Friday, November 29, 2013

வைத்தீஸ்வரா!


உள்ளத்தில் பெருங்கோயில் உனக்காகக் கட்டி அதில்
    உன்திரு லிங்கம் வைத்து
   ஓமென்னும் மந்திரம் ஒவ்வொரு கணந்தோறும்
    உளமார உச்சரித்து
தெள்ளத் தெளிவாக சீவனே சிவமென்று
   தேர்ந்து நான்  போற்றுகின்றேன்
   தீராத நோயொன்றும் தீண்டாமல் நீதந்த
   தேகத்தைக் காத்து நிற்பாய்
புள்ளுக்கும் "இருக்'கிற்கும் வேளுக்கும் அருள் செய்து
   புவனங்கள் காக்கும் நாதா
   புவிதன்னில் ஒருபோதும் பிணியென்றும் மூப்பென்றும்
   புலம்பாத சக்தி நீ தா.
அள்ளக் குறையாத அமுதத்தில் ஒருதுளி
   அடியேனும் அருந்தத் தாராய்
   அகிலத்தின் பிணிதீர்க்கும் அருள் தையல் நாயகி
   அகம் ஆளும் வைத்தீஸ்வரா!

ஓவாது சுற்றிடும் ஒன்பது கோள்களும்
   ஒவ்வொன்றாய் வரிசை கட்டி
   ஒருநூறு முறைஎன்னை வாட்டிவிளை யாட நீ
   வேடிக்கை பார்த்தல் முறையோ ?
பூவானம் பொன்பூமி  பூங்காற்று பொன்தழல்
   புனலென்னும்  பூதமைந்தும்
   பொட்டிக்குள் பாம்பாகி  உன்ஆணை கேட்கஓர்
    பொருட்டாமோ கோள்களெல்லாம்?
நோவாது சலியாது நோயொன்றும் தீண்டாது
    நீதந்த தேகம் கொண்டு
    நூறாண்டு காலம்உன் புகழ்பாடிப் பாடியே
    நின்பாதம் சேர வேண்டும்
ஆவாத காரியம் ஒன்றுண்டோ அவனியில்
   அய்யா உன் பார்வை பட்டால்?
   அகிலத்தின் பிணி தீர்க்கும் அருள் தையல் நாயகி
   அகம் ஆளும் வைத்தீஸ்வரா!

 காயமது பொய்யென்று காலம் கழிப்பவர்
   காலனை  வெல்வதுண்டோ?
   காயமிதில் உன்கோயில் கட்டியபின் நீயதனை
   காணாமல் விடுதல் நன்றோ?
மாயமோ மந்திரமோ காட்டிஎன் பிணியெலாம்
   மாய்த்து எனை மகிழ வைப்பாய்
   மருந்தோடு தினந்தோறும் மல்லாடும் துயர்நீக்கி
   மகனென்னை  வாழ வைப்பாய்
தூயமனம், தேக்குஉடல் தெய்வம் வந்து வாழுமிடம்
    தூயவா குடியேறவா!
    ஜோதிமய மாயுன்னை பாவித்து உள்ளத்தில்
    தீபமாய் ஏற்றினேன் வா!
ஆயகலை அத்தனைக்கும் அதிபதியே, தேகத்தை
   ஆலயமாய் ஆக்கிவிட வா!
   அகிலத்தின் பிணி தீர்க்கும் அருள் தையல் நாயகி
   அகம் ஆளும் வைத்தீஸ்வரா!

தெப்பமாய் கல்லையே உருமாற்றிக்  கரைசேர்த்து
   திருநா-வைக் காக்க வில்லையா?
   தீமூண்ட சுண்ணாம்புச் சூளையில் நீவந்து
   தென்றலாய் வீச வில்லையா  ?
வெப்புநோய் கண்ட உன் பக்தனை ஆட்கொண்டு
   வெந்துயர் நீக்க வில்லையா?
   விழிய்ற்று நின்ற உன் தோழனாம் சுந்தரன்
   வேதனை போக்க வில்லையா?
செப்புமுலை தெள்ளமுதம் சீர்காழி பிள்ளைக்கு
    சிவசக்தி ஊட்ட வில்லையா?
    சிறுபிள்ளை உயிர்காக்க நீ அன்று காலனை
    சினங்கொண்டு உதைக்க வில்லையா?
அப்பா உன் பிள்ளை நான் அழைக்கின்ற ஓலம் உன்
   அருட்செவியில் கேட்க வில்லையா?
   அகிலத்தின் பிணி தீர்க்கும் அருள் தையல் நாயகி
   அகம் ஆளும் வைத்தீஸ்வரா!


பிட்டுக்கு மண்தூக்கி பிரம்படியும் தான்வாங்கி
   பேதைக்கு உதவ வில்லையா ?
   பெண்ணுருவை வெறுத்திட்ட புனிதவதி அன்னைக்கு
   பேயுருவைத் தர வில்லையா?
திட்டமுடன் தருமிக்கு தேன்கவிதை தந்துதவி
   தீவறுமை போக்க வில்லையா?
   தீநாகம் தீண்டிய சிறுபிள்ளை இன்னுயிரை
   திருப்பிநீ தர வில்லையா?
நட்ட நடு நிசிதன்னில் திமிர் கொண்ட பாணனை
   நாட்டை விட்டு ஓட்ட வில்லையா?
   நரியெல்லாம் பரியாக்கி நான்மாடக் கூடலில்
   நாடகம் காட்ட வில்லையா ?
அட்டமா சித்திகள் அருளும் நீ பிணிநீக்கி
   அருள்காட்ட மனமில்லையா?
   அகிலத்தின் பிணி தீர்க்கும் அருள் தையல் நாயகி
   அகம் ஆளும் வைத்தீஸ்வரா!

வேலனைச் சோதிக்க புவிவலம் வரச் சொல்லி
   வேடிக்கைப் பார்த்து நின்றாய்.
   வேடனைச் சோதிக்க விழிதன்னில் செங்குருதி
   வழிந்தோடக் காட்டி நின்றாய்.
பாலனின் உயிர்காத்த பாதத்தில் வீழ்ந்தபின்
    பயமெந்தன் வாழ்வில் இல்லை!
    பரமனே நீயெந்தன் பக்தியைச் சோதித்துப்
    பார்க்கவோர் வழியுமில்லை!
காலனை நானாக கைதட்டிக் கூப்பிட்டு
   காலம் முடிக்க வேண்டும்!
   கடமைகள் ஒவ்வொன்றாய் கழிந்தபின் நீயெந்தன்
   கணக்கை முடிக்க வேண்டும்
ஆலமா விஷம் தன்னை அள்ளிக் குடித்த நீ
   அணைத்தென்னைக் காக்க வேண்டும்!
   அகிலத்தின் பிணி தீர்க்கும் அருள் தையல் நாயகி
   அகம் ஆளும் வைத்தீஸ்வரா!

இப்பிறவி தன்னிலே எதிர்கொள்ளும் இன்னல்கள்
   எல்லாம் நான் தாண்ட வேண்டும்!
   இன்னுமோர் பிறவிநான் எடுக்காமல் என்னை நீ
   ஏற்று ஆட்  கொள்ள வேண்டும்!
முப்புரம் எரித்த நீ முக்கண் திறந் தென்றன்
    மும்மலம் எரிக்க வேண்டும்
    மூச்சுள்ள நாள்வரை முடியாது என்றுநான்
    முடங்காமல் இருக்க வேண்டும்!
எப்போதும் எங்கேயும் எறும்புபோல் தேனிபோல்
    இயங்கிடும் தேகம் வேண்டும்!
    எந்த ஓர் நிலையிலும் எதற்கும் கலங்காத
    இதயம் நீ அருள வேண்டும்!
அப்பனாய்  அன்னையாய் உன்னையே எண்ணினேன்
   ஆதரவு காட்ட வேண்டும்
   அகிலத்தின் பிணி தீர்க்கும் அருள் தையல் நாயகி
   அகம் ஆளும் வைத்தீஸ்வரா!

என்புதோல் போர்த்திய இந்த ஓர் தேகத்தில்
   எத்தனை போராட்டமோ?
   இடைவெளி இல்லாமல் இன்னமும் சோதிக்க
   என்மீது ஏன் காட்டமோ?
இன்பமய மானதாம் இவ்வுலகு என்று நான்
   எல்லோர்க்கும் சொல்வ தென்றோ?
   ஈசனின் அருள்பெற்ற பக்தனாம் என்றுநான்
   இறுமாந்து கொள்வ தென்றோ?
ஒன்பது துவாரத்து உடல்விட்டு உயிர்காற்று
   ஓடிவிடும் காலம் முன்னே
   ஓங்காரம் ஒலிக்க உன் ஆனந்த தாண்டவம்
   ஒருமுறை காட்டுவாயா>
அன்பையே சிவமென்று நம்பினே நீயென்னை
   அன்பினால் ஆள்வ தென்றோ?
   அகிலத்தின் பிணி தீர்க்கும் அருள் தையல் நாயகி
   அகம் ஆளும் வைத்தீஸ்வரா!

முக்கண்ணா பரமேசா மூவுலகின் சர்வேசா
   முகுந்தனின் மைத்துனா வா !
   மூலனை ஆட்கொள்ள பூவுடல்  மறைத்தவா
   முக்திக்கு வழிகாட்ட வா !
நக்கீரன் தமிழோடு விளையாட வந்தவா
   நற்றமிழ் கவிதந்தவா !
   நான்மாடக் கூடல்நகர் தமிழ்ச் சங்கம் கண்டவா
   நடராஜா நலங்காக்க வா !
சொக்கனே சுந்தரா சுடரும் பிறைச் சந்திரா
   சோமேசா இராமேஸ்வரா !
   சூரர்குல இராவணனும் தொழுதேத்தும் எளியவா
   சுடர்க் கண்ணா சுகம் கூட்டவா !
அக்கறைஎன் மேல்காட்டி அல்லல் துயர் பிணி ஒட்டி
   அருள்காட்டி இருள்ஓட்ட வா!
   அகிலத்தின் பிணி தீர்க்கும் அருள் தையல் நாயகி
   அகம் ஆளும் வைத்தீஸ்வரா!

திரிசூலம் கொண்டவா திசையெட்டும் ஆள்பவா
   திரிபுரம் எரித்தவா வா !
   தேயாத நிலவினை சடைதனில் கொண்டவா
   தேயாத தேகத்தை தா !
சரிபாதி தேகத்தை சக்திக்குத் தந்தவா
   சக்தியென் தேகத்தில் தா !
   சரியான பாதையில் தடுமாற்றம் இல்லாமல்
   சங்கரா வழிகாட்ட வா !
பெரியவா பிஞ்ஞகா பிச்சாடல் புரிந்தவா
   பித்தனே சித்தனே வா !
   பேராயிரம் கொண்ட பெருமைகள் வாய்த்தவா
   பிள்ளையாய் எனையேற்க வா !
அரிஅயன்  காணாத அடிமுடி கொண்டவா
   அடியேனுக் கருள் செய்ய வா !
   அகிலத்தின் பிணி தீர்க்கும் அருள் தையல் நாயகி
   அகம் ஆளும் வைத்தீஸ்வரா!

பாடியிருப்பவர் : பிரபாகரன். 


-சிவகுமாரன்

12 comments:

சிவகுமாரன் said...

நலிந்தோர் நலம் பெற நாடுவோம் சிவனை.
வலியதாம் விதியை வெல்ல பாடுவோம் அவனை.

G.M Balasubramaniam said...


அன்பின் சிவகுமாரா, மனம் விட்டுப் பிரார்த்தனை செய்யும்போது பிரார்த்தனை பலிக்கும் என்னும் நம்பிக்கை உள்ளத்தை லேசாக்கும். எல்லாம் வல்ல அந்த இறைவன் அருள் உங்களுக்கு என்றும் கிட்ட நாங்களும் வேண்டுகிறோம். இதனைப் பலரும் படித்து நம்முடன் வேண்டுதலில் இணைய விரும்புகிறேன். நல்லதே நடக்கும். வாழ்க வளமுடன்.

இராஜராஜேஸ்வரி said...

சரிபாதி தேகத்தை சக்திக்குத் தந்தவா
சக்தியென் தேகத்தில் தா !
சரியான பாதையில் தடுமாற்றம் இல்லாமல்
சங்கரா வழிகாட்ட வா !

அத்தனை வரிகளும் அற்புதம் ...!

திண்டுக்கல் தனபாலன் said...

சிறப்பான வரிகள் ஐயா... வாழ்த்துக்கள் பல... நன்றிகள்...

suppudu said...

தேனமுது..!

வாழ்த்துக்கள்..வாழ்த்துக்கள்... !!

+++++++

இன்று எனது வலைப்பூவில்;

வணக்கம்...

நீங்க செல்போன் வச்சிருக்கீங்களா?

அப்போ கண்டிப்பா ஆண்ட்ராய்ட் போனாதான் இருக்கும்..

சரியா...?

உங்களோட செல்போனை மத்தவங்க அநாவசியமா பயன்படுத்த கூடாதுன்னு நினைக்கிறீங்களா?

அப்போ தொடர்ந்து படிங்க...

ஸ்மார்ட் போன்களை பாதுகாக்க புதிய சாப்ட்வேர்..!

Iniya said...

அருமையான பிரார்த்தனை கவி வரிகள் அனைத்தும் சிறப்பே நன்றி ! வாழ்த்துக்கள்...!

மகேந்திரன் said...

தென்னாடுடைய சிவபெருமானுக்கு
எழுநா போற்றிடும் இன்னிசை பாமாலை
அருமையாக உள்ளது நண்பரே...
வாழ்த்துக்கள்...

ஊமைக்கனவுகள். said...

சிவபுராணம் பாடம் செய்திருக்கிறேன்.
இப்பொழுதுதான் சிவகுமாரனின் பாடலைக் காண முடிந்தது.
நீங்கள் அருட்கவி என்பதில் நிச்சயம் சந்தேகம் இல்லை அண்ணா...!
உங்களிடமிருந்து நிறைய கற்றுக் கொள்ள வேண்டும்.
ஆழ்வார் பாசுரங்கள் கவர்ந்த அளவு என்னை நாயன்மார்களின் திருமுறைகள் கவர்ந்ததில்லை.
ஆனால் உங்கள் சைவத்தமிழில் சிக்கிக் கொண்ட என் நெஞ்சை மீட்டெடுக்க முடியவில்லை. காணொளிக் காட்சியில் உங்கள் குரலோடு பாடலைக் கேட்கமுடியாவிட்டாலும் நீங்கள் பாடும் போது அது எப்படி இருக்கும் என்பதை அவதானிக்கிறேன்.
உங்கள் தமிழ் நிச்சயமாய் சிவ வரம்தான்!
வழிநடத்துங்கள் அண்ணா!
நன்றி!

Rathnavel Natarajan said...

வைத்தீஸ்வரா! = சிவகுமாரன் = தொலைத்து விட்ட நல்முத்தை கண்டெடுத்தேன் மதுரை பதிவர் திருவிழாவில் - பதிவுகள் வருவதற்கு முன்பு Dash Board ஒரு அமைப்பு இருந்தது. தற்போது வருவதில்லை. அதனால் திரு சிவகுமாரன் பதிவுகள் படிக்க முடியவில்லை. பதிவர்கள் சந்திப்பில் அவரை சந்தித்தேன். மிக்க மகிழ்ச்சி.

நண்பர்களே, இதுவும் அவரது இன்னொரு பதிவு. இதில் அருமையான சிவனைப் பற்றி பாடல் எழுதி ஒருவரை பாடவைத்து அந்த இணைப்பும் இந்த பதிவில் இணைத்திருக்கிறார். நீங்கள் பார்த்துக் கொண்டே பாடலும் கேட்கலாம். மெய்சிலிர்க்க வைக்கும் பாடல். எனது பக்கத்தில் பகிர்கிறேன். நண்பரே, நீங்கள் இளையவராக இருந்தாலும் உங்களை வணங்குகிறேன்.

எனது அருமை நண்பர்கள் Deepa Nagarani, Ram Kumar, Kirthika Tharan இந்த பதிவை படித்து, கேட்டு இந்த நணபருக்கு பாராட்டு தெரிவிக்க வேண்டுகிறேன்.

நன்றி நண்பர்களே.

Expatguru said...

அற்புதம் சிவகுமாரன். எல்லாம் வல்ல அந்த ஈசன் உங்களையும் உங்கள் குடும்பத்தினர் அனைவரையும் நோய் நொடி இல்லாமல் காத்தருள்வான். உமது தமிழ் புலமைக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

Geetha Sambasivam said...

உண்மையாகவே அருட்கவி தான். அப்பாதுரையின் பதிவிலிருந்து வந்தேன். எப்படி இத்தனை வருடங்களாக உங்களை அறியாமல் இருந்தேன் என்றே தெரியவில்லை. அருமையான பாடல் பகிர்வுக்கு நன்றி.

மோகன்ஜி said...

தவறவிட்ட பதிவு.திருவாசகத் தேனையும்,தேவாரத்தையும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் மாந்தும் சிறு வண்டு நான். அதே பேரானந்தத்தை அடைந்தேன். அருட்கவி தொடரட்டும் சிவா. ஆண்டவன் கட்டளை... அண்ணன் கட்டளையும் கூட...அன்பு.