Saturday, February 8, 2014

குருவான தந்தைக்கே வேதத்தின் பொருள்சொல்லி
   குருவான குமரேசனே
   குறை செய்த பிரம்மனைக் கோபித்து சிறையிட்ட
   குறும்பான குமரேசனே
அருள்பெற்ற பிள்ளையாய் அன்னையின் வேல்கொண்டு
   அதம் செய்த குமரேசனே
   அகந்தன்னில் குடியேறி அகலாது  ஆட்கொண்டு
    அரசாளும் குமரேசனே
தெருவெங்கும் விளையாடும் சிறுபிள்ளை முகமெல்லாம்
    உனைக்கண்டேன் குமரேசனே    
    திசைதோறும் தினந்தோறும் தேடியே திரிகிறேன்
    தெளிவாக்கு குமரேசனே
கருவோடு உருவாகி கண்ணுக்குள் நிலவாகி
     கலந்திட்ட குமரேசனே
     கடலோடு விளையாடி கரைசேர்க்கும் செந்தூரின்
     கடவுளே குமரேசனே 

விண்ணிலும் மண்ணிலும் வெறிகொண்டு உனைத்தேடி 
    வெம்பினேன் குமரேசனே 
    வேடிக்கை காட்டாமல் வேதனை போக்கவே 
     விழிகாட்டு குமரேசனே 
மண்ணிலே தாய்க்கெலாம் மகனாகப் பிறந்தெங்கள் 
     மனதாளும் குமரேசனே 
     மடிமீது தவழ்கின்ற மழலையின் மொழியாகி 
     மயக்கிடும் குமரேசனே 
தண்ணீரில் தாமரை இலைபோல ஒட்டாமல் 
     தவிக்கின்றேன் குமரேசனே  
     தள்ளாடும் நேரத்தில் தடுமாற்றம் வாராமல் 
     தாங்குவாய் குமரேசனே 
கண்ணீரின் உப்புக்கள் கடலோடு கரைந்தோட 
      கரைசேர்ப்பாய் குமரேசனே
      கடலோடு விளையாடி கரைசேர்க்கும் செந்தூரின்
      கடவுளே குமரேசனே   

No comments: