ஒன்றாகி பலவாகி உருவெடுத்த தெய்வம்
ஓங்கார நாதத்தை உணர்த்துகின்ற தெய்வம்
குன்றெல்லாம் குடியேறி கோயில்கொண்ட தெய்வம்
கூப்பிட்டதும் ஓடிவரும் குழந்தை போன்ற தெய்வம்
அன்று பிரம்மன் ஆணவத்தை அடக்கிவைத்த தெய்வம்
அவ்வைத் தமிழ் கேட்பதற்கு ஆசை கொண்ட தெய்வம்
இன்று எங்கள் இசை கேட்க இச்சை கொண்ட தெய்வம்
இன்னல் துயர் தீர்க்க வரும் தென்பழனித் தெய்வம்.
நாரதரின் ஞானப்பழம் வேண்டி நின்ற தெய்வம்
ஞாலம் சுற்ற மயிலேறி வான்பறந்த தெய்வம்
சூரர்குலம் வேரறுக்க சூளுரைத்த தெய்வம்
சுடர்வள்ளி பேரழகில் சொக்கிநின்ற தெய்வம்
கார்வண்ண மணிவண்ணன் மருகனான தெய்வம்
கால்நடந்து மலையேற கருணை காட்டும் தெய்வம்.
பார்வதியின் வேலெடுத்து பகைமுடித்த தெய்வம்.
பக்தர் குறை தீர்க்க வரும் பழனிமலைத் தெய்வம்.
நெற்றிக்கண்ணில் அவதரித்த நெருப்பு போன்ற தெய்வம்.
நேயம்கொண்ட பக்தருக்கு நிலவு போன்ற தெய்வம்.
வெற்றிவடி வேலனாக விளங்குகின்ற தெய்வம்,
வேடனாக வேடமிட்டு மணம்முடித்த தெய்வம்.
கொற்றவையின் புத்திரனாம் குமரேச தெய்வம்.
கொஞ்சுதமிழ் ஆற்றுப்படை கொண்டாடும் தெய்வம்.
பெற்ற தந்தை பரமனுக்கே பாடம் சொன்ன தெய்வம்.
பேரின்ப வழி திறக்கும் பழனிமலைத் தெய்வம்.
ஆறுபடை வீடுகொண்ட ஆறுமுக தெய்வம்.
ஆனைமுகன் தம்பியாக அவதரித்த தெய்வம்.
நீறணிந்த அடியவர்கள் நெஞ்சில் நிற்கும் தெய்வம்.
நேசம்கொண்டு தாள் பணிந்தால் நேரில்வரும் தெய்வம்.
வீறுகொண்ட சேனைகொண்டு போரில்வென்ற தெய்வம்
வீழ்ந்த சூரன் உடலைக் கொடியில் விரும்பிஏற்ற தெய்வம்.
ஏறுமயில் ஏறிவரும் எங்கள் பெருந் தெய்வம்
ஏக்கங்களைப் போக்கவரும் தென்பழனித் தெய்வம்.
கச்சியப்பர் காவியத்தில் கவிதையான தெய்வம்.
கணபதியை துணைக்கழைத்து காதல்வென்ற தெய்வம்.
உச்சிமலை மீதிருந்து உலகை ஆளும் தெய்வம்.
உளமுருக வேண்டுவோரின் உயிர்கலந்த தெய்வம்.
அச்சம்கொண்ட போதுவந்து அரவணைக்கும் தெய்வம்.
அபயம் என்ற போதுவந்து ஆதரிக்கும் தெய்வம்.
பச்சைமயில் வாகனத்தில் பறந்துவரும் தெய்வம்.
பன்னிருகை கொண்டணைக்கும் பழனிமலைத் தெய்வம்.
சேவடிஎன் சென்னிமிசை வைத்தபெருந் தெய்வம்
சேவற்கொடி ஏந்துகின்ற செந்தில்குமர தெய்வம்.
காவடிகள் தூக்கிவர காட்சிதரும் தெய்வம்.
காலடியில் போய்விழுந்தால் கரங்கொடுக்கும் தெய்வம்
தேவர்களும் வணங்குகின்ற தெய்வம் மகா தெய்வம்
தினைப்புனத்தில் வள்ளிமனம் திருடவந்த தெய்வம்
பாவங்களைச் சொல்லியழ பரிவு காட்டும் தெய்வம்.
பாதம்தேய பாவம் தேய்க்கும் பழனிமலைத் தெய்வம்.
வேலெடுத்து வினைகளெல்லாம் வேரறுக்கும் தெய்வம்.
வேதனைகள் தீர்த்து வைக்க விழி திறக்கும் தெய்வம்.
கோலெடுத்து இடையனாக குறும்பு செய்த தெய்வம்.
போபம் கொண்டு மலையேறி கோயில்கொண்ட தெய்வம்.
கால்கடுக்க நடந்துவர கவலைபோக்கும் தெய்வம்.
கந்தசாமி என்றழைக்க முந்திவரும் தெய்வம்.
பால்குடங்கள் ஆடிவர பவனிவரும் தெய்வம்.
பால்முகத்தைக் காட்டவரும் பழனிமலைத் தெய்வம்.
ஓம்முருகா என்றுசொல்ல ஓடிவரும் தெய்வம்.
ஒளிநிறைந்த சூரியனாய் உளம்புகுந்த தெய்வம்
கோமகளாம் தெய்வயானை கரம்பிடித்த தெய்வம்.
கூடஒரு குறத்தியையும் கூட்டிக் கொண்ட தெய்வம்.
மாமதுரைச் சொக்கநாதர் மடிவளர்ந்த தெய்வம்.
மானைத்தேடி வந்ததாக மாயம் செய்த தெய்வம்.
தேமதுரத் தமிழிசைக்கு செவிசாய்க்கும் தெய்வம்.
தேடுவோரைத் தேடிவரும் தென்பழனித் தெய்வம்.
அருணகிரி நாதரையே ஆட்டிவைத்த தெய்வம்.
அடியவர்கள் உள்ளத்திலே ஆட்சிசெய்யும் தெய்வம்.
கருணைகொண்ட தெய்வம் கருவில் கலந்துவிட்ட தெய்வம்
கற்பனையின் எல்லைகளை கடந்து நிற்கும் தெய்வம்.
வருணமழை வானிருந்து வரவழைக்கும் தெய்வம்
வாவென்று நானழைக்க வந்து நிற்கும் தெய்வம்.
தருணம்வந்த போது என்னை தாங்குகின்ற தெய்வம்
தமிழ் கேட்டு அருள்பொழியும் தென்பழனித் தெய்வம்.
யாமிருக்க பயமெதற்கு என்றுசொல்லும் தெய்வம்
யாவும் நீயே எனப் பணிந்தால் காத்து நிற்கும் தெய்வம்.
நாமணக்கும் திருப்புகழின் நாதமான தெய்வம்
நான்குமறை போற்றுகின்ற நாதனான தெய்வம்.
கோமணத்து ஆண்டியாக குன்றில் நின்ற தெய்வம்
கோடிகோடி பக்தர்நெஞ்சில் குடியிருக்கும் தெய்வம்.
பாமணத்தில் தன்மனதை பறிகொடுக்கும் தெய்வம்.
பாடல்கேட்டு ஓடிவரும் பழனிமலைத் தெய்வம்.
சிவகுமாரன்
பாடியிருப்பவர் - பிரபாகரன்
22 comments:
2002 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தைப்பூச பாதயாத்திரை பழனிக்குச் சென்ற போது எழுதியது. கூட்ட நெரிசலில் 5, 6 மணி நேரம் வரிசையில் நிற்கும் போது நானும் என் சகோதரர்களும் மாற்றி மாற்றிப் பாட என் தம்பி செல்வன் ட்ரம்ஸில் தாளமிசைக்க கூட்டம் அமைதியாகி எங்களுடன் சேர்ந்து பாடும்.
ஒவ்வொரு வருடமும் புறக் கவலைகளை மறக்கச் செய்யம் நாட்கள் அவை. அடுத்த ஒரு வருடத்துக்கு சார்ஜ் ஏற்றிக் கொண்டதைப் போல மனம் வலுப்பெறும். இந்த வருடம் 14 வருடங்களுக்குப் பிறகு என் தம்பி இளமுருகன் துபாயிலிருந்து வந்து பாதயாத்திரையில் கலந்து கொண்டான். என் அனைத்து சகோதரர்களும் கலந்து கொண்ட இனிய அனுபவமாய் இந்த வருட பாதயாத்திரை அமைந்தது.
வெற்றிவேல் முருகனுக்கு ----அரோகரா.
intha yathiriyil kalanthukondathu en pakkiyam.
அவனருளாலே அவன்தாள் வணங்கி..!!
14 வருடங்கள் காத்திருந்தது, இது போன்ற ஒரு இனிய பயணத்திற்குத்தான் போலும் !!.
தங்கள் பாதயாத்திரை அனுபவங்களை பகிர்ந்து, என்னை இந்த வருடம் பாதயாத்திரை வரத்தூண்டிய சிவகுமார் அண்ணனுக்கும் மற்ற உறவினர்களுக்கும் நன்றி
இனி வருடந்தோரும் இந்த பயணம் அமைய பழனி முருகனை வேண்டுகிறேன்.
அரோகரா
பரவசம்...
பழனி மலைத் தெய்வத்தை பல விதமாகச் சித்தரித்து
பல பாடல்களால் அவன் புகழ் பாடிடும் இந்த புனிதமான
பாடலை நான் பல ராகங்களில் பாடுகிறேன்.
சற்று நேரத்தில் தொடர்பு லின்க் அனுப்புகிறேன்.
பழனிமலைத் தெய்வமான முருகன் தங்கள் வாழ்விற்கு
ஒளி சேர்ப்பான் என்பது திண்ணம்.
நிற்க. அண்மையில் ஒருவரது பதிவில் தங்களது பின்னூட்டம் கண்டு மருண்டு விட்டேன்.
நீங்கள் நீங்களாகவே இருங்கள்.
முருகன் துணையிருக்க ஏது பயம் ?
சுப்பு ரத்தினம்.
www.kandhanaithuthi.blogspot.com
//யாமிருக்க பயமெதற்கு என்றுசொல்லும் தெய்வம்
யாவும் நீயே எனப் பணிந்தால் காத்து நிற்கும் தெய்வம். //
உண்மை!
சந்தத்திற்கேற்ப தமிழ் ஒவ்வொரு வரியிலும் கொஞ்சிக் கொஞ்சி வந்த அழகு கண்டேன்; கண்டு கண்களில் ஒற்றிக் கொண்டேன்.
நல்லதொரு அனுபவத்தைத் தந்தைமைக்கு மிக்க நன்றி, சிவகுமாரன்!
INTHA PADALAI PADIYATHU ENTHU PAAKIYAM. ELLAM MURUGAN SEYAL. NANDRI ANNA
நன்றி அண்ணா நன்றி இளமுருக. நன்றி பிரபு .
நன்றி தனபாலன் சார். தங்களின் தொடர் வருகைக்கும் வாழ்த்துக்கும்.
நன்றி சுப்புரத்தினம் அய்யா.
தங்கள் குரலில் இந்தப் பாடலை கேட்க ஆவலாக உள்ளேன்.
\\\\நிற்க. அண்மையில் ஒருவரது பதிவில் தங்களது பின்னூட்டம் கண்டு மருண்டு விட்டேன்.
நீங்கள் நீங்களாகவே இருங்கள்.
முருகன் துணையிருக்க ஏது பயம் ?///
நான் சமீப காலமாக வலைப்பக்கமே வரவில்லையே. எந்தப் பதிவு? என்ன பின்னூட்டம்?
ஜீவி சார். தங்களின் பெயரைக் கண்டதுமே மனம் துள்ளியது.
ரசித்து எழுதும் தங்களின் பின்னூட்டங்களுக்கு ரசிகன் நான்.
நன்றி சார்.
பாடுவதைக் கேட்கும்பொழுதும்,
படிக்கும்பொழுதும் உண்டாகும்
பரவசத்தை எப்படி இயம்புவது
அன்புடன்
திகழ்
நன்றி திகழ்
ஒரு சிவகுமாரனின் தமிழ் கேட்டு இன்னொரு சிவகுமாரன் அருள் பொழியட்டும்.
நிறைய வரிகள் நெஞ்சைத் தொடுகின்றன.
வணக்கம்!
அருட்கவிதை மணக்கின்ற வலையைக் கண்டேன்!
அவ்வையிடம் தமிழ்பெற்ற மகிழ்வைக் கொண்டேன்!
பெருங்கவிதைப் பண்ணையெனப் பெருமை பெற்ற
பெரியோர்தம் கவிநுட்பம் ஒளிரக் கண்டேன்!
அருங்கவிதை அளிக்கின்ற கவிஞன் என்னை
அசத்துகிற உன்னெழுத்தை என்ன வென்பேன்!
பொருட்கவிதை புகழ்கவிதை என்றே போற்ற
புனைந்தசிவ குமாரன்தன் புலமை வாழ்க!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா் - கம்பன் கழகம் பிரான்சு
Aha....Ahahah......
En colven?
Kavithayele karathinthu ponen......
Arumaiyana blog. Vijicraftellerunthu engevanthen....
Nandri thambi.....
viji
நன்றி அப்பாஜி
நன்றி விஜி மேடம்
மிக்க நன்றி கவிஞர் அய்யா,
தங்களின் கவிதை வாழ்த்து கண்டு உள்ளம் துள்ளியது.
என் வாழ்நாளின் பெரும்பேறாய் எண்ணுகிறேன். என் தமிழ் ஆசான் நேரில் வந்து வாழ்த்தியது போல் உளம் மகிழ்ந்தேன்.
மிக்க நன்றி
தைப்பூச பழநியாண்டவனுக்கு பாடல் மூலம் காணிக்கை நல்கிய கவிக்கு நன்றிகள் பல .. >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<
19/01/2021 அன்று திருச்செந்தூரில் தங்கள் சொந்தங்கள் பாடினார்கள் மிகவும் அருமை அவர்களிடம் அடியேன் சென்று கேட்டு தங்களது பதிகம் முகவரியை அறிந்தேன் நன்றி இன்னும் பல தகவல்கள் தாருங்கள்
19/01/2021 அன்று திருச்செந்தூரில் தங்களது சொந்தங்கள் பாடினார்கள் மிகவும் அருமை அவர்களிடம் சென்று தங்களது பதிகம் முகவரியை அறிந்தேன் நன்றி இன்னும் பல தகவல்கள் தாருங்கள்
19/01/2021 அன்று திருச்செந்தூரில் தங்களது சொந்தங்கள் பாடிய பதிகத்தின் ஒலி ஒளி அமைப்பை பதிவிட வேண்டுகிறேன் அல்லது அடியேன்னுக்கு அனுப்பவேண்டுகிறேன்
தாங்கள் யார் என்று அறிய விரும்புகிறேன்.பெயர் மற்றும் அலைபேசி எண் அனுப்புங்கள்.
நன்றி
Post a Comment