Friday, January 6, 2012

அரங்கனே நாராயணா.



பாயிரம் கீர்த்தனை பல்லாண்டு பாடிடும்
  பழக்கமிலை நாராயணா
  பன்னிரு ஆழ்வாரின் பாசுரம் ஒன்றையும்
  படித்ததிலை நாராயணா
வாயினால் மந்திரம் வரிசையாய் ஓதிடும்
  வழக்கமிலை நாராயணா .
  வருகின்ற இலாபத்தில் ஒருபங்கு உனக்கீந்தும்
  வசதியிலை நாராயணா
தாயிடம் சேர்கின்ற தனயனாய் உன்னிடம்
  தஞ்சம்நான் நாராயணா
  தவமொன்றும் செய்யாமல் வரமொன்று கேட்கிறேன்
  தருவாயா நாராயணா
ஆயிரம் பேருண்டு, ஆனாலும் உன்போன்று
  ஆருண்டு நாராயணா?
  அழகான காவிரி ஆற்றோரம் துயில்கின்ற
  அரங்கனே நாராயணா.

பூவினில் உறைகின்ற பொன்மகள் துணைகொண்ட
  பூவண்ணா நாராயணா .
  பொன்மகள் பார்வையென் மேல்விழச் செய்தாலே
  போதுமே நாராயணா
கூவிடும் குயில்போல குழலூதி மயக்கினாய்
  கோபாலா நாராயணா .
  குறையிலா செல்வத்தை கொடுத்தென்னை மயக்குவாய்
  குணசீலா நாராயணா
தீவினில் வாடிய சீதைய சிறைமீட்ட
  ஸ்ரீராமா  நாராயணா
  தீராத கடன்தொல்லைச் சிறைமீட்டு துயரங்கள்
  தீர்க்கவா நாராயணா
ஆவினம் மேய்த்தவா அல்லல்கள் போக்கவா
  அழகனே நாராயணா
  அழகான காவிரி ஆற்றோரம் துயில்கின்ற
  அரங்கனே நாராயணா.

அவல்தந்த தோழனுக் களவிலா செல்வத்தை
  அருளினாய் நாராயணா
  அவலினும்  சுவையான அமிழ்தான தமிழ்கேட்டு
  அருள்வாயே நாராயணா
புவனங்கள் யாவையும் பொறுப்பாகக் காத்திடும்
  பூபாலா நாராயணா
  புலனைந்தும் தறிகெட்டுப் போகாமல் காத்தருள்
  புரிவாயே நாராயணா
சிவனிடம் வரம்பெற்ற ஸ்ரீபரசு ராமராய்
   சினந்தீர்த்த நாராயணா
   சினங்கொண்ட மனதிலும் திமிர்கொண்ட மதியிலும்
   தீமூட்டு நாராயணா
அவதாரம் பலகொண்டு அதர்மத்த அழித்திட்ட
   அரிதேவா நாராயணா 
   அழகான காவிரி ஆற்றோரம் துயில்கின்ற
   அரங்கனே நாராயணா.

காட்டுக்குப் போவென்று கைகேயி  சொன்னதும்
  கலங்காத நாராயணா
  கடல்போலும் துன்பத்தை கடுகாக்கும் நெஞ்சத்தை
  காட்டுவாய் நாராயணா
பாட்டுக்கு செவிசாய்த்து ஆழ்வாரின் துயரங்கள்
  போக்கினாய் நாராயணா
  பாட்டொன்று கேட்டிந்த பாமரன் துயரங்கள்
  போக்குவாய் நாராயணா
ஓட்டுக்குள் உடல்மூடி உயிர்வாழும் ஆமையாய்
  ஒளிகின்றேன் நாராயணா
  உலகெங்கும் ஒளிவீசி உலவிடும் ஞாயிறாய்
  உருவாக்கு நாராயணா
ஆட்டுக்குத் தாடிபோல் ஆக்காமல் என்னைநீ
  ஆளாக்கு நாராயணா
  அழகான காவிரி ஆற்றோரம் துயில்கின்ற
  அரங்கனே நாராயணா.  

கோடானு கோடியாய் செல்வம் குவித்திடும்
  கோவிந்தா நாராயணா
  கோடியில் ஒருதுளி கொடுத்தெந்தன் குறைகளை
  குறைப்பாயா நாராயணா
வாடாத பாமாலை கோர்த்து உன் வாசலில்
  வருகின்றேன் நாராயணா
  வள்ளலாய் நீஎன்னை வரவேற்று பொற்கிழி
  வழங்காயோ நாராயணா
ஓடாத காவிரி ஒளிராத சூரியன்
  உதவுமோ நாராயணா
  ஒய்யாரமாய் நீயும் உறங்கினால் உலகுக்கு
  ஒப்புமோ நாராயணா
ஆடாது அசையாது இருந்தாலுன் புகழுக்கு 
   ஆகுமோ நாராயணா
   அழகான காவிரி ஆற்றோரம் துயில்கின்ற
   அரங்கனே நாராயணா.

பார்த்திபன் தேருக்குப் பாகனாய் மாறிய
  பரந்தாமா நாராயணா
  பாதையோ நெடுந்தூரம் , பயணமோ போர்க்களம்
  பயம் போக்கு நாராயணா .
கீர்த்திநிறை வேதமாம் கீதையை அருளிய
  கிருஷ்ணனே நாராயணா
  கேட்பாரில் லாமலே கிடப்போரின் கீதையை
  கேட்கவா நாராயணா
வார்த்தைக்கு வார்த்தை உன் நாமத்தைச் சொல்லியே
  வாழ்கின்றேன் நாராயணா
  வாழ்கின்ற நாள்வரை வளமோடும் நலமோடும்
  வாழவை நாராயணா .
ஆர்த்தெழும் அலையிடை அறிதுயில் போதுமே
  அருள வா நாராயணா
  அழகான காவிரி ஆற்றோரம் துயில்கின்ற
   அரங்கனே நாராயணா.

அரன்கையில் ஒட்டிய அயன்மண்டை ஓட்டினை 
  அகற்றினாய் நாராயணா .
  அறியாது சூடிய ஆண்டாளின் மாலையை
  அணிந்தாயே நாராயணா
கரங்கூப்பி கதறிய பாஞ்சாலி மானத்தைக்
  காத்தாயே நாராயணா
  கௌரவர் கூட்டத்தின் கண்களில் விரல்விட்டு
  கலக்கினாய் நாராயணா .
வரங்கொண்ட திமிரினால் மதங்கொண்ட இரணியனை
  வதம்செய்தாய் நாராயணா
  வாமனன் உருகொண்டு மூவடி பெற்றபின்
  வளர்ந்தாயே நாராயணா
அரங்கனே அரங்கனே எனுமெந்தன் குரலை நீ  
  அறியாயோ நாராயணா
  அழகான காவிரி ஆற்றோரம் துயில்கின்ற
  அரங்கனே நாராயணா.

அகலிகை கல்லாகி உன்னாலே பெண்ணானாள்
  அற்புதா நாராயணா
  அரக்கியும் பெண்ணென்று அவளையும் மன்னித்தாய்
  அச்சுதா நாராயணா
குகனென்னும் எளியோனின் குணம்கண்டு தோழனாய்
  கூட்டினாய் நாராயணா
  கூர்மமாய் உருகொண்டு மேருவைத் தாங்கினாய்
  கோதண்ட நாராயணா  
மகனெந்தன் குறைதீர்க்க மனமின்றிப் போனதோ
  மாதேவா நாராயணா
  மார்பிலே ஸ்ரீதேவி  மயக்கத்தில் நீஎன்னை
  மறந்தாயோ நாராயணா
அகத்திலோர் ஆலயம் அமைத்துன்னை அழைக்கிறேன்
  ஆட்கொள்வாய் நாராயணா
  அழகான காவிரி ஆற்றோரம் துயில்கின்ற
  அரங்கனே நாராயணா. 

சங்கோடு சக்கரம் கதைகமலம் ஏந்திடும்
  ஸ்ரீசக்ரா நாராயணா
  சடகோபா பலராமா ஜெகநாதா ரகுராமா
  சாரங்கா நாராயணா   
மங்கைபெரு மாட்டியை மார்பிலே தாங்கிடும்
  மணமோகா நாராயணா 
  மண் அள்ளித் தின்றவா மலைதூக்கி நின்றவா 
  மாவீரா நாராயணா 
பொங்குகடல் ஆழத்தில் மீனாகி நீந்தியே 
  மறைமீட்ட நாராயணா 
  புவிதன்னை மேல்தூக்கி வந்தவா வராகஸ்ரீ 
  மூர்த்தியே நாராயணா 
அங்கிங் கெனாதபடி எங்கும் நிறைந்தவா 
  இங்கும் வா நாராயணா 
  அழகான காவிரி ஆற்றோரம் துயில்கின்ற
  அரங்கனே நாராயணா.             

முத்தொழில் புரிகின்ற மூவரில் முக்கிய 
  துறையேற்ற நாராயணா 
  மோகினி உருகொண்டு அமுதத்தைக் காத்தவா 
  மோகன நாராயணா 
சத்தியம் உலகினில் சாகாமல் கல்கியாய் 
  தடுத்தாளும் நாராயணா 
  சங்கரன் துணைகொண்டு சபரியைப் பெற்றவா 
  சங்கர நாராயணா 
உத்தமா உயர்ந்தவா உலகினை அளந்தவா 
  ஒப்பிலி நாராயணா 
  உரியேறி நெய்திருடி உண்டவா, சகடத்தை 
  உதைத்தவா நாராயணா 
அத்தனை உயிர்களும் அடிபணிந் தேத்திடும் 
  அண்ணலே நாராயணா 
  அழகான காவிரி ஆற்றோரம் துயில்கின்ற
  அரங்கனே நாராயணா.   

இல்லாமை எனும்வார்த்தை இல்லாமல் செய்திட
  எழுந்துவா நாராயணா
  எளியோரும் வலியோரும் இல்லாத வரலாறு
  எழுத வா நாராயணா
கல்லாமை பொய்களவு காணாத உலகத்தைக்
  காட்டவா நாராயணா
  கதியற்றுத் திரிவோரை உன்கருணைக் கயிற்றாலே
  கட்டவா நாராயணா
எல்லாமும் எல்லார்க்கும் என்னுமோர் கீதையை
  இயற்ற வா நாராயணா
  இன்னுமோர் அவதாரம் எடுத்திந்த உலகுக்கு
  இறங்கி வா நாராயணா 
அல்லாடும் மாந்தர்க்கு ஆதார வாழ்வினை
  அளிக்க வா நாராயணா
  அழகான காவிரி ஆற்றோரம் துயில்கின்ற
  அரங்கனே நாராயணா.

மாலவா கேசவா மாயவா தூயவா 
  மணிவண்ணா நாராயணா
  மாதவா ஸ்ரீதரா மதுசூதனா சீதை
  மணவாளா  நாராயணா
ஞாலத்தைக் காப்பவா நான்மறை மீட்டவா
  நரசிம்மா நாராயணா
  நாரத கானத்தின் நாயகா காளிங்க
  நர்த்தனா நாராயணா
மூலமும் முடிவுமாய் ஆனவா கலியுக
  மூர்த்தியே நாராயணா
  முதலைக்கும் யானைக்கும் முக்தியைத் தந்தவா
  முகுந்தனே நாராயணா
ஆலவாய் அண்ணலின்  தோழனே சக்தியின்
  அண்ணனே நாராயணா
  அழகான காவிரி ஆற்றோரம் துயில்கின்ற
  அரங்கனே நாராயணா.


நாராயணா நமோ நாராயணா 
நாராயணா நமோ நாராயணா 
-சிவகுமாரன் 

பாடலைப் பாடியிருப்பவர் பிரபாகரன் 

என் கவிதைகளின் ரசிகன் அய்யா திரு சுப்புரத்தினம் பாடியிருப்பதையும் கேளுங்கள்