவன் வித்தே போற்றி
  அறிதுயில் காணும் அந்த அரங்கனின் முத்தே போற்றி
ஒன்பது கோள்கள் தாக்கம் ஓய்ந்திட வைப்பாய் போற்றி 
  ஓயாது தொழுவோர் நெஞ்சில் ஒளியாகி நிற்பாய் போற்றி 
மன்பதை உயிர்கட் கெல்லாம் மன்னவா போற்றி போற்றி 
  மலரடி தொழுதோம் காப்பாய் மணிகண்டா போற்றி போற்றி 

கரிமலை நாதா போற்றி கலியுக வரதா போற்றி
  காட்டிலே உறைவாய் போற்றி கருணையைப் பொழிவாய் போற்றி
அரியணை துறந்தாய் போற்றி அரக்கியை அழித்தாய் போற்றி
  அரிஹர சுதனே போற்றி அய்யப்பா போற்றி போற்றி 
சொரிமுத்து அய்யா போற்றி சுந்தர வடிவே போற்றி
  சோதியாய்த் தெரிவாய் போற்றி சுகங்களைத் தருவாய் போற்றி
சரிவிலா  வாழ்க்கை தருவாய் சந்தனப் பிரியா போற்றி 
  சகமெலாம் காக்கும் எங்கள் சங்கரன் புதல்வா போற்றி. 

மகிஷியை போரில் வென்ற மாமணி கண்டா போற்றி
  மாளிகைப் புறத்து அம்மன் மனங்கவர் மன்னா போற்றி
சகிப்போடு  மகுடம் தள்ளி சன்யாசம் பூண்டாய் போற்றி
  சபரியில் கோயில் கொண்ட சாஸ்தாவே போற்றி போற்றி
தகிக்கின்ற மகரஜோதி தணலிலே எரிவாய் போற்றி
  தளும்பிடும் பம்பையாற்றுத் தண்ணீரில் தெரிவாய் போற்றி
அகிலத்தைக் காக்க வந்த அரிஹர மைந்தா போற்றி
  அருள்மழை பொழிவாய் எங்கள் அய்யப்பா போற்றி போற்றி.

வீரமணி கண்டா போற்றி வேங்கைவா கனனே  போற்றி
  வேலவன்  தமையா போற்றி வேதனை தீர்ப்பாய் போற்றி
தாரமொன் றில்லாய் போற்றி தவமணிச் செல்வா போற்றி 
  தாருக வனத்தா போற்றி தாங்கிட வருவாய் போற்றி
பாரங்கள் குறைப்பாய் போற்றி பாவங்கள் பொறுப்பாய் போற்றி 
  பந்தள  அரசே போற்றி பம்பையின் பரிசே போற்றி 
ஆரண்ய வாசா போற்றி ஆரியங் காவா போற்றி 
  ஆனந்த  ரூபா போற்றி அய்யப்பா போற்றி போற்றி .

    -சிவகுமாரன் 

பாடியிருப்பவர் - பிரபாகரன் 
  

11 comments:

சிவகுமாரன் said...

சென்றவாரம் சபரிக்கு சென்றிருந்தேன். என் சித்தப்பா மற்றும் சகோதரர்களுடன். இது இரண்டாவது முறை தான். நான்கு மாதங்களுக்கு முன்னரே திட்டமிட்ட யாத்திரை . என்னால் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை. வரமுடியாது என்று தெரிவித்து விட்டேன். கடைசியில் கவிதையாவது எழுதிக்கொடு உனக்குப் பதிலாய் , உன் கவிதை எங்களோடு மலை ஏறட்டும் என்றார்கள் சித்தப்பா. ஒரு வித ஆதங்கத்துடனும் , கோபத்துடனும் தான் இந்தக் கவிதையை எழுதினேன். ஒரு குறிப்பிட்ட வரி எழுதிக்கொண்டிருக்கும் போது, ஒரு அழைப்பு ..யாத்திரைத் திட்டத்தில் சிறு மாறுதல். உன்னால் வர முடியுமா என்று கேட்டார்கள். சிலிர்த்தேன். எனக்காகவே அந்த மாறுதலை ஐயப்பன் செய்தான் என்று நம்பினேன்.
இந்த தலைப்பு அதனால்தான். . குறை பொறுத்து அருள்வாய் அப்பா.

அப்பாதுரை said...

ஆலயம் தோறும் உங்கள் அருந்தமிழ் ஒலிக்க வேண்டும்.
வாழ்த்துக்கள் சிவகுமாரன். பரவசம் தரும் பாடல்.

அப்பாதுரை said...

கொஞ்சம் இராமலிங்க அடிகள், கொஞ்சம் கண்ணதாசன்.

மோகன்ஜி said...

என் பிரிய சிவா! எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. சற்று விவரம் புரிய ஆரம்பித்ததிலிருந்து விடாமல் சபரி மலைக்கு பெருவழியில் சென்று வருகிறேன். இந்த வருடம் என் அம்மாவின் மறைவினால் செல்ல இயலா நிலை.என்னோடு மலைக்கு வரும் சில நண்பர்கள் நான் வர முடியாதத்திற்கு மிகவும் வருந்தி மாலையில் என்னோடு பேசிக் கொண்டிருந்தார்கள்.

இப்போதே இந்த பதிவைப் பார்த்தேன்.
நீ தரிசனம் செய்தது நான் செய்ததாய் எண்ணி சந்தோஷப் பட்டேன்.

இன்னுமொன்று. இந்தப் பாடலை இந்த ஜனவரியில் நான் வெளியிட உத்தேசித்துள்ள ஐயப்பன் பற்றிய புத்தகத்தில் சேர்த்துக் கொள்ள விழைகிறேன். உன் அனுமதியை நான் பெறவா வேணும்?

எனது பதினெட்டாம் வயதில் நானும் ஒரு நீண்ட பாமாலைப் புனைந்து ஐயன் காணிக்கையாக்கினேன். ஹைதராபாத் திரும்பியவுடன் மின்னஞ்சலில் அனுப்புகிறேன்
அன்பு///

எல் கே said...

சரணம் ஐயப்பா

திண்டுக்கல் தனபாலன் said...

சிறப்பான பகிர்வு...

பதிவாக்கிப் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி... தொடர வாழ்த்துக்கள்...

sury siva said...

அய்யப்பா ! அய்யப்பா ! உன்
அருகில் வர எனக்கு அருள் தா.

அருட்கவியின் மாளிகையில் நான்
" அடாணா " வில் பாடுவேன்.

இருமுடி ஏந்தி வரும் பக்தர்கள்
ஈசனே ! நின் பாதம் காண‌
ஓடி வரும் வேளையிலே
பாடி பாடி நான் மகிழ்வேன்.


சுப்பு ரத்தினம்

ஜீவி said...

முதலில் வேண்டுகோள், அடுத்து நிரூபணம், அதற்கடுத்து தன்நிலை விளக்கம், அடுத்து அரிஹரன் பாமாலை,அது தாண்டி யாண்டும் இடும்பையிலா இருப்புக்கு வேண்டாமையிலானிடம் வேண்டுதல்,
போற்றி போற்றி என்று வணங்கல் என்று நிரல்பட மனத்தின் ஆழத்திலிருந்து வெளிப்பட்ட கவிதை மனங்கவர்வதாய் இருந்தது, அன்பரே!

Unknown said...

நல்லதே நடக்கவேண்டும் சபரி வாசனின் அருளால் நன்றி சகோ

இராஜராஜேஸ்வரி said...


நல்லதே நடக்க வேண்டும் நல்லதே நடக்க வேண்டும்
அல்லவை எல்லாம் நீங்கி நல்லதே நடக்க வேண்டும்

குறை பொருத்தருளும் ஐயப்பன் பற்றி அருமையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..


வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..

Nanjil Siva said...

குறை பொருத்து அருள்வாய் அப்பா!! மனக் குறை தீர்த்து அருள்வாய் அப்பா!! >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<