Sunday, June 17, 2012

சிவாயநம என்போம்


சிவாயநம சிவாயநம சிவாயநம என்போம்
சிவாயநம எனவோதிட உருண்டோடிடும் துன்பம்

அரிதேவனும் அடிதேடியே அகழ்ந்தே புவிபோனான்
விரிவானிலே முடிதேடியே விரைந்தும் அயன்காணான்
சரிபாதியில் உமையாளுடன் சமமாகிய தேவா
திரிசூலமும் நதிநாகமும் திகழ்ந்தோங்கிட நீ வா!

ஆலங்குடியானே உனக்(கு) ஆளாயினன் யானே.
ஞாலம் எதிர்த்தாலும் உனை நாளும் தொழுவேனே
காலன்தனை கடிந்தேகியே காலால் உதைத் தாயே
காலங் கடத் தாமல் எனை கரைசேர்த்திடு வாயே

மதிசூடியும் மலர்சூடியும் மழுவேந்தியும் வருவாய்
நதிசூடியும் குளிராதஉன் நுதல்கண்ணைத் திறவாய்
கதிர்வேலனும் கணநாதனும் புடைசூழ்ந்திட வருவாய்
விதி சூழ்ந்திடும் அடியேன்வினை விரைந்தோடிட அருள்வாய்.

கண்கேட்டதும் கறிகேட்டதும் கவிகேட்டதும் ஏனோ?
பெண்கேட்டதும் உருமாற்றியே பேயாக்கிய தேனோ?
மண்போட்டுமே நதிசீறிய மதுரைநகர் நாதா
பண்கேட்டதும் மனம்மாறியே பலன்அள்ளியே நீ தா  

காதல்மனை யாட்டிக்கென உடல்பாதியைத் தந்தாய்
வாதம்செய்ய தமிழேயொரு வடிவாகவே வந்தாய்
வேதம்உணர் முனிவோர்களும் விளங்காப் பொருள் ஆனாய்
பாதம்தொழும் அடியேன் முகம் பாராதேன் போனாய்?


நீராகியும் நெருப்பாகியும் நிலமாகியும் நின்றாய்
கார்வானிலே காற்றாகியும் ககனங்களை வென்றாய்
பாராண்டிடும் பரமா வினை, பாவங்களைக் கொய்வாய்
யாராகினும் எனை வென்றிட இயலாதெனச் செய்வாய்


கடல்,மாமலை நீயே-வான் கதிர் மாமழை நீயே
மடல் தேன் மலர் நீயே -அதன் மணம் பேரேழில் நீயே
உடல் ஆனதும் நீயே - அதன் உயிர் ஆனதும் நீயே
நடராஜனே நீயே - என் நலம் காத்திடுவாயே


நீயே கதி நீயே விதி நீயே சரண் என்றேன்
தாயேஎன தந்தையேஎனத் தாளைத் தொழு கின்றேன்
ஈயேன் என இரங்காமலே இருந்தால் அது முறையோ?
நாயேனையும் பொருட்டாகவே நீ எண்ணுவ திலையோ?


சிவமே உயர் பரமே என தினமும் உனைத் தொழவே
நவகோள்களின் இடையூறு எனை நெருங்காதிடச் செய்வாய்
புவனேஸ்வரி மணவாளனே புகழ்ந்தே உனைப் பாட
தவ வேள்வியின் பலன் கோடி என் தமிழால் பெறச் செய்வாய்.


உனையே தினம் தொழுதே மனம் உருவேறிட வேண்டும்.
எனையே உனதடியான் என இனி கூறிட வேண்டும்
நினைவே சிவமயமாய் உளம் நிறைவைத் தர வேண்டும்.
புனையும் கவிமொழியால் உனைப் புகழ்ந்தேன் வர வேண்டும்.


சிவாயநம சிவாயநம சிவாயநம என்போம்
சிவாயநம எனவோதிட உருண்டோடிடும் துன்பம்


-சிவகுமாரன்

21 comments:

எல் கே said...

அருமை.. சிவாய நம ஓம்

ஜீவி said...

//மதிசூடியும் மலர்சூடியும் மழுவேந்தியும் வருவாய்
நதிசூடியும் குளிராதஉன் நுதல்கண்ணைத் திறவாய்
கதிர்வேலனும் கணநாதனும் புடைசூழ்ந்திட வருவாய்
விதி சூழ்ந்திடும் அடியேன்வினை விரைந்தோடிட அருள்வாய்.//

சந்தம் அப்படியே உருக்கி, பாகாய் உருகச் செய்கிறது.

தமிழே அமிழ்தமாம்.
அமிழ்தமே?..
தமிழின் அழகாம்.

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை ! ( கண்ணொளியும் ) நன்றி !

திண்டுக்கல் தனபாலன் said...

சின்ன வேண்டுகோள் : Email Subscription Widget வைக்கவும். நிறைய வாசகர்களுக்கு உங்களின் படைப்புக்கள் சென்றடையும் ! நன்றி !

அப்பாதுரை said...

சொக்கனைப் பற்றிய சந்தம் சொக்க வைக்கிறது.
'நதிசூடியும் குளிராத நுதல்' மிகவும் ரசித்தேன்.
அச்சமூட்டும் வரமொன்று கேட்கிறீரே? "யாராகினும் எனை வென்றிட இயலாதெனச் செய்வாய்"..

அப்பாதுரை said...

பெண்கேட்டதும் உருமாற்றியே பேயாக்கிய தேனோ - இது என்ன திருவிளையாடல்?

அப்பாதுரை said...

இனிமேல் ஜீவி சாருக்கு முன்பே பின்னூட்டமிட்டுவிட வேண்டும்.

sury said...

http://youtu.be/YSDzKY3E-5w

நான் பாடகன் அல்ல.
இசை அறிவோனும் அல்ல.
இருப்பினும் தங்கள் சிவஸ்துதி என்னைக்
கவர்ந்தது. அதனால் பாடினேன். பதினிரண்டு ராகங்களில்.
சுப்பு ரத்தினம்

அப்பாதுரை said...

குரல் யாருடையது? பிரபாகரன்?
சந்தம் நன்றாக தொனிக்கிறது குரலில் - ரொம்ப மென்மையாகப் பாடியிருக்கிறாரோ?

நிலாமகள் said...

கடல்,மாமலை நீயே-வான் கதிர் மாமழை நீயே
மடல் தேன் மலர் நீயே -அதன் மணம் பேரேழில் நீயே
உடல் ஆனதும் நீயே - அதன் உயிர் ஆனதும் நீயே
நடராஜனே நீயே - என் நலம் காத்திடுவாயே


நீயே கதி நீயே விதி நீயே சரண் என்றேன்
தாயேஎன தந்தையேஎனத் தாளைத் தொழு கின்றேன்

அருமையான‌ துதிப்பாட‌ல்! ந‌ன்றி சிவா!

சிவகுமாரன் said...

நன்றி எல்.கே

சிவகுமாரன் said...

\\தமிழே அமிழ்தமாம்.
அமிழ்தமே?..
தமிழின் அழகாம்.//

தங்கள் வாழ்த்தும் அமிழ்தாய் என் செவிகளில்
நன்றி ஜீவி சார்

சிவகுமாரன் said...

நன்றி தனபாலன் சார்.
தங்கள் வருகைக்கும், வழிகாட்டுதலுக்கும் .

சிவகுமாரன் said...

நன்றி சுப்பு அய்யா.
பன்னிரண்டு ராகங்களில் இந்த துதியை கேட்டு மெய் சிலிர்த்தேன்.
இது என் பாக்கியம்

சிவகுமாரன் said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நிலா மேடம்.

சிவகுமாரன் said...

அப்பாஜி
தாங்கள் பின்னூட்டம் இட்டால் தான் என் கவிதை நிறைவு பெறுவதாய் ஓர் எண்ணம் எனக்கு.
அச்சமூட்டும் வரம்? ஆகா ! உன்னைப் பாடுவதில் - யாராகினும் எனை வென்றிட இயலாதெனச் செய்வாய்.
இப்படி பொருள் கொள்ளுங்கள்

\\பெண்கேட்டதும் உருமாற்றியே பேயாக்கிய தேனோ - இது என்ன திருவிளையாடல்?//
புனிதவதியார் என்ற காரைக்காலம்மையாரின் கதை( கதி?) இது.

\\குரல் யாருடையது? பிரபாகரன்?
சந்தம் நன்றாக தொனிக்கிறது குரலில் - ரொம்ப மென்மையாகப் பாடியிருக்கிறாரோ?//
ஆகா அப்பாஜி..... நெசம்மாவா ? பாடியது நானே தான். என் மகனும் மனைவியும் அளித்த தைரியத்தில் பயந்து கொண்டே பதிவேற்றினேன்.
நன்றி. ( முதலில் தம்பி தான் பாடினான். அவனுக்கு மெட்டும் சந்தமும் பிடிபடவில்லை. வேகமாக பாடியிருந்தான்
youtube தளத்தில் அவன் பாடியதை கேட்கலாம்.)
http://www.youtube.com/watch?v=0USjvD5tqDM&feature=BFa&list=UUubihppfF99tlubi3O6-Z2A

கவிநயா said...

தமிழும், பக்தியும் போட்டியிட்டுக் கொஞ்சுகின்றன.

சிவாயநம ஓம். ஓம் நமசிவாய.

சிவகுமாரன் said...

நன்றி கவிநயா

இராஜராஜேஸ்வரி said...

புவனேஸ்வரி மணவாளனே புகழ்ந்தே உனைப் பாட
தவ வேள்வியின் பலன் கோடி என் தமிழால் பெறச் செய்வாய்.

சிவாய நம என சிந்தித்து
அபாயம் தவிர்ப்போம் !

அருமையான ஆக்கம்.. பாராட்டுக்கள்..

Lalitha Mittal said...

பாட்டைப்படித்ததில் சிவ பதங்களை நிஜமாவே தொட்டு ஒற்றிக்கொள்வது
போன்று ஒரு திவ்ய உணர்வு!நன்றி

சிவகுமாரன் said...

நன்றி ராஜேஸ்வரி மேடம்.
நன்றி லலிதா மேடம்.