Friday, July 29, 2011

ஆட்கொள்வாய்

                   நமசிவாய ஓம்  
                      நமசிவாய ஓம் 
                   நமசிவாய ஓம்
                       நமசிவாய ஓம்


அண்ணா மலையில் அனலானாய் 
   ஆனைக் காவில் புனலானாய் 
மண்ணாய் காஞ்சியில் மணக்கின்றாய் 
   மாகாள ஹஸ்தியில் காற்றானாய் 
விண்ணாய் தில்லையில் விரிகின்றாய் 
   விந்தைகள்  பலவும் புரிகின்றாய்
எண்ணா தேனோ இருக்கின்றாய் 
  எப்பொழு தென்னை ஆட்கொள்வாய் ?                1.

தக்கன் அழிக்க தலை கொய்தாய் 
   தருமிக் கெனவோர் கவிசெய்தாய் 
திக்குகள் எட்டும் கைக்கொண்டு 
   திருவிளையாடல் புரிகின்றாய் 
முக்கண் கொண்ட உருவானாய் 
   மூலன் தனக்கு குருவானாய் 
எக்கண் கொண்டு எனைப் பார்ப்பாய் ?
   எப்பொழு தென்னை ஆட்கொள்வாய் ?                2.

பித்தன் என்றோர் பேர்கொண்டாய்
   பிள்ளைக் கறிமேல் பசிகொண்டாய் 
உத்தமி தன்னை இடங்கொண்டாய் 
   உலகைக் காக்க விடமுண்டாய் 
சித்தம் பலத்தில் நடங்கொண்டாய்
    சித்தர்கள் உளத்தில் குடிகொண்டாய் 
எத்தனை யோமுறை தொழக்கண்டாய் 
   எப்பொழு தென்னை ஆட்கொள்வாய் ?               3.

கங்கையில் பாவம் கழிக்கின்றாய் 
   காசியில் மோகம் அழிக்கின்றாய்
திங்களைத் தலையில் சூடுகின்றாய்
   தீயாய்க் கயவரைச் சுடுகின்றாய்
லிங்கமே தத்துவமே பொருளானாய்
   நித்திலம் காக்கும் அருளானாய்
எங்குனைக் காட்டி எனக்கருள்வாய்?
 எப்பொழு தென்னை ஆட்கொள்வாய் ?                 4.

சுந்தரன் தன்னை ஆட்கொள்ள 
   சுவடி கையேந்தி நீவந்தாய் 
தொந்தர வளித்திடும் சூலையினை 
   தந்தபின் அப்பரை ஆட்கொண்டாய் 
மந்திரி வாதவூ ரார்தன்னை 
   மரத்தடி குருவாய் ஆட்கொண்டாய் 
எந்தையே என்னை என்செய்வாய் 
   எப்பொழு தென்னை ஆட்கொள்வாய் ?                5.

அரிஅயன் காணா அடிமுடியை 
   அடியவன் காண அருள்வாயா ?
கரிமுகன் கந்தன் வளர்மடியில் 
   கனிவுடன் எனக்கிடம் தருவாயா?
பரியென நரியினை ஆக்கியவா 
   பரிவுடன் எனைஎன்று பார்த்திடுவாய் ?
எரிகிற மனத்தீ அணைத்திடவே 
   எப்பொழு தென்னை ஆட்கொள்வாய் ?                6.

களிநடம் புரிகின்ற காட்சியினை 
   கண்டுளம் மகிழ்ந்திட அருள்வாயா ?
குளிர்நில வொளிமுகம் காட்டியெந்தன்
   குறைதனைத் தீர்த்திட வருவாயா ?
ஒளியென உளந்தனில் நீபுகுந்து 
   உயிருடன் எப்பொழு திணைந்திடுவாய்?
எளியவன் தரும்கவி மகிழ்ந்தேற்று
   எப்பொழு தென்னை ஆட்கொள்வாய் ?               7.

பொன்னும் மணியும் தரக்கேட்டேன்
  பொன்னாய் மனதை புடம் போட்டாய் 
உன்னைக் காணும் வரம்கேட்டேன் 
   ஊழ்வினை தாண்டி வரச் சொன்னாய்
முன்னும் பின்னும் அலைக்கழித்தே 
   மூளாத் தீப்போல் எரிக்கின்றாய் .
இன்னும் என்னை என்செய்வாய் ?
   எப்பொழு தென்னை ஆட்கொள்வாய் ?                8.

தொல்லைகள் இன்னும் ஏனென்றேன் 
   தொடர்ந்திடும் முன்வினைப் பயனென்றாய்
அல்லல்கள் தீர்த்திட வாவென்றேன் 
   அனுபவி அனுபவி எனச்சொன்னாய் 
இல்லையோ நீயென பிறர்கேட்டால் 
   எளியவன் எப்படி பதில்சொல்வேன் ?
எல்லையே இல்லா என் இறைவா 
   எப்பொழு தென்னை ஆட்கொள்வாய் ?                9.

வினைப்பயன் விதியெனும் பேரில்எனை 
   விழுலுக்கு நீரென ஆக்குவதேன் ?
தினையள வேனும்உன் திருவடியின் 
   திருவருள் காட்டிடத் தயங்குவதேன் ?
உனைத்தொழு வோர்க்கொரு துயரென்றால் 
   உனக்கது பழியாம் அறியாயோ ?
எனைத்தொடர்ந் திடும்வினை அறுந்திடவே 
   எப்பொழு தென்னை ஆட்கொள்வாய் ?                10.  

      
                                                                -சிவகுமாரன் 
       
பாடலைப் பாடுபவர் : பிரபாகரன் 
   

16 comments:

சிவகுமாரன் said...

இத்தனை வருடங்கள் நான் எழுதிய கவிதைகளில் எனக்கு மனநிறைவைத் தந்ததில் இந்தக் கவிதைக்கு ஈடு வேறேதும் இல்லை.
நமசிவாய

சாய் said...

சிவா

மேலே போட்டிருக்கும் உங்கள் கருத்தே என் கருத்தும்.

ஆனாலும், உங்களுடைய இன்னொரு வலைபதிவில் "முட்கள் முளைத்ததடா" - இன்னும் என்னை அதிர வைக்கின்றது. அதுவும் அருமை

இராஜராஜேஸ்வரி said...

பஞ்சபூதமாய் நிறைந்த இறைவனைப் பற்றிய கவிதை பஞ்சாமிர்தமாய் இனித்தது. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

Lalitha Mittal said...

soooooper!

G.M Balasubramaniam said...

அருட்கவிக்கு கருத்து எழுதும் அருகதை எனக்கில்லை, மொழியின் ஆளுமையுடன் உள்ளக் கிடக்கைகளை இறைவன் புகழ் கூறி கொட்டுகிறீர்கள். அதைஅவன் செவி மடுக்க வைக்க முடிந்தால்..? வாழ்த்துக்கள்.

Rathnavel said...

பொன்னும் மணியும் தரக்கேட்டேன்
பொன்னாய் மனதை புடம் போட்டாய்

அருமை. ஆடி அமாவாசையான இன்று உங்களால் நானும் சிவனைப் பாடி மகிழ்ந்தேன்.
உங்களுக்கு மனப்பூர்வ வாழ்த்துக்கள்.

thendralsaravanan said...

ஆட்கொள்ளுதல்....ஏற்கனவே உங்களை ஏற்றுக்கொண்டு...எங்களுக்காக பூமியில் விட்டு வைத்திருக்கிறார்... நல்கவிதைகள் எங்களுக்கு ஈந்துவதற்க்காக....தொடரட்டும் உங்கள் இறை பணி!

கவிநயா said...

கடைசி 3 பத்திகள் மிகப் பிடித்தது.

ஓம் நமசிவாய. சிவாய நம ஓம்.

திகழ் said...

/தொல்லைகள் இன்னும் ஏனென்றேன்
தொடர்ந்திடும் முன்வினைப் பயனென்றாய்
அல்லல்கள் தீர்த்திட வாவென்றேன்
அனுபவி அனுபவி எனச்சொன்னாய்
இல்லையோ நீயென பிறர்கேட்டால்
எளியவன் எப்படி பதில்சொல்வேன் ?
எல்லையே இல்லா என் இறைவா
எப்பொழு தென்னை ஆட்கொள்வாய் ?/

நெஞ்சம் நிறைந்த வரிகள்

வாழ்த்துகள்

மோகன்ஜி said...

நான் தொகுக்க எண்ணியிருக்கும் சிவாம்ருதத்தில் இந்தப் பாடலை எடுத்தாள்வேன். மனமார்ந்த பாராட்டுனக்கு சிவா

sury said...

சிவன் எங்கும் நிறைந்தவன் . பஞ்ச பூதங்களிலும் பறந்து காணப்படுபவன். நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய எல்லாவற்றையும் உள்ளடக்கி, அதாகவே காட்சி அளிக்கிறான்.

குரைக்கின்ற வாரிக் குவலயம் நீரும்
பறக்கின்ற காற்றுப் பயில்கின்ற தீயும்
நிறைக்கின்ற வாறு இவை நீண்டு அகன்றானை
வரைத்து வலம்செய் யுமாறு அறியேனே.

என திருமூலர் சொல்லுவார். ஆக, ஒரு குறியில் வைத்து வணங்க இயலா, சிவனை, நீராக, நெருப்பாக, காற்றாக, மண்ணாக, ஆகாயமாக, நாம் வணங்குவதை எத்துனை எளிதாக சொல்லியிருக்கிறீர்கள். !! உங்களுக்கே மன நிறைவு தந்த கவிதை எனவும் சொல்லி இருக்கிறீர்கள். இல்லை இல்லை .!! உலகத்தே உள்ள உயிர்கள் அனைத்துக்கும் உள்ளத்தை அமைதி பெறச் செய்யும் கவிதை இது.
நானும் பாடுவேன்.
எனது வலையில் உங்கள் அனுமதியுடன் இணைப்பேன்.
சுப்பு ரத்தினம்.
http://vazhvuneri.blogspot.com

சிவகுமாரன் said...

நன்றி சாய், இராஜேஸ்வரி,லலிதா மிட்டல், GMB சார், ரத்னவேல் அய்யா, தென்றல் மேடம், கவிநயா, திகழ், மோகன் அண்ணா & சுப்புத் தாத்தா

komu said...

னமச்சிவாய, நமச்சிவாய நன்றி.
அருமை

அப்பாதுரை said...

பாடல்களைப் பாதியில் நிறுத்திவிடுவதேன்?

/அரிஅயன் காணா அடிமுடியை
அடியவன் காண அருள்வாயா
பிடித்த வரிகள்.

சிவகுமாரன் said...

நன்றி கோமு.
நன்றி அப்பாஜி.
பாடல் நீளமாக இருந்தால் பதிவேற்ற முடிவதில்லை. எனவே தான் பாதியில் நிறுத்தும்படி ஆகிவிடுகிறது. நன்றி

Sivamjothi said...

மாற்ற மனங்கழிய நின்ற மறையோனை
நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனை காண
இந்த பக்கத்தில் இருக்கும் வீடியோவை பாருங்கள்.
ஐயா இரகசியங்களை தெளிவாக விளக்கி உள்ளார்.

இங்கே சொடுக்கவும்

ஆசைஉண்டேல் வம்மின் இங்கே அருட்சோதிப் பெருமான்
அம்மையுமாய் அப்பனுமாய் அருளும்அரு ளாளன்

அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி
தனிப் பெரும் கருணை அருட்பெரும் ஜோதி