Tuesday, December 20, 2011

மண் சுமந்தவா



நமசிவாய ஓம் - சுவாமி
  நமசிவாய ஓம்
நமசிவாய ஓம் - சுவாமி
  நமசிவாய ஓம் 

மண் சுமந்தவா - பாதி 
   மதி சுமந்தவா 
பெண் சுமந்தவா - பொங்கும் 
   புனல் சுமந்தவா 
கண்  சிவந்தவா - நெற்றிக் 
   கனல் சுமந்தவா
என் சுமைகளைக்- கொஞ்சம் 
   இறக்கி வைக்க வா .                               (நமசிவாய ஓம் )

ஆலம் உண்டவா - நல்ல 
   அரவம் பூண்டவா 
சூலம் கொண்டவா - நெற்றிச் 
   சுடரைக் காட்டவா 
கோலம் காட்டவா - என்னில் 
   குடி புகுந்தவா 
நீல கண்டனே - நெஞ்சில் 
   நேசம் கொண்டு வா .                               (நமசிவாய ஓம் )


பித்தன் ஆனவா - சக்திப் 
   பிரியன் ஆனவா 
அத்தன் ஆனவா - என்னை 
   அடிமையாக்க வா 
சத்தம் ஆனவா - அதன்
   சரணம் ஆனவா 
நித்தம் பாடினேன் - கேட்டு 
     நீயும் ஓடி வா .                                        (நமசிவாய ஓம் )
 . 
தோடணிந்தவா - புலித் 
   தோலணிந்தவா
ஆடல் காட்ட வா - உன் 
   அழகைக் காட்ட வா 
பாடல் கேட்டு வா - எந்தன்
   பக்திபார்த்து வா 
கூடல் ஆண்டவா - எந்தன் 
    குரலைக் கேட்டுவா .                                (நமசிவாய ஓம் )


இடப வாகனா - தமிழ்
   இசையின் மோகனா 
நடன  ஈஸ்வரா - ப்ரணவ
   நாத சங்கரா 
சுடலைக் காத்தவா - உயிர்
  சுருதி  சேர்த்தவா 
கடவூர் ஆண்டவா - என் 
   கவலை போக்க வா .                                   (நமசிவாய ஓம் )


அம்மை ஆனவா - எங்கள்
   அப்பன் ஆனவா
இம்மை சிறக்க வா - அதில்
   இன்பம் சேர்க்க வா
நம்ப வைத்தவா - உன்னை
   நாட வைத்தவா
ஜம்புகேஸ்வரா - இந்த
   ஜன்மம் காக்க  வா .                                     (நமசிவாய ஓம் )


கோட்கள் ஆள்பவா - அவை
   கூடி சூழ்பவா
நாட்கள் திறப்பவா - அதை
   நகரச் செய்பவா
மீட்க ஓடிவா - வாழ்வை
   மேன்மையாக்க வா
ஆட்கொண்டேஸ்வரா - என்னை
   ஆண்டு கொள்ளவா .                                     (நமசிவாய ஓம் )


காற்றைப் படைத்தவா - மூலக்
   கனலை உடைத்தவா
நீற்றைத் தந்தவா - இந்த
   நிலத்தில் வந்தவா
ஏற்றுக் கொள்ளவா - என்னை
   இழுத்துச் செல்லவா
கூற்றை உதைத்தவா - என்னைக்
   கூட்டிக் கொள்ளவா .                                     (நமசிவாய ஓம் )


ஆதியானவா - வாழ்வின்
   அந்தம் ஆனவா
ஜோதி ஆனவா - உயிரின்
   சுடரும் ஆனவா
நாதம் ஆனவா - அதில்
   நடனம் செய்பவா
வேதம் ஆனவா - எந்தன்
    விதியை மாற்ற வா                                      (நமசிவாய ஓம் )


அகில மானவா - அணுவின்
   அணுவு மானவா
முகிலு மானவா - முகிலின்
   மழையு மானவா
பகலும் ஆனவா - வரும்
   இரவும் ஆனவா
சகலம் ஆனவா - உனது
   சக்தியோடு வா                                              (நமசிவாய ஓம் )


வாய்மை யானவா - அதன்
   வலிமை யானவா 
தூய்மை யானவா - உன்னைத்
   தொடரச் செய்தவா 
நேய மானவா - எந்தன் 
   நெஞ்சில் நின்றவா 
தாயு மானவா - என்னைத்
   தாங்கிக்  கொள்ள வா                                    (நமசிவாய ஓம் )


தாளம் ஆனவா - இசைத் 
   தமிழும் ஆனவா 
நாளம் நிறைந்தவா - எந்தன்
   நரம்பில் உறைந்தவா 
ஓலம் கேட்டு வா- எந்தன் 
   உளறல் கேட்க வா 
காளத்தி நாதா - எந்தன்
   கானம்  கேட்க வா                                           (நமசிவாய ஓம் )


விறகு விற்றவா - கை 
   வளையல் விற்றவா 
மறைகள் கற்றவா - மன்
   மதனைச் செற்றவா 
கறைகள் அற்றவா - ஒரு
   களங்கம் அற்றவா 
பிறவி அற்றவா - என்னைப் 
    பிடித்துப் பற்ற வா                                           (நமசிவாய ஓம் )


முக்கண் பெற்றவா - வேல்
   முருகைப் பெற்றவா 
தக்கன் மருமகா - அவன் 
   தலையைக் கொய்தவா 
சிக்கல் தீர்க்க வா - எந்தன்
   சிரமம் போக்க வா
சொக்க நாதனே - என்னைச் 
   சொந்த மாக்க வா                                            (நமசிவாய ஓம் )


பரியை அழைத்தவா - பாண்டி
   படையில் நுழைத்தவா 
நரியை அடைத்தவா - வைகை 
   நதியை உடைத்தவா 
புரிய வைத்தவா - உன்னைப்
    புகழ வைத்தவா 
அரியின் மைத்துனா - என்னை
   அருகில் சேர்க்கவா                                         (நமசிவாய ஓம் )


உமையின் காதலா - அகில 
   உலக நாயகா 
சுமைகள் நீக்க வா - எந்தன் 
   சுயத்தைக்  காக்க வா 
சமயம் காத்தவா - தமிழ்ச்
   சங்கம் வளர்த்தவா 
இமயம் உறைபவா - எந்தன்
   இதயம் நிறைய வா                                         (நமசிவாய ஓம் )


தில்லை ஆண்டவா - பெருந்
   துறையூர் ஆண்டவா 
நெல்லை ஆண்டவா - வெண்ணெய்
   நல்லூர் ஆண்டவா 
தொல்லை  நீக்கவா - வாட்டும் 
   துன்பம் போக்க வா
அல்லல் போக்க வா - என்னை 
   அணைத்துக்  கொள்ள வா                             (நமசிவாய ஓம் )

அருணை ஆண்டவா - திரு
   ஆரூர் ஆண்டவா 
கருணை காட்ட வா - மனக்
   கலக்கம் ஓட்ட வா 
இருளைப் போக்க வா - வாழ்வில் 
   இனிமை சேர்க்க வா 
அருளைக் கூட்ட வா - தேவ 
   அமுதம் ஊட்ட வா                                           (நமசிவாய ஓம் )


கயிலை ஆண்டவா - புனிதக் 
   காசி ஆண்டவா 
மயிலை ஆண்டவா - பாண்டி 
   மதுரை ஆண்டவா 
உயிலை எழுதவா - அதில்
   உயிரை எழுதவா 
துயில் எழுந்துவா - எந்தன் 
   துயரம் தீர்க்க வா                                               (நமசிவாய ஓம் )

கண்ணைத் தோண்டவா- பிள்ளைக்
   கறி சமைக்க வா  
மண்ணைத் தோண்டவா - தோண்டிப்
   பாதம் தீண்டவா 
விண்ணைத் தாண்ட வா - எல்லாம்
   வீண் தானல்லவா 
என்னைத் தோண்டினேன் - வருக 
    ருத்ர தாண்டவா                                              (நமசிவாய ஓம் )

                                           

பாடலை என் தம்பி பிரபாகரனின் குரலில் கேட்டு மகிழுங்கள். 



(சிவகுமாரன் கவிதைகளில் ஏற்கெனவே இடுகையிடப்பட்டது. )

12 comments:

G.M Balasubramaniam said...

ஒவ்வொரு அடியும் அரனின் ஒரு கதையை தன்னுள் அடக்கி இருக்கிறது. அவனது பெருமைகளை சாற்றியே கவிதை புனையும் விதம் மிக நேர்த்தி. வாழ்க வளமுடன்.

இராஜராஜேஸ்வரி said...

நமசிவாய ஓம் - சுவாமி
நமசிவாய ஓம்
நமசிவாய ஓம் - சுவாமி
நமசிவாய ஓம்


பாட்லை இனிமையாய் கேட்டுக்கொண்டே படிக்கும் போது அரனின் தாண்டவம் மனம் நிறைந்து அருள்புரிகிறது..

மிகச்சிறப்பான ஆக்கம்..
வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்..

இராஜராஜேஸ்வரி said...

நமசிவாய ஓம் - சுவாமி
நமசிவாய ஓம்
நமசிவாய ஓம் - சுவாமி
நமசிவாய ஓம்


பாட்லை இனிமையாய் கேட்டுக்கொண்டே படிக்கும் போது அரனின் தாண்டவம் மனம் நிறைந்து அருள்புரிகிறது..

மிகச்சிறப்பான ஆக்கம்..
வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்..

இராஜராஜேஸ்வரி said...

நமசிவாய ஓம் - சுவாமி
நமசிவாய ஓம்
நமசிவாய ஓம் - சுவாமி
நமசிவாய ஓம்


பாட்லை இனிமையாய் கேட்டுக்கொண்டே படிக்கும் போது அரனின் தாண்டவம் மனம் நிறைந்து அருள்புரிகிறது..

மிகச்சிறப்பான ஆக்கம்..
வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்..

இராஜராஜேஸ்வரி said...

நமசிவாய ஓம் - சுவாமி
நமசிவாய ஓம்
நமசிவாய ஓம் - சுவாமி
நமசிவாய ஓம்


பாட்லை இனிமையாய் கேட்டுக்கொண்டே படிக்கும் போது அரனின் தாண்டவம் மனம் நிறைந்து அருள்புரிகிறது..

மிகச்சிறப்பான ஆக்கம்..
வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்..

இராஜராஜேஸ்வரி said...

நமசிவாய ஓம் - சுவாமி
நமசிவாய ஓம்
நமசிவாய ஓம் - சுவாமி
நமசிவாய ஓம்


பாட்லை இனிமையாய் கேட்டுக்கொண்டே படிக்கும் போது அரனின் தாண்டவம் மனம் நிறைந்து அருள்புரிகிறது..

மிகச்சிறப்பான ஆக்கம்..
வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்..

Lalitha Mittal said...

excellant composition accompanied by nice music!thanks fr both!

thendralsaravanan said...

படமும் பெரிது;பாடலும் பெரிது
வார்த்தைகள் எங்கிருந்து தான் பிரவாகமெடுக்கிறதோ....ஆச்சர்யம்... அருமை வாழ்த்துக்கள்!

அம்பாளடியாள் said...

அருமையான பகிர்வு!..பகிர்வுக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள் சகோ ..

Anonymous said...

ஹரிவராசனம் ' மெட்டில் அமைந்த இனிய பக்திப் பாடல் &
குரல் பதிவு மிகவும் அருமை. அசர வைத்தது.
சொற்கள் சுந்தரத் தாண்டவம் ஆடுகின்றன !

வே.நடனசபாபதி said...

எளிய நடையில் உள்ள தங்கள் பாடல் அருமை. அதை இனிமையாகப் பாடிய தங்கள் இளவல் திரு பிரபாகரன் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்

சமுத்ரா said...

உங்கள் அருட்கவி என்னையும் கவிதை எழுதத்தூண்டுகிறது.

மதனை எரித்தவா-என்
மனத்தில் நிறைந்தவா
மதியை தரித்தவா -வில்வ
மலர்கள் அணிந்தவா
நதியைத் தடுத்தவா -ஊழி
நடனம் புரிபவா
விதியைத் தகர்க்கவா-என்
வினைகள் அழிய வா !