ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம்
ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம்
ஓம் முருகா ஓம் முருகா என்று கூறு - அந்த
உச்சிமலைக் கோயிலுக்குச் சென்று ஏறு .
கோமணத்து ஆண்டியை நீ பக்தியோடு - தினம்
கும்பிட்டுக்கொள் அதுவொன்றே பற்றுக் கோடு ( ஓம் முருகா )
கந்தனுக்கு பழனியில் படைவீடு - அதைக்
கொண்டுவர ஆசையுடன் நடைபோடு .
வந்ததுயர் ஓடிவிடும் அடியோடு - அவனை
வரச் சொல்லி பாடு ஒரு முடிவோடு. ( ஓம் முருகா )
ஆறுமுகன் பேரைச் சொல்லி ஆடிப்பாடு - அந்த
ஆறெழுத்து மந்திரத்தைப் படி ஆடு
ஏறுமயில் ஏறிவரும் எழில் பாரு - மனதில்
ஏக்கமுடன் பழனிக்குச் சென்று சேரு . ( ஓம் முருகா )
வானுலகத் தேவனுக்கு வாழ்த்து பாடு - அந்த
வடிவேலன் புகழினை ஏத்தி ப் பாடு
ஆனைமுகன் தம்பியவன் அன்பைப் பாடு - அந்த
அண்ணாமலை பிள்ளையவன் அருள்தேடு ( ஓம் முருகா )
வேல்முருகா என்றுசொல்லி மெட்டுப் போடு - அவனை
வேண்டுவதில்லை உனக்கென்ன தட்டுப்பாடு
கால்வலிக்கும் தாங்கி நடை எட்டிப்போடு - அந்த
கந்தனை உன் பக்தியாலே கட்டிப்போடு . ( ஓம் முருகா )
கோலமயில் ஆடுது பார் ஜதியோடு - அதைக்
குகனிடம் தூதனுப்பி துதிபாடு
வேலவனை தூக்கிக் கொண்டு வரச் சொல்லு - நாங்கள்
வேண்டும் வரம் அத்தனையும் தரச் சொல்லு ( ஓம் முருகா )
துள்ளிவரும் வேலைக்கண்டு துதிபாடு - உன்
துன்பமெல்லாம் ஓடிவிடும் விதியோடு
வள்ளிமண வாளனைநீ எண்ணிப் பாடு - அவனை
வலைக்குள்ளே மாட்ட ஒரு கண்ணி போடு ( ஓம் முருகா )
கணபதி தம்பிஇடம் கனிவோடு - உன்
கவலைகள் சொல்லி விடு பணிவோடு
மனம்விட்டுப் பேசுசுப்ர மணியோடு - எந்த
மலையையும் மோதித் தள்ளு துணிவோடு ( ஓம் முருகா )
தந்தனத்தோம் பாட்டுச் சொல்லி தமிழோடு - ஞானத்
தங்க ரதத் தேரிழுப்பாய் மகிழ்வோடு
செந்தூர்க் கடல் வீசுகின்ற அலையோடு - அந்த
செந்தில்வேலன் பேரைச் சொல்லி விளையாடு . ( ஓம் முருகா )
தக்கத்திமி தக்கத்திமி தாளம் போடு - அந்த
தண்டபாணி ஆற்றுக்கொரு பாலம் போடு
பக்கத்துணை யாயிருப்பான் பயத்தை விடு -அவன்
பன்னிருகை கொண்டணைப்பான் கவலைவீடு ( ஓம் முருகா )
ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம்
ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம்
சிவகுமாரன் .