Friday, November 2, 2012

நாமபுரீஸ்வரா!


ஆதி அந்தமில் லாத பரம்பொருள் ஆன பேரூர் ஆண்டவா!
   அறம் வளர்த்திடும் நாயகியுடன் ஆடும் ஆனந்த தாண்டவா!
பாதி மதி நதி போது மணி சடை பாம்பு மாலையும் பூண்டவா!
  பாச மிகுதியால் பார்வதி தனை பாதி தேகத்தில் கொண்டவா!
ஜோதி வடிவமாய் தீபரூபமாய் தோற்றம் காட்டி நின்றவா!
  தூய நெஞ்சிலே தீபம் ஏற்றுவோர் சோதனைகளைக் கொன்றவா!
ஆதி நாள்முதல் அறம் வளர்த்திடும் அழகு ஆலங் குடிதனில்    
  அன்னை தர்மசம் வர்த்தினி யுடன் அருள்தரும் நாமபுரீஸ்வரா!

நீறணிந்தவர் நேசம் மிக்கவர் நெஞ்சில் நின்றிடும் நற்றவா!
  நீசர் வஞ்சகர் நேசமற்றவர் நெஞ்சில் தீயினைப் பற்றவா! 
ஏறுமயிலினில் ஏறும்  முருகனை இதயம் மகிழ்ந்திடப் பெற்றவா!
  இளையனாயினும் மகனை குருவென ஏற்று மந்திரம் கற்றவா!
கூறும் அடியவர் குறைகள் தீர்த்திடும் கொற்றவா, எனை உற்றவா!
  கூற்றை உதைத்த உன் பாதமிரண்டையும் காட்டி என்வினை செற்றவா!
ஆறு அம்புலி ஓடிப் பாய்ந்திடும் அழகு ஆலங்குடி தனில்
  அன்னை தர்மசம் வர்த்தினி யுடன் அருள்தரும் நாமபுரீஸ்வரா!

தஞ்சமென்று உன் பாதம் தேடிய மார்க்கண்டேயனைக் காத்தவா!
  தருமி யென்னும் ஓர் ஏழைப் புலவனின் வறுமை நீக்க கவி யாத்தவா !
நஞ்சைக் கண்டதும் அஞ்சி ஓடிய தேவர் வாழ நஞ்சுண்டவா!
  நாயன்மார்களின் அன்பை சோதிக்க வேடம் ஆயிரம் பூண்டவா!
கொஞ்சு தமிழ்க்கவி கூறக் கேட்டதும் கோயில்வாசல் திறந்தவா!
   கெஞ்சும் என்கவி கேட்டு என்மனக் கோயில் வாசல் திறந்து வா!
அஞ்செழுத்தையே நெஞ்சில் ஏற்றிடும் அழகு ஆலங்குடி தனில் 
   அன்னை தர்மசம் வர்த்தினி யுடன் அருள்தரும் நாமபுரீஸ்வரா!

வானை நிகர்த்தவன் வையம் நிறைந்தவன் வானவர் ஏத்தும் மறையவா!
  வாட்டும் நோய்களும் வறுமைப் பேய்களும் வையம் தன்னிலே மறையவா!
மானை மழுவினை ஏந்தும் மன்னவா மண்ணில் உன்முகம் காட்டவா!
  மாலும் தேடிய மலரடி தனை காட்டி என்துயர் ஓட்ட வா!
தேனை நிகர்த்ததாம் செந்தமிழ் தனில் சிந்தை மகிழ்ந்திடும் இறையவா!
  தேவி தர்மசம் வர்த்தினியுடன்  தீந்தமிழ் கேட்டு இசைய வா !
ஆனை கட்டியே போரடித்த ஊர் அழகு ஆலங்குடி தனில்
  அன்னை தர்மசம் வர்த்தினி யுடன் அருள்தரும் நாமபுரீஸ்வரா!


ஆலின் கீழமர்ந் தேழுலகையும் ஆளும் தட்சிணா மூர்த்தி நீ.
  அமரர் முக்தி நீ! அணுவின் சக்தி நீ! அளவிலாத ஓர் கீர்த்தி நீ!
மாலின் தங்கையை மணம் முடித்தவன், மங்கை சக்தியின் பாகன் நீ!
  மாறன் அம்புகள் மேல் விழுந்திட மாறுகொண் டெரித்த சூரன் நீ!
வேலின் சக்தியால் வினை யறுத்திடும் வேலனைப் பெற்ற தந்தை நீ!
  வேழ முகத்தொரு பிள்ளை வடிவினில் வெற்றி தந்திடும் விந்தை நீ!
ஆலின் வேரென அருள் தழைத்திடும் அழகு ஆலங்குடி தனில் 
  அன்னை தர்மசம் வர்த்தினி யுடன் அருள்தரும் நாமபுரீஸ்வரா!

நீண்ட வானமும் நீரும் நிலங்களும் நெருப்பும் காற்றும் நீயன்றோ!
  நேற்றும் நாளையும் இன்றும் உலகினில் நிகழும் மாற்றம் நீயன்றோ!
மாண்டு மடிவதும் மீண்டும் பிறப்பதும் மாயன் உந்தன் செயலன்றோ!
  மாறும் உலகினில் மாற்றம் யாவுமே மாறச் செய்வதும் நீயன்றோ!
வேண்டும் வரங்களை வேண்டும் முன்னரே விரும்பித் தருவதும் நீயன்றோ!
  வேண்டும் அடியவர் வேண்டும்  வரங்களை வேண்டச்  செய்வதும்  நீயன்றோ!
ஆண்டு தோறும் உன் அருளைப் பாடிடும் அழகு ஆலங்குடி தனில் 
  அன்னை தர்மசம் வர்த்தினி யுடன் அருள்தரும் நாமபுரீஸ்வரா!

-சிவகுமாரன் 



சுப்புத் தாத்தா பாடுவைதையும் கேளுங்கள்