Sunday, March 27, 2011

வாராய் கண்ணா


நாராயணா நமோ நாராயணா 
நாராயணா நமோ நாராயணா 

ஆரா அமுதே நாராயணா 
   அழகிய கண்ணா நாராயணா 
தீரா வினைகளைத் தீராய் கண்ணா
   திருமகள் துணையுடன் வாராய் கண்ணா 
                                                                                                (நாராயணா)  1 

மண் அள்ளித் தின்றாய் நாராயணா 
   மாபலி கொன்றாய் நாராயணா 
கண்மணி ராதையின் காதல் மன்னா 
   கனிவுடன் என்முகம் பாராய் கண்ணா 
                                                                                                (நாராயணா)  2

வாமனன் உருக்கொண்டாய் நாராயணா 
   வான்புவி அளந்தாய் நாராயணா 
இராமனாய் வந்தாய் நாராயணா 
   தாமதமின்றி வாராய் கண்ணா 
                                                                                                  (நாராயணா)  3

ஸ்ரீலங்கா வென்றாய் நாராயணா 
  சீதையை மீட்டாய் நாராயணா 
ஸ்ரீரங்க நாதா நாராயணா 
   ஸ்ரீதேவி அருள்தரச் சொல்வாய் கண்ணா 
                                                                                                  (நாராயணா ) 4

இராவணன் அழித்தாய் நாராயணா 
   இரணியனைப் பிளந்தாய் நாராயணா 
வராகமாய் வந்தாய் நாராயணா 
   வளம்பெற வரம்தா நாராயணா 
                                                                                                      (நாராயணா) 5

கிருஷ்ணராய் வந்தாய் நாராயணா 
   கீதையை தந்தாய் நாராயணா 
அருச்சுனன சாரதி நாராயணா 
   அகத்தேர் ஏறிடு நாராயணா 
                                                                                                       (நாராயணா) 6

பரசுராம் ஆனவா நாராயணா 
   பலராம் ஆனவா நாராயணா 
நரசிம்மம் ஆனவா நாராயணா 
   நலம்தர வருவாய் நாராயணா 
                                                                                                       (நாராயணா)7

தூணாய் இருந்தாய் நாராயணா
   துரும்பிலும் இருப்பாய் நாராயணா
மீனாய் பிறந்தாய் நாராயணா
   மீண்டும் வருவாய் நாராயணா
                                                                                                       (நாராயணா)8

கூர்மமாய் வந்தாய் நாராயணா 
   கோகுல வாசா நாராயணா 
கார்முகில் வண்ணா நாராயணா 
   கல்கியாய் வருவாய் நாராயணா 
                                                                                                       (நாராயணா)9

ஆண்டாள் மாலையை ஏற்றாய் கண்ணா 
   ஆழ்வார் திருமொழி கேட்டாய் கண்ணா 
பாண்டவர் துயரங்கள் தீர்த்தாய் கண்ணா 
   பாமரன்  துயரங்கள் தீர்ப்பாய் கண்ணா 
                                                                                                      (நாராயணா)10

வேங்கட நாதா நாராயணா 
   வேலவன் மாமா நாராயணா 
தாங்கிட வருவாய் நாராயணா 
    தாள்மலர் பணிந்தோம்  நாராயணா
                                                                                                      (நாராயணா)11

சங்கேந்தும் ஆண்டவா நாராயணா
   சக்கரம் பூண்டவா நாராயணா 
எங்கேயும் இருப்பாய் நாராயணா 
   என்னுள்ளும் இருப்பாய் நாராயணா 
                                                                                                      (நாராயணா)12

பாற்கடல் வாசா நாராயணா 
   பாம்பணை கொண்டவா நாராயணா 
ஏற்கவா என்கவி நாராயணா 
    என்துயர் போக்கவா நாராயணா 
                                                                                                      (நாராயணா)13

கோதண்ட ராமா நாராயணா 
   கோபாலா வைகுந்தா நாராயணா 
பாதங்கள் பணிந்தேன் நாராயணா 
    பாவங்கள் அழிப்பாய் நாராயணா 
                                                                                                                   
                                                                                                     (நாராயணா)14

மாதவா ஸ்ரீதரா நாராயணா 
   மாலவா ராகவா நாராயணா 
ஆதர வளிப்பாய் நாராயணா 
    அருள்மழை பொழிவாய் நாராயணா 
                                                                                                                    
                                                                                                    (நாராயணா)15
      



பாடலை இசையமைத்துப் பாடியிருப்பவர், என் கவிதைகளின் ரசிகர் , பெருமதிப்பிற்குரிய அய்யா சுப்புரத்தினம் அவர்கள்.  


                      

Thursday, March 24, 2011

காப்பாய் தாயே 2



உலகங்கள் எல்லாம் உந்தன் உள்ளங்கை தனிலே விரிய 
   ஒவ்வொரு உயிரின் வலியும் உன்னிரு விழிகள் அறிய 
அலகிலா அரனும் உன்னை அங்கத்தில்  ஏற்றுக் கொண்டு 
   ஆக்கவும் அழிக்கவும் உந்தன் அனுமதி பெறுவாரன்றோ ?
பலவகைக் கவியால் நானும் பன்முறை பாடிப் பார்த்தும்
  பக்தியால் உள்ளம் உருகி பாதத்தில் வீழக் கண்டும் 
சிலருக்கே மட்டும் தனது திருநடம் காட்டும் அந்த 
   சிவனுக்கு என்னைப் பற்றி சீக்கிரம் சொல்வாய் தாயே .            .7 

தேவியே திருவே போற்றி தேயாத நிலவே போற்றி 
   தேவர்க்கும் தலைவி போற்றி தேவைகள் தீர்ப்பாய் போற்றி 
கோவிலின் குடியே போற்றி குலமகள் வடிவே போற்றி 
   கூத்தனின் துணையே போற்றி கூர்விழி திறவாய் போற்றி 
தீவினை களைவாய் போற்றி தீயென எழுவாய் போற்றி 
    திருவருள் புரிவாய் போற்றி திருவிழி திறவாய் போற்றி 
பாவியர் பகையே போற்றி பணிந்திட வைத்தாய் போற்றி 
   பாதங்கள் பணிந்தேன் போற்றி பாவங்கள் துடைப்பாய் போற்றி .8  

ஓவிய எழிலே போற்றி ஒளிதரும் சுடரே போற்றி 
   ஓமெனும் ஒலியே போற்றி உள்வளர் ஒளியே போற்றி 
ஆவியில் கலந்தாய் போற்றி அகமெலாம் நிறைந்தாய் போற்றி 
   அன்பினால் ஆள்வாய் போற்றி அருள்மழை பொழிவாய் போற்றி 
பூவிழி திறவாய் போற்றி புரிந்தெனை  ஏற்பாய் போற்றி 
   புவனங்கள் ஆள்வாய் போற்றி புத்தொளி தருவாய் போற்றி 
நாவினில் நின்றாய் போற்றி நற்கவி தந்தாய் போற்றி 
   நானுனை பணிந்தேன் போற்றி நற்கதி தருவாய் போற்றி .            9

ஆனந்த தில்லை மன்றில் ஆடும்சிவ காமிபோற்றி
   அன்னையாய் காசி தன்னில் அணைக்கும் விசா லாட்சி போற்றி
மாநகர் கட்டி ஆளும் மதுரை மீனாட்சி போற்றி
   மண்-புகழ் காஞ்சி தன்னில் மங்கை காமாட்சி போற்றி
கானக  சிம்மம் ஏறும் காளி சாமுண்டி போற்றி
   கருணையால் வையம் காக்கும் கற்பகத் தாயே போற்றி
வானகத் தேவரெல்லாம் வணங்கிடும் உமையே போற்றி
   வண்டமிழ் கவிதை கேட்டு வரந்தரும் வாமி போற்றி .                  10

மாலவன் தங்கை போற்றி மாநதி கங்கை போற்றி
   மட்டுவார் குழலி போற்றி மகிஷாசுர மர்த்தினி போற்றி
வாலையெனும் குமரி போற்றி வடிவுடை அம்மா போற்றி
   வாசவி வஞ்சி போற்றி வயிரவி செல்வி போற்றி
கோலவிழித் தாயே போற்றி கோப்புடை அம்மா போற்றி
   கொல்லூர் மூகாம்பிகை போற்றி கொடியிடை அம்மா போற்றி
ஆலங்குடித் தானை ஆளும் ஆதிபரா சக்தி போற்றி
   ஆலங்குடி நாடியம்மா அருள்கவே போற்றி போற்றி .                  11 .

சங்கரி சக்தி போற்றி சாம்பவி சண்டி போற்றி
   சாமளை சூலி போற்றி சௌந்தரி நீலி போற்றி
மங்கள ரூபி போற்றி மன்மத பாணி போற்றி
   மாரி மகமாயி போற்றி மாலினி துர்க்கா  போற்றி
பங்கயற் செல்வி போற்றி பஞ்சமி பைரவி போற்றி
   பார்வதித்  தாயே போற்றி பகவதி அம்மே போற்றி
அங்கயற் கண்ணி போற்றி அபிராம வல்லி போற்றி
   அகிலாண்ட ஈஸ்வரி போற்றி அன்னையே போற்றி போற்றி .  12.

 நல்லதே நடக்க வேண்டும் நல்லதே நடக்க வேண்டும் 
அல்லவை எல்லாம் நீங்கி நல்லதே நடக்க வேண்டும்

                                               ஓம்சக்தி                                          
   

Friday, March 18, 2011

காப்பாய் தாயே


   நல்லதே நடக்க வேண்டும் நல்லதே நடக்க வேண்டும் 
அல்லவை எல்லாம் நீங்கி நல்லதே நடக்க வேண்டும்

ஆதியும் அந்தமு மில்லா அரனவன் துணையே தேவி
    அன்பையே கவிதை ஆக்கி அழைக்கிறேன் பூக்கள் தூவி
பாதியை பரமன் அளிக்க பாரினை ஆளும் தாயே 
   பாமரன் துயரம் தீர்க்க பரிவுடன் கண் திறவாயே
ஜோதியே உன்னை நெஞ்சில் சுடர்விடும் விளக்காய் ஏற்றி
   தொழுகிறேன் என்னை அதிலே எண்ணையாய் தினமும் ஊற்றி 
போதிய மட்டும் என்னை சோதித்தாய் போதும் தாயே 
   பொற்பதம் பணிந்தேன் கொஞ்சம் பூவிழி திறவாய் நீயே !              
                                                                                                                            (1)
                
சீர்காழி தனிலே அன்று சிறுபிள்ளை அழுகை கேட்டு 
   சிவனோடு ஓடிவந்து தித்திக்கும் அமுதம் தந்தாய் 
காரிருள் வானில் உந்தன் காதணி கழற்றி வீசி
   கடையூரின் பக்தன் கேட்க காட்டினாய் நிலவை அன்று.
பார்புகழ் சங்கரன் உன்னை பாடிட பின்னால் வந்தாய் .
   பரிவுடன் வள்ளலார்க்கு பசிதீர உணவு தந்தாய் 
சீரிளத் தமிழால் உன்னை சிந்தித்துக் கவிதை சொன்னேன்,
   சிறியவன் வாழ்வைக் கொஞ்சம் சீராக்கு அன்புத் தாயே.                 
                                                                                                                            (2)

உள்ளத்தில் கோயில் கட்டி உன்னையே உள்ளே பூட்டி 
   உயிரெனும் மாலை சூட்டி உன்பதம் தொழுதேன் தாயே 
வெள்ளத்தில் துரும்பைப் போல விதிவழி சென்றேன் தாயே 
   வேதனைக் குழியில் நானும் வீழாமல் காப்பாய் நீயே .
சொல்லொன்று சொல்வாய் தாயே தொல்லைகள தொலைந்தே
                                                                                                                    (போக 
   சோகங்கள் துயரம் எல்லாம் சோதியில் கரைந்தே வேக
இல்லத்தில் இன்பம் சூழ , இன்னல்கள்  எல்லாம் தீர 
   இன்னருள் புரிவாய் தாயே , எமக்கினி எல்லாம் நீயே .                  
                                                                                                                             (3)

ஓமெனும் மந்திரத்தின் உட்பொருள் அறிந்தேனில்லை 
    ஒன்பது கோணம் என்பார் ஒன்றுமே தெரிந்தேனில்லை  .
பூமகள் உன்பேர்  சொல்லி  புலம்பியே தொழுவேனன்றி
   பொருள்நிறை மந்திரங்கள் புரிந்து நான் சொன்னேனில்லை 
நாமங்கள் கோடி சொல்லி நாள்தோறும் பூஜை செய்வார் 
   நானுனை அம்மா என்பேன் , நாயேனும் வேறொன்றறியேன்
சோமனின் துணையே தாயே சுடர்விடும் ஒளியின் தீயே 
   சொல்லியழ உன்னைவிட்டால் துணையெனக்  கேது தாயே ?     
                                                                                                                             (4)

அங்கத்தில் பாதி வாங்கி அகிலத்தை முழுதும் தாங்கி
   அணுவுக்குள் அணுவுமாகி அறிவுக்கு அப்பாலாகி
பொங்கிடும்  கங்கையாகி பூமிக்குள் தங்கம் ஆகி
   புவிநிறைப் பொருளும் ஆகி புரியாத புதிருமாகி 
எங்குமே நிறைவாய் நிற்கும் இயற்கையின் வடிவம் ஆகி
   எண்ணருஞ் சக்தி கொண்ட ஏகாந்தப் பொருளாம் அந்த
திங்களைச் சூடும் பெம்மான் திருவுளம் கலந்த தாயே 
   திருவடி பணிந்தோம் எங்கள் தீவினை களைவாய் நீயே !                
                                                                                                                             (5)

புவியை நான் ஆள வேண்டாம், பூவிழிப் பார்வை  போதும்.  
   பொன்மழை பொழிய வேண்டாம், பொற்பதம் கண்டால் போதும். 
குவியலாய் செல்வம் வேண்டாம், குறைவிலா வாழ்க்கை போதும்.
   கூட்டமாய் சுற்றம் வேண்டம் , குணத்தொடு  சிலரே போதும். 
செவிநிறைப்  புகழும் வேண்டாம், தேவிநின் வாழ்த்தே போதும் 
   திருவடி காட்டி எந்தன் தேவைகள் தீர்த்தால் போதும்.
கவிதையில் உன்னை வைத்தேன் கண்நிறை வாழ்வு தாராய் .
   கழலடி போற்றுகின்றேன் கண்முன்னே நீயும் வாராய்.!                   
                                                                                                                             (6)

                                                                                                    (தொடரும் )

பாடலை பாடுபவர் : என் சித்தப்பா அரசு அவர்கள்.  





இன்னொரு ராகத்தில்...பிரபாகரன் 



innnn


Wednesday, March 9, 2011

மன்றாடிப் பார்



குன்றெல்லாம் குடியாக உருவானவன் - கொஞ்சம்
மன்றாடிப் பார் நேரில் வருவானவன்
அன்றாடம் துதிப்போர்க்குள் இருப்பானவன் - தன
அடியாரை எதிர்ப்போர்க்கு நெருப்பானவன் - முருகன்
                                                                            ( குன்றெல்லாம் )

உமைபாகன் நுதற் கண்ணில் உருவானவன் - அந்த
உலகாளும் தந்தைக்கே குருவானவன் 
கேட்டாலே தரும் கல்ப தருவானவன் - நீ
கேட்டுப்பார் எடுத்தள்ளி தருவானவன் . - முருகன்         
                                                                      (குன்றெல்லாம் )  


காட்டிடையன்  போல்வேடம் தரித்தானவன் - சுட்ட
கனி ஈந்து மணல் ஊத சிரித்தானவன்
திமிர்கொண்ட அசுரன்தோல் உரித்தான்அவன்- என்
தமிழுக்கும் அவனேதான் உரித்தானவன் - முருகன்
                                                                        ( குன்றெல்லாம் )

மலையேறி அரையாடை அணிந்தானவன் - பின்
மனம் மாறி கடுங்கோபம் தணிந்தானவன்.
குறவள்ளி தனைத்தேடி மணந்தானவன் - பொதிகைக்
குளிர்த்தென்றல் தமிழ்வீசும் மணம்தான் அவன் - முருகன்
                                                                         (குன்றெல்லாம் )

அருணகிரி திருநாவில் இருந்தானவன் - ஊமைக் 
குருபரனின் பிணிதீர்க்கும் மருந்தானவன். 
புவிசுற்ற மயிலேறிப் பறந்தான் அவன். - என்
கவிகொத்தி செல்கின்ற பருந்தானவன்- முருகன்
                                                                            ( குன்றெல்லாம் )


படைதன்னை வேல்கொண்டு பொடி செய்தவன்- அசுரன்
பகைவென்று அதில் சேவற்    கொடிசெய்தவன்.
உலகெங்கும் தமிழ்நெஞ்சே குடியானவன் - என் 
உளம் உழுது பயிர்  செய்யும் குடியானவன் - முருகன்
                                                                                ( குன்றெல்லாம் )


அவ்வைக்குத் தமிழ்ஞானப் பழமானவன் - வள்ளி 
அழகுக்கு மனம்மயங்கி கிழமானவன் 
உயர்வான வழிகாட்டும் மறையானவன் - அவனை 
உனக்குள்ளே தேடிப்பார் - மறையான் அவன் - முருகன்
                                                                                    (குன்றெல்லாம் )


செந்தூரில் அலைவீசும் கடலானவன் - இன்பச் 
செந்தமிழின் இசையே தன உடலானவன் 
குருப்ரம்மன் சிறைவழக்கின் தீர்ப்பானவன் - உன்
குறைசொல்லிப் பார் அனைத்தும் தீர்ப்பான் அவன் - முருகன்
                                                                                     (குன்றெல்லாம்)

தெய்வானை வள்ளிக்கும் துணையானவன் - இன்பத் 
தேன்தமிழின் இன்சுவைக்கு இணையானவன் 
அடியாரின் விழிநீர்க்கு அணை ஆனவன் - அவனை 
அகவிளக்காய் ஏற்றிப்பார் அணையான் அவன்- முருகன்
                                                                                    (குன்றெல்லாம்) 


ஓங்கார நாதத்தின் பொருளானவன் - தினம் 
ஓம் என்று சொல்லிப் பார் ! அருள்வான் அவன். 
உலகத்தின் இருள் நீக்கும் ஒளி ஆனவன் - நீ
உளமுருகிக் கேள் எதையும் ஒளியான் அவன் -முருகன்   
                                                                    .               (குன்றெல்லாம் )
  


                                                                                     - சிவகுமாரன் 


பாடலைப் பாடியவர் - என் அம்மா 


Tuesday, March 1, 2011

ஓம் கணபதி



ஓம்கண பதிஓம் ஓம்கண பதிஓம்
   கணபதி ஓமென சொல்வோமே
ஓம்கண பதியென மந்திரம் சொல்லியே 
   ஒவ்வொரு செயலிலும் வெல்வோமே
தோம்தரி கிடதோம் தோமென பாடியே
   கணபதி பாதம் பணிவோமே
சோமனின் புதல்வனை தேவரின் முதல்வனை 
   தினந்தினம் கணந்தோறும் நினைவோமே.


ஆனை முகத்தவன் ஐந்து கரத்தவன்
   அல்லகள் தீர்க்கும் விநாயகனே 
பானை வயிற்றவன் பாவ மறுப்பவன்   
    பரமனின் அமசமாய் பிறந்தவனே
வானை நிகர்த்தவன் வையம் நிறைந்தவன்
   வானுறை தேவரும் தொழுபவனே
ஊனை உருக்கிட உள்ளம் நெகிழ்ந்திட 
   உனைத் தொழுதேன் எழுந் தருள்வாயே 


ஒருபிடி சாணத்தில் ஒருதுளி மஞ்சளில் 
   உருவம் தரித்திடும் எளியோனே
சிறுபிடி அவல்பொரி சிறியதோர் பழமென 
   தருவதை ஏற்றுளம் மகிழ்வோனே
அருகம்புல் மாலையும் அரசடி நிழலையும் 
   அகமகிழ்ந் தேற்றெங்கும் அமர்வோனே
உருகிடும் அடியவன் உளக்குறை நீங்கிட 
   உமைமைந்தனே எழுந் தருள்வாயே 

நாரதர் தந்ததோர் ஞானப் பழம்பெற
   ஞாலமே அரனுமை என்றவனே
சூரர் குலத்தவன் தீய குணத்தவன்
   சிந்தூரன்  துயரற வென்றவனே   
பாரத காவியம் மாமுனி மொழிந்திட 
   பணிவுடன் தந்தம் ஒடித்தவனே
யாரிடம் சென்று நான் என்துயர் மொழிந்திட ? 
   இன்னல்கள் தீர்த்திட வருவாயே 


தம்பிக்கு மணம் செய்ய தருவனக் குறமகள் 
   தன்னிடம் தூதெனச் சென்றவனே
அம்பிகை அருள்விழி அடியவன் மேல்விழ
   அண்ணலே தூதெனச்  செல்வாயே
தும்பிக்கை பலம்கொண்டு தொடர்ந்திடும் வல்வினை 
   தூர விரட்டிட வருவாயே 
நம்பிக்கை வைத்துனை நாள்தொறும் நான்தொழ 
   நன்மைகள் தந்தருள் புரிவாயே

சிரந்தனை இழந்ததும் மதங்கொண்ட கரியதன் 
   ஒருதலை  தனைப்பெற்று எழுந்தவனே
புரந்தனை எரித்திட புறப்பட்ட சிவனது
   ரதந்தனை சினங்கொண்டு முறித்தவனே
அரங்கனைக் காவிரிக் கரைதனில் அமர்த்தியே
   மலைதனில் ஏறியே அமர்ந்தவனே
கரங்கொண்டு உனைத்தொழ தமிழ்கொண்டு கவிசொல 
   கணபதியே எழுந் தருள்வாயே  


முத்தமிழ் மூதுரை மொழிந்திட்ட அவ்வைக்கு
   முதுமையைத் தந்தருள் புரிந்தவனே 
பித்தனைக் கோபித்து பைந்தமிழ் வேதங்கள் 
   பெருங்கடல் விழுங்கிட எறிந்தவனே
அத்தனும் அம்மையும் அழகிய தம்பியும்
   அழகுற அருள்தர வருவீரே 
சித்தம் அடங்கிட சிவமத்தை உணர்ந்திட 
   சித்தியும் புத்தியும் தருவீரே 


ஒப்புயர் வற்றதோர் ஓமெனும் மந்திரம்
   உள்நினைந்தே உளம் உருகிடவே
முப்புரம் எரித்தவன் முக்கண்ணன் அருள்பெற்று
   முக்தி அடைந்திட அருள்வாயே
தொப்பையும் துதிக்கையும் துணையென நம்பினேன்
   துயர்தனை துடைத்திட வருவாயே
அப்பனின் தரிசனம் அம்மையின் கரிசனம் 
   அடியவன் அடைந்திட அருள்வாயே.


அண்டங்கள் யாவையும் ஆளும்உன் தந்தையின்
   அருள்நடம் கண்டுளம் மகிழ்ந்திடவே
சுண்டெலி வாகனா சித்தி விநாயகா 
   சுழுமுனை திறந்திட வருவாயே
மண்டலம் கடந்திட மும்மலம் அறுந்திட  
   மங்களக் கணபதி அருள்வாயே
குண்டலி எழும்பிட குதிரை அடங்கிட 
   குமுதம் மலர்ந்திட வருவாயே.


காக்கையின்  உருகொண்டு கமண்டலம் உருட்டியே
   காவிரி புரண்டிடச் செய்தவனே
தேக்கிய விழிகளில் திரண்டிடும் நீரினை
   துடைத்திட கரம்கொண்டு வருவாயே 
யாக்கையே திரியென எரிவிளக் கேற்றினேன் 
  இருள்தனை விலக்கிட வருவாயே
போக்கிடம் வேறில்லை புகல்தர ஆளில்லை
   பொற்பதம் பணிந்தேன் அருள்வாயே
                                                  
                                                       -சிவகுமாரன் 

பாடலை  பாடியவர்: பிரபாகரன்
                         -