Friday, January 6, 2012

அரங்கனே நாராயணா.பாயிரம் கீர்த்தனை பல்லாண்டு பாடிடும்
  பழக்கமிலை நாராயணா
  பன்னிரு ஆழ்வாரின் பாசுரம் ஒன்றையும்
  படித்ததிலை நாராயணா
வாயினால் மந்திரம் வரிசையாய் ஓதிடும்
  வழக்கமிலை நாராயணா .
  வருகின்ற இலாபத்தில் ஒருபங்கு உனக்கீந்தும்
  வசதியிலை நாராயணா
தாயிடம் சேர்கின்ற தனயனாய் உன்னிடம்
  தஞ்சம்நான் நாராயணா
  தவமொன்றும் செய்யாமல் வரமொன்று கேட்கிறேன்
  தருவாயா நாராயணா
ஆயிரம் பேருண்டு, ஆனாலும் உன்போன்று
  ஆருண்டு நாராயணா?
  அழகான காவிரி ஆற்றோரம் துயில்கின்ற
  அரங்கனே நாராயணா.

பூவினில் உறைகின்ற பொன்மகள் துணைகொண்ட
  பூவண்ணா நாராயணா .
  பொன்மகள் பார்வையென் மேல்விழச் செய்தாலே
  போதுமே நாராயணா
கூவிடும் குயில்போல குழலூதி மயக்கினாய்
  கோபாலா நாராயணா .
  குறையிலா செல்வத்தை கொடுத்தென்னை மயக்குவாய்
  குணசீலா நாராயணா
தீவினில் வாடிய சீதைய சிறைமீட்ட
  ஸ்ரீராமா  நாராயணா
  தீராத கடன்தொல்லைச் சிறைமீட்டு துயரங்கள்
  தீர்க்கவா நாராயணா
ஆவினம் மேய்த்தவா அல்லகள் போக்கவா
  அழகனே நாராயணா
  அழகான காவிரி ஆற்றோரம் துயில்கின்ற
  அரங்கனே நாராயணா.

அவல்தந்த தோழனுக் களவிலா செல்வத்தை
  அருளினாய் நாராயணா
  அவலினும்  சுவையான அமிழ்தான தமிழ்கேட்டு
  அருள்வாயே நாராயணா
புவனங்கள் யாவையும் பொறுப்பாகக் காத்திடும்
  பூபாலா நாராயணா
  புலனைந்தும் தறிகெட்டுப் போகாமல் காத்தருள்
  புரிவாயே நாராயணா
சிவனிடம் வரம்பெற்ற ஸ்ரீபரசு ராமராய்
   சினந்தீர்த்த நாராயணா
   சினங்கொண்ட மனதிலும் திமிர்கொண்ட மதியிலும்
   தீமூட்டு நாராயணா
அவதாரம் பலகொண்டு அதர்மத்த அழித்திட்ட
   அரிதேவா நாராயணா 
   அழகான காவிரி ஆற்றோரம் துயில்கின்ற
   அரங்கனே நாராயணா.

காட்டுக்குப் போவென்று கைகேயி  சொன்னதும்
  கலங்காத நாராயணா
  கடல்போலும் துன்பத்தை கடுகாக்கும் நெஞ்சத்தை
  காட்டுவாய் நாராயணா
பாட்டுக்கு செவிசாய்த்து ஆழ்வாரின் துயரங்கள்
  போக்கினாய் நாராயணா
  பாட்டொன்று கேட்டிந்த பாமரன் துயரங்கள்
  போக்குவாய் நாராயணா
ஓட்டுக்குள் உடல்மூடி உயிர்வாழும் ஆமையாய்
  ஒளிகின்றேன் நாராயணா
  உலகெங்கும் ஒளிவீசி உலவிடும் ஞாயிறாய்
  உருவாக்கு நாராயணா
ஆட்டுக்குத் தாடிபோல் ஆக்காமல் என்னைநீ
  ஆளாக்கு நாராயணா
  அழகான காவிரி ஆற்றோரம் துயில்கின்ற
  அரங்கனே நாராயணா.  

கோடானு கோடியாய் செல்வம் குவித்திடும்
  கோவிந்தா நாராயணா
  கோடியில் ஒருதுளி கொடுத்தெந்தன் குறைகளை
  குறைப்பாயா நாராயணா
வாடாத பாமாலை கோர்த்து உன் வாசலில்
  வருகின்றேன் நாராயணா
  வள்ளலாய் நீஎன்னை வரவேற்று பொற்கிழி
  வழங்காயோ நாராயணா
ஓடாத காவிரி ஒளிராத சூரியன்
  உதவுமோ நாராயணா
  ஒய்யாரமாய் நீயும் உறங்கினால் உலகுக்கு
  ஒப்புமோ நாராயணா
ஆடாது அசையாது இருந்தாலுன் புகழுக்கு 
   ஆகுமோ நாராயணா
   அழகான காவிரி ஆற்றோரம் துயில்கின்ற
   அரங்கனே நாராயணா.

பார்த்திபன் தேருக்குப் பாகனாய் மாறிய
  பரந்தாமா நாராயணா
  பாதையோ நெடுந்தூரம் , பயணமோ போர்க்களம்
  பயம் போக்கு நாராயணா .
கீர்த்திநிறை வேதமாம் கீதையை அருளிய
  கிருஷ்ணனே நாராயணா
  கேட்பாரில் லாமலே கிடப்போரின் கீதையை
  கேட்கவா நாராயணா
வார்த்தைக்கு வார்த்தை உன் நாமத்தைச் சொல்லியே
  வாழ்கின்றேன் நாராயணா
  வாழ்கின்ற நாள்வரை வளமோடும் நலமோடும்
  வாழவை நாராயணா .
ஆர்த்தெழும் அலையிடை அறிதுயில் போதுமே
  அருள வா நாராயணா
  அழகான காவிரி ஆற்றோரம் துயில்கின்ற
   அரங்கனே நாராயணா.

அரன்கையில் ஒட்டிய அயன்மண்டை ஓட்டினை 
  அகற்றினாய் நாராயணா .
  அறியாது சூடிய ஆண்டாளின் மாலையை
  அணிந்தாயே நாராயணா
கரங்கூப்பி கதறிய பாஞ்சாலி மானத்தைக்
  காத்தாயே நாராயணா
  கௌரவர் கூட்டத்தின் கண்களில் விரல்விட்டு
  கலக்கினாய் நாராயணா .
வரங்கொண்ட திமிரினால் மதங்கொண்ட இரணியனை
  வதம்செய்தாய் நாராயணா
  வாமனன் உருகொண்டு மூவடி பெற்றபின்
  வளர்ந்தாயே நாராயணா
அரங்கனே அரங்கனே எனுமெந்தன் குரலை நீ  
  அறியாயோ நாராயணா
  அழகான காவிரி ஆற்றோரம் துயில்கின்ற
  அரங்கனே நாராயணா.

அகலிகை கல்லாகி உன்னாலே பெண்ணானாள்
  அற்புதா நாராயணா
  அரக்கியும் பெண்ணென்று அவளையும் மன்னித்தாய்
  அச்சுதா நாராயணா
குகனென்னும் எளியோனின் குணம்கண்டு தோழனாய்
  கூட்டினாய் நாராயணா
  கூர்மமாய் உருகொண்டு மேருவைத் தாங்கினாய்
  கோதண்ட நாராயணா  
மகனெந்தன் குறைதீர்க்க மனமின்றிப் போனதோ
  மாதேவா நாராயணா
  மார்பிலே ஸ்ரீதேவி  மயக்கத்தில் நீஎன்னை
  மறந்தாயோ நாராயணா
அகத்திலோர் ஆலயம் அமைத்துன்னை அழைக்கிறேன்
  ஆட்கொள்வாய் நாராயணா
  அழகான காவிரி ஆற்றோரம் துயில்கின்ற
  அரங்கனே நாராயணா. 

சங்கோடு சக்கரம் கதைகமலம் ஏந்திடும்
  ஸ்ரீசக்ரா நாராயணா
  சடகோபா பலராமா ஜெகநாதா ரகுராமா
  சாரங்கா நாராயணா   
மங்கைபெரு மாட்டியை மார்பிலே தாங்கிடும்
  மணமோகா நாராயணா 
  மண் அள்ளித் தின்றவா மலைதூக்கி நின்றவா 
  மாவீரா நாராயணா 
பொங்குகடல் ஆழத்தில் மீனாகி நீந்தியே 
  மறைமீட்ட நாராயணா 
  புவிதன்னை மேல்தூக்கி வந்தவா வராகஸ்ரீ 
  மூர்த்தியே நாராயணா 
அங்கிங் கெனாதபடி எங்கும் நிறைந்தவா 
  இங்கும் வா நாராயணா 
  அழகான காவிரி ஆற்றோரம் துயில்கின்ற
  அரங்கனே நாராயணா.             

முத்தொழில் புரிகின்ற மூவரில் முக்கிய 
  துறையேற்ற நாராயணா 
  மோகினி உருகொண்டு அமுதத்தைக் காத்தவா 
  மோகன நாராயணா 
சத்தியம் உலகினில் சாகாமல் கல்கியாய் 
  தடுத்தாளும் நாராயணா 
  சங்கரன் துணைகொண்டு சபரியைப் பெற்றவா 
  சங்கர நாராயணா 
உத்தமா உயர்ந்தவா உலகினை அளந்தவா 
  ஒப்பிலி நாராயணா 
  உரியேறி நெய்திருடி உண்டவா, சகடத்தை 
  உதைத்தவா நாராயணா 
அத்தனை உயிர்களும் அடிபணிந் தேத்திடும் 
  அண்ணலே நாராயணா 
  அழகான காவிரி ஆற்றோரம் துயில்கின்ற
  அரங்கனே நாராயணா.   

இல்லாமை எனும்வார்த்தை இல்லாமல் செய்திட
  எழுந்துவா நாராயணா
  எளியோரும் வலியோரும் இல்லாத வரலாறு
  எழுத வா நாராயணா
கல்லாமை பொய்களவு காணாத உலகத்தைக்
  காட்டவா நாராயணா
  கதியற்றுத் திரிவோரை உன்கருணைக் கயிற்றாலே
  கட்டவா நாராயணா
எல்லாமும் எல்லார்க்கும் என்னுமோர் கீதையை
  இயற்ற வா நாராயணா
  இன்னுமோர் அவதாரம் எடுத்திந்த உலகுக்கு
  இறங்கி வா நாராயணா 
அல்லாடும் மாந்தர்க்கு ஆதார வாழ்வினை
  அளிக்க வா நாராயணா
  அழகான காவிரி ஆற்றோரம் துயில்கின்ற
  அரங்கனே நாராயணா.

மாலவா கேசவா மாயவா தூயவா 
  மணிவண்ணா நாராயணா
  மாதவா ஸ்ரீதரா மதுசூதனா சீதை
  மணவாளா  நாராயணா
ஞாலத்தைக் காப்பவா நான்மறை மீட்டவா
  நரசிம்மா நாராயணா
  நாரத கானத்தின் நாயகா காளிங்க
  நர்த்தனா நாராயணா
மூலமும் முடிவுமாய் ஆனவா கலியுக
  மூர்த்தியே நாராயணா
  முதலைக்கும் யானைக்கும் முக்தியைத் தந்தவா
  முகுந்தனே நாராயணா
ஆலவாய் அண்ணலின்  தோழனே சக்தியின்
  அண்ணனே நாராயணா
  அழகான காவிரி ஆற்றோரம் துயில்கின்ற
  அரங்கனே நாராயணா.


நாராயணா நமோ நாராயணா 
நாராயணா நமோ நாராயணா 
-சிவகுமாரன் 

பாடலைப் பாடியிருப்பவர் பிரபாகரன் 

என் கவிதைகளின் ரசிகன் அய்யா திரு சுப்புரத்தினம் பாடியிருப்பதையும் கேளுங்கள் 

   

31 comments:

தினேஷ்குமார் said...

அதிகாலை தரிசனம் ஆனந்தம் கண்டேன் ...

G.M Balasubramaniam said...

பூவினில் உறைகின்ற பொன்மகள் துணைகொண்ட
பூவண்ணா நாராயணா .
// பொன்மகள் பார்வையென் மேல்விழச் செய்தாலே
போதுமே நாராயணா//

G.M Balasubramaniam said...

பாடலின் ஊடே பொன்மகளின் பார்வைக்கு சிபாரிசு கேட்கும் பாங்கினை நிறையவே ரசித்தேன்.அவனது செயல்கள் குறித்த பாடலில் எல்லோருக்கும் வேண்டி ,வேண்டுகோள் வைப்பதும் ரசித்தேன். சிவகுமாரா, வாழ்க நீ வளமுடன்.

ஜீவி said...

பூமாலையாய் கோர்த்தெடுத்த சரங்கள் மொத்தம் பன்னிரண்டா, சிவகுமாரன்?..

ஒவ்வொரு பாமலையையும்--

'அழகான காவிரி ஆற்றோரம் துயில்கின்ற அரங்கனே நாராயணா'

-- என்னும் ஜரிகைச் சரடால் நேர்த்தியாய் சுற்றியிருக்கும் அழகே அழகு!

அதனிலும்--

"பார்த்திபன் தேருக்குப் பாகனாய் மாறிய
பரந்தாமா நாராயணா
பாதையோ நெடுந்தூரம் , பயணமோ போர்க்களம்
பயம் போக்கு நாராயணா .
கீர்த்திநிறை வேதமாம் கீதையை அருளிய
கிருஷ்ணனே நாராயணா
கேட்பாரில் லாமலே கிடப்போரின் கீதையை
கேட்கவா நாராயணா.."

-- என்கிற சரம் கோரிக்கையாய் பரந்தாமனின் காலடிகளில் வைக்கப் படும் நேர்த்தி அற்புதம்!

'கேட்போரில்லாமலே கிடப்போரின் கீதை'-- இப்படியான வார்த்தைத் தொடரை, உங்களைத் தவிர வேறு யாரால் கோர்க்க முடியும்!

அன்பான வாழ்த்துக்கள், அன்பரே!
தம்பி பிரபாகரனுக்கும்!

சுந்தர்ஜி said...

//அவலினும் சுவையான அமிழ்தான தமிழ்கேட்டு அருள்வாயே நாராயணா//

//ஆட்டுக்குத் தாடிபோல் ஆக்காமல் என்னை நீ ஆளாக்கு நாராயணா//

//ஓடாத காவிரி ஒளிராத சூரியன்
உதவுமோ நாராயணா//

தமிழை மிக அற்புதமாக உபயோகிக்கும் வெகு சிலரில் நீங்களும் ஒருவர். இன்றைக்கும் நாலாயிரத்வ்யப் ப்ரபந்தமும் திருப்பாவையும் கதம்பமாய் ம்ணப்பது தமிழின் வாசனையால்.

நாராயணனை தரிசிக்கும் போது நினைவில் நிற்கும் துளசிதீர்த்தம் போல இந்தப் பாக்களும்.

வீட்டம்மாவை விட்டு த்ருஷ்டி சுற்றச் சொல்லுங்கள் சிவா.

இராஜராஜேஸ்வரி said...

நாராயணா நமோ நாராயணா
நாராயணா நமோ நாராயணா

அருமையான ப்கிர்வுக்கு பாராட்டுக்கள்..

இராஜராஜேஸ்வரி said...

அங்கிங் கெனாதபடி எங்கும் நிறைந்தவா
இங்கும் வா நாராயணா
அழகான காவிரி ஆற்றோரம் துயில்கின்ற
அரங்கனே நாராயணா.


நிறைவாய் மனதில் நிற்கும் அருமையான பாடல் வரிகள்.. பாராட்டுக்கள்..

சென்னை பித்தன் said...

//பன்னிரு ஆழ்வாரின் பாசுரம் ஒன்றையும்
படித்ததிலை நாராயணா
வாயினால் மந்திரம் வரிசையாய் ஓதிடும்
வழக்கமிலை நாராயணா .//

இந்தக்கவிமாலை ஒன்று போதுமே அந்த நாராயணன் அருள்புரிய!பாசுரம் எதற்கு,மந்திரம் எதற்கு?

sury said...

//கோடானு கோடியாய் செல்வம் குவித்திடும்
கோவிந்தா நாராயணா
கோடியில் ஒருதுளி கொடுத்தெந்தன் குறைகளை
குறைப்பாயா நாராயணா//
அப்படியா !! இதோ கொடுத்தேன் என்று சொல்லி உங்கள் முன் வந்து தந்தேன் எனத் தந்து விட்டால் வாங்கிக்கொள்ள இரு கைகள் போதுமோ ? அடடா !! நாராயண !! இன்னும் இரண்டு கைகள் கொடுங்கள் என்றல்லவா சொல்லிவிடுவோம் !!
நாராயண !! உன் அளவற்ற அருள் ஒன்றே போதும் !!
நின் கால் விரலின் ஒரு முனையில் எனக்கும் ஒரு இடம் தந்தருள்வாய் !!
பௌளி ராகத்தில் பாடட்டுமா !! அத்தனையும் பாட உடல் நலம் இல்லை. சிறிதேனும் பாட அருள் செய்
சுப்பு ரத்தினம்.

ரிஷபன் said...

இனிய தமிழில் அழகாய் அரங்கனைப் பாடிய உங்களால் நா இனிக்கிறது.. மெய் சிலிர்க்கிறது..

அப்பாதுரை said...

கவிதையின் எளிமை கவர்கிறது. தவமொன்றும் செய்யாமல் வரமொன்று கேட்கிறேன் - ரசித்தேன்.
'எளியோரும் வலியோரும் இல்லாத வரலாறு எழுத வா' பிடித்திருக்கிறது. காஸ்யபனுக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன். (சும்மா கிடைத்த சங்கு).

படிக்கப் படிக்க வந்து கொண்டே இருக்கிறதே சிவகுமாரன்?

வழக்கம் போல் பிரபாகரனின் பாடலும் அருமை.

இதுவும் பாசுரம் தான். எளிய பாசுரம். அருட்கவி ஆழ்வார் என்று உங்களை அழைக்க வேண்டியது தான்.

Lalitha Mittal said...

my vocabulary is too poor to give a
proper comment!god bless u with more and more such verses and fulfill all yr wishes!

Rathnavel said...

அருமை.
மனசார வாழ்த்துகிறேன்.
உங்கள் கவிதையை எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
வாழ்த்துகள்.

sury said...

http://youtu.be/kDin5oGE-ys

inge varungal

subbu thatha

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

அருமை...
அற்புதம்...
படித்’தேன்’.ரசித்’தேன்’...

kavithai (kovaikkavi) said...

நிறைவான பக்தி மாலை. மிகச் சிறப்பு. பாரட்டுடன் வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com

thirumathi bs sridhar said...

பிரமிப்பாய் இருந்தது.வாழ்த்துகள்

Arun said...

arumai :)

சமுத்ரா said...

நன்றாய் இருக்கிறது

சமுத்ரா said...

உங்களுக்கு அந்தாதி எழுதத் தெரியுமா? கல்லூரி நாட்களில் 'திருமால் அந்தாதி'எழுதப்போய் கைவிட்டு விட்டேன்.

ஹ ர ணி said...

அன்புள்ள சிவகுமரன்...

நாராயணப் பாடலைப் படித்துவிட்டு மனம் கசிகிறேன். சொற்களைத் தேர்வதிலும் அதனை வாக்கியங்களில் அமைப்பதில் நன்கு தேர்ந்த கடவுளின் அருள் கிடைத்த பான்மை புரிகிறது.

ஒரு விஷயம் மட்டும் சொல்ல வேண்டும். இதனை யாரேனும் பாடலாகப் பாட முயற்சிக்கையில் இசையில் மிகுந்த கவனம் வேண்டும். பாடலின் வரிகளில் இசை அமரவில்லை. அல்லது இசையில் சில சொற்கள் தயக்கங் காட்டுகின்றன.

எனவே பக்தியிசை காதுக்கு இனிமையாக இருக்கவேண்டும். எனவே இந்தப் பாடலைப் பாடும்போது கேட்கமுடியவில்லை. இது எனக்கு நேர்ந்த அனுபவம். மனதிற்குப் பட்டதைக் கூறுகிறேன்.

உங்கள் பதிவிற்கு வரும்போது பாடலை மட்டும் படித்துவிட்டுப் போக விரும்பவில்லை. இசையையும் கேட்க விரும்புகிறேன்.

நன்றி சிவகுமரன்.

sury said...

//உங்கள் பதிவிற்கு வரும்போது பாடலை மட்டும் படித்துவிட்டுப் போக விரும்பவில்லை. இசையையும் கேட்க விரும்புகிறேன்.//ஹ ரி ணி அவர்கள் பின்னூட்டம் படித்தேன். ஹரிணி அவர்கள் பதிவுகளைப் படித்திருக்கிறேன்.
அவர் மேல் எனக்கு மிகுந்த மரியாதையும் மதிப்பும் உள்ளதென்பதை முதற்கண் சொல்லக்கடமைப்பட்டிருக்கிறேன்.

ஒரு பாடலைப் பாடிட நினைப்பவர் அதைப் பாடுபவர் சாதாரணமாகத் தன்னைச் சங்கீத வல்லுனராக இருக்கவேண்டும் எனத் தன்னைத் தானே நிர்ப்பந்திததுக்கொள்வதில்லை. ஆண்டவன் சன்னதியிலே தன சூழலையே நினைவில் கொள்ளாது பலர் பாடுகின்றனர். இவர்கள் பாடுவதிலே தாளம் இருக்கிறதா, உச்சரிப்பு சரியாக இருக்கிறதா, அவர்கள்
பாடும் ராகத்திலே எங்கேனும் அபஸ்வரங்கள், ராக பேதங்கள் ஏற்படுகின்றனவா என்று கவனிப்பது சரிதானா என எனக்குத் தெரியவில்லை. இறையைப் பாடுவது பக்திப் பரவசத்தில் ஏற்படும் ஒரு தூண்டுதல். அந்தத் தூண்டுதலுக்கு இடையே ராக இலக்கணங்கள், தாளத்தின் சன்னிதானங்கள் ஆர்ப்பரிப்பதில்லை.

ஹரிணி ஒரு பாட்டுக்கச்சேரிக்குச் சென்று அங்கு ஒரு பாடகர் சொல்லிலோ, உச்சரிப்பிலோ, தாளங்களிலோ, ராக நுணுக்கங்களிலோ தவறு செய்தால், தட்டிக்கேட்பதில் தவறேதுமில்லை. சொல்லப்போனால் அது அவரது உரிமைதான். மறுப்பதற்கில்லை.

அருட்கவி வலை ஒரு ஆண்டவனின் சன்னிதானம். அங்கே பக்தர்களின் பெருங்கூட்டம் பெரும் ஆரவாரத்துடன்
அலை மோதுகின்றது. அவர்களில் ஓரிருவர் ஓங்கிய குரலில் இறையைப் பாடுகிறார்கள். அதைப் பார்ப்பவர்கள்,
கேட்டுத்தான் ஆகவேண்டும் எனக் கட்டுப்பாடுகள் ஏதேனும் இல்லையே !! பக்தர் பாடுவது தன் பக்தியின் மேலீட்டினால். அதை நாலு பேர் பாராட்டித் தனக்கு சால்வைகள் போர்த்தவேண்டும் என்ற எதிர்பார்ப்பில் அல்ல.

நிற்க. எந்த ஒரு கவிதையும் சந்தத்துடன் எழுதப்பட்டிருப்பின் அதை ஏதேனும் ஒரு உரிய ராகத்தில் தக்க தாளத்தில் பாட இயலும். இருப்பினும் கவிதைகளின் சில வரிகள் இலக்கணக் கோடுகளை சற்றே மீறியதாக இருந்தாலும் அங்கே ராகங்கள் தடுமாறத்தான் செய்யும். நான் பாடகன் அல்ல. இருந்தாலும் கர்னாடக சங்கீத இலக்கணங்கள் கற்றவன் ஆதலினால் இதைச் சொல்கிறேன். குறிப்பாக, திருமதி தங்கமணி அவர்கள் கவிதைகள் இசை இலக்கணத்திற்கு ஒரு உதாரணம். அருட்கவி கவிதைகள் ப்க்திப் பிரவாகம். ஒரு தானே புயல் போன்றது. மனதை இழுத்துக்கொண்டு எங்கோ ஆண்டவன் சன்னிதானத்தில் சேர்த்துவிடும் தன்மைத்தானது. அங்கே ராகங்கள், தாளங்கள் இல்லை. பக்தி ஒன்று தான் பிரதானம்.

ஹரிணி மேல் எனக்கு மிகுந்த மதிப்பும் மரியாதையும் உண்டு என மறுபடியும் சொல்லிக்கொள்வேன். இருப்பினும் அவரது கருத்துக்களுடன் ஒத்துப்போக இயலவில்லையே எனவும் வருந்துகிறேன்.

சுப்பு ரத்தினம்.

சிவகுமாரன் said...

பேராசிரியர் திரு ஹரணி அவர்களின் கருத்துக்கு முதற்கண் தலைவணங்குகிறேன். அய்யா சுப்புரத்தினம் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியையும் உரித்தாக்குகிறேன்.
நான் முறையாக தமிழ் இலக்கணம் கற்றவனல்ல. ஒரு கவிதையைப் படித்தால் அது போல் என்னால் எழுத முடிகிறது. சில கவிதைகள் என்ன யாப்பு இலக்கணத்தில் எழுதியிருக்கிறேன் என்று கூட என்னால் சொல்ல இயலாது. இந்தக் கவிதையைப் போல - என்று தான் சொல்ல முடியும். உதாரணத்திற்கு இந்த கவிதை வள்ளலாரின் " ஒருமையுடன் நினது திருவடி நினைக்கின்ற உத்தமர்தான் உறவு வேண்டும் " என்னும் திருவருட்பாவின் யாப்பிலக்கணத்தை அடிப்படையாகக் கொண்டது. பன்னிரு சீர் கழி நெடிலடி ஆசிரிய விருத்தம் என்று நினைக்கிறேன்.
அந்த திருவருட்பாவுக்கு இசையமைத்துப் பாட முடியுமென்றால் இந்த கவிதையும் பாடலாய் பாட முடியும்.
எனக்கு இசை ஞானம் இல்லை. என் தம்பிக்கு குரல்வளம் இருக்கிறதே ஒழிய சங்கீதம் கற்றவனல்லன்.
அய்யா சூரி அவர்கள் பாடியதையும் இத்துடன் இணைக்கிறேன். திரு ஹரணி அவர்கள் கேட்டு கருத்திடவும்அய்யா சூரி போன்ற இசைஞானம் உள்ளவர்கள் பாராட்டும் போது நான் எழுதுவது சரியென்றே நினைக்கத் தோன்றுகிறது. .
பாடல் கேட்கும் வகையில் இல்லாவிட்டாலும் , அய்யா சொல்வது போல் இது பக்தியின் மேலீட்டால் வந்த வினை. என் பாடலை என் தம்பி கூட பாடாவிட்டால் நான் வேறெங்கு போவேன் ?

சிவகுமாரன் said...

\அருட்கவி வலை ஒரு ஆண்டவனின் சன்னிதானம். அங்கே பக்தர்களின் பெருங்கூட்டம் பெரும் ஆரவாரத்துடன்
அலை மோதுகின்றது. அவர்களில் ஓரிருவர் ஓங்கிய குரலில் இறையைப் பாடுகிறார்கள்///

\\அருட்கவி கவிதைகள் ப்க்திப் பிரவாகம். ஒரு தானே புயல் போன்றது. மனதை இழுத்துக்கொண்டு எங்கோ ஆண்டவன் சன்னிதானத்தில் சேர்த்துவிடும் தன்மைத்தானது. அங்கே ராகங்கள், தாளங்கள் இல்லை. பக்தி ஒன்று தான் பிரதானம்.///

தங்களின் பாதங்களில் விழுந்து நமஸ்கரிக்கத் தோன்றுகிறது. அய்யா.
இந்தப் பாராட்டுகள் அனைத்துக்கும் உரித்தானவன் எனையாளும் ஈசனே.

நெல்லி. மூர்த்தி said...

"ஓடாத காவிரி ஒளிராத சூரியன்
உதவுமோ நாராயணா
ஒய்யாரமாய் நீயும் உறங்கினால் உலகுக்கு
ஒப்புமோ நாராயணா..."

நான் ஆத்திகனில்லை. இருப்பினும், ஒவ்வொரு வரியும் தங்களின் உணர்வுகளை, ஆன்மீக அனுபவத்தை தென்றலாய் தருகின்றது. ஆன்மீகப்பாடலாய் இருப்பினும் உலகம் உய்வதற்காக இறைவனிடம் வேண்டுகோள் வைத்திருப்பது மனம் கசியவைக்கின்றது.

சமுத்ரா said...

// சங்கரன் துணைகொண்டு சபரியைப் பெற்றவா
சங்கர நாராயணா //
இதன் அர்த்தம் என்ன? ஐயப்பனின் தந்தை என்றா?
சபரி என்பது ஐயப்பனின் பக்தையின் பெயர் தானே?
ஒரு வேளை ஆகுபெயரோ?

சிவகுமாரன் said...

நன்றி தினேஷ்குமார், GMB அய்யா, ஜீவி, சுந்தர்ஜி, ராஜேஸ்வரி , சென்னைப்பித்தன், சுப்புரத்தினம் அய்யா, ரிஷபன், அப்பாத்துரை, லலிதாமிட்டால், ரத்னவேல், ராமமூர்த்தி, திருமதி ஸ்ரீதர், அருண், சமுத்ரா , ஹரணி, நெல்லி மூர்த்தி,
அனைவருக்கும் இதயங்கனிந்த நன்றிகள் .அனைவருக்கும் அரங்கனின் அருள் கிடைக்க பிரார்த்திக்கிறேன்

சிவகுமாரன் said...

சபரி என்று இங்கு சபரிநாதன் அய்யப்பனைத் தான் குறிப்பிடுகிறேன்.
கடம்பா, இடும்பா என்று முருகனை அழைக்கிறோம் ஆனால் அவை அவனால் ஆட்கொள்ளப்பட்ட அசுரர்களின் பெயர்கள் அல்லவா . அப்படித்தான் இதுவும்.
நன்றி சமுத்ரா சுட்டிக் காட்டியதற்கு.

மாலதி said...

இனிய தமிழில் அழகாய்....இதயங்கனிந்த நன்றிகள்

Lalitha Mittal said...

sivakumaran

"நாகேந்திர ஹாராய "என்று தொடங்கும் சிவபஞ்சாக்ஷர ஸ்லோகத்தைத் தழுவி ஒரு தமிழ் பஞ்சாக்ஷரத் துதி (சிவனருள் இருந்தால் )என்வலையில் இன்றிரவு போஸ்ட் பண்ணுவேன் ; உன் போன்ற சிவபக்தர்கள்
வருகை தந்தால் மகிழ்வேன் .

இராஜராஜேஸ்வரி said...

தாயிடம் சேர்கின்ற தனயனாய் உன்னிடம்
தஞ்சம்நான் நாராயணா

அருமையான பாடல்.. பாராட்டுக்கள்..