Monday, January 18, 2016

அழகன் முருகன்


(வழிநடைப் பாடல்)

அரோகரா ஓம் அரோகரா 
            அழகன் முருகன் அரோகரா 
   அரோகரா வேல் அரோகரா 
                அறுபடை முருகன் அரோகரா 

பழனியில் முருகன் படைவீடு - அங்கு 
   பாதங்கள் தேய நடைபோடு 
அழகன் முருகன் அருள்தேடு - அவன் 
   அடிதொழ மறந்தால் வரும்கேடு .                              (அரோகரா)

கவலைகள் இருந்தால் தள்ளிப்போடு- அதை 
   கந்தனவன் காலடியில் அள்ளிப்போடு !
அவனிடம் துயரங்கள் சொல்லிப்போடு - அவன் 
   அருள்மழை பொழிவான்  துள்ளி ஆடு !                    (அரோகரா)

காவடி  தூக்கி மலையேறு -அவன் 
   காலடி பணிந்து  மனம் ஆறு 
பாவங்கள் தீர்த்திட வருமாறு -அந்தப் 
   பாலனை அழைத்து உன் குறை கூறு!                          (அரோகரா)

சரவணப் பொய்கையில் நீராடு - உன் 
   சங்கடம் கழியும் நீரோடு !
வரங்களைத் தரச்சொல்லு சீரோடு - அதை 
   வடிவேலன்  தரும்வரை போராடு!                                 (அரோகரா)

கந்தனுக்கு முகங்கள் ஓராறு - நம்மைக் 
   காத்திடும் கரங்கள் ஈராறு !
செந்தில்வேலன் பேரைச் சொன்னால் சுகம் நூறு -இது 
   சித்தரெல்லாம் கண்டு  சொன்ன வரலாறு                 (அரோகரா)

தண்டபாணி ஏறிவரும் தங்கத்தேரு - அது 
   தகதக வெனவே  மின்னும் பாரு 
கண்டுகொள்ள வேணுமடா கண்கள் நூறு - அதைக் 
   கண்ட பின்னே கவலைகள் ஓடும் பாரு!                    (அரோகரா)

பாடலை பாடியிருப்பது : பிரபு & சுற்றத்தார் 
இசை : செல்வன் 


-சிவகுமாரன் 

8 comments:

சிவகுமாரன் said...

இந்த வருடத் தைப்பூப் பாதயாத்திரைக்கு என்னால் செல்ல இயலவில்லை. இதுவும் அவன் செயல் தான்..நான், பாதயாத்திரை செல்லாவிட்டாலும் வழி நெடுக எங்கள் குழுவினர் என் பாடலை.....இல்லை இல்லை.....என் மூலம் அவன் எழுதிய பாடலை, இந்த அருட்கவிதைகளைப் பாடிக் கொண்டே செல்வார்கள். என் காலத்திற்குப் பிறகும், இந்தப் பாடல்கள் ஒலிக்க வேண்டும் என்பதே என் ஆசை. அதையும் அவனே நடத்துவான்.
வெற்றிவேல் முருகனுக்கு......அரோகரா.

Thambi prabakaran said...

இந்த பாடலை எங்கள் குடும்பத்தோடு பாடியது மிகவும் மகிழ்ச்சி. என்னை பாட வைத்தற்க்காக அண்ணனுக்கு நன்றி

திண்டுக்கல் தனபாலன் said...

அழகான பாடல்... வாழ்த்துகள்...

தமிழ் மாறன் said...

பழனி வேல்முருகனுக்கு அரோகரா!!!
முதன்முறையாக எங்கள் குடும்பத்தில் இணைந்து நானும் பாடியதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்....

தமிழ் மாறன் said...
This comment has been removed by the author.
ஜீவி said...

முருகா ஷண்முகா
அழகா ஆறுமுகா

sury siva said...

கந்தனைப் பாட ஒரு வாய்ப்பு கொடுத்ததும் அந்தக் கந்தன் அருளே.

சுப்பு தாத்தா.
www.kandhanaithuthi.blogspot.com

Nanjil Siva said...

கந்தனுக்கு முகங்கள் ஓராறு - நம்மைக்
காத்திடும் கரங்கள் ஈராறு !
செந்தில்வேலன் பேரைச் சொன்னால் சுகம் நூறு -இது
சித்தரெல்லாம் கண்டு சொன்ன வரலாறு ... உண்மை !!!
>> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<