Sunday, May 15, 2011

இன்னுலகம் காக்கும் அன்னையே.


ஆதிசக்தி காளி மாரி
   அம்மை அபிராமி என்று 
   ஆயிரம் பேர் கொண்ட அன்னையே.
 அன்னை அன்னை அன்னை என்று 
   அனுதினமும் உன்னை எண்ணி 
   அர்ப்பணித்தேன் நானும் என்னையே.
யாதுமாகி  நின்றவள்  நீ
   யாவரையும் வென்றவள் நீ 
   ஈவு  கொண்டு  இரங்கு அன்னையே 
 இறைவனார் உடம்பில் பாதி 
   இருந்து கொண்டு ஆட்சி செய்து 
   இன்னுலகம் காக்கும் அன்னையே.                                 1. 

பட்டருக்கு மனமிரங்கி  
   பௌர்ணமியை வரவழைத்து  
   பவனிவரச் செய்த அன்னையே 
  பாமரனாம் காளமேகம்  
   படுத்துறங்க கனவில்வந்து  
   பாட்டெழுதச் சொன்ன அன்னையே.
இட்டமுடன் நானளிக்கும் 
   இக்கவியைக் கேட்டுருகி 
   இன்முகத்தைக் காட்டு அன்னையே.
  இறைவனார் உடம்பில் பாதி 
   இருந்து கொண்டு ஆட்சி செய்து 
   இன்னுலகம் காக்கும் அன்னையே.                                 2.

கம்பன் குறை தீர்ப்பதற்கு  
   கிழவியாக வேடமிட்டு  
   கிழங்கு விற்க வந்த அன்னையே.
 கால்வலிக்க நடந்து வந்து 
   களைப்படைந்த வள்ளலாரின்
   கடும்பசியைத் தீர்த்த அன்னையே.
எம்புலம்பல் கேட்டு உந்தன்
   இதயம் ஏன் இரங்கவில்லை 
   இன்னும் என்ன தயக்கம் அன்னையே
 இறைவனார் உடம்பில் பாதி 
   இருந்து கொண்டு ஆட்சி செய்து 
   இன்னுலகம் காக்கும் அன்னையே.                                 3. 

பாலகன் அழைத்த போது
   பரிதவிக்க ஓடிவந்து 
   பாலமுதம் தந்த அன்னையே
  பரமன் நஞ்சை உண்ட போது 
   பாய்ந்து வந்து அதைத் தடுத்து 
   பூவுலகம் காத்த அன்னையே
ஆலமுண்ட கண்டனிடம் 
   அடியவனுக்கா யிரங்கி   
   அருள்புரியச் சொல்வாய் அன்னையே
  இறைவனார் உடம்பில் பாதி 
   இருந்து கொண்டு ஆட்சி செய்து 
   இன்னுலகம் காக்கும் அன்னையே.                                 4. 

ஆதி சங்கரர் அழைக்க 
   அழகு பாத சிலம்பொலிக்க 
   அன்ன நடை போட்ட அன்னையே
  அண்ணல் பரம ஹம்சர் உன்னை 
   அழைத்த போது காட்சி தந்து  
   அருள் கொடுத்த காளி அன்னையே 
ஏது பிழை என்ன குறை 
   என்னிடத்தில் யானறியேன்
   ஏற்றருள வேண்டும் அன்னையே 
 இறைவனார் உடம்பில் பாதி 
   இருந்து கொண்டு ஆட்சி செய்து 
   இன்னுலகம் காக்கும் அன்னையே.                                 5. 

சூரனை வதைப்பதற்கு 
   சுப்பிரமணிய பாலனுக்கு 
   வேலெடுத்து தந்த அன்னையே 
  சூலம் சக்ரம் வஜ்ர மேந்தி  
   துர்க்கையாக வடிவெடுத்து
   மகிஷனை அழித்த அன்னையே
யாரெனை எதிர்த்த போதும் 
   யானுனை துதித்து வந்து 
   யாவும் வெல்ல வேண்டும் அன்னையே
 இறைவனார் உடம்பில் பாதி 
  இருந்து கொண்டு ஆட்சி செய்து 
  இன்னுலகம் காக்கும் அன்னையே.                                 6. 

வான்மழைக்கு மாரி என்றும்
   வாட்டும் வெப்பக் காளி என்றும்
   வையம் தன்னை ஆட்டும் அன்னையே.
  வாழ்க்கை உந்தன் கையிருக்க
   விதியை நம்பி ஆவதென்ன
   வந்தடைந்தேன் நம்பி உன்னையே.
ஏன் மனம் இரங்கவில்லை?
   ஏன் இதயம் இளகவில்லை?
   என்மேல் என்ன கோபம் அன்னையே
  இறைவனார் உடம்பில் பாதி 
   இருந்து கொண்டு ஆட்சி செய்து 
   இன்னுலகம் காக்கும் அன்னையே.                                 7. 

நீரும், தீயும், காற்றும், வானும்
   நிலத்தினோடு பூதமைந்தும்
   நீக்கமற்று இருக்கும் அன்னையே 
  நித்தம் நித்தம் கோடி கோடி 
   நித்திலத்தில் தோன்றும் ஊழி 
   அத்தனையும் மாற்றும் அன்னையே
ஏறெடுத்துப் பார்ப்பதற்கும் 
   என்ன தடை நானறியேன் 
   இரக்கம் காட்ட வேண்டும் அன்னையே
  இறைவனார் உடம்பில் பாதி 
   இருந்து கொண்டு ஆட்சி செய்து 
   இன்னுலகம் காக்கும் அன்னையே.                                8. 

உலகம் ஏழும் நடுநடுங்க
   உயிர்கள் கோடி தலைவணங்க 
   விண்ணும் மண்ணும் ஆளும் அன்னையே
  உருவெடுத்த அத்தனைக்கும் 
   உணவளித்து உணர்வளித்து 
   ஊட்டுகின்ற எங்கள் அன்னையே 
இலகுவாக்கி, இனிமையாக்கி 
   எனது வாழ்வை உனதுமாக்கி
   இழுத்துச் செல்ல வேண்டும் என்னையே
  இறைவனார் உடம்பில் பாதி 
   இருந்து கொண்டு ஆட்சி செய்து 
   இன்னுலகம் காக்கும் அன்னையே.                                 9. 

அங்குசம் கரும்பு வில் வேல்
   அங்கையில் உடுக்கை சூலம் 
   ஆயுதங்கள் கொண்ட அன்னையே 
  அன்பினில் திளைத்த உள்ளம் 
   அடைக்கல மளிக்கும் பாதம் 
   அருள்மழை பொழிக்கும் அன்னையே .
எங்குமே நிறைந்திருந்தும் 
   என்னுளம் உறைந்திருக்க 
   என்ன தவம் செய்தேன் அன்னையே 
  இறைவனார் உடம்பில் பாதி 
   இருந்து கொண்டு ஆட்சி செய்து 
   இன்னுலகம் காக்கும் அன்னையே.                                 10 .

உந்தன் நாமம் தன்னை நானும் 
   ஊனுடம்பு உள்ளவரை 
   உச்சரிக்க வேண்டும் அன்னையே 
  உச்சரித்த வேளை உந்தன் 
   உருவம் வந்து முன்பு தோன்றும் 
   வரம் எனக்கு வேண்டும் அன்னையே .
எந்தத்துயர் வந்த போதும்
   ஈசனோடு இணைந்து வந்து 
   என்னை மீட்க வேண்டும் அன்னையே.
  இறைவனார் உடம்பில் பாதி 
   இருந்து கொண்டு ஆட்சி செய்து 
   இன்னுலகம் காக்கும் அன்னையே.                                 11


ஓம்சக்தி சக்தியென்று 
   உளமுருகச் சொல்பவரை
   ஓடிவந்து காக்கும் அன்னையே
  உன்னை எண்ணி வழிபடாத 
   வீணருக்கும் படியளந்து
   உயிர்கொடுத்து காக்கும் அன்னையே
யாமிருக்கும் நிலையறிந்து 
   இன்னல் துயர் களைந்தெறிந்து 
   இருள் விலக்க வேண்டும் அன்னையே.
  இறைவனார் உடம்பில் பாதி 
   இருந்து கொண்டு ஆட்சி செய்து 
   இன்னுலகம் காக்கும் அன்னையே.                                 12 . 

சக்தி சக்தி சக்தியென்று 
   ஜெகம் அதிரக் கூவுகின்றேன்
   சடுதியில் வந்திறங்கு அன்னையே
 சங்கடங்கள் தீர்த்துவைத்து 
   சக்தியெல்லாம் எனக்களித்து 
   சுத்த சிவம் ஆக்கு என்னையே
இக்கவியைக் கேட்டு உள்ளம் 
   இளகிவந்து இன்பமாகி 
   என்னை உன்னில் கூட்டு அன்னையே
  இறைவனார் உடம்பில் பாதி 
   இருந்து கொண்டு ஆட்சி செய்து 
   இன்னுலகம் காக்கும் அன்னையே.                                 13 .

சுந்தரேசர் நந்தியோடு 
   சூழவந்து காட்சி தந்து 
   சுகமளிக்க வேண்டும் அன்னையே
  சொக்கநாதர் கரம்பிடித்து 
   சொக்கும் கோலம் கண்ட பின்பே
   சொர்க்கம் செல்ல வேண்டும் அன்னையே
எந்தன் உடல் எந்தன் உயிர் 
   இன்னும் இங்கு இருக்கும் வரை 
   என்னை ஆள வேண்டும் அன்னையே
  இறைவனார் உடம்பில் பாதி 
   இருந்து கொண்டு ஆட்சி செய்து 
   இன்னுலகம் காக்கும் அன்னையே.                             14 .

அன்னை அன்னை அன்னையென்று 
   அனுதினமும் உன்னை எண்ணி 
   அர்ப்பணித்தேன் நானும் என்னையே 
  ஆதி சக்தி காளி மாரி
   அம்மை அபிராமி வந்து 
   ஆட்கொளத்தான் வேண்டும் அன்னையே.
என்னை என்னை என்னை இன்னும் 
   எத்தனை நாள் காக்க வைப்பாய் 
   இன்று பதில் சொல்வாய் அன்னையே
  இறைவனார் உடம்பில் பாதி 
   இருந்து கொண்டு ஆட்சி செய்து 
   இன்னுலகம் காக்கும் அன்னையே.                             15.

                                                                      -சிவகுமாரன்  

பாடலைப் பாடியிருப்பவர்: என் சித்தப்பா திரு அரசு அவர்கள் 







19 comments:

Rathnavel Natarajan said...

அருமையான கவிதை.
வாழ்த்துக்கள்.

sury siva said...

//நித்தம் நித்தம் கோடி கோடி
நித்திலத்தில் தோன்றும் ஊழி
அத்தனையும் மாற்றும் அன்னையே//

எத்துணை உண்மை !
நானும் பாடுவேன்
சுப்பு ரத்தினம்.
http://menakasury.blogspot.com

Lalitha Mittal said...

சிவகுமாரன்,



அன்னையின் கன்னலைக் களவு செய்து, சாறெடுத்து கவிதையின் ஒவ்வொருவரியிலும் கலந்து பிசைந்தாயோ?ஒவ்வொரு சொல்லும் ஒரு தேன் குளம்!உன்னுள் குடிகொண்டு இத்தகைய இனிமையான

கவிதைகளை எழுதவைத்து எங்களுள் இனிய அனுபவத்தை எழுப்பும் என் அன்னை அபிராமி முன் கைகுவித்து நிற்கிறேன்.



இன்று நானும் சிவதுதியான மார்க்கபந்து ஸ்லோகத்தைத் தழுவி ஒரு பஜனைப் பாட்டு பதிவு செய்துள்ளேன் .நேரம் கிடைக்கும்போது வருவாய் என்று எதிர்பார்க்கிறேன்.

RVS said...

சாக்தத்தின் பெருமையை பறைசாற்றுகிறது இந்தக் கவிதை/அருட் பாடல். நன்று. ;-))

sury siva said...

http://youtu.be/Tb50wmStqJ

இங்கே வாருங்கள்.
சுப்பு தாத்தா

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

//சொக்கநாதர் கரம்பிடித்து
சொக்கும் கோலம் கண்ட பின்பே
சொர்க்கம் செல்ல வேண்டும் அன்னையே
எந்தன் உடல் எந்தன் உயிர்
இன்னும் இங்கு இருக்கும் வரை
என்னை ஆள வேண்டும் அன்னையே
இறைவனார் உடம்பில் பாதி
இருந்து கொண்டு ஆட்சி செய்து
இன்னுலகம் காக்கும் அன்னையே. //

நல்ல அற்புதமான பிரார்த்தனை தோழரே .. எல்லோரும் விரும்பும் எண்ணத்தை கவியாக்கித் தந்திருக்கிறீர்கள்.. வாழ்த்துக்கள்...

சிவகுமாரன் said...

நன்றி ரத்னவேல் அய்யா . , சூரி அய்யா, லலிதா மேடம், RVS , & சிவ. ஜானகிராமன்

சிவகுமாரன் said...

சூரி சொன்னது
\\http://youtu.be/Tb50wmStqJ
இங்கே வாருங்கள்.
சுப்பு தாத்தா//

இந்த தளத்துக்கு சென்றால் The URL contained a malformed video ID. என்று வருகிறதே கொஞ்சம் சரி செய்யுங்கள் அய்யா.

sury siva said...

http://youtu.be/Tb50wmStqJ4

ஐ டி யில் இறுதியில் ஒரு நாலு விட்டுப்போயிற்று. நான் முகன் அல்லவா ! அவனை விடலாமா ? சேர்த்து விட்டேன்.
இப்போது கேளுங்கள்.
சுப்புரத்தினம்

sury siva said...

http://youtu.be/JmH694ai7dA

தேஷ் ராகத்தில் இங்கே ஒலிக்கிறது.
இதையும் கேளுங்கள்.
சுப்பு தாத்தா
http://vazhvuneri.blogspot.com

திகழ் said...

அழகான வரிகள்

வை.கோபாலகிருஷ்ணன் said...

அன்னையைப்பற்றிய அனைத்துக்கதைகளையும், புராண வரலாறுகளையும், ஒருங்கே கொண்டு வந்து ஒவ்வொரு வரிகளிலும் நிறுத்தியிருப்பது, மிகவும் ரசிக்கும்படியாகவும், வாய்விட்டு அபிராமி பட்டர்போல [வாராயோ .. ஒரு பதில் கூறாயோ .. நிலவென வாராயோ .. என் துயர் தீராயோ என்ற திரைப்படப்பாடல் போல] உரக்கப்பாட வேண்டும் என்ற ஆவலைத்தூண்டுவதாகவும் அமைந்துள்ளது. பாராட்டுக்கள்.

மோகன்ஜி said...

இன்று நிறுத்தி நிதானமாய்ப் படித்தேன் சிவா.
ஈங்குன்னை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன் என் தம்பி!

சமுத்ரா said...

நன்று ....ராமர் மீது 'சாகேத நகர் ஆளும்' என்று ஆரம்பித்து ஒரு கவி எழுதுங்களேன்..

சிவகுமாரன் said...

மன்னிக்கவும் சமுத்ரா,
சாகேத நகர் என்பது அயோத்தியா ?.
ஸ்ரீராமரின் ஆசி கிடைத்தால் கட்டாயம் எழுதுவேன்.
அரங்கநாதனைப் பற்றி எழுதி இருக்கிறேன். எழுதி ஒரு வருடம் ஆகி விட்டது. ஸ்ரீரங்கம் சென்று அவன் சந்நிதியில் பாடிய பிறகு இடுகை இட ஆசை. நேரம் கிடக்கவில்லை. அரங்கன் கருணை காட்ட வேண்டும்.

அப்பாதுரை said...

சித்தப்பா குரல் கணீரென்றும் இனிமையாகவும் இருக்கிறது (அன்னையே/என்னையே என்று இழுப்பது சுகமாக இருக்கிறது :)

பாதியில் நின்றுவிட்டதே, ஏன்?

சிவகுமாரன் said...

நன்றி அப்பாஜி. இந்தப் பாடலை இரண்டு வாரங்களுக்கு முன்னர் காசி பாதயாத்திரையில் , நாக்பூரில் இருந்த என் சித்தப்பாவை துபாயில் இருந்து வந்து என் தம்பி இளமுருகன் சந்தித்து , பாடவைத்து , துபாய் சென்று, கணினியில் ஏற்றி , சென்னையில் இருந்த என் தம்பி பிராபகரனுக்கு அனுப்பி பலோக்கில் ஏற்றி,, அங்கிருந்து மதுரைக்கு வந்து, புப்ளிஷ் செய்து நீங்கள் அமெரிக்காவில் கேட்கிறீர்கள். உலகம் சுருங்கி விட்டது என்கிறான் என் தம்பி.(முழுப் பாடலையும் பதிவு செய்திருக்கலாம் )

சிவகுமாரன் said...

நன்றி திகழ். வை.கோ.சார். மோகன் அண்ணா,சமுத்ரா,& அப்பாஜி,
மிக்க நன்றி

Nanjil Siva said...

கம்பன் குறை தீர்ப்பதற்கு
கிழவியாக வேடமிட்டு
கிழங்கு விற்க வந்த அன்னையே. ???// >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<