நமசிவாய ஓம்
நமசிவாய ஓம்
அண்ணா மலையில் அனலானாய்
அண்ணா மலையில் அனலானாய்
ஆனைக் காவில் புனலானாய்
மண்ணாய் காஞ்சியில் மணக்கின்றாய்
மாகாள ஹஸ்தியில் காற்றானாய்
விண்ணாய் தில்லையில் விரிகின்றாய்
விந்தைகள் பலவும் புரிகின்றாய்
எண்ணா தேனோ இருக்கின்றாய்
எப்பொழு தென்னை ஆட்கொள்வாய் ? 1.
தக்கன் அழிக்க தலை கொய்தாய்
தருமிக் கெனவோர் கவிசெய்தாய்
திக்குகள் எட்டும் கைக்கொண்டு
திருவிளையாடல் புரிகின்றாய்
முக்கண் கொண்ட உருவானாய்
மூலன் தனக்கு குருவானாய்
எக்கண் கொண்டு எனைப் பார்ப்பாய் ?
எப்பொழு தென்னை ஆட்கொள்வாய் ? 2.
பித்தன் என்றோர் பேர்கொண்டாய்
பிள்ளைக் கறிமேல் பசிகொண்டாய்
உத்தமி தன்னை இடங்கொண்டாய்
உலகைக் காக்க விடமுண்டாய்
சித்தம் பலத்தில் நடங்கொண்டாய்
சித்தர்கள் உளத்தில் குடிகொண்டாய்
எத்தனை யோமுறை தொழக்கண்டாய்
எப்பொழு தென்னை ஆட்கொள்வாய் ? 3.
கங்கையில் பாவம் கழிக்கின்றாய்
காசியில் மோகம் அழிக்கின்றாய்
திங்களைத் தலையில் சூடுகின்றாய்
தீயாய்க் கயவரைச் சுடுகின்றாய்
லிங்கமே தத்துவமே பொருளானாய்
நித்திலம் காக்கும் அருளானாய்
எங்குனைக் காட்டி எனக்கருள்வாய்?
எப்பொழு தென்னை ஆட்கொள்வாய் ? 4.
சுந்தரன் தன்னை ஆட்கொள்ள
சுவடி கையேந்தி நீவந்தாய்
தொந்தர வளித்திடும் சூலையினை
தந்தபின் அப்பரை ஆட்கொண்டாய்
மந்திரி வாதவூ ரார்தன்னை
மரத்தடி குருவாய் ஆட்கொண்டாய்
எந்தையே என்னை என்செய்வாய்
எப்பொழு தென்னை ஆட்கொள்வாய் ? 5.
அரிஅயன் காணா அடிமுடியை
அடியவன் காண அருள்வாயா ?
கரிமுகன் கந்தன் வளர்மடியில்
கனிவுடன் எனக்கிடம் தருவாயா?
பரியென நரியினை ஆக்கியவா
பரிவுடன் எனைஎன்று பார்த்திடுவாய் ?
எரிகிற மனத்தீ அணைத்திடவே
எப்பொழு தென்னை ஆட்கொள்வாய் ? 6.
களிநடம் புரிகின்ற காட்சியினை
கண்டுளம் மகிழ்ந்திட அருள்வாயா ?
குளிர்நில வொளிமுகம் காட்டியெந்தன்
குறைதனைத் தீர்த்திட வருவாயா ?
ஒளியென உளந்தனில் நீபுகுந்து
உயிருடன் எப்பொழு திணைந்திடுவாய்?
எளியவன் தரும்கவி மகிழ்ந்தேற்று
எப்பொழு தென்னை ஆட்கொள்வாய் ? 7.
பொன்னும் மணியும் தரக்கேட்டேன்
பொன்னாய் மனதை புடம் போட்டாய்
உன்னைக் காணும் வரம்கேட்டேன்
ஊழ்வினை தாண்டி வரச் சொன்னாய்
முன்னும் பின்னும் அலைக்கழித்தே
மூளாத் தீப்போல் எரிக்கின்றாய் .
இன்னும் என்னை என்செய்வாய் ?
எப்பொழு தென்னை ஆட்கொள்வாய் ? 8.
தொல்லைகள் இன்னும் ஏனென்றேன்
தொடர்ந்திடும் முன்வினைப் பயனென்றாய்
அல்லல்கள் தீர்த்திட வாவென்றேன்
அனுபவி அனுபவி எனச்சொன்னாய்
இல்லையோ நீயென பிறர்கேட்டால்
எளியவன் எப்படி பதில்சொல்வேன் ?
எல்லையே இல்லா என் இறைவா
எப்பொழு தென்னை ஆட்கொள்வாய் ? 9.
வினைப்பயன் விதியெனும் பேரில்எனை
விழுலுக்கு நீரென ஆக்குவதேன் ?
தினையள வேனும்உன் திருவடியின்
திருவருள் காட்டிடத் தயங்குவதேன் ?
உனைத்தொழு வோர்க்கொரு துயரென்றால்
உனக்கது பழியாம் அறியாயோ ?
எனைத்தொடர்ந் திடும்வினை அறுந்திடவே
எப்பொழு தென்னை ஆட்கொள்வாய் ? 10.
-சிவகுமாரன்
பாடலைப் பாடுபவர் : பிரபாகரன்
காணொளி ஆக்கம் : கோபி வெங்கடேசன்