Friday, October 7, 2011

மதுரை மீனாட்சியே


   


ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்
ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்



அன்னையே அம்மையே அகிலாண்ட ஈஸ்வரி
   அங்காள பரமேஸ்வரி 
   அகிலத்தின் ஆதியே அய்யனின் பாதியே 
   அபிராமவல்லித்  தாயே  
என்னைய்யன் என்னப்பன் ஈசனின் துணையாக 
   இமயத்தில் வாழும் உமையே 
   இமயத்தில் வாழ்ந்தாலும் ஏழையின் அன்பான 
   இதயத்தில் வாழும் இறையே .
உன்னையே எண்ணியே உருகிடும் அடியவன் 
   உள்ளத்தில் கோயில் கொள்வாய்
   உவகையாய் நான்தரும் உள்ளார்ந்த கவிதைகள் 
   உரிமையாய் ஏற்றுக் கொள்வாய் .
முன்னைக்கும் பழமைக்கும் முடிவான சக்தியே 
   மூலத்தின் ஆதாரமே 
   முக்கண்ணன் தேவியே மதுரை மீனாட்சியே 
   முன்னின்று காக்க நீயே.                                                           1.

அத்தனைப் பித்தனாய் ஆக்கியே அண்ணலின்
   அங்கத்தில் பாதி கொண்டாய்
   அத்தனை உயிர்களும் அடிபணிந்தேத்திட
   அகிலத்தை ஆட்சி கொண்டாய் .
எத்தனை கயவனை இறுமாந்த மகிஷனை
   எதிர்நின்று போரில் வென்றாய்
   எத்தனை காலமாய் ஏங்கிநான் வேண்டுவேன்
   இன்னும் ஏன் ஏய்த்து நின்றாய் ?
சித்திரை நிலவினை திகழ்வானில் காட்டியே
   தேவிநீ மாயம் செய்தாய் .
   சித்தரைப் போலவே சிறியவன் என்னை ஏன்
   சோதித்துக் காயம் செய்தாய் ?
முத்தமிழ் கவிகேட்டு முன்வினைப் பாவங்கள்
   போக்கி எனைக் காக்க வருவாய்.
   முக்கண்ணன் தேவியே மதுரை மீனாட்சியே 
   முன்னின்று காக்க நீயே. .                                                           2.


தீச்சட்டி ஏந்திய தேவிநின் பக்தரை   
   தீ என்றும் சுட்டதிலையே 
   திக்கற்று நிற்கின்ற பக்தனை நட்டாற்றில் 
   நீஎன்றும் விட்டதிலையே 
பேச்சற்ற பாமரன் நாவிலுன் பேரெழுதி 
   பெரும்புலவன் ஆக்கவிலையோ ?
   பேசத் தொடங்கிய நாள்முதல் நானுனைப் 
   பாடினேன் கேட்கவிலையோ ?
பூச்செண்டு தேடிவரும் பொன்வண்டு போலவே 
   பூவையுனை சுற்றி வருவேன்.
   பூவிழிப் பார்வையென் மேல்விழும் நாள்வரை 
   பொற்பதம் பற்றி வருவேன்.
மூச்சற்றுப் போய்விழும் நாள்வரை நானுனை 
   முடிந்தவரை பாடி வைப்பேன்.
   முக்கண்ணன் தேவியே மதுரை மீனாட்சியே 
   முன்னின்று காக்க நீயே.                                                         3.


கருவினில் சூலாகி வளர்கின்ற நேரத்தில்
   கர்ப்பத்தில் வந்தவள் நீ .
   கால்கை முளைத்திந்த பூமியில் வீழ்ந்ததும்
   கனகமுலை தந்தவள் நீ.
திருவான அறிவோடு கவிசொன்ன வேளையில்
   செந்நாவில் வந்தவள் நீ .
   திக்கற்று திசைமாறி தடுமாறும் வேளையென் 
   துணையாக வந்தவள் நீ.
 உருகியே உனைப்பாடி உளமாரத் தொழுகையில்
   உள்வளர் ஜோதி நீயே .
   ஒருவரும் துணையின்றி உள்ளம் தவிக்கையில்
    உடன்வரும் சக்தி நீயே .
முருகனின் வெற்றிக்கு வேல்தந்த அன்னை நீ
   முத்தமிழ்க் கன்னி நீயே
   முக்கண்ணன் தேவியே மதுரை மீனாட்சியே 
   முன்னின்று காக்க நீயே.                                                           4. 
    
ஆலங் குடித்திட்ட அய்யனைக் காத்தது 
   அன்னையே நீயல்லவா ?
   ஆனை முகத்தவன் அறுமுகன் இருவரின் 
   அன்பான தாயல்லவா ?
காலங்கள் வென்றவள் காற்றைப் படைத்தவள் 
   கருமாரி நீயல்லவா ?
   கடைவிழிப் பார்வைக்கு ஏங்கிடும் நானுந்தன் 
   கண்ணான சேயல்லவா ?
ஞாலங்கள் ஆள்பவள் நான்மறை ஆனவள் 
    நான்முகி நீயல்லவா ?
   ஞானம் பிறப்பிக்க நயனம் திறக்கின்ற 
    நாயகி நீயல்லவா ?
மூலங் குடிகொண்ட மோகனச் செல்வி நீ 
   முண்டகக் கண்ணி நீயே.
   முக்கண்ணன் தேவியே மதுரை மீனாட்சியே 
   முன்னின்று காக்க நீயே.                                                          5


தப்பேதும் செய்தாலும் தடுத்தென்னைக் காப்பது
   தாயுந்தன் பொறுப்பல்லவா?
   தட்டுத் தடுமாறி மேலேறும் வரையுந்தன்
   வயிற்றுக்குள் நெருப்பல்லவா ?
எப்போதும் எங்கேயும் ஏமாந்து போகின்ற
   ஏமாளி மகனல்லவா ?
   ஏமாந்து போகாமல் காப்பதும் மீட்பதும்
   என் அன்னை நீயல்லவா ?
அப்போதும் இப்போதும் அன்னையே கதியென்று
   அடிதொழும் மனமல்லவா?
   அபிராமிப் பட்டரைப் போலவே நானொரு
   அடியார்கள் இனமல்லவா ?
முப்போதும் காப்பவன் முத்தொழில் புரிபவன்
   மோகனம் கொண்ட மயிலே !
   முக்கண்ணன் தேவியே மதுரை மீனாட்சியே 
   முன்னின்று காக்க நீயே.                                                          6.


கனிவான பார்வையுன் கடைக்கண்ணில் காட்டிஎன்
   கவலைகள் போக்க வேண்டும்.
   காலங்கள் தோறுமுன் கருணையைப் பாடியே
   காலம் கழிக்க வேண்டும்.
தனியாகப் போராடி துயர்கண்டு மாளாது
   தளராமல் நில்ல வேண்டும்.
   தடைகோடி வந்தாலும் தாயுந்தன் பேர்சொல்லி
   தாண்டியே செல்ல வேண்டும்.
இனிவரும் காலத்தில் எல்லாமுன் மகனுக்கு
   ஏற்றமே ஆக வேண்டும்.
   என் அன்னை தான் எந்தன் ஏற்றத்தின் காரணம்
   என்று நான் கூற வேண்டும்.
முனிவர்க்கும்  தேவர்க்கும் முதல்வியே இனிவாழ்வில்
   முன்னேற்றம் காண வேண்டும்.
  முக்கண்ணன் தேவியே முத்து மீனாட்சியே 
   முன்னின்று காக்க வேண்டும் .                                                           7.


அடியார்கள் கூட்டத்தில் அடியேனும் ஒருவனாய் 
   அடையாளம் காண வேண்டும்.
   அன்னையின் அருள்பெற்ற அற்புதன் இவனென்று 
   அனைவரும் கூற வேண்டும்.
கொடியோர்கள் தீயோர்கள் கூட்டத்தில் சேராமல்
   குணத்தோடு வாழவேண்டும்.
   கோடியாய் செல்வங்கள் குவிந்தாலும் என்றைக்கும்
   குறையாத பணிவு வேண்டும். 
விடியாது பொழுதென்று வெம்பிக் கிடக்காமல் 
   விதியை நான் வெல்ல வேண்டும்.
   வேதனைக் கற்களை வெற்றிக்குப் படிகளாய் 
    உருமாற்றிக் கொள்ள வேண்டும்.
முடியாத செயலொன்று உண்டெனில் அதனை நான் 
   முடிக்கின்ற சக்தி வேண்டும்.
   முக்கண்ணன் தேவியே மதுரை மீனாட்சியே 
   முன்னின்று காக்க நீயே.                                                            8.

நெற்றிக்கண் கொண்டென்னை நின்கணவன் சுட்டாலும்
   நீவந்து கேட்க வேண்டும்.
   நேரம் கிடைக்கின்ற போதெல்லாம் எனைப்பற்றி
   நீகொஞ்சம் சொல்ல வேண்டும்.
வெற்றிக்கு வழிசொல்லும் வேழமுகப் பிள்ளையை
   வினைதீர்க்க சொல்ல வேண்டும்.
   வேல்கொண்டு நின்பிள்ளை நான்கொண்ட வினைஎல்லாம்
   வேரோடு சாய்க்க வேண்டும்
குற்றங்கள் செய்கின்ற நேரத்தில் நீவந்து
   குட்டித் தடுக்க வேண்டும்.
   கூவித் துதித்துன்னை கும்பிட்டு அழைத்தால் -நீ
   குரல்கேட்டு நிற்க வேண்டும்.
முற்றிக் கிடந்தே நான் முடிகின்ற வேளைக்கு
   முன்பேனும் வாருமம்மா
   முக்கண்ணன் தேவியே மதுரை மீனாட்சியே 
   முக்தியைத் தாருமம்மா.                                                                9 .


வானத்துத் தேவரும் வையத்து மாந்தரும் 
   வணங்கிடும் பரமேஸ்வரி
   வாவென்று நான்பாட வாஞ்சையாய் முன்வந்து 
   வரந்தரும் காளீஸ்வரி.
கானத்தில் சுவையாக கவிதைக்குள் இசையாக 
   கலந்திடும் புவனேஸ்வரி.
   கண்மூன்று கொண்டவன் காலனை வென்றவன் 
   கரம்பற்றும் சிவனேஸ்வரி.
ஆனந்தக் கூத்தனை அன்பினால் வசமாக்கி 
   ஆள்கின்ற இராஜேஸ்வரி.
   ஆனை முகத்தவன் அறுமுகன் தாயாக 
   அணைக்கின்ற மாதேஸ்வரி.
மோனம் கலைத்தேஉன் முகம் காட்ட வருவாயே 
   முக்கோடி கண்ணேஸ்வரி    
   முத்து மீனாட்சியே முத்தமிழ் கவிபாடி 
   முறையிட்டேன் நீயே கதி.    .                                                          10 .    




                                                        பாடலைப் பாடியிருப்பவர் : பிரபாகரன் 



              
 ஓம்சக்தி. 
    சிவகுமாரன் 


18 comments:

thendralsaravanan said...

அருமை அருமை...அழகான பாடல்...சொல்லாற்றல் மிக மிக அருமை...வாழ்த்துக்கள்!!!!

பத்மநாபன் said...

வைரமான கவிதை சிவா.. பிரபா மேலும் பட்டை தீட்டியுள்ளார்.

Lalitha Mittal said...

"கோடியாய் செல்வங்கள் குவிந்தாலும் என்றைக்கும்
குறையாத பணிவு வேண்டும்"

இது மிகவும் முக்கியமான விஷயம்!

அருமையான பாடல்!

அன்னையே !அபிராமவல்லியே !அருட்கவியுள்
அகலாது அமர்ந்தருள்வாய்!

எந்நேரமும் இவன் உனைப்போற்றிப்பாடிடும்
கவியாக கிருபை புரிவாய் !

sury siva said...

தங்களது கவித்திறனும் பிரபாகரனின் பக்தியுள்ளமும்
மெய் சிலிர்க்க வைக்கிறது.

எல்லாம் அவன் அருள்.


சுப்பு ரத்தினம்.

இராஜராஜேஸ்வரி said...

ஆலங் குடித்திட்ட அய்யனைக் காத்தது
அன்னையே நீயல்லவா ?/


அதைவிட விஷமான
இவ்வுலக துன்பத்தை
அனுபவிக்கும் எம்மை
அன்னையே காத்தருளட்டும்!

அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

ஜீவி said...

அந்த சந்தத் தமிழ் அமிழ்ந்தாய் குழைந்து வரும் அழகு தான் என்னே!
அற்புதம், சிவகுமாரன்! மனம் குழையும் கவிதை தந்து மயக்கியமைக்கு மனமார்ந்த நன்றிகள்!
நாங்களும் பிரபாகரனுடன் சேர்ந்து பாடுகிறோம்:

முக்கண்ணன் தேவியே! மதுரை மீனாட்சியே! முன்னின்று காக்க நீயே!

சென்னை பித்தன் said...

அத்தி பூத்தது
அருட்கவி பிறந்தது!

திகழ் said...

அழகான பாடல்

அப்பாதுரை said...

நம்பிக்கையின் தீவிரம் நன்றாக வெளிவந்திருக்கிறது. உங்கள் மனம் போல் நடக்கட்டும்.
நன்றாகவே பாடியிருக்கிறார் பிரபாகரன்.

(ஏய்ப்பது மீனாட்சியல்ல என்று சொன்னால் ஏற்றுக்கொள்வீர்களா?)

Kavinaya said...

வழிநடைப் பாடலுக்கு பொருத்தமாய் அமைந்து, உள்ளம் கொள்ளை கொண்ட பாடல். மிகவும் அருமை. அருட்கவி என்பது வெகு பொருத்தமே.

sury siva said...

//ஏய்ப்பது மீனாட்சியல்ல என்று சொன்னால் ஏற்றுக்கொள்வீர்களா?) //

//இன்னும் ஏன் ஏய்த்து நின்றாய் ?//

இன்னும் எந்நேரம் ஏங்க வைப்பாய் ?

என்று இருக்கலாமோ ?

சுப்பு ரத்தினம்

G.M Balasubramaniam said...

குறையேதும் உனக்கிருக்க வாய்ப்பில்லையே குமரா. அன்னையின் ஆசி என்றும் உனக்கிருக்கும். வாழ்க. வெல்க.

dr.tj vadivukkarasi said...

மிகுந்த ஆச்சர்யம் தரும் பதிவாக இது இருக்கிறது. அருவி போன்று கொட்டும் பக்தியில் தோய்ந்த வார்த்தைகள்.. அதற்கு இசை வடிவம் வேறு! நல்ல விஷயம்...தொடரவும்.

கடம்பவன குயில் said...

இப்போதுதான் தங்கள் மீனாட்சி பாமாலை படித்தேன். ஏற்கனவே சில காரணங்களால் 4 மாதமாக அன்னையை பார்க்கமுடியாத நிலை. இப்போது உங்கள் பாடலை படித்துக்கொண்டிருக்கும்போதே ஓடோடிபோய் பார்க்கவேண்டும்போன்ற உத்வேகத்தைக் கொடுக்கிறது. நல்ல நடையுடன் கூடிய கவிமழை. நன்றி.

பாற்கடல் சக்தி said...

பக்த(தி) வேட்கையுடன் கொட்டுகிறது அருவி

Rathnavel Natarajan said...

கோடியாய் செல்வங்கள் குவிந்தாலும் என்றைக்கும்
குறையாத பணிவு வேண்டும்.
அருமையான வரிகள். மதுரை மீனாக்ஷி அம்மனைப் பற்றிய திரு சிவகுமாரனின் ஒரு அருமையான கவிதைத்தொகுப்பு.
உங்கள் நாவில் சரஸ்வதி குடியிருக்கிறார்.
உங்களது இந்த கவிதையை எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
மனப்பூர்வ வாழ்த்துக்கள்.

உணவு உலகம் said...

கவிதைத்தொகுப்பு அந்த மதுரை மீனாட்சி அம்மனை தரிசிக்க் வைத்தது.

இராஜராஜேஸ்வரி said...

ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்
ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்

அன்னை மீனாட்சி
அம்மனை கண்முன் நிறுத்தி
அருள் மழை பொழிய வைத்த கவிதைக்குப் பாராட்டுக்கள்