Tuesday, July 24, 2012

ஏழுமலை வாசா


நல்லதே நடக்க வேண்டும் நல்லதே நடக்க வேண்டும் 
அல்லவை எல்லாம் நீங்கி நல்லதே நடக்க வேண்டும் 


ஏழுமலை  வாசா எங்கள் இதயமதில் வாழும் நேசா
  இலக்குமியின் தாசா நெஞ்சம் இரங்குவாய் சீனிவாசா
வாழும் உயிர் அத்தனைக்கும் வாழ்வளித்து காக்கும் ஈசா
  வருகிறோம் உன்னை நோக்கி வர(ம்)வேண்டும் வரதராசா
பாழும் இந்த உலகின் பாவம் போக்கிடும் பாப நாசா
  பாதங்கள் பணிந்தோம் உந்தன் பார்வையைக் காட்டு இலேசா
சூழுகின்ற துயரம் எல்லாம் சுக்கு நூ றாக்கி தூசாய்
  சுகமாக்கு எங்கள் வாழ்வை திருமலை வெங்க டேசா !


பன்னிரு ஆழ்வார் போல பாடிடும் புலமை இல்லை
  பாயிரம் கீர்த்தனை சொல்லி பணிந்திடும் பொறுமை இல்லை
உன்னையும் பங்கில் சேர்க்க ஓகோவென தொழிலும் இல்லை
  உண்டியல் தன்னில் கொட்ட ஒன்றுமே கையில் இல்லை.
என்னிடம் வாங்கிக் கொள்ள நீயொன்றும் ஏழை இல்லை
  எனக்கீந்தால் உந்தன் செல்வம் எள்ளளவும் குறைவதில்லை.
மன்னிய செல்வம் எல்லாம் மட்காதோ சேர்த்து வைத்தால்?
  மகிழாதோ மண்ணுயிர் எல்லாம் மாலவா மனது வைத்தால்!


அனுதினம் உன்னைப் பாட அடியேனும் ஆண்டாள் இல்லை
  அவல்தந்து செல்வம் வாங்க அட நானும் குசேலன் இல்லை
கனவிலும் உன்னைக் கொஞ்ச கண்ணாநான் கோபியர் இல்லை
  கடமைசெய் பலனில்லை என்றால் கேட்கநான் அர்ச்சுனன் இல்லை
தினமுந்தன் நாமம் சொல்லித் திரியநான் நாரதன் இல்லை
  திறந்து என் நெஞ்சில் உன்னைக் காட்ட நான் அனுமனும் இல்லை.
மனதிலே ஒருநொடி எண்ணி மறுவேலை பார்க்கப் போகும்
  மனிதன்நான் என்துயர் போக்க மாதவா மனமா இல்லை?


போதுமெனச் சொல்லும் வரையில் பொன்பொருள் சேர்க்க வேண்டும்
  போதாது வாழ்வோர்க் குதவி புண்ணியம் சேர்க்க வேண்டும்.
பாதையில்  இடறும் கற்கள்  படிக்கற்கள் ஆக வேண்டும
  பாதையில் தடம் பதித்து பயணத்தை முடிக்க வேண்டும்.
மோதுவது மலையே எனினும் மோதி நான் பார்க்க வேண்டும்
  முயல்கிற செயல்கள் எல்லாம் முடித்து நான் காட்ட வேண்டும்
வேதனை ஏதுமின்றி விண்ணகம் ஏக வேண்டும்
  வேறொரு கருவில் மீண்டும் வாராது போக வேண்டும்.


மாதவா கண்ணா போற்றி , மாலவா கிருஷ்ணா போற்றி
  மார்பிலே திருமகள் உறையும் மலரவா போற்றி போற்றி
கோதண்ட ராமா போற்றி கோவிந்த ராஜா போற்றி
  கோகுல வாசா போற்றி கோபாலா போற்றி போற்றி
சீதை மண வாளா போற்றி ஸ்ரீரங்கா நாதா போற்றி
  ஸ்ரீதேவி கடைக்கண் காட்ட திருவருள் புரிவாய் போற்றி
வேதத்தின் தலைவா போற்றி வேதனை தீர்ப்பாய் போற்றி
  வேண்டியது எல்லாம் தருவாய் வேங்கடா போற்றி போற்றி!


-சிவகுமாரன் 

பாடியிருப்பவர் --- பிரபாகரன் 
சமர்ப்பணம்: சென்னையிலிருந்து  திருப்பதி வரை பாதயாத்திரை செல்லும் என் சித்தப்பா திரு.அரசு உள்ளிட்ட ஆன்மீக அன்பர்களுக்கு.         

15 comments:

இராஜராஜேஸ்வரி said...

நல்லதே நடக்க வேண்டும்
நல்லதே நடக்க வேண்டும்

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லதே நடக்கும்...
எல்லாம் அவன் செயல்...

என் தளத்தில் : மனிதனின் மிகப்பெரிய எதிரி யார் ?

Lalitha Mittal said...

அருமை ;மிகவும் ரசித்தேன் ;பயணம் செல்பவர்கள் பக்திப் பரவசமடைவது திண்ணம்!

sury said...

பாடுகிறேன் பாடுகிறேன்
பாடிகொண்டே இருக்கிறேன்.
பரந்தாமனின்
புகழைப் பாட
பகல் இரவு என்றில்லாது.
ஏழுமலை வாசா வா
எழுபதும் கடந்த இந்த
ஏழையின் குரல் கேட்க வா. http://youtu.be/kxZ5XdAb52Y

சுப்பு ரத்தினம்.

சிவகுமாரன் said...

நன்றி ராஜேஸ்வரி மேடம்
நன்றி தனபாலன்
நன்றி லலிதா மேடம்
நன்றி சுப்புரத்தினம் அய்யா

சுந்தர்ஜி said...

இல்லை இல்லை என்னும் ஒவ்வொரு வரியிலும் என்றென்றும் இருக்கிறீர்கள் சிவகுமாரன்.

//நல்லதே நடக்க வேண்டும் நல்லதே நடக்க வேண்டும்.
அல்லவை எல்லாம் நீங்கி நல்லதே நடக்க வேண்டும்.//

விஷ்ணுசஹஸ்ரநாமத்தின் லோகக்ஷேமம் வஹாம்யஹத்துக்குச் சமமான வரிகள்.

படிக்கப் படிக்க மனம் மணக்கிறது சிவா.

sivamani said...

மனதிலே ஒரு நொடி எண்ணி மறுவேலை பார்கபோகும் மனிதர்களில் நானும் ஒருவன். எனக்கே போன்று இருக்கிறது. நல்லதே நடக்க வேண்டும்.

Lalitha Mittal said...

pl visit http://ammanpaattu.blogspot.in/2012/07/blog-post_24.html
for enjoying aadi velli paattu.

ஆதிரா said...

பக்தி மணம்.. பக்தி மணம். நன்மையே நடக்க.. நன்றாக இருக்கிறது.
இனிய நட்புக்கு நட்பு நாள் வாழ்த்துகள்.

ஆதிரா said...

சிவா,
அடுத்த பாடல் உங்கள் குரலில் கேட்க வேண்டும்.

சிவகுமாரன் said...

நன்றி சுந்தர்ஜி
நன்றி அண்ணா.
நன்றி லலிதா மேடம்

சிவகுமாரன் said...

நன்றி ஆதிரா மேடம்.
நட்பு நாளில் என் நினைவு தங்களுக்கு வந்ததில் பெருமையடைகிறேன்.
முந்தைய " சிவாயநம என்போம்" நானே பாடியிருக்கிறேன். கேட்டீர்களா ?

அப்பாதுரை said...

சென்னையிலிருந்து திருப்பதி பாதயாத்திரையா!
சுந்தர்ஜி கூட சமீபத்தில் நடந்து போன அனுபவத்தை பதிவில் எழுதியிருந்தார். இப்போது நினைவுக்கு வருகிறது.
இவன் இல்லை அவன் இல்லை என்று வரிசையாகச் சொல்லிப்பின் கணம் நினைந்து தினம் மறக்கும் சாதாரணன் என்றதை ரசித்தேன். 'பார்வையைக் காட்டு இலேசா' மட்டும் மாற்றியிருக்கலாமோ?

Rasan said...

// நல்லதே நடக்க வேண்டும் நல்லதே நடக்க வேண்டும்
அல்லவை எல்லாம் நீங்கி நல்லதே நடக்க வேண்டும் //
நடப்பவை எல்லாம் நன்மைகே.

தொடருங்கள்.

மோகன்ஜி said...

ஆஹா சிவா! அற்புதமான பதிவு. போன வாரம் முழுவதும் நான் திருப்பதியில் தான் இருந்தேன். முன்பே இதைப் பார்த்திருந்தால் அங்கேயே பாராயணம் பண்ணியிருப்பேன்.

இல்லை இல்லை எனும் வரிகள் உலுக்குகின்றன.

மனத்தினோர் தூய்மையில்லை

வாயிலோர் இன்சொல் இல்லை

சினத்தினால் செற்றம் நோக்கி

தீவிளி விளிவன் வாளா

புணத்துழாய் மாலையானே

பொன்னிசூழ் திருவரங்கா

எனக்கினி கதி என் சொல்லாய்

என்னையாளுடைய கோவே

எனும் ஆழ்வார் பாசுரம் நெஞ்சில் அலையடிக்கிறது.

உன் நினைவூட்டலுக்கு நன்றி சிவா!