Saturday, April 23, 2011

அறுமுகன் அருள்மாலை


 ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம்
     ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம்
    
பூமாலை சூட்டியும் பொன்னாரம் சாத்தியும்
    பூஜிக்கும் பக்தரிடையே 
  பூப்போன்ற வார்த்தையால் பொன்போன்ற கவிதையால் 
    புகழாரம் சாத்துகின்றேன்  
பாமாலை சூட்டியுன் பாதார விந்தங்கள் 
   பணிவோடு போற்றுகின்றேன்.
  பார்வதி பரமனின் பாலனே வேலனே 
    பாராளும் பாலமுருகா 
காமாலைக் கண்ணுக்கு காண்கின்ற அத்தனைக் 
   காட்சியும் மஞ்சளே போல் 
  கந்தனே நானிங்கு காண்பவை எல்லாமுன் 
     கனிவான தோற்றமன்றோ 
ஏமாந்து போனதால் கோபித்து மலைமீது
   ஏறிய பழனிவேலே
  ஏறுமயில் ஏறியே இறங்கிவர வேண்டுமே 
    ஈசனுக்கும் ஞான குருவே .                                                                 1 .

தாய்தந்த வேல்கொண்டு தளராத படைகொண்டு 
   சூரனை போரில் வென்றாய் 
  தமிழ்சொன்ன அவ்வையின் கவிகேட்க கனிதந்து 
   தடியுடன் நேரில் நின்றாய் 
வாய்பேசா பிள்ளையுன் வாசலில் வந்திட 
   வளர்தமிழ் பேச்சு தந்தாய்.
  வள்ளலார் கவிகேட்க வளர்கந்தக் கோட்டத்தில் 
    வடிவேலைத் தாங்கி வந்தாய் .
ஓய்வின்றி பெண்பின்னே ஓடிய அருணகிரி 
   உள்ளத்தில் மாற்றம் செய்தாய் 
  ஓங்கார நாதத்தின் உட்பொருள் தனையந்த 
    உத்தமர் உணர வைத்தாய்.
ஈயென்று கையேந்தி இரங்கியும் உன்னுடைய 
   இதயத்தில் இடமில்லையா ?
  ஏறுமயில் ஏறியே இறங்கிவர வேண்டுமே 
    ஈசனுக்கும் ஞான குருவே .                                                                 2 .

அப்பனும் உன்னிடம் கைகட்டி மந்திரம் 
   அடக்கமாய் கேட்கவிலையா ?
  அகிலத்தைப் படைக்கின்ற பிரம்மனின் அகந்தையை 
   அன்று நீ அழிக்கவிலையா ?
தொப்பையார் தன்னிடம் சின்னதோர் பழத்துக்கு 
   போட்டி நீ போடவிலையா ?
  தோகைமயில் மீதேறி பூவுலகம் சுற்றியும் 
   தோற்று நீ போகவிலையா ?
தப்பென்று ஆனாலும் தாரமொன் றிருக்க நீ 
   வள்ளியை மணக்கவிலையா ?
  தள்ளாத கிழவனாய் தடியூன்றி பொய்சொல்லி 
   தந்திரம் செய்யவிலையா ?
இப்போது உன்லீலை ஏழையின் பக்கமா 
   இதுவொன்றும் முறையில்லையே !
  ஏறுமயில் ஏறியே இறங்கிவர வேண்டுமே 
    ஈசனுக்கும் ஞான குருவே .                                                                 3 .



பாராளும் தந்தைக்கே பாடம் நடத்திய
   பாலனே ! சுவாமி நாதா !
  பாமரன் தெளிவுற பரமனின் ரகசிய
   பாடங்கள் கற்று நீ தா !
சூராதி சூரனை செந்தூரில் வதம்செய்து
   சினந்தீர்த்த செந்தில் குமரா
  சோதனைச் சூரனை சோதித்து வதம் செய்யும்
   சூட்சுமம் சொல்லித் தாராய் !
போராடி வென்றபின் சினந்தீர தணிகையில்
   போய்நின்ற தணிகை வேலா
  போராடி போராடி பொறுமையும் போனதே
    போராட வலிமை தாராய் !
ஈராறு கரங்களும் என்துயர் தீர்த்திட
   போறாதோ கந்தவேளே
  ஏறுமயில் ஏறியே இறங்கிவர வேண்டுமே
     ஈசனுக்கும் ஞான குருவே .                                                                4 .

பரங்குன்றம் மீதிலே மணக்கோலம் கண்டவா
   மனவீட்டில் ஒளியேற்ற வா
  பழமுதிர்ச் சோலையில் இருதேவி கொண்டவா
   பக்தனின் விதி மாற்ற வா
தரங்குன்றிப் போகாத தமிழ்கொண்டு வாழ்த்தினேன்
   தயை காட்டு தணிகை வேலா
  தளராத மனதோடும் சலியாத தமிழோடும்
   தொழுகிறேன் நீண்ட நாளாய் .
கரங்களும் ஈராறு கண்களும் கொண்டென்னை
   கைதாக்கு மகராஜனே
  காலங்கள் தோறும் உன் கடுங்காவல் கைதியாய்
   எனையாக்கு கதிரேசனே
இரங்காத உன்மனம் இரும்பாலே ஆனதா
   என்னவெனச் சொல்லு குருவே
  ஏறுமயில் ஏறியே இறங்கிவர வேண்டுமே
     ஈசனுக்கும் ஞான குருவே .                                                                 5.

ஆண்டியாய் மலையேறி அரைக்கோ வணத்தொடு
   அருள்கின்ற தண்டபாணி 
  அளவற்ற ஆசையால் அடங்காத மனதுக்கு 
   அமைதியைக் கொண்டு வா நீ 
தூண்டிலில் புழுவாக துயர் கொண்ட மனதுக்கு 
   துணையாக ஒடி வா நீ 
 துள்ளிவரும் வேல்கொண்டு தோகைமயில் துணைகொண்டு  
   தோழமை கொள்ள வா நீ 
கண்டி கதிர் காமமென கடல் தாண்டி தன்னருளைக் 
  காட்டுகிற கந்தசாமி !
 கால்தேய உனைத்தேடி  மலையேறி வருவோர்க்கு 
   கனிமுகத்தை கொஞ்சம் காண்பி .
எண்டிசையும் ஏழுலகும் ஏகமாய் ஆள்கின்ற 
   ஏகாம்பன் பெற்ற மகனே 
  ஏறுமயில் ஏறியே இறங்கிவர வேண்டுமே 
     ஈசனுக்கும் ஞான குருவே .                                                                 6.




கார்த்திகைப் பெண்களின் கரங்களில் தவழ்ந்தவா 
   கடம்பனே கார்த்திகேயா 
  கணபதி துணைகொண்டு குறமகள் வள்ளியை 
   கடிமணம் செய்த குமரா 
ஆர்த்தெழும் அலையிடை அறிதுயில் கொண்டிடும் 
   அரங்கனின் அன்பு மருகா 
  அன்பான மாமனை அழகான மாமியை 
   அருள்காட்டச் சொல்லு முருகா 
நீர்த்தவளை போலவே நின்புகழ் நாள்தோறும் 
   நிற்காமல் கூவுகின்றேன் 
  நீநல்ல பாம்பென என்குரல் தேடியே 
   நாடும் நாள் எந்த நாளோ 
ஈர்த்தென்னை ஆட்கொண்ட எந்தைபெரு மான்பெற்ற
   இளையமகவான குருவே 
  ஏறுமயில் ஏறியே இறங்கிவர வேண்டுமே 
     ஈசனுக்கும் ஞான குருவே .                                                                 7.

ஆனந்த தாண்டவம் புரிகின்ற அப்பனின் 
   அடிதேடி தொழவில்லையா ?
  அடியேனின் வாழ்விலே அவன் ருத்ர தாண்டவம் 
    அடங்கிட வழியில்லையா ? 
நானுந்தன் அன்னைக்கு நற்றமிழ் கவிசெய்து 
   நாள்தோறும் தரவில்லையா ?
  நாயகி நயனங்கள் என்மேல் திரும்பிடும் 
    நாளின்னும் வரவில்லையா ?
மானந்தான் பெரிதென்று மருகியே வாழ்கிறேன் 
   மனந்தன்னில் கனிவில்லையா ?
  மதியாதார் கண்முன்னே மகிழ்வான வாழ்க்கையுன் 
    மகனுக்கு இனியில்லையா ?
ஏனிந்த தாமதம் இனிஎன்னைக் கைவிட்டால் 
   எனக்கொன்றும் கதியில்லையே 
  ஏறுமயில் ஏறியே இறங்கிவர வேண்டுமே 
     ஈசனுக்கும் ஞான குருவே .                                                                 8.

நெற்றிவிழி யால்மதனைச் சுட்டஉன் தந்தையின் 
   நேசம்பெற வழியுமுண்டோ ?
  நீகொஞ்சம் எனைப்பற்றி நேயமாய்ச் சொன்னாலே 
    நின்தந்தை மறுப்பதுண்டோ ?
கொற்றவை உன்அன்னை கோலவிழியா லென்னைக்
   குளிர்விக்க மனமில்லையா ?
  குமரனே தாயுன்னைக் கொஞ்சிடும் போதென்றென்
     குறை சொல்ல நினைவில்லையா ?
வெற்றிவடி வேலனே வேழமுக அண்ணனை 
   வேண்டி நான் தொழவில்லையா ?
   வேதனைக் கூக்குரல் விக்கினன் செவிகளில் 
     விண்தாண்டி விழவில்லையா ?
இற்றைக்கு என்கவி கேட்டதும் உன்மனம் 
   இளகாதோ கந்தவேளே 
   ஏறுமயில் ஏறியே இறங்கிவர வேண்டுமே 
     ஈசனுக்கும் ஞான குருவே .                                                                9.

      
அம்பலத்தில் ஆடிடும் அப்பன்திரு நடனத்தை 
   அடியேனும் காண்பதென்றோ ?
  அம்மையின் திருவடியின் அழகுமணி ஓசையை 
    அய்யா நான் கேட்பதென்றோ ?
உம்முடைய வேல்கொண்டு ஊழ்வினையின் வேகத்தை 
   ஓட்டும் நாள் எந்த நாளோ ?
  உயிரெனும் யாழிலே ஓமெனும் மந்திரம் 
    மீட்டும் நாள் எந்த நாளோ ?
பொம்மையென எனைவைத்து நீபோடும் ஆட்டங்கள் 
   போதுமெனச் சொல்வதாரோ ?
  பூங்கழலைக் காட்டிஎன் பொல்லாத தீவினையை 
    போக்கு எனச் சொல்வதாரோ ?
எம்புலம்பல் உன்னுடைய இன்செவியில் ஏறாதோ 
   என்செய்வேன் கந்தவேளே ?
  ஏறுமயில் ஏறியே இறங்கிவர வேண்டுமே 
     ஈசனுக்கும் ஞான குருவே .                                                                10 .    

கடன்வாங்கிக் கழிக்கின்ற கணிதங்கள் இனிவாழ்வில் 
   காணாமல் போகட்டுமே
  கஞ்சியோ கந்தையோ கைவந்த காசுக்குள்
    கட்டுக்குள் நிற்கட்டுமே 
அடங்காத ஆசையும் அணையாத கோபமும்
   அறுந்தேதான் போகட்டுமே 
  அளவான செல்வமும் அழகான இல்லமும் 
    அடியார்கள் எய்தட்டுமே 
தடம்மாறிப் போகாத சரியான பாதை உன் 
   தங்கவேல் காட்டட்டுமே 
  தஞ்சமென வந்தோர்க்கு அஞ்சேலென நீ சொல்லும் 
   அருள்வாக்கு கேட்கட்டுமே
இடப்பாகம் தேவிக்கு ஈந்திட்ட ஈசனின் 
   இளவரசே பாலகுருவே 
  ஏறுமயில் ஏறியே இறங்கிவர வேண்டுமே 
     ஈசனுக்கும் ஞான குருவே .                                                                11 . 

உன்னைநான் எண்ணுகையில் உன்பேரைச் சொல்லுகையில் 
   உள்ளமது உருகுதையா 
 ஒமென்று ஓமென்று உருவேற்றி என்மனம் 
    உறுதியாய் இறுகுதையா
அன்னையாய் அப்பனாய் உன்னையே எண்ணியே 
   அழுதிடத் தோணுதையா 
 ஆதரவு கேட்டு உன் அடிகளைப் பற்றியே 
   தொழுதிடத்   தோணுதையா 
சின்னவன் என்னை நீ சீரான பாதையில் 
   சேர்த்துவிட வேண்டுமையா 
   சிங்கார வேலனே உன்னைநான் ஒருமுறை 
     பார்த்துவிட வேண்டுமையா 
என்னகவி பாடி நான் இன்னுமுனை வேண்டுவேன்
   இனியொன்றும் வழியில்லையே 
  ஏறுமயில் ஏறியே இறங்கிவர வேண்டுமே
     ஈசனுக்கும் ஞான குருவே .                                                                12 .  

   
ஆழ்கடல் உள்ளுக்குள் அமிழ்ந்தேதான் போனாலும் 
  அதிர்ந்து நான் போகமாட்டேன்
  அறுமுகன் திருவிளை யாட்டென்று சொல்லுவேன்
    ஆழியை நோக மாட்டேன்
சூழ்கின்ற சோதனை தொடர்ந்தேதான் வந்தாலும் 
   சொல்லொன்றும் பேச மாட்டேன்
  சுற்றிவரும் வேலுண்டு துணையென்று சொல்லுவேன்
    சூழலை ஏசமாட்டேன் 
ஊழ்வினை யால்வந்த ஒருநூறு துன்பங்கள் 
   ஒவ்வொன்றும் தாங்கி நிற்பேன்
  உன்திரு வடிகளை உறுதியாய்ப் பற்றியே 
    ஒருநூறு பாடம் கற்பேன்
ஏழ்மையோ செல்வமோ எல்லாம்உன் லீலையே 
   என்கையில் ஒன்றுமில்லையே 
  ஏறுமயில் ஏறியே இறங்கிவர வேண்டுமே 
     ஈசனுக்கும் ஞான குருவே .                                                                13 . 

குமரமலை மருதமலை குன்றத்தூர் வள்ளிமலை
  குன்றேறி அரசாள்பவா 
   குணங்கொண்ட பக்திமலைக் கோயிலாம் நெஞ்சத்தில் 
   குடியேறி அரசாள வா 
அமரகுலம் காக்கவும் அசுரகுலம் தாக்கவும் 
   அவதார உரு கொண்டவா 
   அடியவர் குலங்காக்க அவனியில் குன்றேறி
   அரிதாரம் பல பூண்டவா 
சமயங் கடந்தவா சக்தியின் வேலவா 
   சங்கரன் விழி வந்தவா 
   சமயத்தில் வந்தென்றன் சங்கடம் தீர்த்திட 
   சக்திசிவ பாலனே வா 
இமயத்தில் உறைகின்ற ஈசனின் புத்திரா
   இதயம் உறைகின்ற வா   
   ஏறுமயில் ஏறியே இறங்கிவர வேண்டுமே 
    ஈசனுக்கும் ஞான குருவே .                                                                14 . 

  
அறுபடை வீட்டுக்கும் அயராது சலியாது
   ஆசையாய் வந்து செல்வேன்
  அடியேனின் கூட்டுக்குள் அறுமுகன் குடியேற 
    அய்யா நான் என்ன செய்வேன் ?
ஒருபுறம் தெய்வானை மறுபுறம் வள்ளியென
   இருமணம் கொண்ட முருகா 
  ஓராறு முகங்களில் உளமார ஏதேனும் 
    ஒருமுகம் காட்டு முருகா 
குருபரா சரவண பவகுகா சண்முகா 
   கூர்வடி வேலவா வா 
  கூத்தாடும் பித்தனின் குலவிளக் கானவா
    குறவள்ளி காதலா வா 
இருவினை தீர்த்திட என்னிலை பார்த்திட 
    இரங்கி வா அழகின் உருவே 
  ஏறுமயில் ஏறியே இறங்கிவர வேண்டுமே 
     ஈசனுக்கும் ஞான குருவே .                                                                15 . 

அந்தமாய் ஆதியாய் அருட்பெருஞ் சோதியாய் 
   ஆனவன் பெற்றவா வா 
  அறுபடை கொண்டவா செருபடை வென்றவா 
    ஆண்டியாய் நின்றவா வா 
கந்தனே கடம்பனே கார்த்திகை மைந்தனே 
   கனிமயில் வாகனா வா 
  கார்முகில் வண்ணனின் மருகனே முருகனே 
    கருணைவடி வானவா வா 
சிந்தையில் நின்றவா சூரனைக் கொன்றவா 
   செந்தில்வடி வேலவா வா 
   செகமெலாம் ஆள்கிற சக்தியின் புத்திரா 
      சிவமணி ஆனவா வா 
எந்தையும் தாயுமாய் என்னை ஆட கொண்டவா 
   எழுந்தருள வேண்டும் நீயே 
  ஏறுமயில் ஏறியே இறங்கிவர வேண்டுமே 
     ஈசனுக்கும் ஞான குருவே .                                                                16 . 


                                                                                                     -சிவகுமாரன்

 (2001 ஆம் ஆண்டு தைமாதம் பழனிக்கு மாலை அணிந்திருந்த போது எழுதியது)  


பாடலைப் பாடியிருப்பவர் என் அம்மா

15 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஆறுமுகன்
அருள்மாலை
மிகவும் அருமை.
வாழ்த்துக்கள்.
பாராட்டுக்கள்.

Lalitha Mittal said...

படித்தேன் உன் அருள்மாலை எனும் பாமாலை;

சாத்தினேன் விழிகளால் கண்ணீர்ப்பூமாலை!

இராஜராஜேஸ்வரி said...

தாய்தந்த வேல்கொண்டு தளராத படைகொண்டு
சூரனை போரில் வென்றாய் //
மிகவும் அருமை.
வாழ்த்துக்கள்.
பாராட்டுக்கள்.

sury siva said...

அம்மா அருமையாகப் பாடியிருக்கிறார்கள்.
ஆறுமுகனைப் போற்றும் இப்பாடலை
ஈரேழு உலகத்தாரும்
உணர்ந்து செபித்திட
எல்லா நலமும்
ஏற்றங்கள் பலவும்
ஐயமின்றி பெறுவார்.
ஒரு தரம் படிக்கவே
ஓங்கு புகழ் அடைவர்.
நானும் படிப்பேன், பாடுவேன் நன்றியுடன் தங்களுக்கும் தங்கள் அன்னைக்கும்.
சுப்பு ரத்தினம்.
http://vazhvuneri.blogspot.com

தமிழ் said...

அழகுத் தமிழ்மாலை

RVS said...

அழகனுக்கு தமிழில் ஒரு பாமாலை.
தமிழில் எழுதும்போது தெய்வகடாக்ஷம் நிரம்பியிருக்கிறது உங்களுக்கு... வாழ்த்துக்கள் அருட்கவி.. ;-))

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

பக்தி இலக்கியத்துக்கு உங்களின் பங்கு உயர்வானது சிவா.

நீங்கள் பழைமையான வழக்கம்போல் எல்லோரும் எழுதும் வார்த்தைகளில் இல்லாமல் புதியன புகுத்துவதால் இவற்றிற்கு யாரும் முயற்சிக்காத இலக்கியச் சிறப்பும் கிடைக்கிறது.

இயல்பாகவே உங்களுக்கு இசையின் மீது ஒரு ஆளுமை இருப்பதால் சந்தமும் லயமும் போட்டிபோட்டு உங்கள் விரல்நுனியில் வீழ்ந்துகிடக்கின்றன.

நிறைவான அனுபவம்.

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

//தஞ்சமென வந்தோர்க்கு அஞ்சலென நீ சொல்லும் அருள்வாக்கு கேட்கட்டுமே//

அஞ்சேலென திருத்தவும் சிவா.

G.M Balasubramaniam said...

Anpu sivakumaara, AZHAKU THAMIZHIL AARUMUKANAIYUM AVAN THUNAI KONTU MATRA THEIVANGALAIYUM THUTHIPAATI IRAINJUM ILANKUMARAA, NEE VAAZHKA. ANAITHTHU THEIVANGALIN AASIYUM UNAKKUNTU. ULLAM NANRAAKA IRUNTHAALTHAAN IPPATI KAVITHAI EZHUTHA MUTIYUM.

thendralsaravanan said...

தமிழ்க் கடவுளின் அருள் முழுவதும் நீங்கள் ஒருவரே பெற்று விட்டீர்களோ எனும் படி உள்ளது உங்கள் பாடல்.
வாழ்த்துக்கள்!

sury siva said...

ஒரு ராக மாலிகை ஆக இந்த முதியோன் பாடுவதை இங்கே வந்து கேட்டு முருகன் அருள் பெறுங்கள்.
http://kandhanaithuthi.blogspot.com
சுப்பு தாத்தா

Lalitha Mittal said...

சிவகுமார்,

சனிப்ரதோஷதினத்தன்று[30-april] ''லிங்காஷ்டகம்'' தழுவிய தமிழ் பஜனைப் பாட்டு என் வலையில் பதிவு செய்தேன்.நீ சிவபக்தன் என்று குறிப்பிட்டதால் இதை உனக்குச்சொல்லவேண்டும் என்று தோன்றியது.வருகை தந்தால் மகிழ்வேன்.

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

வணக்கம் சிவகுமரன்,

பெயருக்கேற்ப தங்களது செயலும் இருப்பதை கண்டு மகிழ்ந்தோம்,


//அறுபடை வீட்டுக்கும் அயராது சலியாது
ஆசையாய் வந்து செல்வேன்
அடியேனின் கூட்டுக்குள் அறுமுகன் குடியேற
அய்யா நான் என்ன செய்வேன் ?//

நிச்சயம் அவரே வந்து உம்மை ஆட்கொள்வார்..

வாழ்த்துக்கள் தோழரே ...

சாய்ராம் கோபாலன் said...

அம்மா அருமையாகப் பாடியிருக்கிறார்கள்.

Super Siva

Nanjil Siva said...

வாவ் ..சூப்பர் !!!