Wednesday, February 22, 2012

மாலவன் காணா மலரடிநீரெனவாகி நிலமெனவாகி 
   நெடுவானாகி காற்றாகி    
   நெருப்பெனவாகி பொருப்பெனவாகி 
   நீள்கடலாகி கதிராகி 
கார்முகிலாகி கடும்புயலாகி 
   கனமழையாகி தருவாகி 
   காயெனவாகி கனியெனவாகி 
   விதையெனவாகி விரிவோனே! 
பூரணமாகி பூஜ்ஜியமாகி 
   புவிமிசை புதிராய் தெரிபவனே 
   புதியனவாகி பழையனவாகி  
   புதுமைகள் தினந்தினம் புரிபவனே
மாரனின் கணைகள் மேல்விழ சினந்தே 
   மறுகணம் விழியால் எரித்தவனே 
   மாதொரு பாகா , மாலவன் காணா 
   மலரடி தொழுதேன் அருள்வாயே!

                                                         -சிவகுமாரன் 


                                  பாடியிருப்பவர்:  சிவ.தேன்மொழி  
  
  அய்யா சுப்புரத்தினம் பாடுவதையும் கேட்டு இன்புறுங்கள் 
18 comments:

Lalitha Mittal said...

அரி அறியவொண்ணாப் பரமனின் பத மலரில் சேர்ந்த உன் பத(பா)மலர் பரப்பும் பக்திமணம்! ஆஹா!

sury said...

நீரும் நெருப்பும் நிலமும் ஆகாயமும் காற்றும் ஆன எல்லாமும் தானே ஆகி எட்டு வகை குணங்களுமே தானே ஆகி உளதாகி இலதாகி உள்ளே சுரக்கும் இன்பமும் ஆகி நின்ற இறைவனின் புகழை அருட்கவி பாடிட , நான் அவன் கேட்டுகொண்டே இவ்வுடலை நீத்துப் போக அருள் செய்வின் அது போதும் ஆண்டவா ! என்னை இதுவரை ஆண்டவா !! உன்னை நான் இக்கவிதையை சிந்து பைரவியில் பாட எனக்கு துணை நிற்பாய்.
சுப்பு ரத்தினம்.

sury said...

நீரும் நெருப்பும் நிலமும் ஆகாயமும் காற்றும் ஆன எல்லாமும் தானே ஆகி எட்டு வகை குணங்களுமே தானே ஆகி உளதாகி இலதாகி உள்ளே சுரக்கும் இன்பமும் ஆகி நின்ற இறைவனின் புகழை அருட்கவி பாடிட , நான் கேட்டுகொண்டே இவ்வுடலை நீத்துப் போக அருள் செய்வின் அது போதும் ஆண்டவா ! என்னை இதுவரை ஆண்டவா !! உன்னை நான் இக்கவிதையை சிந்து பைரவியில் பாட எனக்கு துணை நிற்பாய்.
சுப்பு ரத்தினம்.

sury said...

இங்கே கேளுங்கள்.
சுப்பு தாத்தா சிந்து பைரவி ராகத்தில் பாடுகிறார்.
http://menakasury.blogspot.com

இராஜராஜேஸ்வரி said...

அயன் எனவாகி அரி என்வாகி என்ற திருப்புகழின் சந்தம் மனதில் பயின்றுவர மீண்டும் மீண்டும் படித்து சுவைக்கவைத்த அருமையான ஆக்கம்..

பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..

G.M Balasubramaniam said...

சிவகுமாரா, மல்லிகை மணக்கிறது என்று சொல்வது போலாகும் உன் கவிதை இனிக்கிறது என்று சொல்வது.நான் கடவுளர் மீது பாட்டு எழுதினாலும் அது இயல்பாக இருப்பதாகத் தோன்றுவதில்லை. என் இஷ்ட தெய்வம் முருகன் மேல் நானும் ஒரு பாட்டு எழுதினேன் “எனக்கென்ன செய்தாய் “என்று கேட்டு.படித்துத்தான் பாரேன். கவனிக்கவும். நான் பாட்டு என்றுதான் சொன்னேன். கவிதை என்றல்ல. வாழ்க நீ வளமுடன்.

sury said...

http://youtu.be/EMmdzY-Ui4w


இந்த ராகத்திலும் பாடலாமே. மிகவும் எளிதாக பாட இயலும். சுருக்கமாக, விளக்கமாக, சிந்தனைக்கு ஒரு விருந்தாக, சீர் அனைத்தும் கொண்டதாக, அமைதி தருவதாக, ஆன்மாவுக்கு இதம் அளிப்பதாக, சுகம் தருவதாக, சும்மா மனதை இருத்தி சிவன் மேல் இருக்கச் செய்வதாக இருக்கும் தங்கள் பாடலை மக்கள் யாவரும் பிரதோஷ தினத்தன்று சிவனது சந்நிதியில் பாடி மகிழ பிரார்த்திக்கிறேன்.
சுப்பு தாத்தா

சுந்தர்ஜி said...
This comment has been removed by the author.
சிவகுமாரன் said...

நன்றி லலிதா மேடம், சுப்புத் தாத்தா , இராஜேஸ்வரி, GMB , சுந்தர்ஜி,
நன்றிகள் பல.

சிவகுமாரன் said...

பொருப்பு என்றால்,மலை என்று பொருள்..
" திருக்கழுக் குன்றின் செல்வா போற்றி
பொருப்பமர் பூவனத்து அரனே போற்றி."
- என்று மாணிக்கவாசகர் போற்றித் திருவகவலில் பாடுகிறார்.
தங்கள் புண்ணியத்தில் மீண்டும் ஒருமுறை திருவாசகத்தில் உருகினேன் சுந்தர்ஜி. நன்றி

சுந்தர்ஜி said...

சிவா!

"ஊரைச் சுடுமோ வுலகந்தனைச் சுடுமோ
ஆரைச்சுடுமோ வறியேனே- நேரே
பொருப்புவட்ட மான நகிற் பூங்கொடியீ ரிந்த
நெருப்புவட்டமான நிலா." என்று செல்லும் உ.வே.சா. திரட்டிய தனிப்பாடல் திரட்டு குறித்து இடுகை எழுதவிருந்த நான் பொறுப்பின்றி பொருப்பைப் பொறுப்பாக்கச் சொன்னமை பொறுக்க.

அப்பாதுரை said...

எந்த ஊர் கோவில்?

Thambi prabakaran said...

Anni yin voice migavum arumai.

சிவகுமாரன் said...

"பொருப்புவட்ட மானமுலைப் பூவையிரே யிந்த
நெருப்புவட்ட மான நிலா "
-- இப்படித்தானே இருக்கும் பல பட்டாடைச் சொக்கநாதப் புலவர் எழுதிய அந்த பாடல்.
நகில் என்றால் என்ன பொருள் சுந்தர் ஜி?

அப்பாத்துரை , அது அடிமுடி காண முடியாத அண்ணாமலை. கார்த்திகை மகாதீபம்.

நன்றி பிரபு

சுந்தர்ஜி said...

"ஊரைச் சுடுமோ வுலகந்தனைச் சுடுமோ
ஆரைச்சுடுமோ வறியேனே- நேரே
பொருப்புவட்ட மான நகிற் பூங்கொடியீ ரிந்த
நெருப்புவட்டமான நிலா."

"ஊரைச் சுடுமோ வுலகந்தனைச் சுடுமோ
ஆரைச்சுடுமோ வறியேனே- நேரே
பொருப்புவட்ட மானமுலைப் பூவையிரே யிந்த
நெருப்புவட்டமான நிலா."

நகில் என்றாலும் முலைதான்.

இரண்டு பாடாந்தரங்களும் உண்டு. முதல் இன்னும் நேர்த்தியாக இருக்கிறதாக எனக்கு ஓர் எண்ணம்.

சிவகுமாரன் said...

நன்றி சுந்தர்ஜி

அப்பாதுரை said...

சுப்புரத்தினம் ஐயாவின் பாடலும் சிறப்பாக இருக்கிறது. பின்னணியில் அவ்வப்போது வரும் பறவைக்குரல் பொருந்துகிறது.

சிவகுமாரன் said...

நன்றி அப்பாஜி.சுப்புரத்தினம் அய்யா போன்ற ரசிகர் கிடைத்தது என் பாக்கியம்.