Sunday, April 12, 2020

மன்றாடிப்பார்



குன்றெல்லாம் குடியாக உருவானவன் -கொஞ்சம்
 மன்றாடிப்பார் நேரில் வருவானவன்.
அன்றாடம் துதிப்போர்க்குள் இருப்பானவன் - தன்
 அடியாரை எதிர்ப்போர்க்கு நெருப்பானவன் -  முருகன் ( குன்றெல்லாம்...)     1.

உமைபாகன் நுதற்கண்ணில் உருவானவன் - அந்த
உலகாளும் தந்தைக்கே குருவானவன்  .
கேட்டாலே தரும் கல்ப தரு ஆனவன் -  நீ
கேட்டுப் பார் , எடுத்தள்ளித் தருவானவன் - முருகன் (குன்றெல்லாம்...)           2.

காட்டிடையன் போல்வேடம் தரித்தானவன்- சுட்ட
கனிஈந்து மணல்ஊதச் சிரித்தானவன்
திமிர்கொண்ட அசுரன் தோல் உரித்தானவன் - என்
தமிழுக்கும் அவனேதான்  உரித்தானவன் - முருகன் (குன்றெல்லாம்...)            3.


மலையேறி அரையாடை அணிந்தானவன் - பின்
மனம்மாறி கடுங்கோபம் தணிந்தானவன் .
குறவள்ளி தனைத்தேடி மணந்தானவன் - பொதிகைக்
குளிர்த் தென்றல் தமிழ்வீசும் மணம்தான்அவன்- முருகன்(குன்றெல்லாம்)   4.

திருஅருண கிரிநாவில் இருந்தானவன் - ஊமைக்
குருபரனின் பிணிதீர்க்கும் மருந்தானவன்.
புவிசுற்ற மயிலேறி பறந்தானவன் - என்
கவிகொத்திச் செல்கின்ற பருந்தானவன் - முருகன் (குன்றெல்லாம்)               5.

படைதன்னை வேல்கொண்டு பொடிசெய்தவன் - அசுரன்
பகைவென்று அதிற்  சேவற் கொடி செய்தவன் .
உலகெங்கும் தமிழ்நெஞ்சே குடி ஆனவன் - என்
உளம் உழுது பயிர் செய்யும் குடியானவன்  - முருகன் (குன்றெல்லாம்)            6.

அவ்வைக்குத் தமிழ் ஞானப் பழமானவன் -வள்ளி
அழகுக்கு மனம்மயங்கி கிழமானவன் -
உயர்வான வழிகாட்டும் மறை ஆனவன் - அவனை
உனக்குள்ளே தேடிப்பார் மறையான் அவன் - முருகன் (குன்றெல்லாம்)          7.

செந்தூரில் அலைவீசும் கடலானவன் -இன்பச்
செந்தமிழின் இசையே தன்  உடலானவன் -
குருப்ரம்மன்  சிறைவழக்கின் தீர்ப்பானவன் - உன்
குறைசொல்லிப் பார்அனைத்தும் தீர்ப்பான்அவன்-முருகன்(குன்றெல்லாம்)8

தெய்வானை வள்ளிக்கும் துணையானவன் -இன்பத்
தேன்தமிழின்  இன்சுவைக்கு இணையானவன் !
அடியாரின் விழி நீர்க்கு அணையானவன் - அவனை
அகல்விளக்காய் ஏற்றிப்பார் ,அணையான்அவன்-முருகன்(குன்றெல்லாம்) 9.

ஓங்கார நாதத்தின் பொருளானவன் - தினம்
ஓம் என்று சொல்லிப்பார் அருள்வான் அவன் .!
உலகத்தின் இருள்நீக்கும் ஒளி ஆனவன் - நீ
உளமுருகிக் கேள் எதையும் ஒளியான் அவன் - முருகன் (குன்றெல்லாம்)     10.


                                                      பிரபாகரனின் தெய்வீகக் குரலில் 




                                                        என் அம்மாவின் குரலில் 







சிவகுமாரன் 



6 comments:

சிவகுமாரன் said...

19 வருடங்களுக்கு முன்னர் எழுதியது.என் சித்தப்பா சுந்தரபாரதி எழுதிய அன்னை என்னும் இசைப்பாட லின் தாக்கத்தால் அதே இசையில் பாடத் தகுந்தவாறு எழுதினேன்.

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை...

அனைவரையும் காக்கட்டும்...

Nanjil Siva said...

ஆஹா .. ஆஹா ... அருமையான குரல்வளம் ... கேட்கும்போது காதிற்கு எவ்வளவு இனிமையாக இருக்கிறது ...சபாஷ் ... கவிபுனைந்த உங்களுக்கு கோடி வாழ்த்துக்கள் ஐயா ... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

Jayabal Velladurai t said...

முருகன் பாடல் வரிகள் அனைத்தும்
அழகாக பொருத்தமாக பொருள் பொதிந்து சந்தத்துடன் உள்ளது.வாழ்த்துகள்

Anonymous said...

கடைசி வரிகளை ஒரே வார்த்தையில் முடித்து இருபொருள்பட அமைத்தது அழகு. தம்பி பிரபாகரன் அழுத்தம் திருத்தமாக அழகாக பாடி உள்ளார். சிவமணி குடும்பத்தார்க்கு முருகன் அருள் உண்டு .வாழ்த்துகள்

சிவகுமாரன் said...

நன்றி ஜெயபால் அண்ணா,
🙏🏻🙏🏻