அய்யப்பா எனச் சொல்லி தினம் பாடுங்கள் - அவன்
அருட்சோதி முகம்காண மனம் நாடுங்கள்.
மெய்ஞ்ஞான கேள்விக்கோர் விடை தேடுங்கள் - அதற்கு
முடிதாங்கி மலைநோக்கி நடை போடுங்கள்
-சுவாமி(அய்யப்பா )
புலிப்பாலைக் கறந்தோனின் புகழ் கூறுங்கள் - அழகுப்
பூப்போன்ற முகம் காண மலை ஏறுங்கள்.
மலைப்பாதை தனைச்சுற்றி வலம் வாருங்கள் - அங்கே
மணிகண்டன் சிரிக்கின்ற எழில் பாருங்கள்.
-சரணம் (அய்யப்பா)
பெருமாளும் பெண்ணாகித் தொட்டான் சிவனை - அந்தப்
பேரின்பக் காதலால் பெற்றான் இவனை.
திருப்பம்பை நதிக்கரையில் கிடந்தான் பொன்னன் - அவனை
திருக்கரத்தால் எடுத்தள்ளி வளர்த்தான் மன்னன்.
-சுவாமி(அய்யப்பா)
மகிஷாவை வதம்செய்ய பிறந்தான் அவன் - சபரி
மலையேறி அரசாட்சி துறந்தான் அவன்.
அகிலத்தைக் காப்பாற்றும் அருளானவன் - அவன்
அடிதேடி தொழுவோர்க்கு பொருளானவன் .
-சரணம்(அய்யப்பா)
விரதத்தை முறையாகக் காப்பாற்றுங்கள் - பெரியோர்
விரும்பாத பழக்கங்கள் தனை மாற்றுங்கள் .
வரங்கேட்டு பாருங்கள் அள்ளித் தருவான் - அவனை
வரச் சொல்லி பாடுங்கள் இல்லம் வருவான்.
-சுவாமி(அய்யப்பா)
இல்லாத எளியோரின் இருள் ஓட்டுவான் - அவனை
எந்நாளும் தொழுவோர்க்கு அருள் கூட்டுவான்.
பொல்லாத தீயோரை தினம் வாட்டுவான்- உலகில்
பொய்யோரை நல்லோர்க்கு இனம் காட்டுவான்.
-சரணம் (அய்யப்பா)
பதினெட்டுப் படியேற பாவம் தொலையும் - அவனை
பணிந்தேத்த நெஞ்சத்தின் பாரம் குறையும்.
கதியற்றுப் போனோர்க்கும் காலம் பிறக்கும் - அய்யன்
கருணையினால் அருள்வீட்டின் கதவும் திறக்கும்.
-சுவாமி(அய்யப்பா)
இருமுடியில் தேங்காயில் நெய்யேந்துங்கள் - மனதின்
ஏக்கங்கள் தனைச் சொல்லி கையேந்துங்கள்.
திருவடியே கதியென்று தாள் சேருங்கள்- அய்யன்
திருவருளால் வினைதீர்த்து கரை சேருங்கள்.
-சரணம் (அய்யப்பா)
- சிவகுமாரன்.
பாடலை பாடியிருப்பவர் - சிவ.விக்னேஷ்
9 comments:
//இல்லாத எளியோரின் இருள் ஓட்டுவான் - அவனை
எந்நாளும் தொழுவோர்க்கு அருள் கூட்டுவான்.
பொல்லாத தீயோரை தினம் வாட்டுவான்- உலகில்
பொய்யோரை நல்லோர்க்கு இனம் காட்டுவான்//.
இந்த நம்பிக்கைதான் அடிநாதம்.மற்றவிஷயங்கள் இதற்கு வலுவூட்டவே. ஐயப்பனாக வழிபடுவோருக்கு இக்கதை. ஸாஸ்தாவாக வழிபடுவோர்”பூர்ண புஷ்களாம்பா சமேத ஹரிஹர புத்ரனாகவே” காண்கின்றனர். சிவகுமாரா நீ வாழ்க வளமுடன்.
இருமுடியில் தேங்காயில் நெய்யேந்துங்கள் - மனதின்
ஏக்கங்கள் தனைச் சொல்லி கையேந்துங்கள்.
திருவடியே கதியென்று தாள் சேருங்கள்- அய்யன்
திருவருளால் வினைதீர்த்து கரை சேருங்கள்.
சிவகுமாரனின் சீரான சிறப்பான ஆக்கத்திற்கு வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்...
ஐயப்ப பக்தர்களுக்கு இன்னுமொரு அழகான பாடல் கிடைத்தது...அழகான பாடல் .வாழ்த்துக்கள்!
கவிதையின் ஊடே பக்தி கதை சொன்னது கவிதைக்கு தனிச்சிறப்பபைக் கூட்டி அழகு சேர்த்திருக்கிறது. விவரங்களை தனியாக சேகரித்து அதைக் கவிதையினூடே கோர்ப்பது அசாத்தியமான திறமை தான். அது தங்களுக்கு மிகவும் இயல்பாகிப் போன ஒன்றாயிருக்கிறது. வாழ்த்துக்கள்.
அருமை.
மனப்பூர்வ வாழ்த்துகள்.
சிவகுமாரன்,
என் 'வந்தான் முருகன் ' பதிவுக்கும் 'ஒம்சரவணபவ 'பதிவுக்கும் பின்னூட்டம் அளித்ததைக்கண்டு மகிழ்ந்தேன்; பாடி இணைக்கும் கணினி நுணுக்க விஷயங்கள் எனக்குப் புரிபடவில்லை ;கலா தான் உதவி வந்தாள் ;இப்போ அவள் சொந்த விஷயங்களில் ரொம்ப பிசியா இருப்பதால் அவள் உதவி எனக்குக் கிடைக்கவில்லை .
உன் பதிவு ஒவ்வொன்றையும் நான் விடாமல் ரசித்து அனுபவித்துப்படிக்கிறேன் ;
கணினி ஒத்துழைக்காததால் பின்னூட்டம் அளிக்க முடியாமல் போய்விட்டது;
நானும் 'ஐயப்ப ஸரித ஸாரம்'என்ற தலைப்பில் ஒரு கதைப்பாட்டு பதிவிட எண்ணியுள்ளேன்.
சாமியே சரணம் ஐயப்பா!
கவிதை நன்று.
குரல் யாருடையது? இனிமையான மெட்டோடு இழையுதே குரல்? அருமையாகப் பாடியிருக்கிறார்.
ஐயப்ப பாடல்களில் இது தனியிடம் பெற வாய்ப்பிருக்கிறது.
நன்றி GMB சார் .
நன்றி ராஜேஸ்வரி மேடம்.
நன்றி தென்றல்.
நன்றி ஜீவி சார்.
நன்றி ரத்னவேல் சார்.
நன்றி லலிதா மேடம்.
நன்றி அப்பாஜி.
இந்த பாடலைப் பாடியது எங்கள் அடுத்த தலைமுறையின் முதல் கலைஞன்.- என் அண்ணன் மகன் விக்கி என்னும் விக்னேஷ் .
இல்லாத எளியோரின் இருள் ஓட்டுவான் - அவனை
எந்நாளும் தொழுவோர்க்கு அருள் கூட்டுவான். >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<
Post a Comment