Friday, January 26, 2024

கோணேஸ்வரா


  வெண்பா 

(அய்யனைத் தரிசிக்கும் வரை )

கோணேஸ் வராஉந்தன் கோல எழில்தன்னைக் 

காணேனோ என்னிருக் கண்களால் ? - வீணே 

பிழைத்துக் கிடக்கின்றேன் , பெற்றவா என்னை 

அழைத்துக் கொடுப்பாய் அருள். 


 (அய்யனைத்  தரிசித்த பின் ) 

கோணமலை ஈஸ்வரனின் கோல எழில்தன்னைக் 

காணவந்தேன் , பேரருளில் கட்டுண்டேன் - வீணடைந்து 

போகாதென் வாழ்க்கை ! பொலிந்திடச்  செய்திடுவான் !

ஆகா அவனே அரன் (ண் ).

-சிவகுமாரன்.

25.01.2024

@ திருகோணமலை 


 

Sunday, May 29, 2011

அருணை மலையின் ஒளியே


அருணை மலையின் ஒளியே - திரு 
   ஆலவாயின் மணியே
    அண்ணா மலையே அரசே - திரு
    ஆரூர் ஆண்ட முரசே.
கருணைக் கடலே சிவமே -உயர் 
   கயிலை மலையின் பரமே -அன்று
   காமனை எரித்த விழியை - கொஞ்சம் 
   காட்டி எனக்கு அருள்வாயே ,                          (அருணை மலையின்)

இருளில் கிடந்து தடுமாறி 
   ஏங்கித் தவிக்கும் அடியேனின் 
   இன்னல்கள் தீர்த்து மனமிரங்கி 
   இன்னருள் காட்ட வருவாயே.
அருளைக் காட்டி அணைப்பதற்கு   
   அரனே உனக்கு மனமில்லையோ ?
   ஆலம் உண்ட அருட்திரளே
   அண்ணா மலையே அருள்வாயே.               (அருணை மலையின்)

பொருளைக் கேட்கும் புவி மீதில் 
   பொன்னே உனது அருள் கேட்டேன்.
   போற்றிப் புகழ்ந்து எனது உயிர் 
    போகும் வரை நான் உனைத் தொழுவேன்.
குருவே மணியே குணநிதியே 
   கூடல் ஆண்ட அருள்நிதியே 
   கூற்றை உதைத்த பதமிரண்டை
   கூவிப் பிடித்தேன் அருள்வாயே                (அருணை மலையின்)
                             
                                                                     
                                                                                                   -சிவகுமாரன் 


சிவநாமத்தை ஜெபித்துக்கொண்டு இந்தக் குரல் பதிவை கேட்கவும்.