Saturday, July 9, 2011

நடந்திடுவோம் கடந்திடுவோம்

  
                                                  முருகா முருகா வேல்முருகா 
                                                  முருகா முருகா வேல்முருகா 

வெற்றிவடி வேலவனை வேண்டித் தொழுதோம்
  வேதனைகள் தீர்க்கச் சொல்லி தேம்பி அழுதோம். 
கொற்றவையின் புத்திரனை கூவித் துதித்தோம்-அந்தக்
   கூத்தன்மகன் பாதத்திலே உள்ளம் பதித்தோம் .       ( முருகா ) 

உற்றபகை அத்தனையும் ஓட்ட வருவான்
   'ஓம் முருகா' என்று சொல்ல அள்ளித் தருவான்
சுற்றிவரும் வேலைக் கொண்டு சூழ்ச்சி தடுப்பான்
   தோகைமயில் ஏறிவந்து காட்சி கொடுப்பான்.             (முருகா )

ஞானப்பழம் ஆனவனின் காலைப் பற்றுவோம்
   நாதமயம் ஆனவன் கோயில் சுற்றுவோம்
ஆனைமுகன் தம்பியவன் அன்பைப் பாடுவோம் 
    ஆறுமுகன் பேரைச் சொல்லி ஆடிப் பாடுவோம்.        (முருகா )

ஆதிசக்தி மடியினில் வளர்ந்தவனாம் 
   ஆறெழுத்து மந்திரமாய் மலர்ந்தவனாம் 
ஜோதிமய மானவனின் செல்ல மகனாம் 
  சோதிக்காமல் அள்ளித்தரும் வள்ளல் குகனாம் .        (முருகா )

வேதகுரு பிரம்மனையே தண்டித்தவனாம் 
   வேலெடுத்து சூரன் தலை துண்டித்தவனாம் 
மாதுகுற வள்ளியினை மணந்தவனாம் 
   மால்மருகன் எங்கள் குறை உணர்ந்தவனாம் .             (முருகா )

அத்தனுக்கே ப்ரணவத்தின் பொருள் சொன்னவன்
   அண்டம் புவி அத்தனையும் ஆளும் மன்னவன் 
சித்தர் போகர் செய்துவைத்த சிலையானவன்
   செந்தூர்க்கடல் வீசுகின்ற அலையானவன்   .                (முருகா )

பழனிக்கு மாலையினை அணிந்திடுவோம்
   பாதம்தேய தேடிவந்து பணிந்திடுவோம்
குழந்தை வேலப்பன் முன்னே மண்டியிடுவோம் 
   குற்றம்குறை தீர்க்கச் சொல்லி தெண்டனிடுவோம்   .  (முருகா )

இடும்பனைத் துதித்தபின் மலை ஏறுவோம்
   இன்னல்துயர் குகனிடம் சென்று கூறுவோம்
குடும்பமே முருகனுக் கடிமை என்போம்
   குமரனுக்கே உயிர் உடைமை என்போம் .        .        .          (முருகா )

தேடிவந்த பக்தர்களின் உள்ளம் அறிவான் 
   தீயவினை பாவங்களை கிள்ளி எறிவான்
பாடிவந்து பாருங்களேன் பலன் அளிப்பான்
   பாசமழை சாரல் தன்னை அள்ளித் தெளிப்பான் .       .      (முருகா )

சுப்ரமண்ய வேலவனை பணிந்திடுவோம் 
   சொட்ட சொட்ட அருள்மழையில் நனைந்திடுவோம்
அப்பனவன் மலைதேடி நடந்திடுவோம்
   அவன்துணை கொண்டு விதி கடந்திடுவோம் .        .        . (முருகா)

                                                                                                     - சிவகுமாரன் 

( 2002  ஆம் ஆண்டு பழனிக்கு பாதயாத்திரை செல்லும் போது, வழிநடைப் பாடலாக எழுதி, உடனே மெட்டமைத்துப் பாடியது )  

பாடலைப் படுபவர் : பிரபாகரன்                                                                                                 

11 comments:

thendralsaravanan said...

நல்லாயிருக்கு பாடலும் பிரபாகரன் அவர்களின் குரலும்.வாழ்த்துக்கள்.

Anonymous said...

miga miga nandru.

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

பழம் நீ அப்பா.

வாழ்த்துக்கள்..

பாடல் வரிகள் இனிமை..
குரலும் நலம்..

நன்றிகள் பல..

http://sivaayasivaa.blogspot.com

சிவயசிவ

திகழ் said...

இரசித்தேன் நண்பரே

sury said...

தம்பி பிரபாகரன் அழகாக பாடியிருக்கிறார். அவருக்கு முருகன் எல்லா பேறும் கிடைக்க அருள் புரியட்டும். நானும் அந்த தண்ட பாணியின், பழனி மலையானின், அருள் பெற வேண்டுவேன். இரு குரலில் இங்கு பாடுவேன்.
subbu thatha
http://kandhanaithuthi.blogspot.com

ஆகுலன் said...

நல்ல பாடல்..
எனக்கும் இசை அமைத்து பாட ஆசை...(காலம் வரும்போது பார்போம்)

கவிநயா said...

அருமையான வழிநடைப் பாடல்.

ஆடிக் கிருத்திகை வாழ்த்துகள்!
வெற்றிவேல் முருகனுக்கு... அரோகரா!

அப்பாதுரை said...

படம் எந்தக் கோவில்? பழநியா?

கணீரென்றக் குரல் பிரபாகரனுக்கு. ஆடிப் பாடுவோம் என்பதை பாடி ஆடுவோம் என்று மாற்றிப்பாடியது மிகப் பொருத்தம். டிஎம்எஸ் இப்படி சில பாடல்களைப் பாடும் பொழுது தன்னையறியாமலே சீர் மாற்றிப் பாடிவிடுவாராம். (ஏன், பாடல்களைப் பாதியிலே நிறுத்தி விடுகிறார்?)

செந்தூர் அலையானவன் - நல்ல உருவகம்.

அப்பாதுரை said...

அடுத்த பழநி பாத யாத்திரை எப்போது?

சிவகுமாரன் said...

இந்தக் கோவில் பழனி மலை தான்.
என் தம்பி சார்பில் நன்றிகள் அப்பாஜி.
அவன் வரியை மாற்றி எல்லாம் பாடவில்லை. அவனது திருமணத்திற்கு நாங்கள் வெளியிட்ட மலரில் இந்தப் பாடல், பாடி ஆடுவோம் என்று தான் உள்ளது இடுகையிடும் போது நான்தான் மாற்றி இருக்கிறேன்

அடுத்த பழனி யாத்திரை ஜனவரி மாதம் தைப் பூசத்தின் போது

சிவகுமாரன் said...

நன்றி தென்றல், Anonymus,ஜானகிராமன், திகழ், சுப்புத்தாத்தா, கவிநயா, ஆகுலன், & அப்பாஜி.