Tuesday, April 24, 2012

சிவவெண்பா

அள்ளக் குறையா அமுதமென இன்பங்கள்
உள்ளம் நிறைய வழிந்தோடி- வெள்ளமென
பாயுமாறு செய்ய பணிவோடு ஏத்துவோம்
தாயுமான ஈசனின் தாள்.

அல்லல் தொலைந்தோட அம்பலத்தான் நாமத்தை
சொல்லித் துதித்துச் சுடரேற்றி- தில்லை
நடராசன் பாதங்கள் நாளும் துதிப்போம்
அடடா அதுவே அறம்.

பொன்னம் பலத்தானை பூலோகம் காத்தானை
அண்ணா மலையானை ஆரமுதப்- பண்ணாலே
பாடிக் களிப்பேன்நான்! பாட்டில் சிவத்தையே
தேடித் திளைப்பேன் தினம்.


அஞ்செழுத்து மந்திரத்தை அன்றாடம் உச்சரித்து
தஞ்சமென ஈசனவன் தாள்சேர் - நெஞ்சே
சிவனை மறவாதே ! சீரோடு வாழ
அவனே உனக்கு அரண்.


இறவாப் புகழ்கேட்டேன்! ஈரேழு ஜென்மம்
மறவா மனங்கேட்டேன்!மீண்டும் -பிறவா
வரங்கேட்டேன் அய்யா! வசமாகி எனக்கு
இரங்கினால் இல்லை இடர்.


தரங்குன்றிப் போகா தமிழ்கொண்டு வாழ்த்தி
வரங்கேட்டுப் பார்ப்பேன் வணங்கி! -இரங்காது
போனாலும் போகட்டும்! பூந்தமிழ்ப் பாவொன்று
ஆனாலே அய்யன் அருள்.


-சிவகுமாரன் 



அய்யா சுப்புரத்தினம் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். 




Wednesday, February 22, 2012

மாலவன் காணா மலரடி


ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய சிவாய நமஓம் 
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய சிவாய நமஓம் 


நீரெனவாகி நிலமெனவாகி 
   நெடுவானாகி காற்றாகி    
   நெருப்பெனவாகி பொருப்பெனவாகி 
   நீள்கடலாகி கதிராகி 
கார்முகிலாகி கடும்புயலாகி 
   கனமழையாகி தருவாகி 
   காயெனவாகி கனியெனவாகி 
   விதையெனவாகி விரிவோனே! 
பூரணமாகி பூஜ்ஜியமாகி 
   புவிமிசை புதிராய் தெரிபவனே 
   புதியனவாகி பழையனவாகி  
   புதுமைகள் தினந்தினம் புரிபவனே
மாரனின் கணைகள் மேல்விழ சினந்தே 
   மறுகணம் விழியால் எரித்தவனே 
   மாதொரு பாகா , மாலவன் காணா 
   மலரடி தொழுதேன் அருள்வாயே!

ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய சிவாய நமஓம் 
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய சிவாய நமஓம் 


                                                                                                                             -சிவகுமாரன் 


                                  பாடியிருப்பவர்:  சிவ.தேன்மொழி  
  
  அய்யா சுப்புரத்தினம் பாடுவதையும் கேட்டு இன்புறுங்கள்