Friday, July 29, 2011

ஆட்கொள்வாய்

                   நமசிவாய ஓம்  
                      நமசிவாய ஓம் 
                   நமசிவாய ஓம்
                       நமசிவாய ஓம்


அண்ணா மலையில் அனலானாய் 
   ஆனைக் காவில் புனலானாய் 
மண்ணாய் காஞ்சியில் மணக்கின்றாய் 
   மாகாள ஹஸ்தியில் காற்றானாய் 
விண்ணாய் தில்லையில் விரிகின்றாய் 
   விந்தைகள்  பலவும் புரிகின்றாய்
எண்ணா தேனோ இருக்கின்றாய் 
  எப்பொழு தென்னை ஆட்கொள்வாய் ?                1.

தக்கன் அழிக்க தலை கொய்தாய் 
   தருமிக் கெனவோர் கவிசெய்தாய் 
திக்குகள் எட்டும் கைக்கொண்டு 
   திருவிளையாடல் புரிகின்றாய் 
முக்கண் கொண்ட உருவானாய் 
   மூலன் தனக்கு குருவானாய் 
எக்கண் கொண்டு எனைப் பார்ப்பாய் ?
   எப்பொழு தென்னை ஆட்கொள்வாய் ?                2.

பித்தன் என்றோர் பேர்கொண்டாய்
   பிள்ளைக் கறிமேல் பசிகொண்டாய் 
உத்தமி தன்னை இடங்கொண்டாய் 
   உலகைக் காக்க விடமுண்டாய் 
சித்தம் பலத்தில் நடங்கொண்டாய்
    சித்தர்கள் உளத்தில் குடிகொண்டாய் 
எத்தனை யோமுறை தொழக்கண்டாய் 
   எப்பொழு தென்னை ஆட்கொள்வாய் ?               3.

கங்கையில் பாவம் கழிக்கின்றாய் 
   காசியில் மோகம் அழிக்கின்றாய்
திங்களைத் தலையில் சூடுகின்றாய்
   தீயாய்க் கயவரைச் சுடுகின்றாய்
லிங்கமே தத்துவமே பொருளானாய்
   நித்திலம் காக்கும் அருளானாய்
எங்குனைக் காட்டி எனக்கருள்வாய்?
 எப்பொழு தென்னை ஆட்கொள்வாய் ?                 4.

சுந்தரன் தன்னை ஆட்கொள்ள 
   சுவடி கையேந்தி நீவந்தாய் 
தொந்தர வளித்திடும் சூலையினை 
   தந்தபின் அப்பரை ஆட்கொண்டாய் 
மந்திரி வாதவூ ரார்தன்னை 
   மரத்தடி குருவாய் ஆட்கொண்டாய் 
எந்தையே என்னை என்செய்வாய் 
   எப்பொழு தென்னை ஆட்கொள்வாய் ?                5.

அரிஅயன் காணா அடிமுடியை 
   அடியவன் காண அருள்வாயா ?
கரிமுகன் கந்தன் வளர்மடியில் 
   கனிவுடன் எனக்கிடம் தருவாயா?
பரியென நரியினை ஆக்கியவா 
   பரிவுடன் எனைஎன்று பார்த்திடுவாய் ?
எரிகிற மனத்தீ அணைத்திடவே 
   எப்பொழு தென்னை ஆட்கொள்வாய் ?                6.

களிநடம் புரிகின்ற காட்சியினை 
   கண்டுளம் மகிழ்ந்திட அருள்வாயா ?
குளிர்நில வொளிமுகம் காட்டியெந்தன்
   குறைதனைத் தீர்த்திட வருவாயா ?
ஒளியென உளந்தனில் நீபுகுந்து 
   உயிருடன் எப்பொழு திணைந்திடுவாய்?
எளியவன் தரும்கவி மகிழ்ந்தேற்று
   எப்பொழு தென்னை ஆட்கொள்வாய் ?               7.

பொன்னும் மணியும் தரக்கேட்டேன்
  பொன்னாய் மனதை புடம் போட்டாய் 
உன்னைக் காணும் வரம்கேட்டேன் 
   ஊழ்வினை தாண்டி வரச் சொன்னாய்
முன்னும் பின்னும் அலைக்கழித்தே 
   மூளாத் தீப்போல் எரிக்கின்றாய் .
இன்னும் என்னை என்செய்வாய் ?
   எப்பொழு தென்னை ஆட்கொள்வாய் ?                8.

தொல்லைகள் இன்னும் ஏனென்றேன் 
   தொடர்ந்திடும் முன்வினைப் பயனென்றாய்
அல்லல்கள் தீர்த்திட வாவென்றேன் 
   அனுபவி அனுபவி எனச்சொன்னாய் 
இல்லையோ நீயென பிறர்கேட்டால் 
   எளியவன் எப்படி பதில்சொல்வேன் ?
எல்லையே இல்லா என் இறைவா 
   எப்பொழு தென்னை ஆட்கொள்வாய் ?                9.

வினைப்பயன் விதியெனும் பேரில்எனை 
   விழுலுக்கு நீரென ஆக்குவதேன் ?
தினையள வேனும்உன் திருவடியின் 
   திருவருள் காட்டிடத் தயங்குவதேன் ?
உனைத்தொழு வோர்க்கொரு துயரென்றால் 
   உனக்கது பழியாம் அறியாயோ ?
எனைத்தொடர்ந் திடும்வினை அறுந்திடவே 
   எப்பொழு தென்னை ஆட்கொள்வாய் ?                10.  

      
                                                                -சிவகுமாரன் 
       
பாடலைப் பாடுபவர் : பிரபாகரன் 
   

Saturday, July 9, 2011

நடந்திடுவோம் கடந்திடுவோம்

  
                                                  முருகா முருகா வேல்முருகா 
                                                  முருகா முருகா வேல்முருகா 

வெற்றிவடி வேலவனை வேண்டித் தொழுதோம்
  வேதனைகள் தீர்க்கச் சொல்லி தேம்பி அழுதோம். 
கொற்றவையின் புத்திரனை கூவித் துதித்தோம்-அந்தக்
   கூத்தன்மகன் பாதத்திலே உள்ளம் பதித்தோம் .       ( முருகா ) 

உற்றபகை அத்தனையும் ஓட்ட வருவான்
   'ஓம் முருகா' என்று சொல்ல அள்ளித் தருவான்
சுற்றிவரும் வேலைக் கொண்டு சூழ்ச்சி தடுப்பான்
   தோகைமயில் ஏறிவந்து காட்சி கொடுப்பான்.             (முருகா )

ஞானப்பழம் ஆனவனின் காலைப் பற்றுவோம்
   நாதமயம் ஆனவன் கோயில் சுற்றுவோம்
ஆனைமுகன் தம்பியவன் அன்பைப் பாடுவோம் 
    ஆறுமுகன் பேரைச் சொல்லி ஆடிப் பாடுவோம்.        (முருகா )

ஆதிசக்தி மடியினில் வளர்ந்தவனாம் 
   ஆறெழுத்து மந்திரமாய் மலர்ந்தவனாம் 
ஜோதிமய மானவனின் செல்ல மகனாம் 
  சோதிக்காமல் அள்ளித்தரும் வள்ளல் குகனாம் .        (முருகா )

வேதகுரு பிரம்மனையே தண்டித்தவனாம் 
   வேலெடுத்து சூரன் தலை துண்டித்தவனாம் 
மாதுகுற வள்ளியினை மணந்தவனாம் 
   மால்மருகன் எங்கள் குறை உணர்ந்தவனாம் .             (முருகா )

அத்தனுக்கே ப்ரணவத்தின் பொருள் சொன்னவன்
   அண்டம் புவி அத்தனையும் ஆளும் மன்னவன் 
சித்தர் போகர் செய்துவைத்த சிலையானவன்
   செந்தூர்க்கடல் வீசுகின்ற அலையானவன்   .                (முருகா )

பழனிக்கு மாலையினை அணிந்திடுவோம்
   பாதம்தேய தேடிவந்து பணிந்திடுவோம்
குழந்தை வேலப்பன் முன்னே மண்டியிடுவோம் 
   குற்றம்குறை தீர்க்கச் சொல்லி தெண்டனிடுவோம்   .  (முருகா )

இடும்பனைத் துதித்தபின் மலை ஏறுவோம்
   இன்னல்துயர் குகனிடம் சென்று கூறுவோம்
குடும்பமே முருகனுக் கடிமை என்போம்
   குமரனுக்கே உயிர் உடைமை என்போம் .        .        .          (முருகா )

தேடிவந்த பக்தர்களின் உள்ளம் அறிவான் 
   தீயவினை பாவங்களை கிள்ளி எறிவான்
பாடிவந்து பாருங்களேன் பலன் அளிப்பான்
   பாசமழை சாரல் தன்னை அள்ளித் தெளிப்பான் .       .      (முருகா )

சுப்ரமண்ய வேலவனை பணிந்திடுவோம் 
   சொட்ட சொட்ட அருள்மழையில் நனைந்திடுவோம்
அப்பனவன் மலைதேடி நடந்திடுவோம்
   அவன்துணை கொண்டு விதி கடந்திடுவோம் .        .        . (முருகா)

                                                                                                     - சிவகுமாரன் 

( 2002  ஆம் ஆண்டு பழனிக்கு பாதயாத்திரை செல்லும் போது, வழிநடைப் பாடலாக எழுதி, உடனே மெட்டமைத்துப் பாடியது )  

பாடலைப் படுபவர் : பிரபாகரன்